அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அரசாங்கம் இன, மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனூடாக 19 ஆவது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.