மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவான, பிரேமலால் ஜயசேகரவுக்கு, பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி வழங்க வேண்டும் என்பதோடு, அவரை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று (07) சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இன்று (08) பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலை வேனில் அழைத்து வரப்பட்டிருந்தார்.
சிறைச்சாலையிலிருந்து பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் அமளி துமளிக்கு மத்தியில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட பலரும் பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணம் முறையற்றது என தெரிவித்து அது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் வாதிட்டிருந்தனர்.
இந்த நிலையில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சகல உரிமையும் உள்ளது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.
இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததன் மூலம் சபாநாயகர் அரசியலமைப்பை மீறவில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.