06

06

தமிழரசு மட்டு வாலிபர் முன்னணியின் “நூறு நாட்களில் ஆயிரம் இளைஞர்களை உள்ளீர்த்தல்” செயற்திட்டம் அங்குரார்ப்பணம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இரா.சாணக்கியன் அவர்களைக் கௌரவிக்கும் முகமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினால் (04.09.2020) நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், வடகிழக்கு வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் உபதலைவரும், மாநகரசபை உறுப்பினருமான து.மதன், வாலிபர் முன்னணி உறுப்பினரும், மாநகரசபை உறுப்பினருமான அ.கிருரஜன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணி செயலாளர் க.சசீந்திரன், பொருளாளர் மா.டிலக்சன் உட்பட வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட வாலிபர் முன்னணியின் உறுப்பினர் இதன் போது தலைவரினால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், அவருக்கான கௌரவிப்பும் இதன் போது இடம்பெற்றது.

வாலிபர் முன்னணியின் வடகிழக்குத் தலைவர் கி.சேயோன் அவர்கள் பொன்னாடை அணிவிக்க, உபதலைவர் து.மதன் அவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு இக்கௌரவிப்பு இடம்பெற்றது.

இதன்போது வாலிபர் முன்னணியின் ‘நூறு நாட்களில் ஆயிரம் இளைஞர்களை உள்ளீர்த்தல்’ எனும் செயற்திட்டமும் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட செயற்குழுவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு முதற்கட்டமாக வாலிபர் முன்னணியில் இணைந்துகொண்ட புதிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பப் படிவங்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன – ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இடையே சந்திப்பு !

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத் தரப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம்  இடம்பெற்ற நிலையில், இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சேய்பி, இத்தாலி மற்றும் நெதர்லாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், ருமேனியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தூதரகங்களின் அலுவல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தனவிற்கு வாழ்த்துத் தெரிவித்த குறித்த பிரதிநிதிகள், தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை நெருக்கமாகச் செயலாற்றி வருவது குறித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

மேலும், இலங்கையின் மிகமுக்கியமான ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பா விளங்குவதுடன் இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் என்பனவும் அதனூடாகவே அதிகளவில் கிடைக்கப்பெறுவது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை மிகவும் சிறப்பாகச் செயற்பட்டிருப்பதாகப் பாராட்டுத் தெரிவித்த டெனிஸ் சேய்பி, இதன் விளைவாக இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் எவ்வித அச்சமுமின்றி ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தரக்கூடிய நிலை உருவாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலமையில் புதிய கட்சி..?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தாவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பாகச் செயற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் உட்பட பல மாநகர, நகர, பிரதேச சபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான குழுவில் இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி மனோகணேசன் வேண்டுகோள்!

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே பார்க்கிறோம். இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

இந்நிலையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. எனினும், இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை எமக்கு கவலை தருகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளி என நாம் கருதுகின்றோம்.

எனவே தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின், தகுதி வாய்ந்த பிரதிநிதிகளின் பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் எழுத்து மூல கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.