07

07

13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது ஒரு விளையாட்டுத் தனமான விடயமல்ல” – எச்சரிக்கின்றார் சித்தார்த்தன்.

“அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை நீக்கும் துணிச்சல் அரசாங்கத்திற்கு இல்லை. இது ஒரு விளையாட்டுத்தமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

“13வது திருத்தச் சட்டத்தை நீக்கும் முயற்சிகள் ஏதும் திறைமறைவில் முன்னெடுக்கப்டுக்கப்பட்டால் அதனை முறியடிக்க உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் பலவிதமான கருத்தாடல்கள் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் தமிழ் செய்தி ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “13வது திருத்தச் சட்டம் தமிழ்த் மக்களுக்கான முழுமையான தீர்வு இல்லை என்பதை தமிழ் மக்கள் அதனை அறிமுகப்படுத்திய போதே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இது இருந்தபோதிலும் இன்றுள்ள சூழலில் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப அதிகாரங்களை பகிரக் கூடிய ஒரு தீர்வுத்திட்டமாக இது உள்ளது.

13வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென பலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கம் 13வது திருத்தச் சட்டம் குறித்து எவ்வித கருத்துகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

13வது திருத்தச் சட்டத்தை இலகுவாக நீக்கிவிட முடியாது. இது ஒரு விளையாட்டுத்தனமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்தை செய்துள்ள இந்தியா இந்த விடயத்தை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்காது. 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்காதென்றே கருதுகிறோம். அதற்கான துணிவு அரசாங்கத்திடம் இல்லை.

இந்தியாவில் தற்போது மோடி அரசாங்கம் உள்ளதால் அவர்கள் இதனை கண்டுகொள்ள மாட்டார்களென சிலர் கூறுகின்றனர். அவ்வாறில்லை. மோடி அரசாங்கமோ அல்லது ராஜீவ் அரசாங்கமோ அல்ல இதில் முக்கியம். இந்திய அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் அரசாங்கங்கள் மாறினால் கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவது போன்று இதனை அர்த்தப்படுத்திக்கொள்ள கூடாது. இந்தியாவில் அரசாங்கங்கள் மாறினாலும் அதன் வெளிவுறவுக் கொள்கை மாறாது. இதுதான் ஆரம்பகாலம் முதல் இந்தியா கடைப்பிடிக்கும் வரலாறு.

நாம் இந்தியாவுடன் இராஜந்திர பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சந்திப்புகளை தற்போது மேற்கொள்வது கடினம். என்றாலும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதும் நகர்வுகளில் ஈடுபட்டால் நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதனை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.” என்றுள்ளார்.

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா ! – பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,000 -ஐ கடந்தது.

உலக முழுவதும் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,000 -ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து வேர்ல்டோ மீட்டர் இணையதளம் வெளியிட்ட தகவலில், “ உலகம் முழுவதும் கொரோனாவைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,779 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2, 72, 90,137 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 62, 62,989 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,88,535 பேர் கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா 42, 02,562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,687 பேர் கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் பிரேஸில் உள்ளது. பிரேசிலில் .41, 37,606 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.126,686 பேர்கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைரஸ்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன. கொரோனாவைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மட்டுமே உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், கொரோனாவைரஸ்க்கான தடுப்பு மருந்தை தற்போதைக்கு எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டின் இடைப்பகுதியில்தான் எதிர்பார்க்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவைரஸ் பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

வித்யா கொலை வழக்கு விசாரணை; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு !

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட குமரன் சர்வானந்தனுக்கும் குறித்த அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி குறித்த இருவரும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியத்துக்கமைவாகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வித்யா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான மஹாலிங்கம் சசிகுமார் எனப்படும் சுவிஸ்குமார் என்பவரை விடுவிக்குமாறு விஜயகலா மகேஸ்வரன் நேரடி அழுத்தம் வழங்கியதாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சாட்சியமளித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2011ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தான் உள்ளிட்ட 5 பேர் 10 வருட சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமை, விஜயகலா மகேஸ்வரனின் அழுத்தம் காரணமாகவே என கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டாவது போட்டியிலும் ஆஸிக்கு ஏமாற்றம்., பட்லரின் அதிரடியால் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து !

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் காணப்பட்ட நிலையில் ,
2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாடியது. வார்னர் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், அலேக்ஸ் கேரி 2 ஓட்டங்களிலும்  ஆட்டமிழந்தனர். இதனால் 3 ஓட்டங்களுக்குள்ளேயே  2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.
கேப்டன் ஆரோன் பிஞ்ச் 33 பந்தில் 40 ஓட்டங்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்தில் 35 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 18 பந்தில் 26 ஓட்டங்களும் அடித்தனர். பேட் கம்மின்ஸ் 5 பந்தில் 13 ஓட்டங்களும், ஆஷ்டோன் அகர் 20 பந்தில்  23ஓட்டங்களும் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157ஓட்டங்கள் அடித்தது.
பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள்  பேர்ஸ்டோவ்  9ஓட்டங்களுடன்  வெளியேறினார். அடுத்து ஜோஸ் பட்லர் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மலன் 32 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பட்லர் 54 பந்தில் 77 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையி உள்ளது.
3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளைமுறுதினம் (செப்டம்பர் 8-ந்தேதி) நடக்கிறது. அதன்பின் செப்டம்பர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.

ஜப்பானின் தெற்கு பகுதி நோக்கி நெருங்கும் பாரிய சூறாவளி ! – 8.1 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்.

ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது.

ஜப்பான் நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என பெயரிடப்பட்ட சூறாவளி நெருங்கி வருகிறது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கிலோ மீட்டர் இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீட்டர் வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இன்று இரவு ஜப்பானின் கியூசூ தீவை சூறாவளி தாக்கும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கிருந்து 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. இதேபோன்று ஜப்பானிலுள்ள பிற 10 மாகாணங்களிலுள்ள 55 லட்சம் மக்களையும் வேறு பகுதிகளுக்கு வெளியேறி செல்லும்படி பரிந்துரைத்து உள்ளது.

“இலங்கைக்கான திட்டங்களை உருவாக்குவது நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றோம்” – அமெரிக்க தூதுவர் அலைனா

அமெரிக்காவின் உதவித்திட்டங்களும்  செயற்பாடுகளும்  இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உதவி திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அலைனா டெப்பிளிட்ஸ் மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்காவின் உதவி திட்டங்கள் எவையும் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவையல்ல.

மேலும், பரஸ்பரம் இறைமையை மதித்து பாதுகாப்பதே வலுவான ஒத்துழைப்பு.  துரதிஸ்டவசமாக எங்களின் பல திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து சமீபகாலங்களில் பிழையான கருத்து காணப்படுகின்றது.

ஆனால், எங்களின் எந்த திட்டங்களும் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துபவையல்ல. இலங்கைக்கான திட்டங்களை உருவாக்குவது நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு !

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1982 ஆண்டு இலக்கம் 10 யின் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்துடன் வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48 யின் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக) ஒழுங்கு விதிகள் சட்டததின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள பணிகளுக்காக – தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் உலகின் நம்பர் 1 வீரர்! – தகர்ந்தது 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவு.

யு.எஸ் ஓபின் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் ஆடிய நோவக் ஜோகோவிச் அமெரிக்க ஓபின் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உலகின் நம்பர் 1 வீரரை தகுதி நீக்கம் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாப்லோ கரேனோ பஸ்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டின் போது சர்வ் ஒன்றைத் தோற்று ஜோகோவிச் 5-6 என்று பின் தங்கினார். இதில் சற்றே வெறுப்படைந்த ஜோகோவிச் பந்தை மட்டையால் கொஞ்சம் வேகமாகவே பின் பக்கமாக வெறுப்பில் அடிக்க அது அங்கு நின்று கொண்டிருந்த பெண் லைன் நடுவரின் தொண்டையைத் தாக்கியது, நடுவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

உடனே ஜோகோவிச் அவர் அருகே சென்று அவருக்கு உதவினார், தேற்றினார். ஆனால் யு.எஸ் ஓபின் தொடர் ரெஃப்ரி சோரம் ஃப்ரீமெல் மைதானத்த்துக்குள் விரைந்து வந்தார். ஆட்ட நடுவர் ஆரிலி டூர்ட்டிடம் பேசினார், கிராண்ட் ஸ்லாம் கண்காணிப்பு அதிகாரி ஆண்டிரியாஸ் எக்லியும் உடனிருந்தார்.

யு.எஸ் ஓபின் அதிகாரிகளுக்கும் நோவக் ஜோகோவிச்சுக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. நோவக் ஜோகோவிச் தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை தெரியாமல்தான் நடந்து விட்டது மன்னிக்கவும் என்றார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் விதிகள் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராகச் சென்றன. கடைசியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அவர் பரிதாபமாக தன் கிட் பேக்கை எடுத்து கொண்டு வெளியேறினார்.

எதிர் வீரர் பஸ்டா அதிர்ச்சியில் உறைந்தார். 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவு முடிந்தது.

இதற்கு முன்பாக 1995-ம் ஆண்டு விம்பிள்டனில் பிரிட்டன் வீரர் டிம் ஹென்மன் இதே காரணத்துக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

யு.எஸ் ஓபினிலிருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் யு.எஸ் ஓபனில் அவர் எடுத்த தரவரிசைப் புள்ளிகளை இழக்கிறார். மேலும் அபராதத் தொகையையும் ஜோகோவிச் செலுத்த வேண்டும்.

மேலும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் புறக்கணித்ததால் இன்னொரு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

நோவக் ஜோகோவிச் தடை குறித்து கருத்துக் கூறிய அனைவருமே வேறு வழியில்லை, ஜோகோவிச் தன் விதியை சந்தித்துதான் ஆக வேண்டும், விதிமுறைகள் அப்படி என்கின்றனர்.

சம்பவத்துக்குப் பிறகு ஜோகோவிச் இறுகிய முகத்துடன் தன் கருப்பு டெஸ்லா காரில் பறந்தார். யு.எஸ் ஓபனில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது, ஜோகோவிச்சின் செர்பிய ரசிகர்களுக்கு தகுதி நீக்கம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த சம்பவத்துக்கு ஜோகோவிச் மன்னிப்புக் கேட்டு, வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதில், “இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையும் என்னை வருத்தமடையச் செய்ததோடு என்னை வெறுமையாக்கியுள்ளது. காயம்பட்ட அவரை நான் உடனடியாக கவனித்தேன் கடவுள் புண்ணியத்தில் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறார்.

அவருக்கு இதன் மூலம் ஏற்படுத்திய வேதனைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றே செய்யவில்லை. ஆனால் பெரும்தவறிழைத்து விட்டேன். அவரது அந்தரங்கத்திற்கு மதிப்பளித்து அவரது பெயரை நான் வெளியிடவில்லை. தகுதி நீக்கம் குறித்து நான் மீண்டும் என் ஏமாற்றத்தை தணிக்க பணியாற்ற வேண்டும்.

இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஒரு வீரராகவும் இனிமேலாவது ஒரு மனிதனாகவும் மாற முயற்சிகள் மேற்கொள்வேன். யுஎஸ் ஓபினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த என்னைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி, என்னை மன்னித்து விடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அண்டு 26 போட்டிகளில் வென்று ஒன்றைக் கூட தோற்காது 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பொது கண நேர வெறுப்பின் செயலால் பலனை அனுபவித்து வருகிறார் ஜோகோவிச்.