மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் இன்று (10-10-2020) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம்(08.10.2020) இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரைக் கைதுசெய்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பகுதியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளினால் குறித்த பகுதியில் தங்கம் உட்பட பல பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனடிப்படையில், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் புதையல் தேடும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் குமாரசிறியின் மேற்பார்வையில் களுவாஞ்சிகுடி காவல் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குணவர்தனவின் தலைமையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையை கண்காணிப்பதற்காக, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் உட்பட பலர் வருகைதந்தனர். இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட தங்கம் தேடும் பணிகளின்போது எவையும் மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.