15

15

தொடரும் பொலிஸாரின் கெடுபிடி! – திலீபன் நினைவேந்தல் வளைவுகளும் திருவுருவப்படங்களும் அகற்றப்பட்டது.

தியாக தீபம் திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தவர் தியாகி திலீபன் . கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் 12ஆம் நாளான செப்டம்பர் 26ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.  அவருடைய தியாகத்தை நினைவு கூர்ந்து தமிழர்களால் அவருடைய நினைவு தினம் வருடாவருடஇம் அனுஸ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – நல்லூர் மற்றும் யாழ். பல்கலைக்கழக வளாகப் பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படங்கள், நினைவு வளைவுகளைப் பொலிஸார் அகற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் இன்றாகும். திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு யாழ்.நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகழ்வுகளைத் தடை செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் குறித்த நினைவேந்தல் வளைவுகள் மற்றும் திருவுருவப்படங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

“மக்கள் எம்மீது கொண்ட ஜனநாயகத்தின் உன்னத விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கு ஒரு அரசாங்கமாக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்“ – பிரதமர் மகிந்த ராஜபக்ஸ

சர்வதேச ஜனநாயக தினம் இன்று  கொண்ட்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு  ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிடுவதற்கு கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் உறுதிபடுத்துவதற்கும் உலக நாடுகளை ஊக்குவித்து 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் திகதி சர்வதேச ஜனநாயக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தற்போதைய மக்கள் சமூகத்தினுள் அனைவரும் தங்களது ஜனநாயக உரிமை உறுதிபடுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களது வாழ்க்கையில் சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தை அனுபவிக்கும் உரிமையை பாதுகாத்தல் ஜனநாயகத்தின் குறிக்கோளாக காணப்பட வேண்டும் என நாம் நம்புவோம்.

எமது நாட்டு மக்களின் வாழும் உரிமைக்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்ற கடந்த காலம் இந்த தருணத்திலும் எனது ஞாபகத்திற்கு வருகிறது. பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டிற்கு சமாதானத்தை பெற்றுக்கொடுத்து, இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிபடுத்துமாறு அன்று நாம் பிரார்த்தித்தோம்.

நாம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்காக முன்னிற்க முடிந்ததில் ஒரு நாடு என்ற வகையில் நாம் பெருமைப்படலாம்.

தேர்தல்களை நடத்தாத அரசாங்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து நாட்டு மக்களுடன் ஜனநாயகத்தின் வெற்றிக்காக நாம் செயற்பட்டோம்.

எதிர்காலத்திலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தி மக்கள் எம்மீது கொண்ட ஜனநாயகத்தின் உன்னத விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கு ஒரு அரசாங்கமாக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்ற உறுதிப்பாட்டை நாங்கள் அறிவிக்கின்றோம்.

ஜனநாயகத்தை பாதுகாத்து சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசு என்ற வகையில் எதிர்காலத்தை நோக்கி முன்செல்வதற்கு சர்வதேச ஜனநாயக தினமான இன்று அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தியாகிதிலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க பொலிசார் மூலம் நீதிமன்றத் தடையுத்தரவு!

தியாகி திலீபனின் நினைவுதினத்தை அனுஸ்டிப்பதற்கு தமிழர்பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தியாகி திலீபனின் நினைவுநாளை அனுஸ்டிக்க பொலிசார் மூலம் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ்நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த விடயத்தின் மீதான வழக்கின் போது தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவு கூறுதல் , கொரோனா அச்சமுள்ள நிலையில் கூட்டம் கூடுதல், மீள ஆயுதக் கலாச்சாரமொன்றை ஆதரித்தல் போன்ற காரணங்களுக்காக தியாகி திலீபனின் நினைவு நாளை அனுஸ்டிக்க தடைவிதிப்பதாக யாழ்.நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதே நேரம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை மட்டக்களப்பில் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் மட்டக்களப்பு இணைப்பாளருக்கு பொலிசார் மூலம் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை 15ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்நிகழ்வினை ஒழுங்கமைப்பு செய்யும் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.