16

16

”வர்த்தமானியில் வெளிவந்த 20ஆவது திருத்த வரைவு இறுதியோசனையில்லை ” – ஜி.எல்.பீரிஸ்

“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான நகல் வடிவைத் தயாரித்தது நான் இல்லை. இது இறுதி யோசனையும் இல்லை.” இவ்வாறு அமைச்சரும் அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவை ஆராய்வதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சில விடயங்களை விரைவாக தெளிவுபடுத்த வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். உதாரணத்துக்கு ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கலாமா என்பதற்குத் தீர்வைக் காணவேண்டியுள்ளது.

அரசமைப்பு மாற்றத்துக்கான நடைமுறையின் ஆரம்பமாகவே நாங்கள் 20ஆவது திருத்தத்தைக் கருதுகின்றோம்.

தேர்தல் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்ட பின்னர் அரசமைப்பில்குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறும்.

20ஆவது திருத்தத்துக்கான நகல் வடிவைத் தயாரித்தது நான் இல்லை. அமைச்சரவையின் அனுமதியுடன் 20ஆவது திருத்தத்தை முன்வைத்தது அரசே. அமைச்சர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டுப் பொறுப்பை ஏற்கின்றோம்.

20ஆவது திருத்த வரைவு இறுதி யோசனையில்லை. இதனை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளோமே தவிர நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை” – என்றார்.

தொல்லியல் திணைக்களத்தின் தொடரும் பௌத்தமயமாக்கலும் – வெடுக்குநாறிமலை தமிழர் பல தலைமுறை வழிபாட்டுக்கான தடையும் !

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இக்கோவில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு-பாலமோட்டை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலையின் உச்சியில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புகளைக்கொண்டு காணப்படுகின்றது.

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் - Nallurlk

300 மீட்டர் உயரமான வெடுக்குநாறிமலை அடிவராத்தில் கேணி, தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் என்பன அதன் வரலாற்றைக் கூறுகின்றது. இம்மலையின் உச்சியில் ஆதிலிங்கேசுவரர் என்ற சிவனுடைய இலிங்கம் அமைந்துள்ளது.கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளத் தடை வித்தனர். ஆனாலும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை அடுத்து, இத்தடையினை தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி காவல்துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் கோவிலைப் புனரமைக்கவோ அல்லது புதிய கட்டடங்களை அமைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீண்டகாலமாக வழிபடப்பட்டுவருகின்ற எமது  வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 17ம்திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்த நிலையில் பொலிஸார் அதனை தடுத்து நிறுத்துவதற்காக கடும் பிரயத்தனங்களை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.
ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி அவசர அவசரமாக தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்துள்ளனர். இரண்டு பக்கங்கள் நிரம்பிய அந்தக்கடிதம்  முற்று முழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும் அது தொல்லியலுக்குறிய இடம் என்றும் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது.எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பட்டிப்பதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பட்டு இருப்பதாக வழக்கு தொடர்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் இதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் திணைக்களம் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் ஆலய உற்சவத்தினை நிறுத்துமாறு நாளையதினம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலய நிர்வாகத்தினரை  நீதிமன்றம் வருகைதருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மொழிசார்ந்த நம்முடைய அடையாளங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானதோ ..?அதை விட முக்கியமானது நம்முடைய கலாச்சாரம் சார்ந்த விடயங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிப்பது. அதற்கானவையே இந்த திருவிழாக்களும் பண்பாடு சார் நிகழ்வுகளும்.
வெடுக்குநாறிமலை சிவன் ஆலயம் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் - Tamilwin
அண்மையில் கிழக்கு தொல்லியல் செயலணியில் உள்ள ஒரு பிக்கு ஒருவர் திருக்கோணேஸ்வர ஆலயம் ஒரு விகாரை என குறிப்பிட்டு அதற்கு பௌத்த மயமாக்கல் ரீதியான விளக்கம் ஒன்றை வழங்கியிருந்தார். இது போன்றதான ஒரு நிலையே வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கும் ஏற்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகளை பொலிஸார் தடுப்பது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களிலும் இது போன்றதான ஒரு கெடுபிடிக்குள்ளேயே இங்கு வழிபாடுகளெ் மேற்கொள்ளப்பட்டன.
மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது ஒரு மலைக்கோவில் இதனாலென்ன வந்து விடப்போகின்றது எனத்தோன்றும் உண்மை நிலை அவ்வாறானது இல்லை. எங்களுடைய கண்ணுக்குத் தெரியாமல் படிப்படியாக தமிழர்களுடைய வழிபாட்டு தலங்கள் பௌத்தமயமாக்கப்பட்டவண்ணமுள்ளன. அண்மையில் கூட முல்லைத்தீவில் நீராவியடி பிள்ளளையார் கோவிலில் கூட இது போன்றதான ஒரு பிரச்சினை அரங்கேறி இறுதியில் பௌத்தபிக்கு ஒருவருடைய உடல் அப்பகுதியில் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி தகனம் செய்யப்பட்டிருந்தது. அதனுடைய இன்னுமொரு பகுதியாகவே வெடுக்குநாறி மலையை பௌத்தமயபடுத்தும் முயற்சியை தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகள் தொடர்ந்தும் அப்பகுதியில் வாழும் பல தலைமுறையினரால் வழிபடப்பட்டு வருகின்ற நிலையில் அதனை தடுப்பது அல்லது மக்களை அங்கு சென்று வழிபாடியற்ற தடை செய்வது எவ்வளவு வக்கிரமான ஒரு மனோநிலை. ருவன்வெலிசாய 2000 வருட பழமையான ஒரு விகாரை . அங்கு இப்போதும் வழிபாடுகள் அதே புனிதத்தன்மையுடன் இடம்பெறுகின்றன. அதே போன்றதான ஒரு வழிபாட்டு மையமே வெடுக்குநாறி மலையும் அதற்கு மட்டும் ஏன் இத்தனை
கட்டுப்பாடுகள் ..? தொல்லியல்திணைக்களம் என்பது ஒரு நாட்டினுடைய எல்லா பிரஜைகளுக்குமானதாக இருக்க வேண்மே தவிர ஒரு தரப்பினருடைய வரலாற்றை அழித்து இன்னொரு தரப்பினருடைய வரலாற்றை பதிய வைப்பதாக இருக்க கூடாது. இத்தனைக்கும் வெடுக்குநாரிமலை ஆலயபகுதி தொல்லியல் பகுதி என்பதற்கான எந்த வர்த்தமானி அறிவிப்புமே வெளியாகியிராத சூழலில் இந்த செயல் எத்தனை அபத்தமானது.
ஊடகங்களும் பெரிதாக இது பற்றி அலட்டிக்கொள்வதில்லை. நகர்ப்புறங்களில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கும் சொந்த அரசியலுக்காகவும் அதிக பக்கங்களையும் நேரத்தையும் ஒதுக்கும் ஊடகங்கள் கிராமப்புறம்தானே என வெடுக்குநாரியை ஒதுக்கிவிட்டனர் போலும். பாராளுமன்ற அமர்வுகளில் தேவைக்கில்லாத விடயங்களை பற்றி அலட்டிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகளுடைய பார்வை கூட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மேல் பட்டதில்லை.
வெடுக்குநாறி தனிப்பட்டு அப்பகுதி மக்களுடைய பிரச்சினை மட்டுமேயில்லை. வெடுக்குநாரி தொல்லியல்துறையினரிடம் பறிபோகுமாயின் அழியப்போவது ஆலய சூழல் மட்டுமல்ல. எம்முடைய 2000 ஆண்டுகால வரலாற்று நிலைப்பும் தான். ஊடகங்களுடைய பார்வையும் அரசியல் தலைவர்களுடைய பார்வையும் படாத இடமாகவும் ஒதுக்குப்புறமாக நம்மால் கவனிப்பாரற்றும் வெடுக்குநாறி கிடப்பதால் தான் இலகுவாக அதனை கையகப்படுத்த தொல்லியல்துறை முயற்சிக்கின்றது.
தமிழ் ஊடகங்கள் விரைந்து இந்த செய்தியை எல்லா தரப்பினருக்கும் கொண்டு செல்ல முயற்சிப்பதுடன் வெடுக்குநாறி வரலாற்றை ஆவணப்படுத்தவும் முன்வரவேண்டும். மேலும் இந்த விடயம் தொடர்பில் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் அரநியல்தலைமைகளும் அதிக கவனம் செலுத்தி விரைந்து இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற பல வெடுக்குநாரிமலைகளை தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து பாதுகாக்க முடியும்.

“20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள நன்மையைப் பார்த்து எதிர்க்கட்சியிலுள்ள எவரேனும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும்” – கெஹெலிய ரம்புக்வெல

புதிய அரசாங்கம் பதவியேற்ற நாள் முதல் நாட்டுக்கான 20வது திருத்தத்தை உருவாக்குவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது. ஒரு புறமாக 20வது திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற போதிலுமு் கூட ஆளுமு்தரப்பினர் அது மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக மிகத்தெளிவாக கூறுவதையும் காண முடிகின்றது.

இந்நிலையில் , 20 ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை நாடாளுமன்றத்தில் ஆராயவும் மக்களின் கருத்தாடலுக்கு விடவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை எவ்வாறுள்ளது என்பதைப் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமூலத்தில் உள்ள நன்மையைப் பார்த்து எதிர்க்கட்சியிலுள்ள எவரேனும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இதே நேரத்தில் இன்னுமொரு ஆளுங்கட்சி பாராளுமன்ற  உறுப்பினரான நாமல் ராஜபக்ஸ 20ஆவது திருத்தம் பற்றி குறிப்பிடும் போது ”20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எழுதியது யார், கொண்டு வந்தது யார் என்பதை ஆலோசிக்க வேண்டிய நேரம் இதுவல்ல , 20 ஆவது திருத்தத்தில் எவருக்கேனும் சந்தேகங்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என குறிப்பிட்டுள்ளார்.