October

October

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ஆதரவு வழங்கினார்” – முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ஆதரவு வழங்கினார்”என  உளவுத்துறைத் தெரிவித்ததாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தற்போது வசித்து வரும் ஜெனரல் சேனநாயக்க, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இணைய காணொளி வாயிலாக ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்திருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மகேஷ் சேனநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,“யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தளபதியாக பணியாற்றிய காலப்பகுதியில் சஹரான் பற்றித் தெரிந்து கொண்டேன்.

சஹ்ரான்  பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறியும் திறன் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு இருக்கின்றது. ஆனால் இது குறித்து விசாரணைகளை நடத்திய நிறுவனங்கள், இராணுவ புலனாய்வு பிரிவின் ஆதரவைப் பெறவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் அல்ல. அவர் கொலைகாரர்களையும், சதித்திட்டம் தீட்டுவோர்களையும், பலாத்காரம் செய்பவர்களையும் நாட்டுக்குள் அனுமதிக்க முயல்கிறார்.” – ட்ரம்ப் காட்டம் !

நவம்பர் 3-ம் தேதி நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்றால், அடுத்த ஒரு மாதத்தில் கம்யூனிஸ்ட் கமலா ஹாரிஸ்  ஜனாதிபதியாகிவிடுவார் என்று அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடனும், துணை ஜனாதிபதி  வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகப் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி, ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான நேரடி விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் நடந்த முதல் கட்ட விவாதத்தில் ஜனாதிபதி ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி  வேட்பாளர் ஜோ பிடன் விவாதித்தனர். ஆனால், அடுத்த சில நாட்களில் ஜனாதிபதி ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே நேரடி விவாதம் நடந்தது. அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை ஜனாதிபதி ட்ரம்ப் கையாண்டவிதம்,  சீனாவுடன் உறவு, இனவெறி மோதல்கள், பருவநிலை மாறுபாடு போன்றவை குறித்து கமலா ஹாரிஸ் கடுமையாகச் சாடினார்.

ஜனாதிபதி ட்ரம்ப், ஜோ பிடன் இருவரும் தங்கள் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தனித்தனியே கருத்துகளைத் தெரிவித்தனர்

இதில் ஜனாதிபதி ட்ரம்ப் கொரோனா சிகிச்சைக்குப் பின் முதல் முறையாக ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு நேற்று (08.10.2020) பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“இரு துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையே நடந்த விவாதம் சரி சமமானது என்று நான் நினைக்கவில்லை. கமலா ஹாரிஸ் கொடூரமானவர். அவருடைய பேச்சால் நாங்கள் வீழ்ந்துவிடுவோம் என நான் நினைக்கவில்லை.

ஆனால், விவாதத்தின்போது யாருமே கமலா ஹாரிஸ் பேச்சை ரசிக்கவில்லை. கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். பெர்னி சான்டரிஸ்க்கு மிகவும் நெருங்கியவர் கமலா ஹாரிஸ். இது ஒவ்வொருவருக்கும் தெரியும். நவம்பர் 3-ம் தேதி நடக்கும் தேர்தலில் ஜோ பிடன் வென்றால், அடுத்த ஒரு மாதத்தில்கம்யூனிஸ்ட் கமலா ஜனாதிபதியாகிவிடுவார்.

நமது நாட்டுக்கு ஒரு கம்யூனிஸ்டையா..? தேர்வு செய்யப் போகிறோம். ஜோ பிடன் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றால் இரு மாதங்கள்கூட நீடிக்கமாட்டார். என்பது என்னுடைய கருத்து.

கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் அல்ல. சோசலிஸ்டுக்கும் அப்பாற்பட்டவர் கமலா. கமலா ஹாரிஸின் கருத்துகளைப் பாருங்கள். எல்லைகளைத் திறந்துவிடுவேன் என்று கூறுகிறார். கொலைகாரர்களையும், சதித்திட்டம் தீட்டுவோர்களையும், பலாத்காரம் செய்பவர்களையும் நாட்டுக்குள் அனுமதிக்க முயல்கிறார்.”

இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

பின்லாந்தில் ஒருநாள் பிரதமராக 16 வயது சிறுமி !

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது 34) என்ற பெண் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் அவர் ஒருபடி மேலே போய் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சன்னா மரின், ஆவா முர்டோ

ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம், 11-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி, ஆவா முர்டோ ஒரு நாள் பிரதமர் பதவியை வகித்துள்ளார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது. அந்த வகையில் பின்லாந்தில் 4-வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது.

இதையொட்டி பிரதமர் சன்னா மரின் பேசுகையில், தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இறுப்பதை உறுதி செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், அவை நாடுகளுக்கு இடையே அல்லது சமூகங்களுக்குள் டிஜிட்டல் பிளவுகளை ஆழப்படுத்தக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

“இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்துவதற்கும் அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஒன்றிணையவேண்டும்” – தமிழ்தேசிய கட்சிகளுக்கு சிவாஜிலிங்கம் அழைப்பு !

முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவர் படையணியின் தளபதியென அண்மையில் கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இந் நிலையில் இது தொடர்பில்  ஊடகவியலாளர்களுக்கு பதில் வழங்கிய தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் “இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்துவதற்கும் அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஒன்றிணையவேண்டும் ” என குறிப்பிட்டுள்ளார்.

 

கொரோனா உயிர்ப்பலி நாளுக்கு நாள் அதிகரிப்பு – 10 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியது உயிர்ப்பலி !

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும்  பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 604 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 80 லட்சத்து 38 ஆயிரத்து 584 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 759 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 75 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 66 ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,17,661
பிரேசில் – 1,49,034
இந்தியா – 1,05,526
மெக்சிகோ – 82,726
இங்கிலாந்து – 42,592
இத்தாலி – 36,083
பெரு – 33,098
ஸ்பெயின் – 32,688
பிரான்ஸ் – 32,521
ஈரான் – 27,888
கொலம்பியா – 27,331

10 மாத கைக்குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி – கொழும்பில் வைத்தியர்கள் அதிர்ச்சி !

கொழும்பு ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைக்குழந்தை ஒன்றுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 மாத கைக்குழந்தை ஒன்றுக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.

மினுவங்கொடை பிரதேசத்தில் இருந்து நேற்று (08.10.2020) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைக்கு அமைவாக குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“மின்சார விநியோகம் தொடர்பான கடந்தகால செயற்பாடுகளுக்கு என்னால் பொறுப்புக்கூற முடியாது எனினும் எதிர்கால செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் என்னால் பொறுப்பு கூற முடியும்” – பாராளுமன்றில் அமைச்சர் டளஸ் அழகப்பெரும !

“மின்சார விநியோகம் தொடர்பான கடந்தகால செயற்பாடுகளுக்கு என்னால் பொறுப்புக்கூற முடியாது எனினும் எதிர்கால செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் என்னால் பொறுப்பு கூற முடியும்”  என அமைச்சர் டளஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மூலம் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்திக்கு பெரும் செலவு ஏற்படுவதால் 2025 ஆம் ஆண்டுக்குள் தற்போது 32 வீதமாக உள்ள அத்தகைய உற்பத்தியை 05 வீதமாக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2015 தொடக்கம் 2019 வரையான கால கட்டங்களில் மின்சார சபைக்கு பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்து இலாபம் ஈட்டும் வகையில் மின்சார சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08.10.2020) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சமிந்த விஜேசிறி எம்.பி.எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அவை பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் வரை 8 வீதமான மின்சாரம் வீண் விரயமாக்கப்பட்டுள்ளது.அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் இயற்கை எரிவாயு மூலம் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

நிலக்கரி கொள்வனவில் கடந்த காலங்களில் மோசடி ஏற்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று முன்தினம் குழுவில் விரிவாக ஆராயப்பட்டது. அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயரதிகாரிகள் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் கோப் குழு தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தில் காலத்தில் புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்காமையே மின்சார சபை நட்டம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

அதேவேளை மின் இணைப்புக்கான விநியோக பாதைகள் சுத்திகரிப்பு, மற்றும் மின்சார இணைப்பு வழங்குதல் இணைப்பை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு கடந்த காலங்களில் வெளியாரே நியமிக்கப்பட்டனர். மின்சார சபை அதற்காக பெரும் செலவை எதிர்நோக்கியது. அதனால் மின்சார சபை ஊழியர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் கடந்தகால செயற்பாடுகளுக்கு என்னால் பொறுப்புக்கூற முடியாது எனினும் எதிர்கால செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் என்னால் பொறுப்பு கூற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப்படைகளை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீளப்பெறவுள்ளோம்” – டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் !

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பெப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படையினர் அனைவரையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுவதும் வெளியேறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படையினரை அமெரிக்கா வேகமாக குறைத்து வருகிறது.
இதற்கிடையில், வெளிநாடுகள் உள்ள படைவீரர்களை அமெரிக்காவிற்கே திரும்ப அழைப்பது அதிபர் டிரம்பின் கடந்த தேர்தல் அறிக்கையாக இருந்தது. அதன் பகுதியாக ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து பெரும்பாலான வீரர்களை அமெரிக்கா குறைத்துள்ளது. தற்போது தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த அமைதிப்பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள சூழ்நிலையில் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் உள்ள படைவீரர்களை திரும்பப்பெறும் முயற்சியில் ஜனாதிபதி டிரம்ப் இறங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் (டிசம்பர் 25) அமெரிக்கா திரும்ப அழைத்து வர உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள குறைவான எண்ணிக்கையிலான நமது வீரமிகு படைவீரர்கள் அனைவரையும் வரும்  கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் (டிசம்பர் 25) திரும்பப்பெற உள்ளோம்” என தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் உள்பட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது ” – பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

“இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது ” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08.10.2020) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலே அவர்கள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சர்வதேச உடன்படிக்கைகளில் ஒன்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையாகும். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இந்த உடன்படிக்கையின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது.

தமிழ் மக்கள் இந்த உடன்படிக்கையின் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளப்படாதது இந்த உடன்படிக்கையின் மாபெரும் குறைபாடாக இருக்கிறது. தமிழ் மக்கள் இந்த உடன்படிக்கையின் ஒரு தரப்பாக தவிர்க்கப்பட்டதால் தமிழ் மக்களின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கை முழுமையாக அமுலாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான மேலதிகமான ஒரு கடப்பாடு உள்ளது. ஆனால், உண்மை நிலவரமோ வேறு.

அன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இலங்கை அரசோ அந்த உடன்படிக்கையையும், அதில் அடங்கிய சரத்துக்களையும் தான் அமுலாக்குவதாகக் கூறிக்கொண்டு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தையும், மாகாண சபைகள் சட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.

இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்தபோது, அப்போதிருந்த முதன்மையான தமிழ்க் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் ஆகியோருடன் இச்சபையில் அங்கம் வகிக்கும் சம்பந்தனும் கையொப்பமிட்டு அனுப்பிய அந்தக் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

‘இந்திய நிபுணர்களின் பங்குபற்றுதலின்றி இந்தச் சட்டமூலம் வரையப்பட்டு நம் மீது திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சட்ட முன்வரைபை பகிரங்கப்படுவதற்கு முன் இந்திய அரசிடம் அதன் பிரதி சமர்ப்பிக்கப்படும் என்றே தமிழர் விடுதலைக்கு கூட்டணி எதிர்பார்த்திருந்தது. இவ்வாறு நடைபெறாது என நாம் கருதுவதால் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதி ஜயவர்தனவை நாம் சந்தித்து இந்தியாவுக்குத் தெரியப்படுத்தாமலே இந்தச் சட்டமூலம் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமையிட்டு நாம் கவலையடைகின்றோம் எனத் தெரிவித்தோம்.

இது இந்தியாவை ஒரு தரப்பாக மதிக்காமல் நடத்துவதாக மாத்திரமன்றி, இந்த ஒப்பந்தத்தில் உள்ள பந்தி 2.15ஐ மீறுவதாகவும் அமைந்துள்ளது’ – அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அக்கடிதத்தின் முடிவில், ‘இக்காரணங்களுக்காக தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையில் இவ்விடயங்களுக்குத் தீர்வு காணப்படாமல் , மேற்படி சட்டமூலங்களை இப்போதுள்ள வடிவத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் என ஜனாதிபதி ஜயவர்தனவை வற்புறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்’ எனவும் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

ஆகவே, இந்திய – இலங்கை உடன்படிக்கைக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. நாம் 13ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இது ஓர் ஆரம்பப்புள்ளியாகக் கூட அமையவில்லை என்ற காரணத்தினாலேயே நாம் 13ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றோம்.

தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக ஆளும்தரப்பினரும், ஐனாதிபதியும், பிரதமரும் நினைக்கலாம். ஆனால், அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. ஏனெனில், இந்திய – இலங்கை உடன்படிக்கையும் 13ஆவது திருத்தச் சட்டமும் முற்றிலும் வேறுவேறானவை. அப்போதைய அரசு இந்திய – இலங்கை உடன்படிக்கையை தன்னிச்சையாக வியாக்கியானப்படுத்தியதன் விளைவே 13ஆவது திருத்தச் சட்டம்.

ஆகவே, அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகவேனும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும், நாங்கள் அந்தச் சட்டத்தை நிராகரிக்கின்றோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இந்த உடன்படிக்கையின் சரத்துக்களின்படி தமிழர் தேசத்தை அங்கீகரித்து அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அதனடிப்படையில் இந்தத் தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகின்றோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

கிளிநொச்சியில் மூன்று வெவ்வேறு தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயற்சித்த ஆவா குழுவினர் கைது !

கிளிநொச்சியில் மூன்று வெவ்வேறு தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயற்சித்த ஆவா குழுவினர் நேற்று முன்தினம் (07.10.2020) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று (08.10.2020) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாள் தடுப்பு காவலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர்களிடமிருந்து நான்கு வாள்களும் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் குடும்பஸ்தர்கள் சிலரை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகை தந்திருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் குறித்த நபர்கள் கைது செய்யப்படாதிருந்தால் திட்டமிட்டபடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனவும், குறித்த தாக்குதல் முயற்சி கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த வட்டக்கச்சி, பரந்தன், செல்வாநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், மெலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.