07

07

வீடு, மீன் , சைக்கிள் என்ற பாகுபாடுகளை நீக்கி மனப்பூர்வமாக ஒருமித்துச் செயற்பட அனைவரும் முன் வரவேண்டும்! – செல்வம் அடைக்கலநாதன்

”தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்றவுடன் தென்னிலங்கை சிங்கள தரப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்து அதனை எதிர்க்கின்றனர். ஆனால் தமிழர்கள் இதனைக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டுமே இருக்கின்றனர். சிங்கள தேசம் தமிழர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒற்றுமையாக எதிர்கின்ற நிலையில் தமிழர் தேசத்தில் அந்த ஒற்றுமை இல்லை” பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு யாழ் நாவலர் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத அலையொன்று தென்னிலங்கையில் கிளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழர்களை வந்தேறு குடிகள் என்றும் வாடகை வீட்டுக்காரர்கள் என்றும் இனவாத ரீதியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். புத்த பிக்குகள், பிரதமர், எதிர்க்கட்சி எம்.பிக்கள் உட்பட அனைத்து சிங்கள தரப்பும் ஒற்றுமையாக நின்று தமிழர்களிற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

அதிலும் தமிழர்களின் மண்ணையும் மொழியையும் பேசியவர்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் கூறுவதனூடாக அவ்வாறு யாரும் கூறினால் உங்களுக்கும் அதுவே நடக்குமென்ற பாணியில் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறு தென்னிலங்கையில் மிகப் பெரியளவில் இனவாத ரீதியான பிரச்சாரங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீதியரசரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் அவர்கள் தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்று சொன்ன கருத்திற்கு எதிராகவே தற்போது இந்த இனவாதப் பிரச்சாரங்களை அவர்கள் போட்டி போட்டு முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இடத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்றவுடன் தென்னிலங்கை சிங்கள தரப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்து அதனை எதிர்க்கின்றனர். ஆனால் தமிழர்கள் இதனைக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டுமே இருக்கின்றனர்.

சிங்கள தேசம் தமிழர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒற்றுமையாக எதிர்கின்ற நிலையில் தமிழர் தேசத்தில் அந்த ஒற்றுமை இல்லை. தமிழர் தரப்புக்களிடத்தே அந்த ஒற்றுமை என்பது கானல் நீராகவே உள்ளது. தென்னிலங்கை இனவாத அலையை எதிர்ப்பவர்கள் சொற்பமாகவே உள்ளனர். ஆக தமிழ் தேசம் எங்கே போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

எமது தொன்மையை பேசியதற்காக, நீங்கள் எல்லோரும் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என்றார் சரத் பொன்சேகா. இராணுவத்தில் என்ன சுட்டார்கள் என்பது தெரியவில்லை. இப்பொழுது வாய் திறந்து கத்துகிறார். அப்போது நாம் சுடுகின்ற போது இவர் எங்கேயிருந்தார்.

தமிழர்கள் பூர்வீக்கக் குடிகள் என்றதற்கு எதிர்ப்பு வந்தாலும் நாம் எமது மண்ணையும் மொழியையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். எமது ஒற்றுமையே தற்போது அவசியமானது. ஏனெனில் எங்களுக்கு எதிராக தெற்கில் அவர்கள் எவ்வாறு ஒன்று திரண்டு இருக்கின்றனர் என்பதை தெளிவாகப் பார்க்க வேண்டும். ஆகையினால் எங்களுக்குள்ளும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்திற்கு நான் வந்திருந்த போது ஒரு செய்தியொன்றைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தேன். அதாவது தமிழ்த் தேசியக் கட்சிகளாக இருக்கின்ற வீடு, மீன், சைக்கில்ள் கட்சிகளின் இளைஞரணியினர் ஒருமித்து ஒரு முடிவொன்றை எடுத்துள்ளனர். தியாக தீபம் தீலீபன் நிகழ்விற்காக ஒன்றாகச் சேர்ந்து செயற்படுவதாக அவர்கள் எடுத்துள்ள அந்தத் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். இளைஞர்களின் ஒற்றுமையான அந்தச் செயற்பாட்டிற்கு நாங்கள் எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். இளைஞர்கள் ஒற்றுமையாக ஒருமித்துச் செயற்பட முன்வந்துள்ளது போன்று கட்சிகளும் அதற்கு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அதனைவிடுத்து எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் எமது வாழ்வு கேள்விக்குறி.

ஆகவே எங்கள் மொழி கலை கலாச்சாரம் மண் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றுட்டு செயற்பட வேண்டியது அவசியம். குறிப்பாக எங்களுக்குள் இனியும் வீடு, மீன் , சைக்கில் என்ற பாகுபாடு காட்டக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதனைவிடுத்து உதட்டளவில் தேசியம் பேசுவதில் பயனில்லை. மேலும் உதட்டளவில் ஒற்றுமை குறித்துப் பேசுவதையும் நிறுத்த வேண்டும். மனப்பூர்வமாக ஒருமித்துச் செயற்பட வேண்டும். அவ்வாறானதொரு ஒற்றுமைக்காகவே நாங்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருந்து வருகின்றோம்.

இந்தக் கூட்டமைப்பை ஆரம்பித்த போது இருந்த கட்சிகள் எல்லாம் அதிலிருந்த வெளியேறியிருக்கின்ற போதும் நாங்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பிலேயே இருந்து வருகின்றோம். ஆகவே எங்களது கட்சியிலும் சரி கூட்டமைப்பிலும் சரி எம்முடன் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

குறிப்பாக நாடாளுமன்றில் இன்றைக்கிருக்கின்ற சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் நாங்கள் ஒருமித்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களுக்காக ஒன்றிணைந்த குரல் எழுப்ப வேண்டும். இதில் நாடர்ளுமன்றில் அண்மையில் விக்கினேஸ்வரன் ஐயா தெரிவித்த கருத்துக்கு தென்னிலங்கையின் ஆளும் தரப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்த போது கூட அந்த இடத்தில் நாங்கள் தமிழர்களாக குரல் எழுப்பியிருந்தோம்.

அவ்வாறு எங்களுக்கு எதிராக எழுப்பப்டுகின்ற இனவாதத்திற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற அத்தகைய ஒன்றிணைவு இன்றியமையாதது. அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கின்றது. நாங்கள் ஓரணியில் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியம் பேசுகின்ற தமிழ்க் கட்சிகள் அனைவரும் முன் வர வேண்டும்.

இதனை விடுத்து தேசியம் இனம் மண் என பேசி கொண்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படக் கூடாது. எங்கள் தேசத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால் தமிழ் தரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அது உதட்டளவில் இல்லாமல் மனப்பூர்வமாக அமைய வேண்டும். இன்றைய நிலையில் இந்த ஒற்றுமைய ஏற்படாது விட்டால் தந்தை செல்வா சொன்னது போன்று தமிழர்களை கடவுளாளும் காப்பாற்ற முடியாது.

ஆகையினால் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த நாங்கள் அழைப்பது மாத்திரமல்லாமல் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த தொடர்ந்தும் உழைப்போம். அவ்வாறு அத்தகையதொரு ஒற்றுமையை நாங்கள் உருவாக்குகிற பொழுது அதற்கு யார் இடைஞ்சலாகவோ அல்லது வரவில்லை என்றாலோ அதனை நாங்கள் தெளிவாக அடையாளப்படுத்திக் கூறுவோம். அவர்கள் யார் என்பதை மக்களாகிய நீங்கள் அறிந்து கொண்டு உங்களது முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதே வேளை இந்த அரசாங்கம் 20 ஆவது திருத்தம் என்ற ஒன்றை கொண்டு வர உள்ளது. ஆதனை ஆட்சியாளர்கள் தங்களது குடும்ப நன்மைக்காகவே கொண்டு வருவதற்கு முயல்கின்றனர். இதனை நாங்கள் சாதாரணமாகக் கடந்து சென்று விட முடியாது.

அதே போலவே அபிவிருத்தி என்ற விடயத்திலும் நாங்கள் சாதாரணமாக எதனையும் கடந்து போக முடியாது. அபிவிருத்தி செய்வோம் அதுவே தேவை என்ற அடிப்படையில் பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் எங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் நியாயமான ஒரு தீர்வையே கோருகின்றோம். இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை கூட மாற்றுகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறுகின்றனர். அதற்கும் இடங்கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“புதிய அரசமைப்பில் 13ஆவது திருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” – விமல் வீரவன்ச

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும். 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடேயாகும்.” என  அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச..

“புதிய அரசமைப்பில் 13ஆவது திருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே நம்புகின்றோம். இதில் நாம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இதில் இந்தியா தலையிடுவதால் எந்தப் பயனும் இல்லை.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை தொடர 13ஆவது திருத்தமும் ஒரு காரணமாக இருக்கின்றது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும்.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடே. அதன்பின்னர் வரவுள்ள புதிய அரசமைப்பு ஆபத்தான திருத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

எனவே, புதிய அரசமைப்பில் இந்தியா விரும்பும் 13ஆவது திருத்தத்தின் பரிந்துரைகளை உட்புகுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேமாட்டாது” எனவும் அவர் குற்ப்பிட்டுள்ளார்.

100நாட்களை தாண்டியும் தொடரும் பிளாய்ட்டின் மரணத்துக்கான நீதிகோரிய போராட்டம் ! அமெரிக்கப் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் குண்டுமழை !

அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்ட் என்பவர் அந்நாட்டு காவல் துறையினரால் கொலைசெய்யப்பட்டதை கண்டித்து அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அதனை கண்டித்து பாரியளவிலான போராட்டங்களும் எதிர்ப்புக்களும் அமெரிக்காவை நோக்கி வீசப்பட்ட நிலையில் பிளாய்ட் கொலை செய்யப்பட்டு 100 நாட்களை தாண்டியும் அதற்கான நீதி வேண்டி அமெரிக்காவில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கப் பொலிஸாரால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் பிளாய்ட்டுக்கு நீதி கோரி போர்ட்லாண்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் 100நாட்களைக் கடந்துள்ளன. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற 100ஆவது நாள் போராட்டத்தில் போராட்டக்கார்கள் பொலிஸார் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்காக உள்ளூர்ப் பொருள்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட குண்டுகள், கற்கள், மோட்டார் பற்றிகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதன்போது 59 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்தப்பட்டது எனவும் போர்ட்லாண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்தவார இறுதியில் போர்ட்லாண்டில் இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்படமையும் குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரம் . – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கூடியதாக அமைந்ததாகவும், அவை அனைத்திற்கும் அமரர் சந்திரசிறி கஜதீரவின் அரசியல் அறிவு மற்றும் நற்பண்பு என்பனவே காரணமாக அமைந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை உயன்வத்த எச்.கே.தர்மதாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு சந்திரசிறி கஜதீரவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

´யுத்தம் நிறைவடையும் காலத்தின் போது சந்திரசிறி கஜதீர சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார். இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர்.

இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், 13 ஆயிரம் தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டனர். அது மிகவும் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவும் அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறாத நிலையில், மீண்டும் ஆரம்பமாகும் வழக்கின் தீர்ப்பு ஜூலியன் அசாஞ்சின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வழக்கு என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ், உலக நாடுகளின் இரகசிய ஆவணங்கள், மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், முறைகேடுகள், ஊழல் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற இரகசிய ஆவணங்களை ஹக் செய்து விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக, ஈராக்கில் அமெரிக்க இராணுவம் நடத்திய வன்முறைகள், அரசியல் கைதிகளை அடைக்கும் குவாண்டனமோ சிறைச்சாலை உள்ளிட்ட தகவல்கள் உலகையே அதிர்ச்சியுறச் செய்தன.

இது அமெரிக்காவை பெரியளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அசாஞ்சே மீது அமெரிக்கா வழக்குத் தொடர்ந்ததுடன் அமெரிக்காவுக்கு எதிராக செயற்படும் ரஷ்ய உளவாளி என அசாஞ் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன், சுவீடனில் அவர் மீது பாலியல் வழக்கும் பதிவானது.

இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சுக்கு ஈக்குவாடோர் ஆதரவு வழங்கிய நிலையில் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதாரகத்தில் அவர் தஞ்சமடைந்தபோதும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஈக்குவடோர் அவரைக் கைவிட்டது.

இதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் ஈக்குவடோர் தூதரகத்துக்குள் வைத்து பிரித்தானிய பொலிஸார் அவரைக் கைதுசெய்த நிலையில் தென்கிழக்கு லண்டனில் உள்ள HMP பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ் சிறைவைக்கப்பட்டுள்ளார்.

ஜூலியன் அசாஞ்சை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என லண்டன் நீதிமன்றத்தில் அசாஞ் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெலாரஸ் ஜனாதிபதிலூகாஷென்கோ பதவி விலக வலியுறுத்தி தலைநகர் மின்ஸ்கில் ஆயிரக்கணக்கானோர் பேரணி!!!

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி லூகாஷென்கோ பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும்  போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. பெலாரஸ் நாட்டில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ 80.3 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் அலெக்ஸ்சாண்டர் 6வது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்க்கட்சிகள் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது லூகாஷென்கோ பதவி விலகக்கோரி தலைநகர் மின்ஸ்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இணைந்து தொடர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து இழுத்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

ஒருங்கிணைந்து சோவியத் ரஷ்யாவிலிருந்து 1991ம் ஆண்டு பிரிக்கப்பட்ட ‘பெலாரஸ்’ தனி ஐரோப்பிய நாடாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு 1994ம் ஆண்டு முதன் முறையாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ, அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடினார். இந்நிலையில்தான் பொதுத்தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அதிபரை பதவிலகக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா நோய்தொற்று உறுதியான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் சாரதி!

இந்தியாவின் கேரளாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், ஆம்புலன்சில் பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ஆரம்முளாவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால்,அடூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பந்தளம் மருத்துவமனைக்கு நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் கோழஞ்சேரி மருத்துவமனைக்கு மற்றொரு நோயாளியும் சென்றார்.

ஆம்புலன்சை காயங்குளத்தை சேர்ந்த நவுபல் ஓட்டினார். கோழஞ்சேரியில் அந்த நோயாளியை இறக்கிவிட்டு, இளம்பெண்ணுடன் பந்தளம் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது, வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த இளம்பெண்ணை நவுபல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், பந்தளம் மருத்துவமனையில் விட்டுவிட்டு நழுவிவிட்டார். இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில், நவுபலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நவுபலுக்கு கொலை உள்பட பல கிரிமினல் வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. நவுபல் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்த பலாத்காரம் பற்றி விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர். பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவ அலுவலர் அலுவலகம் முன்பு பாஜ நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்த பலாத்கார சம்பவம் பற்றி மாநில மகளிர் ஆணையமும், மனித உரிமை ஆணையமும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி.க்கு இந்த இரு ஆணையங்களும் உத்தரவிட்டுள்ளன.

செம்மணி படுகொலைகள் நினைவுநாள் இன்று அனுஸ்டிப்பு!

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது, செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி, யாழ்.சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்தவேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெறித்து படுகொலை செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும், செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை, ஊர் மக்கள் கண்ணுற்று, மாணவியின் தாயாரிடம்  தெரியப்படுதாகவும் அதனைத் தொடர்ந்து மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59), மாணவியின் சகோதரனும் யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்தவேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களை அன்றைய தினம் நள்ளிரவே செம்மணி பகுதியிலுள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை யாழில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 600பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் கூறுகின்றமையும் நினைவில் கொள்ளத்தக்கது.

அடுத்த ஆண்டு தொடக்‍கத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ள சந்திரயான்-3 விண்கலம் !

நிலவில் பல மர்மங்கள் அடங்கியுள்ளதாகக்‍ கூறப்படும் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான்-3 விண்கலம், அடுத்த ஆண்டு தொடக்‍கத்தில் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங், அடுத்த ஆண்டு தொடக்‍கத்தில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

சந்திரயான்-3ல், ஆர்பிட்டர் கருவி இருக்‍காது என்றும், லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் இடம்பெற்றிருக்‍கும் என்றும் தெரிவித்தார். முதன்முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் அனுப்பிய புகைப்படங்களில், நிலவின் மேற்பரப்பு துருப்பிடித்திருப்பதை போன்று காட்சியளிப்பதாக கூறினார். மேலும், நிலவில் இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களுக்கான புதிய தூதுவர்கள் தெரிவு! – 60 வயதிற்கு மேற்பட்ட, ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் நாடு திரும்ப காலக்கெடு.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களுக்கான புதிய தூதுவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி புதுடில்லி, வொஷிங்டன், சென்னை, டோக்கியோ, பெய்ஜிங் மற்றும் ஒட்டோவா ஆகிய இலங்கை  தூதரங்களுக்கான புதிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின்  வெளிவிவகார செயலாளராக பதவி வகித்த ரவிநாத் ஆரியசிங்க அமெரிக்காவின் வொஷிங்டனுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ளதுடன், இந்தியாவின் புதுடில்லிக்கான தூதுவராக மிலிந்த மொரகொடவும், சீனாவின் பெய்ஜிங்கிற்கான தூதுவராக கலாநிதி பாலித கோகணவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் 60 வயதிற்கு மேற்பட்ட, ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் பலருக்கு நாடு திரும்பிவர வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

நியுயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவுள்ள ஷேனுகா செனவிரத்ன, ஒட்டாவிற்கான தூதுவராகவுள்ள அசோக கிரிகாகம, சுவீடனின் ஸ்டோக்ஹோம் தூதுவராகவுள்ள சுதந்தக கனேகமாராச்சி, எகிப்தின் தூதுவராகவுள்ள தமயந்தி ராஜபக்ஷ, ஹவானா தூதுவராகவுள்ள ஏ.எல்.ரத்னபால மற்றும் ஹேய்கிற்கான தூதுவராகவுள்ள சுமித் நாகந்த ஆகியோருக்கே இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்ளது.