October

October

வீணானது நிகோலஸ் பூரணின் அதிரடி ஆட்டம் – 132 ஓட்டங்களுக்குள் சுருண்டது பஞ்சாப் !

ஐ.பி.எல் தொடரின் 22-வது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவர் வார்னர் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய வார்னரும், பேர்ஸ்டோவ் ஜோடி, துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வார்னர் 52 ஓட்டங்களிலும்,  பேர்ஸ்டோவ் 97 ஓட்டங்களிலும், ரவி பிஷோனியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய போதிலும், ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை குவித்தது.

202 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 9ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்தார். தொடர்ந்து தலைவர்  கேஎல் ராகுல், சிம்ரன் சிங் இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆவுட் ஆகினர்.  மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நிகோலஸ் பூரண், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து 37 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்த பூரண், ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார். ஐதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 16.5 பந்துப்பரிமாற்றங்களில்  அனைத்து இலக்குகளையும் இழந்து 132 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் கிரிக்கெட்: ரஷித் கானின் சிறப்பான பந்து வீச்சால் பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

இப்போட்டியில் 55 பந்தில் 97 ஓட்டங்களை குவித்த ஐதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது..இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்து, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்கள் – விரிவுரையாளர்களிடையே கலேபரம் – விரிவுரையாளர்களும் காவலாளிகளும் தாங்களை தாக்கியதாக மாணவர்கள் குற்றச்சாட்டு !

இன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தம் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதுடன், துணைவேந்தர் தாக்குதல் நடாத்தி கழுத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மாணவன் கழுத்தில் காயத்தையும் காண்பித்தார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக வாயிலில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில்

“பல்கலைக்கழகத்திற்குள் அதிரடிப்படை மற்றும் பொலிஸாரை இறக்கி அடிப்போம், சுடுவோம் என துணைவேந்தர் அச்சுறுத்தியதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

மேலும் விரிவுரையாளர்கள் பரீட்சையில் புள்ளியிட மாட்டோம் எனவும், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றுவோம் என அச்சுறுத்தியதாக கூறும் மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும், காவலாளிக்கும், விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது? காட்டுமிராண்டிகள்போல் மாணவர்களுடன் நடந்து கொண்டவர்களுக்கு தண்டணை வழங்கப்படவேண்டும் என மாணவர்கள் கேட்டுக் கொண்டனர்.

சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

நாளை மாலை 3 மணியளவில் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் தவிர்ந்த பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் மூலம் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா உறுதியளித்ததன் பிரகாரம் மாணவர்களின் போராட்டம் சற்றுமுன்னர் கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா மூன்றாம் பரவலுக்கு நடுவிலும் சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் தூதுக்குழு தொடர்பில் நாடளுமன்றத்தில் வலுத்த விவாதம்..!

இலங்கை வருகை தரும்  சீன தூதுக்குழு எந்தவித தனிமைப்படுத்தலுக்கும் உற்படுத்தப்படாது நாட்டிற்குள் வருவது குறித்து பிரதான எதிர்க்கட்சியினர் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது பெரிய விவாதமாக வளர்ந்து கொண்டே சென்றுள்ளது.

வெளிநாட்டு உடன்படிக்கைகள் குறித்த விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளையில் உரையாற்றிய பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,  “சீன தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளமை தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் கொரோனா பரவுகின்றது என கூறிக்கொண்டு நாட்டின் முதலீடுகள், சுற்றுலாத்துறை எதனையும் மேற்கொள்ளாது நாட்டினை முடக்கி வைத்துக்கொண்டு எவ்வளவு காலத்திற்கு இருக்க முடியும். அடுத்த ஆண்டில் வைரஸ் தடுப்பு ஊசி அறிமுகப்படுத்துவதாக கூறுகின்றனர், தற்செயலாக தடுப்பூசி கண்டறியப்படாது போனால் இவ்வாறே முடங்கிக்கொண்டு இருக்கவா? முடியும். எனவே இந்த விடயத்தில் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும். இப்போது சீன தூதுவர்கள் வந்துள்ளனர், விரைவில் அமெரிக்க தூதுக்குழுவொன்றும் வரவுள்ளனர்” என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை தொடர்பாக எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, “அப்படியென்றால் இவர்கள் ஏயார் பபிள்  முறைமையின் படி வரவழைக்கப்படுவதென்றால் இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யாது, தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்படாது வரவழைப்பது போன்ற முறைமை தானே அது” என அவர் கேள்வி எழுப்பிய போது அதற்கு  ”அப்படி அல்ல, குறித்த நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும், பின்னர் அவர்கள் சமூக இடைவெளிகளை பேணும் விதமாக வரவழைக்கப்பட்டு இங்கு அவர்கள் தங்குமிடங்களில் அதேபோன்று சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பதும், அப்படியே அவர்களை மீண்டும் அனுப்பி வைப்பதும் போன்ற ஒரு முறைமையாகும்” என்ற பதில் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்தும் கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா “ இவ்வாறு தனிமைப்படுத்தப்படாத நபர்களை ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்துவிட்டார்களா” எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி “ அவ்வாறு வருபவர்கள் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம், அவர்கள் சீனாவிலேயே பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்து வரவேண்டும். இலங்கைக்கு வந்த பின்னர் நாம் அவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை செய்வோம் என்பதாகும். ஆகவே இரண்டு நாடுகளிலும் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும்“ என பதிலளித்தார்.

தொடர்ந்தும் கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா எனக்கு தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இலங்கைக்கு வரும் சகல பிரஜைகளிடமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுமா? – அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்களா ? ” எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி “இலங்கைக்கு வரும் சகலரிடமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும். தனியார் வைத்தியசாலை அல்லது அரசாங்கம் என ஏதோ ஒரு விதத்தில் பரிசோதனைக்கு உற்படுத்தப்படும் – “ என பதிலளித்தார்.

தொடர்ந்து கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா “ஆனால் இந்த சீனக் குழுவை தனிமைப்படுத்தவில்லை அப்படித்தானே?“ எனக்கேட்டார்.

தற்கு பதலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  “முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் கேள்விகளை முன்வைக்க  வேண்டாம், இவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதில்லை, ஒரு நாள் சந்திப்பிற்காக இவர்கள் வருகின்றனர். சீன கொமியுனிச கட்சியின் உயர் மட்ட அதிகாரி ஒருவரே இந்த குழுவுடன்  வருகின்றார். அவர்கள் எவ்வளவு பலமானவர்கள் என்பது உங்களுக்கு தெரியும், அவர்களை தனிமைப்படுத்தளுக்கு உற்படுத்துவது சரியானதா? என்ற கேள்வி உள்ளது’ என சமாளித்துக்கொண்டிருந்த வேளையில் இடையில் குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய  “ஹர்ஷ அவர்களே!  நான்தான் அவர்களை அழைத்துவர செல்கின்றேன். அவர்களை சந்திக்க எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற அறிவுரையும் உள்ளது. நான் அவர்களை சந்தித்த பின்னர் பாராளுமன்றத்திற்கு வரும் வேளையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டே வருவேன்” என கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் இரா.சாணக்கியன் கலந்துரையாடல் !

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய தமிழ் சிங்கள இன முரண்பாடுகள் குறித்தும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவின் கவனத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு சென்றுள்ளார்.

நேற்று(புதன்கிழமை) அமைச்சர் சமல் ராஜபக்சவினை சந்தித்த இரா.சாணக்கியன் மகாவலி பி வலய அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வரும் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதிகளில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் அத்து மீறி காணிகளை அபகரித்து விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறித்து தெரிவித்தார்

அத்துடன், அதனால் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய தமிழ் சிங்கள இன முரண்பாடுகள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் இதன் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் இருப்பதையும் சுட்டி காட்டியிருந்தார்.

இதனை கேட்டறிந்த அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கூட்டம் ஒன்றை நடாத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் அது குறித்து முடிவுகளை விரைவில் அறிவிப்பதாக இரா.சாணக்கியனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

“தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையைச் சீராக இயக்க மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்” – நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள்!

“தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையைச் சீராக இயக்க மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் வலியுறுத்தினார்.

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவைகள் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டமூலம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து பிரேரணைகள் மீதான விவாதத்தின்போது பேசும்போதே அவா் மேற்கண்டவாறு கூறினார்.

அதேவேளை அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

“கொரோனா வைரஸ் தொற்றானது அதிதீவிரமாக பரவும் இந்த வேளையில் அதனைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை உள்ளமையை நாம் உணர்கின்றோம். கொரோனா வைரஸ் பிரச்சினையின் பின்னணியுடன் பார்க்கும்போது அபிவிருத்தி என்னும் விடயத்தில் சுகாதார முற்னேற்றம் என்பது அதிகூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் சுகாதாரத்தை மேம்படுத்தலின் முக்கியத்துவம் கருதி நான் முக்கிய விடயம் ஒன்றினை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலகுவாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாகப் புற்றுநோயாளர்களும் உள்ளனர். கடந்த கால போர் காரணமாக குண்டுத் தாக்குதல்களினால் ஏற்பட்ட இரசாயன தாக்கங்களினால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வடக்கு மாகாணத்தில் மிக அதிகமாக உள்ளது. அவ்வாறு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக உள்ள தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் குறிப்பிட விரும்புகின்றேன்.

தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவை உருவாக்குவதற்கு எனது குடும்பத்தின் பங்களிப்பு கூடுதலாக இருந்தது. புற்றுநோய் பிரிவுக்குரிய கட்டடம் மற்றும் அதற்குரிய கோபோல்ற் இயந்திரத்தினையும் எமது குடும்பம் வழங்கியிருந்தது.

குறித்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு போரின் முன்னரும், பின்னரும் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல அதற்கு அப்பாலுள்ள மக்களும் சிகிச்சை பெறும் நிலையமாக விளங்கியது. மகரகம போன்ற தொலை தூரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் செல்ல வசதியற்ற பெருந்தொகையான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேவையை இந்த வைத்தியசாலை வழங்கி வந்துள்ளது.

இந்தநிலையில், வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் இந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு முழுமையாக இயங்குதவதற்குத் தேவையான ஆளணிவளம் 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனாலும் ,அந்தப் பதவிகளுக்கான ஆட்கள் நியமிக்கப்படவில்லை.

மாறாக மத்திய அரசின் கீழ் இயங்கும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அந்த ஆளணியை நியமித்து அவர்களை தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற அனுமதித்தனர். இந்தச் செயற்பாட்டின் காரணமாக மத்திய அரசின் கீழ் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலையில் வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் குழப்ப நிலைகள் உருவாகியது. இவ்வாறான முரண்பாடுகளால் நோயாளர்கள் மோசமாகப் பாதிக்கப்படும் நிலை தொடர்கின்றது.

இது மட்டுமன்றி தெல்லிப்பளை வைத்திசாலையில் கோபோல்ற் இயந்திரம் மற்றும் லீனியர் அச்சிலறேற்ரர் இயந்திரம் ஆகியன உள்ளன. அதனால் ஏனைய மாகாணங்களிலுள்ள மாகாண புற்றுநோய் வைத்தியசாலைகளை விடவும் கூடுதலான நிதிச் செலவு ஏற்படுகின்றது. எனினும், அந்த நிதித் தேவையை மாகாண அரசால் ஈடுசெய்ய முடியாதுள்ளது. மாகாண அரசின் கீழுள்ள இந்த வைத்தியசாலைக்குத் தேவையான செலவுகளை ஈடுசெய்வதற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை.

ஒரு புறத்தில் மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள மேற்படி புற்றுநோய் சிகிச்சை பிரிவை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதியை வழங்காது மறுபுறத்தில் இந்த அந்தப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்தால் அதனை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறி அதனை மத்தியின் கீழ் கொண்டு செல்ல அரசு முயற்சிக்கின்றது.

ஆனால், இந்தப் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வது பொருத்தமற்றது.

குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைப் பிரிவையும், உளநல சிகிச்சைப் பிரிவையும் மத்தியின் கீழ் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சிக்கின்றது. இவ்வாறு இவை இரண்டையும் மத்தியின் கீழ கொண்டு செல்வதன் மூலம் நிர்வாக ரீதியான சிக்கல்கள் மேலும் உக்கிரமடையும். எனவே, அநாவசியமான பிரச்சினைகளை உருவாக்காமல் அதுவும் கொரோனா வைரஸ் நெருக்கடியுள்ள இக்கால கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு குறித்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவானது தொடர்ந்தும் மாகாண நிர்வாகத்தின் கீழ் இருக்கக் கூடியதாக அதற்குத் தேவையான ஆளணி மற்றும் நிதி வசதிகளை வழங்கி அதன் சேவையை மேம்படுத்த அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” எனவும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார் .

இலங்கையின் 16 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் !

நாட்டில் தற்போது வரை 16 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கம்பஹா – மினுவங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக மீண்டும் இரா.சம்பந்தன் தெரிவு !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பாரென கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம்(07.10.2020) இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மிபேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில், முரண்பாடுகள் ஏற்பட்டமை காரணமாக பேச்சாளர் தெரிவு நேற்றைய தினம் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது.

பேச்சாளர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைக்கப் பட்டிருப்பதால் எம்.ஏ.சுமந்திரனே அதுவரை தொடர்ந்தும் பேச்சாளராகச் செயற்படுவார் என கூறப்படுகின்றது.

எனினும், கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சுமந்திரன் தனது பேச்சாளர் பதவியினை இராஜினாமா செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

“மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படாமையால் மாணவர்களும், பெற்றோரும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்” – நாடாளுமன்றில் அரவிந்தகுமார் !

“மலையகத்தில் பல்கலைக்கழகம் என்பது இதுவரை பகல் கனவாகவே உள்ளது. மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படாமையால் மாணவர்களும், பெற்றோரும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்” என பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (07.09.2020) பல்கலைக்கழக அனுமதி சம்பந்தமான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய போதே அரவிந்தகுமார் இதனை கூறினார்.

“இளைஞர், யுவதிகளுக்கான பட்டப்படிப்பு காலம் தொடர்ந்தும் நீடிக்கப்படுவதால் அவர்களின் கற்றலுக்கான காலம் வீணடிக்கப்படுகின்றது. இந்த நிலைமை நாட்டுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. ஆகவே இதனை குறைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மலையகத்தை பொறுத்தவரை இந்த பிரச்சினை வித்தியாசமானது. அதாவது பிள்ளைகளை கற்பிப்பதற்கு பெற்றோர் அதிக சிரத்தை எடுக்கின்றனர். அதனைவிட வளப்பற்றாக்குறை, ஆசிரியர்களின் குறைப்பாடு, ஆசிரியர் உதவியாளர்களின் நியமனத்தில் உள்ள இழுபறி என பல பிரச்சினைகள் உள்ளன.

குறிப்பாக பதுளை மாவட்டத்தில் தொழில் இல்லாத பிரச்சினை, பெற்றோரின் வருமான பிரச்சினை இவ்வாறான பல பிரச்சினைகள் மாணவர்களின் கல்வியில் பெருந்தாக்கத்தை செலுத்துகின்றன. பதுளை மாவட்டத்தில் தமிழ் மாணவர்கள் சாதாரண தரத்தில் சிறப்பான பெறுபேறுகளை பெற்றாலும் மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகளில் கல்வியை தொடர்ந்து சிறந்த பெறுபேறுகளை பெற முடியாமல் உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொன்னாலும் கூட பதுளையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனுமதி மறுக்கப்படுகின்றது. இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். ஆகவே கல்வியமைச்சர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று இல்லாமை பாறிய குறையாக உள்ளது. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் இது குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டாலும். இதுவரை மலையகத்தில் பல்கலைக்கழகம் என்பது பகல் கனவாகவே உள்ளது.

தற்போதைய நிலையில் வேறு மாகாண பல்கலைகழகங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் பெற்றோர் பாரிய பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அதேபோல் வேறு பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்கள் கல்வி பயின்றாலும் அவர்களின் இடைவிலகல் அதிகம். ஆகவே இவ்வாறான நிலைமையை நிவர்த்திக்க அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்´ என்றார்.

வைத்தியசாலையில் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபர் தப்பியோட்டம் ! – தீவிர தேடுதலில் பொலிஸ் !

ராகம வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த பேலியகொட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் தகவல்களை மறைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேலியகொட பகுதியை சேர்ந்த இந்த நபரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர். இவர் பொது போக்குவரத்தில் பயணித்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. அவர் எவ்வாறு பயணித்தார் என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

“முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து பிரித்து, தனியான தரப்பாக அடையாளப்படுத்தியது மறைமுக தந்திரோபாய வியூகம். இதன் மூலம் யுத்தத்தின் போது உளவுத்தகவல்களை பெறுவது இலகுவானது“ – ரணில் விக்கிரமசிங்க .

“முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து பிரித்து, தனியான தரப்பாக அடையாளப்படுத்த எமது உளவுச்சேவைக்கும் பெரிய தேவையிருந்தது. அது ஒரு மறைமுக தந்திரோபாய வியூகம். அவ்வாறு முஸ்லிம்களை தனியான தரப்பாக அடையாளப்படுத்துவதன் மூலம் யுத்தத்தின் போது உளவுத்தகவல்களை பெறுவது இலகுவானது“ என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்தபோது இதனை தெரிவித்தார்.

வடக்கிலிருந்த முஸ்லிம்களை, விடுதலைப் புலிகள் வெளியேற்றியதை தொடர்ந்து, முஸ்லிம்களின் அத்தகைய கோரிக்கைக்கு எமது உளவுப்பிரிவுகளும் மறைமுகமாக உதவி செய்தன. புலிகளுடனான யுத்தத்தின் போது உளவுத்தகவல்களை பெற்றுக்கொள்ளும் யுக்தியாக அது பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பிரகடனமும், ஒலுவில் பிரகடனமும் சமனானதல்ல என குறிப்பிட்ட ரணில், முஸ்லிம்கள் தனியான இனத்துவ அடையாள தரப்பாக அரசியலில் அடையாளப்படுத்தப்பட்ட பின்னணியை விளக்கினார்.

விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், முஸ்லிம்களை தனித்துவ அடையாளத்துடன் அரசியலில் அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்தது. அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபும் அந்த கொள்கையுடன் இருந்தார். முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து பிரித்து, தனியான தரப்பாக அடையாளப்படுத்த எமது உளவுச்சேவைக்கும் பெரிய தேவையிருந்தது. அது ஒரு மறைமுக தந்திரோபாய வியூகம். அவ்வாறு முஸ்லிம்களை தனியான தரப்பாக அடையாளப்படுத்துவதன் மூலம் யுத்தத்தின் போது உளவுத்தகவல்களை பெறுவது இலகுவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.