October

October

“நான் எல்லா அமெரிக்கர்களுக்காகவும் தான் இங்கே போராடிக்கொண்டிருக்கிறேன் – விரைவில் மீண்டும் வருவேன் ” – இராணுவ மருத்துவமனையில் இருந்து ட்ரம்ப்.

உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி டிரம்பும் ஆளாகி உள்ளார். 74 வயதான அவருக்கும், 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 1-ந் தேதி உறுதியானது, இது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்குதல் டிரம்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. முதலில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிகிச்சை பெற்ற டிரம்ப், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 2-ந் தேதி பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சேர்க்கப்பட்டார். அங்கு விரைவில் குணம் அடைவதற்கு வசதியாக அவருக்கு ‘ரெம்டெசிவிர் சிகிச்சை’ அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் 4 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

உடல்நிலை நன்றாக இல்லாத நிலையில், நான் இங்கு வந்தேன். இப்போது நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்காக கடுமையாக உழைக்கிறோம். நான் விரைவில் திரும்ப வருவேன். தேர்தல் பிரசாரத்தை முடிக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன். நாம் இந்த கொரோனா வைரசை வெல்லப்போகிறோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் நாங்கள் அதை நன்றாக வீழ்த்தப்போகிறோம்.

நான் எல்லா அமெரிக்கர்களுக்காகவும் தான் இங்கே போராடிக்கொண்டிருக்கிறேன். அடுத்த சில நாட்களில், ஒரு உண்மையான பரிசோதனை இருப்பதாக நான் யூகிக்கிறேன். எனவே அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம். என் மனைவி மெலனியா இளமையாக இருப்பதால் நன்றாக இருப்பதாக உணர்கிறார். இளம்வயதினரைப் பொறுத்தமட்டில் கொரோனாவின் லேசான அறிகுறிகளைத்தான் அனுபவிக்கிறார்கள்.

நானும் நன்றாக இருக்கிறேன். நாம் நல்லதொரு முடிவை பெறப்போகிறோம் என்று நினைக்கிறேன். அடுத்த சில நாட்களில் நாம் நிச்சயமாக அதை தெரிந்துகொள்ளப்போகிறோம். அமெரிக்காவிலும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும், அவர்களது ஆதரவு வார்த்தைகளுக்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த வீடியோ காட்சியில் டிரம்ப் வழக்கம் போல ‘கோட்-சூட்’ அணிந்திருந்தாலும், ‘டை’ அணியாமல், அமெரிக்க தேசிய கொடி பறக்க விடப்பட்ட சூழலில், மேசையின் முன் நாற்காலியில் அமர்ந்து காணப்பட்டார். வெள்ளை மாளிகை மருத்துவ நிபுணர் டாக்டர் சீன் கான்லி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் ஜனாதிபதி மிகச்சிறப்பாக செயல்படுவதாகவும், சிகிச்சைக்கு சாதகமாக பதில் அளிப்பதாகவும் தெரிவித்தார். மெலனியா டிரம்ப், தொடர்ந்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளில் எந்த மாற்றமும் இல்லை ! – இலங்கை பரீட்சைகள் திணைக்களம்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை மாணவர்களுக்காக புதிய இணையத்தள சேவையை ஆரம்பித்தது பரீட்சைகள்  திணைக்களம்..! | Newlanka

அதற்கமைய ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் நிலைமை குறித்து பரிசீலித்து வருவதாகவும் எனினும் உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

பரீட்சைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அட்டவணையானது கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை வழமையாக ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறும். எனினும் கொரோனா தாக்கம் காரணமாக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

முன்னதாக 2020ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை செப்டெம்பர் 7 முதல் ஒப்டோபர் 2 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்கவே அது மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இஸ்ரேல் பிரதமரை பதவி விலகக்கோரி தொடரும் மக்கள் போராட்டம் ! பொலிஸார் – மக்களிடையே கலவரம்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு மே மாதம் தொடக்கத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கொரோனா வைரசை முறையாகக் கையாளவில்லை என்றும் திறனற்ற அவரது நிர்வாகத்தால் நாடு பெரும் இழப்பை சந்தித்து உள்ளதாகவும் கூறி அவரை பதவி விலக வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் முதல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா பீதிக்கு மத்தியிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இந்தநிலையில் இஸ்ரேலில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீச தொடங்கி இருப்பதாக கூறி 2-வது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கை கடந்த மாதம் 18-ந் திகதி பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அமல்படுத்தினார். இந்த முழு ஊரடங்கு அக்டோபர் 14-ம் திகதி வரை அமலில் இருக்கும் என அப்போது அவர் அறிவித்தார்.

ஆனால் இந்த முழு ஊரடங்கு அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் முயற்சி என மக்கள் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை நிராகரித்த பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்கினார். இந்தநிலையில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம் நடத்தினர். தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர். நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல் அவிவ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. டெல் அவிவ் நகரில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்திருந்த அந்த நகரின் மேயர் ரான் ஹுல்டாய் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் காயமடைந்தார். அதேபோல் இருதரப்பு மோதலில் போலீசார் பலரும் ஏராளமான போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். இந்தப் போராட்டம் தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாகவும், பலருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இஸ்ரேலில் நேற்று புதிதாக 5,523 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 1,682 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் கொரோனா தொற்று 76 லட்சத்தைத் தாண்டிaது ! – 3.53 கோடியைத் தாண்டியது கொரோனா பாதிப்பு.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில்  பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் , தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.53 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.66 கோடியைக் கடந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10.41 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 76 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்துள்ளது இதே நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 66,23,816 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 903 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 1,02,685 ஆக உயர்ந்துள்ளது.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்தால் நாடு முழுவதும் மீண்டும் முடக்கப்படும் ” – ஜெனரல் சவேந்திர சில்வா

“நாட்டு மக்கள் கொரோனாத் தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.”என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சமூகத்தில் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். . இது அனைவரையும் பீதியடைய வைத்துள்ளது. எனினும், மக்கள் பீதியடையாமல் கொரோனாத் தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் கம்பஹா, திவுலப்பிட்டியப் பகுதியில் குறித்த குடும்பப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது தொடர்பில் சுகாதாரப் பிரிவினரும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண் மினுவாங்கொடைப் பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்தமையால் குறித்த ஆடைத்தொழிற்சாலை நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அதேவேளை, அங்கு அவருடன் தொடர்புகளைப் பேணிய 400 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. தொற்றாளர்கள் அதிகரித்தால் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும். ஏனெனில் குறித்த குடும்பப் பெண்ணுடன் தொடர்பைப் பேணிய பணியாளர்கள் நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

எனினும், நாட்டை உடனே முடக்க மாட்டோம். தொற்றின் வீரியத்தையும் நாட்டின் நிலைமையையும் அவதானித்த பின்னரே ஊரடங்குச் சட்டத்தை நாடு முழுவதிலும் விஸ்தரிப்பது தொடர்பில் முடிவெடுப்போம். தற்போது கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவுகளின் 7 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மட்டுமே மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடு முழுவதும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்றிலிருந்து இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பல்லைக்கழகங்களுக்கான விடுமுறைகள் தொடர்பில் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தானது. அதன் தீவிரத்தன்மை இலங்கையில் இன்னமும் குறையவில்லை. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எத்தனை பாதுகாப்பு அடுக்குகளைத் தாண்டி அவரைக் கொரோனா தங்கியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி !

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக அதன் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக இன்றைய தினம் நாடுமுழுவதும் கையேடுகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 20ஆம் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை, ஐவர்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று 4ஆவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

“தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் அரசு தவறிவிட்டதால், காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி, தமிழர்களுக்கு நீதி வழங்க செய்வதுதான் ஒரே வழியாகும்” – ஜெனீவாவில் கஜீவன் அய்யாதுரை

தமிழர்களுக்கு உரிய முறையில் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், உலக நடுவர் மன்றத்தில் இலங்கையை நிறுத்துவதுதான் சிறந்த வழியென ஜெனீவா கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெற இருக்கின்றது.

அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 – மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பான பொது விவாதத்தில் ஏ.பி.சி தமிழ் ஒலி அமைப்பின் சார்பாக உரையாற்றிய கஜீவன் அய்யாதுரை  “தமிழர்களுக்கு உரிய முறையில் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், உலக நடுவர் மன்றத்தில் இலங்கையை நிறுத்துவதுதான் சிறந்த வழி” என ஜெனீவா கூட்டத் தொடரில் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கூட்டத்தொடரில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மனித உரிமை உயர் ஆணையர் 31:1 தீர்மானத்தை நிறைவேற்றுதில் முன்னேற்றமில்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல், நீதி, உண்மை ஆகியவற்றை தேடுவதில் இலங்கை அரசு எவ்வித செயல்பாடுகளையும் செய்யவில்லை.

இன அழிப்பு குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், துன்புறுத்தல், போர் குற்றங்கள் போன்ற சில உலக குற்றங்களுக்கு மனித உரிமை உயர் ஆணையர் பரிந்துரைத்த உலக கட்டுப்பாட்டை உறுதி செய்யவேண்டும்.

மேலும், தங்களது உறவுகளுக்காக போராடிய தாய்மார்கள், சிலர் இறந்தும் விட்டனர். தற்போது நடைபெறுகின்ற தமிழின அழிப்பு பற்றி கலந்துரையாடல் நடத்த, 40:1 தீர்மானத்தின் முக்கிய குழுவையும் பிற உறுப்பினர்களையும் உடன்படிக்கை நாடுகளையும் அழைக்கின்றோம்.

2020 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ் இனஅழிப்பு நினைவேந்தலையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையும் திலீபன் நினைவு நாளையும் நினைவுகூற தடை விதித்தனர்.

அத்துடன், தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் அரசு தவறிவிட்டதால், காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி, தமிழர்களுக்கு நீதி வழங்க செய்வதுதான் ஒரே வழியாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாக இயங்கக்கூடிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக இவ்வளவு வேகம் காட்டுகிறது அரசு” – நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

“முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாக இயங்கக்கூடிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக இவ்வளவு வேகம் காட்டுகிறது அரசு” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (04.09.2020) நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போது இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாகக் கொண்டுவரப்படுகிறது என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. இதற்குக் காரணம், நவம்பர் மாத நடுப்பகுதியில் சுயாதீக ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவிருக்கிறது. அவ்வாறு, முடிவடையும்போது இப்போது இருக்கின்ற அரசியலமைப்புச் சபையினுடைய அனுமதியோடுதான் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். தான் நினைத்தவர்களை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது.

ஆனால், அதற்கு முன்னதாக இந்த 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அடுத்த தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாகவே இருப்பார்கள். இதுவொரு பாரிய திருப்பத்தினை நாட்டில் ஏற்படுத்தும்.

சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல்கள் கடந்த வருடங்களில் இந்த நாட்டிலே நடத்தப்பட்டிருக்கின்றன. அதற்கொரு பாரிய சவால் ஏற்படும். அதுதான் இத்தனை அவசரம்.

ஆனபடியால்தான், அவர்களுடைய கட்சிக்குள்ளே இருந்துகூட, இந்த இருபதாவது அரசியலமைப்புத் திருத்த ஏற்பாடுகள் பலவற்றுக்கு எதிர்ப்பு இருந்தபோதும், அவர்கள் அவற்றை மாற்றியமைப்பதாக இணங்கிக் கொண்டாலும்கூட, ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தையே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள்.

இல்லையென்றால், திருத்தங்களை உள்ளடக்கி வர்த்தமானியில் திரும்பவும் அரசியலமைப்புத் திருத்தம் பிரசுரிக்கப்பட வேண்டும். அதற்கு இரண்டு வாரகால அவகாசம் தேவை. அதற்குப் பிறகு நாடாளுமன்றத்திலே சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு ஒருவார கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

அப்படியெல்லாம் செய்துகொண்டிருக்க நவம்பர் மாதம் கடந்துவிடும். எனவேதான், 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக்கு அவர் மேற்கொண்ட போராட்டம் எனவே அந்த போராட்டத்தை நாங்கள் இழிவுபடுத்த முடியாது” – தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“ திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக்கு அவர் மேற்கொண்ட போராட்டம் எனவே அந்த போராட்டத்தை நாங்கள் இழிவுபடுத்த முடியாது” என தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (04.09.2020) மட்டக்களப்பில் புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையில் கிறிஸ்தவ மத நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து மத வழிபாட்டின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடந்த காலங்களில் கூட திலீபனின் அகிம்சைவழி போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல அதனை அசிங்கப்படுத்தியவர்களும் அல்ல நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம். அதற்கான கௌரவத்தை கொடுத்திருக்கின்றோம். கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

திலீபனின் கனவு என்ன?  இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்களும் ஏனைய சமூகத்துக்கு இணையாக, நிம்மதியாக, தலைநிமிர்ந்து வாழ வேண்டும் யாருக்கும் அடிமையாக இருக்க கூடாது என்ற அந்த கனவை நனைவாக்க வேண்டும் என்று நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை அவர்கள் மற்ற சமூகத்துக்கு கைகட்டி வாழாமல் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றோம் .

தீலீபனை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்துகின்ற ஒரு சிலர் எங்கள் மீது அரசியல் காட்புணர்ச்சி காரணமாக நாங்கள் அமைதியாக இருந்தோம் என குற்றம் சுமத்துகின்றனர். நாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போதும் திலீபனின் அந்த அகிம்சைவழி போராட்டத்தை மதிக்கின்றோம் மதித்துக் கொண்டிருக்கின்றோம் இதை தெளிவாக சில விசனத்தனங்களை கூறுகின்றவர்களுக்கு இந்த ஊடக சந்திப்பு வாயிலாக தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பிரச்சனையை வைத்து நாங்கள் இனிமேல் அரசியல் செய்ய முடியாது நாங்கள் அரசாங்கத்தோடு இருப்பது என்பது பிரச்சனையை வைத்துக் கொண்டு எங்களுடைய குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அரசியலை செய்ய முடியாது நாங்கள் வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு ஹர்த்தாலை குழப்பவில்லை அதற்கு எதிர்மாறாக செயற்படவில்லை அந்த போராட்த்துக்கு மறுப்பு தெரிவித்ததில்லை கடந்த காலத்தில் 42 மேற்பட்ட போராட்டங்களை மேற்கொண்டோம். மக்களின் நியாயமான போராட்டங்களை மதிக்கின்றோம் அதனை கௌரவிக்கின்றோம் அதுதான் உண்மையும் அதுதான் யதார்த்தமும்.

20 சீர்திருத்தம் என்பது 18 வது சீர்திருத்தத்தை தளுவி அதை நடைமுறைப்படுத்தும் ஒரு செயற்திட்டம் தான் 20 சீர்திருத்த சட்டம் இருக்கின்றது. இது தொடர்பாக எதிர்கட்சியில் பல்வேறு எதிர்ப்புக்கள் இருக்கின்றது எது எவ்வாறாக இருந்தாலும் 18 சீர்திருத்தம் 20 சீர்திருத்தமாக ஒரு சில மாற்றத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கின்றது  என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் நீக்கப்பட்டால் தற்கொலை செய்ய விக்னேஸ்வரன் தயாரா? “ – அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர கேள்வி .

“வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் நீக்கப்பட்டால் தற்கொலை செய்ய விக்னேஸ்வரன் தயாரா? என்று அவரிடம் நான் சவால் விடுகின்றேன்“ என உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

‘இலங்கை அரசு சார்பானவர்கள் மாகாண சபைகளை உடனே நீக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில் மாகாண சபைகளை நீக்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. எம்மைப் பொறுத்தவரையில் முழுமையான சமஷ்டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு, கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும்’ என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துத் தொடர்பில் சரத் வீரசேகர மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைகள் நீக்கப்பட வேண்டுமெனில் 9 மாகாண சபைகளும் நீக்கப்படும். விக்னேஸ்வரனுக்காக வடக்கு, கிழக்கைத் தவிர்த்து ஏனைய 7 மாகாண சபைகளையும் நீக்க முடியாது.வடக்கு, கிழக்கு மாகாண சபைகள்தான் மிகவும் ஆபத்தாக இருக்கின்றபடியால் மாகாண சபைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எனினும், மாகாண சபைகள் முற்றாக நீக்கப்பட வேண்டுமா? அல்லது 9 மாகாண சபைகளையும் மீள இயங்க வைக்க வேண்டுமா? என்பதை புதிய அரசமைப்பில் ஜனாதிபதிதான் தீர்மானிக்க வேண்டும்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் கருத்துக் கூறுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை.

சமஷ்டி கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இயங்க வேண்டும் என்று கூறுகின்ற விக்னேஸ்வரன், அதைமீறி வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்க முடியாது என்றும் குறிப்பிடுகின்றார். சமஷ்டி கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும் என்று புதிய நகைச்சுவையை விக்னேஸ்வரன் கூறியுள்ளார்

அவரின் இந்தக் கருத்தின் விரிவாக்கம் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் கனவான ‘தமிழ் ஈழம்’ கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கில் மாகாண சபைகளை நீக்க முடியாது என்பதேயாகும். விடுதலைப்புலிகள் போல் விக்னேஸ்வரனும் கனவு காண்கின்றார். அவரின் கனவு ஒருபோதும் நனவாகாது எனவும் குறிப்பிட்டுளளார்