04

04

”தொழில் கிடைக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும் ” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

62,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் தொழில் கிடைக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பட்டதாரி அல்லது இதற்கு முன்னர் தொழில் ஒன்றிலிருந்து ஊழியர் சேமலாபநிதி நிதியத்தின் அங்கத்துவராக இருந்தால் மேற்படி தொழில்வாய்ப்பு கிடைக்காமல் போகுமென அதற்கான செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் விண்ணப்பதாரிகள் தமது உண்மையான நிலையை குறிப்பிட்டு மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும்.

சில பட்டதாரிகள் கடந்த காலங்களில் அவர்களுக்கு தொழில் இல்லாத நிலையில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை கருத்திற்கொண்டு தாம் பெற்றுக்கொண்ட பட்டத்திற்கு பொருத்தமற்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களென மேற்படி செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தமக்கு பொருத்தமில்லாத சம்பளத்தைப் பெற்றுக்கொண்டுள்ள பட்டதாரிகள் இத்தகைய அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு தமது மேன்முறையீட்டை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

மேற்படி வேலைத் திட்டத்தின் கீழ் 50,000 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய மேலும் 12,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் அரச சேவையில் 38,760 பெண்கள் உட்பட 50,171 பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். கலைப் பட்டதாரிகள் 31,172, உள்ளக பட்டதாரிகள் 29,156 மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் 20,322 பேரும் நியமனம் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் 1,000 பௌத்த துறவிகளும் உள்ளடங்குகின்றனர்.

அரச துறையை பலவீனப்படுத்தி தனியார் துறையை மட்டும் பலப்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்திருந்தன. கடந்த அரசாங்க காலத்தில் போக்குவரத்து சபையில் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக ஊழியர்களை வெளியேற்றிய சம்பவத்தின் பிரதிபலனை இன்றும் அரச துறை போக்குவரத்து சேவை வீழ்ச்சி எமக்கு சுட்டிக்காட்டுகின்றது“ எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியல் செய்ய வேண்டும்?- ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி !

நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக  கருத்து  தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் மனங்களில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அத்துடன் இன்று  ஜனாதிபதி, கிராமப்பகுதிகளுக்கு  சென்றால், கடவுள் வருகிறார் எனக் கூறும் நாடு இது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை  பெய்து இருந்தது.

இதன்காரணமாக ஜனாதிபதி விமானத்தின் ஊடாக  நாடு முழுவதும் சென்றமையால் இருக்கலாம். இவ்வாறு மக்கள் மனநிலை இருக்கும்போது அரசியலமைப்பு திருத்தம் குறித்துக் கலந்துரையாடுவது பொய்யான விடயமாகும்.

ஆகவே கொடுப்பதை உட்கொண்டு விட்டு வேறு எதற்காவது காத்திருப்பதுதான் தற்போது செய்ய வேண்டிய விடயம்.

இதேவேளை 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் ஜனாதிபதி பதவிக்காலம் மீண்டும் வரம்பற்றதாக இருக்கும். அதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என நாட்டில் ஆட்சி நடைபெறும்.

இவ்வாறு  ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியல் செய்ய வேண்டும்” என அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

”சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

சவுதி அரேபியா எப்போதும் பாகிஸ்தானின் நண்பன்தான் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) சர்வதேச அளவில் குரல் கொடுப்பதில்லையே? என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இம்ரான்கான் பதிலளித்துள்ளார்.

அதில், “ஆம். காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” என்று இம்ரான்கான் தெரிவித்தார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் குரல் எழுப்பத் தவறும் ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விமர்சித்திருந்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டுமாறு சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்ற இம்ரான் கானின் கோரிக்கைக்கு 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு செவி சாய்க்கவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் மாணவர்களின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனை !

இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனையொன்றை விரைவில் கல்வி அமைச்சிக்கு முன்வைக்கவுள்ளதாக முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய அவர், முஸ்லிம் விவகார திணைக்களம் கடந்த காலத்தில் தீவிர அரசியல்மயமாக்கலில் சிக்கியதாக தெரிவித்தார்.

தமிழர் மரபை பறைசாற்றி தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு காவல் துறை பெண் அதிகாரிகள் !

பிரான்ஸ் நாட்டு காவல் துறை பெண் அதிகாரிகள் தமிழர் மரபை பறைசாற்றி தலையில் பூ அணிந்து பிரான்ஸ் மாணிக்க விநாயகர் திருவிழாவில் பங்குபற்றியுள்ளனர். இது தமிழர்கள் பலரையும் கவர்ந்துள்ளமையால் சமூக வலைதளங்களில் இதனை வேகமாக பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்தது கொரோனா மனித உயிர் பலியெடுப்பு !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,043 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,082 பேரும் பிரேசிலில் 830 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரத்து 806 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 69 லட்சத்து 38 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 961 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 1,91,046
பிரேசில் – 1,24,729
இந்தியா – 67,376
மெக்சிகோ – 65,816
இங்கிலாந்து – 41,527
இத்தாலி – 35,507
பிரான்ஸ் – 30,706
பெரு – 29,405
ஸ்பெயின் – 29,234
ஈரான் – 21,926
கொலம்பியா – 20,618