October

October

பயங்கரவாதத்திற்கு துணையாக செயற்பட்ட ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (09.10.2020) அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

ரிஷாட் பதியூதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமை - முழுமையான விசாரணை  மேற்கொண்டு மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆளும் ...அவரது கைது தொடர்பில் வலுவான சாட்சிகள் காணப்பட்ட போதிலும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாது, எவ்வித சட்ட அனுமதியுமின்றி ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு பயங்கரவாதத்திற்கு துணையாக செயற்பட்ட ரியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சியின் 100இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைமைகளின்போது சீனா இலங்கைக்குத் தொடர்ந்தும் கைகொடுத்து உதவும்” – இலங்கை அரசுக்கு சீன தூதுக்குழுவினர் நம்பிக்கை !

ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைமைகளின்போது சீனா இலங்கைக்குத் தொடர்ந்தும் கைகொடுத்து உதவும் என்று கொழும்பு வந்துள்ள சீன தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யாங் ஜியேச்சி தலைமையிலான சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இரு நாட்டு நட்புறவு, இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள், தேசிய அரசியல் விவகாரங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கை சந்திக்கும் நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்தப் பேச்சுக்களின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கை சர்வதேச மட்டத்தில் எதிர்கொண்டு வருகின்ற நெருக்கடிகள் தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை தூதுக்குழுவினர் இதன்போது முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடி நிலைமையின்போது இலங்கைக்கு உறுதுணையாக சீனா இருக்கும் என்று தூதுக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

சர்வதேச அரங்கில் இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க சீனா எப்போதுமே முன்னிற்கும் என்றும் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, யாங் ஜியேச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் சீனாவுக்கான விஜயத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் சீனத் தூதுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர் தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி – 43 பேர் தனிமைப்படுத்தலில் !

திருகோணமலை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த 43 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார். கந்தளாய் பிரதேச கொரோனா நிலைமை தொடர்பான ஊடக சந்திப்பு இன்று(9) கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த தகவலை வழங்கினார்.

வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பெண், கொழும்பில் இருந்து கந்தளாய்க்கு கடந்த மாதம் 26ஆம் திகதி சென்றதாகவும் பின்னர் 28ஆம் திகதி அவர் மீண்டும் கொழும்பிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கொழும்பில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண், கந்தளாய் பகுதியில் தங்கியிருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். மேலும், கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொடர்பாக முரணான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் ஊடகங்களின் ஊடாக உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.

உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. நோபல் பரிசை பெற வேண்டும் என்பது பல்துறை சாதனையாளர்களின் கனவாக இருக்கிறது.
உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்புஅந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, திங்கட்கிழமை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வெளியாக தொடங்கியது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகளான ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய 3 பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுவதாக நோபல் பரிசு அகாடமி அறிவித்தது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.  வேதியியலுக்கான நோபல் பரிசை  இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள். இலக்கியத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. உலக உணவு அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 58 ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் மேஜர்களாக பதவியேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் !

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர், இராணுவத்தின் மேஜர் பதவிகளுக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளையும் எடுத்திருந்தனர் . இந்நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவர்களுக்கான ஜேமர் பதவியை வழங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்வு இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள்” – சீன தூதுகு்குழுவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரும்,வெளியுறவு ஆணையத்தின் இயக்குநருமான யாங் ஜீச்சி (Yang Jiechi) தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவை இன்று (09.10.2020) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்தும் உதவியளிப்பதாக சீன உயர் மட்ட குழுவினர் இதன் போது தெரிவித்துள்ளனர்.

சீனா-இலங்கை இருதரப்பு உறவுகள் ஏற்கனவே மிகவும் திருப்திகரமான நிலையில் உள்ளன. இந்த நட்பைப் பேணுவதும் வளர்ப்பதும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் முன்னுரிமையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அரசாங்கங்களில் இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சீனா உறுதியாக நிற்கிறது என்றும் சீனக் குழு இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தது.

தனது நான்கு நாடுகளின் ஆசிய சுற்றுப்பயணத்தில் இலங்கை முதல் நாடு என்றும், சீன ஜனாதிபதி இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளார் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கூறினார்.

இதேவேளை தற்போதைய சீன- இலங்கை உறவுகளின் நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரவேற்றார்.

இலங்கையில் அதிதீவிர சமூகப்பரவலாக உருமாறும் கொரோனா – வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி !

இலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக உருமாறிவரும் நிலையில் இன்றைய தினம் சிலாபம், மன்னார், புத்தளம் பகுதியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது மேலும் செ்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் கடந்த 23ம் திகதி பங்கேற்ற சிலாபத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் 23ம் திகதி குறித்த நபர் கோட்டையில் உள்ள பஸ் டிப்போவுக்கு பயணம் செய்ததாகவும், மேலும் 30ம் திகதி நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

மன்னார் – பட்டித்தோட்டத்தில் உள்ள ஆயர் இல்லத்தில் கட்டிட பணியில் இருந்த புத்தளம் – கட்டுநேரியை சேர்ந்த ஒருவருக்கு நேற்று (08.10.2020) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டிட பணியில் ஈடுபட்ட குறித்த நபர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக நேற்று முந்தினம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற குறித்த நபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

இவருடன் கட்டிட நிர்மான பணியில் இருந்த 32 பேர், அவருடன் வந்த 3 பேர் உட்பட 35 உடனடியாக அந்த பகுதிகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். மேலும் மன்னார் பகுதியிலிருந்து வெளிமாவட்டத்துக்கான பேருந்து சேவைகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புத்தளம் – ஆராச்சிகட்டுவ, அடிப்பலயில் 17 வயதுடைய உயர்தர மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மாணவன் இறுதிவாரத்தில் கம்பஹாவில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“கொரோனா நிலவரம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியதாலேயே மருத்துவர் ஜயருவான் பண்டார பதவியில் இருந்து நீக்கப்பட்டார் ” – முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பரபரப்பு பேட்டி!

இலங்கையின் கொரோனா நிலவரம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியதாலேயே பொரள்ளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டாரவை அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

நான் நியமித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அந்த பணிப்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனேயே முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். அவர் தனிப்பட்ட ரீதியில் நல்லவர். அவரது திறமையை பார்த்தே நான் அந்த பதவியில் நியமித்தேன். அவருக்கு நிறைவேற்று தரத்திலான தகுதி இருக்கவில்லை என்பதுதான் சிறிய பிரச்சினை. இதனால், அவரை நான் பதில் பணிப்பாளராக நியமித்தேன். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மிகவும் பலவீனமாக இருந்தது, அதனை முன்னேற்றவே அவரை நியமித்தேன். அவர் அதனை முன்னேற்றினார்.

மருத்துவர் என்ற வகையில் அவர் அறிக்கைகளை வெளியிட்டார். அவர் அப்படியான அறிக்கைகளை வெளியிட்டாலும் அரசாங்கம் கொரோனா பரவல் முடிந்து விட்டது என்றே காட்டியது. PCR பரிசோதனைக்கான கேள்வி மனுவையும் அரசாங்கம் இரத்துச் செய்தது. அவர் ஆதரித்த அரசாங்கமே அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது என்ன கூறுகிறது என்று நான் கேட்கிறேன்?. என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் இல்லையென அரசாங்கமும் , சுகாதார அமைச்சும் பிரச்சாரம் செய்தமையினாலேயே மக்கள் அலட்சியமாக இருந்தனர் ” – பாராளுமன்றில் லக்ஷ்மன் கிரியெல்ல!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் இல்லையென அரசாங்கம் பிரசாரம் செய்துவந்ததாலேயே மக்கள் அது தொடர்பாக அலட்சியமாக இருந்தனர். கொரோன தொற்று மக்கள் மத்தியில் பரவும் நிலைமை இல்லை என சுகாதார அமைச்சரும் கடந்த ஏப்ரலில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் எனவும்  சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09.10.2020) தனிப்பட்ட தெளிவுபடுத்தல் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைக்கு நாங்கள் அனைவரும் முகங்கொடுத்து வருகின்றோம். ஆனால், கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் தெரிவித்தபோது, சுகாதார அமைச்சர் அதனை மறுத்ததுடன் அவ்வாறு தான் தெரிவித்திருந்தால் அதனைக் காட்டுமாறு எனக்கு சவால் விடுத்திருந்தார். அதன்பிரகாரம், சுகாதார அமைச்சர் கடந்த மாதம் 3ஆம் திகதி இலங்கை  இராணுவ ஊடகத்தின் யூடியுப் அலைவரிசையில் தெரிவித்திருந்த உரையை முன்வைக்கின்றேன்.

அதில் அவர், “கொரோனா தொற்று இன்று முழு உலகத்திலும் சமூகங்களுக்கிடையில் பரவியுள்ள நோயாகும். ஆனால் இந்த நோய் சமூகத்துக்குள் பரவுவதை முழுமையாக இல்லாமலாக்கிய உலகில் இருக்கும் ஒரே நாடு இலங்கையாகும் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று, கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி லங்கா சீ ஊடகத்தில், கொரோனா தொற்று நாட்டு மக்கள் மத்தியில் பரவும் நிலை இல்லை எனவும் மக்கள் மத்தியில் தொற்றும் நிலை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கொரோனா தொற்று சம்பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனவும் தொடர்ந்து மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பேணி செயற்படவேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் என்பன தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்திருந்தன.

இருந்தபோதும், அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தது.

அதனால்தான், மக்களும் கொரோனா தொடர்பாக அலட்சியமாகச் செயற்பட்டு வந்தனர். அதன் விளைவாகேவே தற்போது நாங்கள் இரண்டாம் அலைக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்” என்றார்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பு !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை முதல் இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டிக்கும் வகையிலும், தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற விரிவுரையாளர்கள் சந்திப்பொன்றினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. நண்பகல் 12 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் சமரசப்படுத்த முனைந்த துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, கலைப்பீட விரிவுரையாளர்களான எஸ்.ஜீவசுதன், எஸ். ரமணராஜா மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்ல மறுத்துள்ளனர்.

இந்நிலையில்,இன்று மாலை இடம்பெறவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் நேற்றைய சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கான சுயாதீன விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று துணைவேந்தர் மாணவர்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்றைய தினம் மாலை யாழ்பல்கலைகழக கலைப்பீட 2ம் – 3ம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட  பிரச்சினை நேற்று இரவினை அண்மிக்கும் போது விரிவுரையாளர்களுக்கும் – மாணவர்களுக்கமிடையான பிரச்சினையாக உருவெடுத்திருந்ததுடன் மாணவர்கள் ஊடகங்களிடம் “தங்களை விரிவுரையாளர்ளும், துணைவேந்தரும், காவலாளிகளும் தாக்கினர்” எனக்கூறியிருந்த நிலையில் இன்றையதினம் விரிவுரையாளர்கள் தாம் தாக்கப்பட்டதாக வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.