28

28

“தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை” – எம்.ஏ.சுமந்திரன்

“தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்தக் கூடாதென யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை. வழக்கொன்றில் முன்னிலையாகுவதெனில் அந்த தரப்பினர் சட்டத்தரணியை அணுக வேண்டும் அப்படி அணுகாததால் நான் முன்னிலையாகவில்லை.

கடந்த முறை யாழ்.மாநகரசபை முதல்வர் ஆல்நோட் என்னை தொடர்பு கொண்டு முன்னிலையாகும் படி கேட்டுக் கொண்டார். அதனால் முன்னிலையானேன். நினைவேந்தலிற்கு நீதிமன்றம் அனுமதித்தது. அடுத்த முறையும் அனுமதித்தது.

இதே நீதிமன்றம் தான் நினைவேந்தலிற்கு அனுமதியளித்தது. அந்த வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டியிருந்தாலே நினைவேந்தலிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்.

நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, என்னை ஆல்நோட் அணுகினார். ஆனால், அனைத்தும் முடிந்த பின்னரே அவர் அணுகினார். அதனால் பலனிருக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க வேண்டுமென மக்கள் தன்னெழுச்சியாக விரும்பியிருந்தனர். மாறாக திலீபன் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

சில அரசியல் கட்சிகள் அதை ஒழங்கு செய்கிறார்கள். ஆனால், நினைவேந்தலை செய்யும் உரிமை தமக்கு இருப்பதாக மக்கள் உணர்கின்றார்கள். யாராவது நினைவேந்தலை ஒழுங்கமைத்தால் மக்கள் அதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

“புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“காத்திரமான அரசியல் வேலைத் திட்டம் ஏதுமின்றி மக்கள் ஆதரவை இழந்துள்ள நிலையில் புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, ஈழ விடுலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்ப கால உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திலீபனை நினைவுகூருவது தொடர்பாக தற்போது பேசி வருகின்ற அரசியல் தலைவர்கள் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பேசுகின்றார்களே தவிர, எவரும் உளப்பூரவமாக பேசவில்லை.

குறித்த அரசியல் தலைவர்களை இதுதொடர்பான பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கின்றேன். குறிப்பாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அமைப்புக்களை புலிகளின் தலைமை அழித்தபோது யாழ்ப்பாணத்தில் அதனை நேரடியாக திலீபன் வழிநடத்தியிருந்தார்.

அதேபோன்று, தமிழரசுக் கட்சித் தலைவர்களும் புலிகளின் தலைமையினால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமல்ல, தற்போது குறித்த அமைப்புக்களின் தலைவர்களாக திலீபனை நினைவுகூர வேண்டும் என்று கையொப்பம் இட்டவர்களும் புலித் தலைவர்களின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான்.

இவ்வாறானவர்களினால் உளப்பூர்வமாக திலீபனை நினைவு கூரமுடியாது. எனினும் காத்திரமான அரசியல் வேலைத் திட்டம் ஏதுமின்றி மக்கள் ஆதரவை இழந்துள்ள நிலையில் புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.