October

October

“புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது” – பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

“புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது.அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது ”என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“15 மில்லியன் டொலர் நிதியையும் கொடுத்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இந்திய பிரதமர் கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த மென்மையான காலனித்துவத்திற்கு அடிபணியாமல் போராடி உயிர்த் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்திய அணியில் இருந்து அரச உணவை உண்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது.எமது நாட்டில்13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது ” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இது ஒரு இறையாண்மை உள்ள ஒரு நாடு என்ற ரீதியில் எங்களை மீது யாரும் அழுத்தங்கள் பிரயோகிப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

தமிழ் மக்களது இருப்பை பாதுகாக்கும் வகையிலான மொனறாகலை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு !

தமிழ் மக்களது இருப்பை பாதுகாக்கும் வகையிலான மொனறாகலை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

மொனறாகலை மக்கள் அபிவிருத்தி அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்தது.

மொனறாகலை நகரம், மரகலை மலைத்தொடர், கும்புக்கன் போன்ற பகுதிகளிலும், நமுனுகலை – தன்னகும்புற மற்றும் கந்தசேனை ஆகிய இடங்களிலும், கமேவலை மற்றும் பிபில தோட்டம் ஆகிய 4 பிரதேசங்களில் தமிழ் மக்கள் சிதறிவாழ்கின்றனர்.

அவர்களது காணி உரிமைகள், தொழில் உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி ஊடக சந்திப்பு ஒன்று இன்று மொனராகலையில் நடைபெற்றது.

இதன்போது, தாங்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நீண்டகாலமாக தீர்வை எதிர்நோக்கி இருப்பதாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

“எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது” – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் அஞ்சலி நிகழ்வில் சிவஞானம் சிறிதரன் !

“எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது”என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்

தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மறைந்த பாடகர் தமிழ் மக்களினுடைய உணர்வுகளோடு பயணித்த ஒருவர் அதற்காக பல பாடல்களை எங்கள் இனம் சார்ந்து எங்கள் தேசம் சார்ந்து பாடி இருக்கின்றார்.

என்று குறிப்பிட்ட அவர், இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கும் இப்போதுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் இலங்கையில் நடைபெறப்போகும் பல காரியங்களும் எங்களை தாண்டி ஏதோ செய்யப் போகின்றது என்ற அச்சமும் எங்களிடம் இருக்கின்றது

எங்களுடைய பாதுகாப்பையும் எங்களது வாழ்வையும் இருப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எங்களை உங்களிடம் ஒப்படைத்து காத்திருக்கின்றோம்.

எனவே எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் இந்தியாவிடம் ஒப்படைக்க பட்டிருக்கின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் குருகுலராஜா மற்றும் கலைப் படைப்பாளிகள் கலைஞர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் தமது இரங்கல் செய்தியினையும் துணைத்தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

“குழந்தைகள் தான் எதிர்காலத்தில் எமது நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எமது பொறுப்பாகும்”  – பிரதமர் மகிந்தராஜபக்ஸ

“குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த குழந்தைகள் தான் எதிர்காலத்தில் எமது நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எமது பொறுப்பாகும்”  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் வைத்தியசாலைகள், எதிர்காலத்தில் மாகாணத்திற்கொரு வைத்தியசாலை என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு முன்னெடுத்து செல்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் மேலும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 125ஆவது ஆண்டு விழா என்பவற்றை முன்னிட்டு தீவிர சிகிச்கை மற்றும் அறுவை சிகிச்சை நிலையம் என்பவற்றை உள்ளடக்கிய ஒன்பது மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் எலும்பு மாற்று சிகிச்கை மற்றும் புதிய அறுவை சிகிச்சை கட்டட திறப்புவிழா ஆகியவற்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இருவரும் இணைந்து சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினர்.

றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இணையத்தளத்தை இணையத்தில் வெளியிடல் மற்றும் டிஜிட்டல் மருத்துவ சிகிச்சை அமைப்பை நிறுவுதல் என்பனவும் பிரதமரின் கரங்களினால் முன்னெடுக்கப்பட்டன.

அங்கு உரையாற்றிய பிரதமர்,

´குழந்தைகள் தின கொண்டங்களை முன்னிட்டு சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்ய கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று விசேட வைத்திய நிபுணர்கள் இணைந்து வைத்தியசாலையின் பணிப்பாளரதும், சக வைத்தியசாலை ஊழியர்களதும் பங்களிப்புடன் இரண்டு சத்திர சிகிச்சை நிலையங்களை திறக்க முந்தது. இதன் மூலம் பாரிய சேவை மேற்கொள்ளப்படுகின்றது என நான் நினைக்கின்றேன்.

இதுவரை இரண்டு சிறுவர் வைத்தியசாலைகளே காணப்படுகின்றன. அது இங்கும் கண்டியிலுமாகும். சிறுவர் வைத்தியசாலைகள் குறைந்தபட்சம் மாகாணத்திற்கு ஒன்றாவது உருவாக்கப்பட வேண்டும் என எமது அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. எது எவ்வாறாயினும் இன்று குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த குழந்தைகள் தான் எதிர்காலத்தில் எமது நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எமது பொறுப்பாகும்.

பாடசாலைகளுக்கு எமது விசேட வைத்திய நிபுணர் பாதெணிய கஞ்சி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார். அனைத்து பிள்ளைகளுக்கும் ஒரு கோப்பை கஞ்சி போன்ற போசாக்கான பானமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்களும் கல்வி அமைச்சருக்கு முன்மொழிவொன்றை முன்வைக்கிறோம். எமது ஆட்சிக்காலத்தில் நாம் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுவதற்கு தயாராக உள்ளோம் என்பதை இத்தருணத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கைகளை முறையாக பராமரித்து செல்வது தொடர்பில் நாம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இத்தருணத்தில் அவர்களின் சிறப்பான சேவையை நான் பாராட்டுகின்றேன். எதிர்கால தலைமுறையை பாதுகாக்கும் அற்புத பணியே உங்களால் ஆற்றப்பட்டு வருகின்றது´ என்று தெரிவித்தார்.

இந்து சமயத்தை பாதுகாக்க ஆறு அம்சக்கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி !

இந்து மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (01.10.2020) ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலம் இன்று காலை 08.30 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று, அங்கிருந்து ரயில் நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றது.

அதன்பின்னர் அங்கிருந்து பசார் வீதியூடாக சென்று, சூசைப்பிள்ளையார் குளமூடாக வவுனியா கந்தசுவாமி கோயில் முன்றலில் நிறைவுபெற்றது.

பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல், இந்துமதம் சார்ந்த புராதன இடங்கள் எல்லாவற்றிலும், இந்துமதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கு வழிபாடு செய்வதற்கு ஆவன செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக்கல்விக்கு முக்கியம் கொடுத்து ஏனைய வகுப்புக்கள், நிகழ்வுகளை தடைசெய்து அறநெறியை வளர்த்தல், இந்து மத ஆலயங்கள், நெறிக்கழகங்கள், ஒன்றியங்கள் மன்றங்கள் எல்லோரும் தங்களுடைய அன்றாட கடைமைகளோடு சமுதாய வளர்ச்சிக்கு சமுதாய தொண்டினை கட்டாயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

அத்தோடு, வவுனியா மாவட்டத்திலே பல வீதிகள் மற்றும் கிராமங்களுக்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள், காலக்கிரமத்தில் மாற்றப்படுகின்றது என்றும், வேறு மதம் சார்ந்து வேறு பெயர் சார்ந்து தமக்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாத பெயர்கள் வருகின்றன என்றும் அவற்றையெல்லாம் நீக்கி இந்துமதம் மற்றும் தமிழ் மொழி சார்ந்த, பழமைவாய்ந்த பெயர்கள் அப்படியே இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இந்துமக்கள் கலந்துகொண்டதுடன், இந்து கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகன ஊர்தி பவனியும் இடம்பெற்றிருந்தது.

ஊர்வலத்தில் நல்லை ஆதினத்தின் இரண்டாம் குருமகாசந்நிதானம், அகில இலங்கை இந்து சாசனத்தின் தலைவர் ஐயப்பதாசக் குருக்குள், வேலர் சுவாமிகள், முத்து ஜெயந்தி நாதக்குருக்கள், பிரபாகரக் குருக்கள், தமிழருவி சிவகுமாரன், உட்பட நூற்றுக்ணக்கான இந்து மதக்குருக்கள், ஆலயத்தொண்டர்கள், வர்ததகர்கள், பொது அமைப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.

“என்னுடைய சகோதரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட முன்னரே கைது செய்யப்பட்டார் ” – பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன்

ஒரு சம்பவத்தில் குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை. அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே தனது சகோதரரை கைது செய்தனர் என  பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று(01.10.2020) ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட இப்ராகிம் என்ற வர்த்தகர் எனது சகோதரருக்கு 7 முறை தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்திருந்தனர். இரு தினங்களில் விடுவிக்கப்படுவர் என்று அழைத்து செல்லப்பட்ட நிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

என்னுடைய சகோதரர் நிரபராதி எந்தக் குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று நான் முன்னரே சொல்லியிருந்தேன். எவ்வாறான விசாரணைகளிற்கும் அவர் ஒத்துழைப்பினை வழங்குவார் என்றும் சொன்னேன். அந்த வகையில் 5 மாதங்கள் கழித்து எந்தக் குற்றசாட்டுடனும் அவர் தொடர்பில்லை என்ற வகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு சம்பவத்திற்காக விசாரணை மேற்கொள்ளும் போது குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் சொல்கிறார்கள். அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே அவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டு 5 மாதங்கள் சிறையிலே அடைக்கப்பட்டார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு சம்பவம் பாரதூரமானது பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். எனவே அதன் விசாரணைகளில் யாரையும் சந்தேகப்படமுடியும் அந்த விசாரணைகளிற்கு ஒத்துழைக்க வேண்டியது நாட்டின் பிரஜைகளுடைய கடமை. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்தவிடயத்திற்கு எனது சகோதரரோ? நானோ? இடைஞ்சலாக இருக்கமாட்டோம் என்றார்.

இதேவேளை இந்த அரசுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட நிலையில் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரம், சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது“ – ஐ.நாவில் இலங்கை!

“இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரம், சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது“ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக அச்சுறுத்தும் விஜயங்கள் கண்காணிப்பு துன்புறுத்தல் குறித்த முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சார்பாக விளக்கமளிக்கும்போதே, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி டயானி மென்டிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் பொதுச் செயலாளரின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பகிரங்கமாக நிராகரித்துள்ளது என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரம், சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்துள்ள டயானி மென்டிஸ், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினருக்கு எதிரான சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு நலன் தொடர்பாக வழமையான பாதுகாப்பு வலையமைப்புகளை இயக்குவதற்கு அப்பால் பாதுகாப்பு தரப்பினரும் புலனாய்வு பிரிவினரும் நாட்டின் எந்த குழுவினரையும் விசேடமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் டயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் தீவிரவாத சக்திகள் நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்ற இந்த தருணத்தில், தனது தேசிய பாதுகாப்பு தொடர்பாக பலவீனமாக காணப்படும் எந்த நாடும் கவலைதரும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் இந்த யதார்த்தத்தினை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்றுநோய் மற்றும் உளநல வைத்திய சிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு எடுக்கும் முயற்சி தொடர்பாக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அதிருப்தி!

”தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்றுநோய் மற்றும் உளநல வைத்திய சிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு எடுக்கும் முயற்சி தொடர்பாக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் புற்றுநோய் வைத்திய சிகிச்சைபிரிவு மற்றும் உளநலவைத்தியப்பிரிவினை, மத்திய அரசின் கீழ் எடுப்பதற்கான ஒரு கலந்துரையாடல் ஆளுனர் தலைமையில் யாழில் இடம்பெற்றுள்ளது.

அதனை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

இவை மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையினுடைய இரு விசேட பிரிவுகளாக இருக்கிறது.

இதனை திடீர் என்று மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சி எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்ததின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையானது அதிகாரபரவல் நோக்கிய முதலாவது படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

அந்தவகையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வை மீண்டும் மத்திய அரசு பறிக்கும் முயற்சியாகவே இதனை பார்க்க முடியும். போதனா வைத்தியசாலைகளும் விசேட தேவையின் கீழ் உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளையும் தவிர ஏனைய அனைத்து சிகிச்சை நிலையங்களும் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இருக்கவேண்டும் என்று 13ஆவது திருத்தத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் விசேட பிரிவுகளே தவிர தனியான வைத்தியசாலைகள் அல்ல.

மாகாணசபையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுகாதார நியதிச்சட்டத்தின் படி பிரசுரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் இந்த இரண்டு பிரிவுகளும் மாகாண சபையினுடைய ஆளுகைக்கு கீழே இயங்கும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் இரு பிரிவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சட்டரீதியாக மக்கள் பிரதிநிகளால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையில் உருவாக்கப்பட்ட நியதிச்சட்டத்தினை, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாமல் விரோதமான முறையில் கையகப்படுத்துவதை நாம் ஏற்க முடியாது.

அவற்றை நடாத்தக்கூடிய நிதி மாகாணசபைகளிடம் இல்லை என்றே காரணம் கூறப்படுகின்றது. மாகாண நிர்வாகத்திடம் அவ்வாறு நிதி நெருக்கடி இருக்குமானால் விசேட நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதற்கு வழங்கி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியும். அத்துடன் இந்த இரு பிரிவுகளிலும் பணப்பற்றாக்குறை காரணமாக சரியான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்ற குறைபாடுகள் எவையும் இதுவரை சுட்டிக்காட்டப்படவில்லை. எனவே இது 13 ஆவது திருத்தச்சட்டத்தினை இல்லாமல் ஒழிக்கவேண்டும் என்ற செயற்பாடாகவே பார்க்கமுடியும். அதன் முதற்படியே இது.

இதேவேளை வடக்கில் யாழ்மாவட்டத்தினை தவிர ஏனைய நான்கு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் நம்பகமாக அறிகிறோம். இவ்வாறான செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். இதற்கு எதிராக நிச்சயம் நாங்கள் குரல் கொடுப்போம். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன்”- கட்சியை விட்டு நான் விலகமாட்டேன் வி.மணிவண்ணன் உறுதி!

முன்னணியில் உள்ள ஒருசிலரின் சுயலாப அரசியலுக்கு நான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே என்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (01.10.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் என்றும் கூறினார்.

நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் போது, ஒரு சிலரின் சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக திசை திருப்ப முற்பட்டபோது அதனை கட்சிக்குள் இருந்து தான் கடுமையாக எதிர்த்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்களின் சுயலாப நோக்கிற்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே தன்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்த போதும் அது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் நிதிக்கட்டமைப்பை உருவாக்க நினைத்த தன்னை கடுமையாக எதிர்த்தார்கள் என்றும் கூறினார். இன்று தன்னை கொள்கை இல்லாதவன் என கூறுபவர்கள் ஏன் முதலிலேயே கட்சியில் இருந்து துரத்தவில்லை என்றும் ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் தேசிய கட்சிகளின் உடைவினால் சிங்கள தேசிய கட்சி வடக்கு கிழக்கில் எழுச்சி பெற்று வருகின்ற நிலையில் புதிய கட்சியோ, அமைப்போ உருவாக்குவது பெரிய விடயமே இல்லை, என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணன் தான் உருவாக்கிய கட்சி கண் முன்னால் அழிவடைந்து செல்வத பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன் என்றும்,

எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் என்றும் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் !

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (01.10.2020) காலை வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கு முன்பாக போராட்டத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

இதன்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.

காணாமலாக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டியும், சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுடன் கொண்டு செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே, இராணுவத்தினராலும், துணை இராணுவ குழுக்களினாலும் கொண்டு செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது கோசமெழுப்பினர்.

இதேநேரம், இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணையை நிராகரிப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.