11

11

“தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் வகையிலான வர்த்தமானி வெளியீடு” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் வகையிலான வர்த்தமானி வெளியிடப்படும்” என  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புக்காக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகள் பாதுகாப்பு வழிமுறைகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  எதிர்வரும் இரு தினங்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக புதிய சட்டம், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இந்நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நோய் தொற்று காணப்படும் பிரதேசங்களில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் எதிர்வரும் இரண்டு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளேன்.

குறித்த பிரதேசங்களில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு, சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு, சில வளாகங்களில் நுழையும் போது உடல் வெப்பத்தை அளவீடு செய்ய இடமளிக்காத நபர்களுக்கு எதிராக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் நோய் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை ஆகிய இரண்டு தண்டனையோ அல்லது ஒரு தண்டனையோ நீதி மன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடமிருந்து பகிரப்படுமாயின் அது நாட்டை பிளவுபடுத்திவிடும்” – மாகாணசபை தொடர்பில் எச்சரிக்கின்றார் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர !

“அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதானால், அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும்” என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் சரத்வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,

“அதிகாரப்பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதானால், அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

ஆனால், அனைவருக்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தினதும் நோக்கமாகும். தற்போது மாகாணசபை முறைமை தொடர்பாக ஆராயவேண்டிய நிலைமையில் இருக்கிறோம். மாகாண சபை முறைமை இல்லாமல் தற்போது இரண்டு வருடங்களை நாம் கடந்து விட்டோம். இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக- பாதக நிலைமைகள் தொடர்பாக ஆராயவேண்டும்.

இதனால், நாடு பின்நோக்கி நகர்ந்துள்ளதா, அல்லது நன்மை ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயவேண்டும். நிதி விவகாரம் குறித்து பார்க்க வேண்டும். வளர்ந்துவரும் ஒரு நாட்டில் நிதியை அநாவசியமாக பயன்படுத்தக்கூடாது. இதனால்தான் மாகாணசபை முறைமை குறித்து ஆராயவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடனாக பெற இலங்கை தீர்மானம் !

சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று முன்தினம்(09.10.2020)  பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதன்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடனைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இன்றி 10 ஆண்டு காலப்பகுதியில் கடன் திருப்பிச் செலுத்தப்படவுள்ளது என்று திறைசேரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி கொரோனா சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் என்றும் கூறுப்படுகிறது.

19வயதுப் போலந்துப்பெண் வீராங்கனை இகா ஸ்வியாடெக் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் எதிரொலியாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டது. முன்னணி வீராங்கணைகள் பலரும் கலந்து கொள்ளாத சூழலில் போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் தகுதிச் சுற்றில் போட்டியிட்டு வென்று மெயின் டிராவில் போட்டியிட்டார்.
தரவரிசை பட்டியலில் 54வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் தொடர்ந்து வெற்றி பெற்று இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.

பரப்பரப்பான இறுதி போட்டியில் சோபியா கெனினை 6 – 4, 6 – 1 நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். போலந்து நாட்டில் இருந்து டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறும் முதல்வீரர் இகா ஸ்வியாடெக் என்பது குறிப்பிடதக்கது.

பிரெஞ்சு ஒபனில் மிக இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில் இகா ஸ்வியாடெக் நான்காம் இடம் பிடித்துள்ளார் இதற்கு முன் மோனிகா செலஸ் (16), அரங்ஸா சான்சேஸ் (17), ஸ்டெபி கிராப் (17) ஆகியோர் வென்றுள்ளனர்.

மன்னாரில் இரண்டு பகுதிகளை முழுமையாக முடக்க இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா உத்தரவு !

மன்னாரில் கொரோனா தொற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் நகர் பகுதிகளான பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய இரு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டுள்ளன.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. வினோதனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் மன்னார் பட்டித்தோட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  கட்டட வேலைக்காக, வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்த கட்டட தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரோடு நேரடியாக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கபடும் 42 பேர் முதற்கட்டமாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியிடபட்டுள்ளன.

“சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் புதிய அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது” – எம்.ஏ.சுமந்திரன் !

புதிய அரசின் இருபதாவது அரசியலமைப்புத் திருத்தம் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசியலமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் புதிய அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(11.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…..,

2ஆவது குடியரசு அரசியல் யாப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை இந்த சட்டமூலம் மீறுகிறது. ஆகையால் இது முற்றாக நிராகரிக்கப்படவேண்டும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினோம். அரசியல் அமைப்புச் சட்டத்தில் சில உறுப்புரைகளை மீறுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. நீதிமன்றிலே குறித்த சட்டமூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் உயர்நீதிமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமா ? அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா ? என்பதை மட்டும் தான் நீதிமன்றத்தினால் தெரிவிக்க முடியும் என்று அரசியலமைப்புச் சொல்கிறது.

அரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி மாற்றம் செய்யமுடியாத சரத்துக்களில் பிரதானமானது ஜனாதிபதிக்கு சட்டவிலக்கு கொடுப்பது சம்பந்தமானது.  2ஆவது குடியரசு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவர் தன்னுடைய பதவிக்காலத்தின் போது, அவருடைய எந்தச் செயலையும் நீதிமன்ற சவாலுக்கு உட்படுத்த முடியாது என்கிற அரண் போடப்பட்டது. அந்தக் காப்பரண் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சற்று விலக்கப்பட்டது. அதன் மூலம் ஜனாதிபதி விடுகின்ற தவறுகள் அல்லது செய்யாமல் விடப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்திலே அடிப்படை மனித உரிமை மனுத் தாக்கல் செய்யமுடியும் . கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சிக் கவிழ்ப்புத் தொடர்பில் மைத்திரிபால சிறீசேன மேற்கொண்ட அறிவிப்பினை நீதிமன்றம் 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினை அடிப்படையாக் கொண்டே மைத்திரிபாலவுக்கு எதிரான தீர்ப்பினை வழங்கியதாக இருந்தது.

தற்போது 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மீண்டும் 2 ஆவதுகுடியரசு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவருக்கு மீண்டும் ஏற்படுத்த முயலும் காப்பரணுக்கு அனுமதி வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதியான தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்ற சரத்தினை மாற்றுவதற்கும் நீதிமன்றம் அனுமதி மறுப்புத் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு, ஊடகங்களுக்கு கொடுக்கிற அறிவுரைகளை பின்பற்றப்படவேண்டும் என்றும் பொது உத்தியோகத்தர்களுக்கும் அறிவுரைகளை அவர்கள் பின்பற்றாவிட்டால் அவை குற்றமாகும் என்பதை மாற்றமுடியாது என்றும் அவ்வாறு மாற்றுவதாக இருந்தால் அதுவும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

20 ஆவது திருத்த உத்தேச சட்டமூலத்தின்படி ஒரு வருடத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்று முன்மொழியப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சிக்காலத்தில் அரைவாசிக்காலத்தின் பின்னரேயே அதாவது இரண்டரை வருடத்தின் பின்னரேயே கலைக்கமுடியும் அதற்கு முன்பதாக கலைப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருந்தபோதிலும் நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் பல விடயங்கள் நீதிமன்றங்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.அவற்றில், ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதி நியமனங்கள் செய்கிறபோது அதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபையிலே பெறவேண்டும் என்பது நீக்கப்பட்டு பாராளுமன்ற சபை சில கருத்துக்களைச் சொல்லலாம் என்றும் ஜனாபதி தான் விரும்பியவர்களை நியமிக்கலாம் என்றும் கொண்டுவரப்பட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை மூன்றில் இரண்டு பெரும்பாமை பலத்துடன் நிறைவேற்றலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று தெரிவித்த அவர் அவ்வாறான ஆணைக்குழுக்களை சுயாதீன ஆணைக்குழுக்களாக அழைக்க முடியாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது ஜனாதிபதிக்கான அதிகாரத்தை அதிகரிப்பதாகவே அமையும் என்பதால் இதற்கு எங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கை தொடரும்.

அதேவேளை இந்தத் தீர்ப்புக்கு பிறகு அரசாங்கம் என்ன தீர்மானத்தை எடுக்கப்போகிறது என்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற விடயங்களைக் கைவிட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்களை மட்டும் முன்னெடுப்பார்களா? அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிற விடயங்களையும் கூட நிறைவேற்றி, அந்தப் பகுதிகளையும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்களா? என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் அறிவித்த பின்னர் தான் இதனை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ள முடியும். இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் குறித்த உத்தேச திருத்த வரைவுக்கு எதிரான நிலைப்பாடு உறுதியானதாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் எதிராக வாக்களிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் எம்.ஏ சுமந்திரன்.

தன்னுடைய கடமைகளை உணர்ந்து ஆரோக்கியமான தளத்தில் பயணிக்கின்றதா யாழ்பாணப் பல்கலைக்கழகம்..? – அருண்மொழி

ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்மக்களுடைய பிரச்சினைகளை தங்களுடைய பிரச்சினையாகவும் பொறுப்பாகவும் முன்னெடுத்தச்சென்ற வகையிலும் , தமிழ் மக்கள் தங்களின் அடையாளம் என்ற வகையிலாக பிரகாசித்த எத்தனையோ உயர்பதவி வகித்த கல்விமான்களையும் உருவாக்கித்தந்த மையமாகவும், இலங்கைத்தமிழர்களுடைய அடையாளமாகவும் பல தசாப்பதங்களாக திகழ்ந்து வந்த உயர்கல்விக்கூடமான யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இன்றைய காலகட்டங்களில் தன்னுடைய அடையாளங்கள் யாவற்றையும் படிப்படியாக இழந்து சுழியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

உண்மையில் இதற்கான காரணங்களை என்னவென்று தேட முற்படும்போதெல்லாம் சிலருடைய பதில் அரசு திட்டமிட்டு இங்குள்ள வளங்களையும் மாணவர் ஒற்றுமையையும் அழிக்கின்றது..?  என்றோ அல்லது திட்டமிட்ட வகையிலான கலாச்சார அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றோ யாரோ ஒருவர் மீது பழி போட்டு விட்டு  கடந்து போகின்ற ஒரு போக்கு தொடர்கின்றதே தவிர, கல்வி கற்கும் மாணவர்களோ அல்லது அங்குள்ள விரிவுரையாளர்களோ யாரும் தங்கள் மீது உள்ள தவறுகளை பேசத்தயாராகவும் இல்லை.., அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையோராகவும் இல்லை.

கடந்த 08.10.2020 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் கலைப்பீட 2ம் மற்றும் 3ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற பிரச்சினை யாவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அந்தப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்கவேண்டிய விரிவுரையாளர்கள் கூட மாணவர்களுடன் மேலும் விவாதத்தில் ஈடுபட்டு பொலிஸாரின் உதவியுடன்  பிரச்சினை தீர்க்கப்பட்டு பின்னர் விரிவுரையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, தொடர்ந்து 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அங்கு கடமையில் இருந்த விரிவுரையாளர்களாக இருக்கலாம் அல்லது பிரச்சினைக்கு காரணமாக இருந்த மாணவர்களாக இருக்கலாம் யாருமே தங்களுக்கு உள்ள சமூகப்பொறுப்பு என்பது தொடர்பாக எவ்வளவு தூரம் ஆரோக்கியமான புரிதலுடன் உள்ளனர், மாணவர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? அல்லது விரிவுரையாளர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழர்களுடைய அடையாளமாக இருக்கின்றதா என பல விடயங்களை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களிடையே காலாதிகாலமாக இருக்கக்கூடிய இந்த சீனியர் – ஜூனியர் இடையேயான ஒரு முறுகலின் வெளிப்பாடே இந்த பிரச்சினையும் கூட. யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவர்களை பொறுத்தவரை இன ஒடுக்குமுறை சார்ந்து தமிழர்களை சிங்களவர்கள் ஒடுக்குகிறார்கள், தமிழர்களின் அடக்கு முறைக்கான தீர்வுகள் எவை என்பன பற்றி எல்லாம் காலாதிகாலமாக பேசிக்கொண்டே வருகின்ற , அதற்காக குரல் கொடுத்து வருகின்ற ஒருபோக்கு காணப்படுகின்ற போதிலும் கூட அது எந்தளவு தூரம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வெளியே வருகின்றது என்பது கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதாகின்றது. ஏனெனில் சிங்களவர்கள் தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் இதே மாணவர்கள் தான் தங்களுடைய புதுமுக சகோதரர்களை அல்லது கீழ் வகுப்பு மாணவர்களை பகிடிவதை என்ற போர்வைக்குள்ளேயோ அல்லது நான் சீனியர் எனக்கு நீ அடங்கிப்போகத்தான் வேண்டும் என்ற ஒரு விதமான கருத்துருவுக்குள்ளேயோ அடக்கியாள முற்படுகின்றனர். இலகுவாக சிந்திக்க வேண்டியது ,து தான் தான்..“ சிறிய பல்கலைக்கழக வளாகம் ,எங்களுடைய மொழியை பேசுகின்ற எங்களுடைய சகோதரர்களையே பிரிவினைகள் கூறி அடக்கியாள  முற்படும் நாம்,   அடக்கு முறையை ஏதோவொரு விதத்தில் செய்து கொண்டிருக்கும் நாம் , – எந்த கோணத்தில் பெரும்பான்மை சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க தகுதியானவர்கள் என்பதை ஒவ்வொரு மாணவனும் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது”.

மாணவர்களிடையே அதிகரித்து வரும் இந்தப்பிரச்சினைகளுக்கு விரிவுரையாளர்கள் – மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பாரிய இடைவெளியே மிக முக்கியமான காரணம் என்பதை மறுத்து விடலாகாது. விரிவுரையாளரகள் பலரும் பாடத்திட்டத்தை கற்பிப்பது , அதற்கான பெறுமதிகளை வழங்குவது என்ற செயற்பாட்டுடன் தங்களுடைய மாணவர்ளுடனான உறவை முடித்துக்கொள்கின்ற ஒரு போக்கே தொடர்கின்றது. அதே நேரத்தில் யாழ்.பல்கலைகழக மட்டத்தில் குறிப்பிட்ட சில  விரிவுரையாளர்களைத் தவிர ஏனைய  பெரும்பாலான விரிவுரையாளர்கள் மாணவர்களுடைய சுய ஒழுக்கம் பற்றியோ, அல்லது அவர்களுடைய கல்விக்கான தேவைகள் என்ன என்பது பற்றியோ,  மாணவர்களுக்கு என்ன பிரச்சினைகள் என்பது பற்றி சிந்திக்கவோ அல்லது மாணவர்களுடன் பேசவோ தயாராகவேயில்லை. மாணவர்கள் தவறு செய்தவுடன் அவர்களுடைய வகுப்புத்தடை பற்றி மட்டும் அதிகம் அலட்டிக்கொள்ளும் பல்கலைக்கழக உயர்மட்டம் அதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி..? அல்லது இந்தப்பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வமான முடிவுகள் எவையாவது உள்ளனவா? என சிந்திக்க தவறிவிடுகின்றனர்.

விரிவுரையாளரகள் மாணவர்களுடன் இணைந்து பயணிக்க முன்வராத வரை இந்தப்பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.  விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கல்வித்திட்டங்களுக்கு அப்பால் மாணவர்களுடைய சமூகப்பொறுப்பை உணர வைக்க வேண்டிய மிகப்பெரும் பணியை ஆற்ற முன்வர வேண்டும்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற போர்கள், இடப்பெயர்வுகள் அவற்றின் மூலமான இழப்புக்கள் என பல விடயங்கள் காரணமாக வட -கிழக்கு தமிழர் சமூகமானது இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது  கல்வி , பொருளாதாரம், சமூக மேம்பாடு என பல்வேறுபட்ட வகையிலும் பின்தங்கி நிற்கின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது.  இந்த நிலையில் எங்களுடைய சமூகத்தை முன்னேற்ற கல்வி மட்டுமே இப்போதைக்கு எம்மிடம் உள்ள ஆயுதம் என்பதையும் அதனை மேலும் பட்டை தீட்டி கூர்மையாக்க வேண்டிய தேவை இந்த யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மிகப்பெரிய கடமை என்பதையும் ஒவ்வொரு பல்கலைகழக மாணவர்களும் – விரிவுரையாளர்களும்  உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

எங்களுடைய தமிழ்ச்சமூகங்களில் காலை தொடங்கி மாலை வரை கூலிவேலை செய்யும் ஒரு கூலித்தொழிலாளியிடம் சென்று ஏன் இப்படி உழைக்கின்றீர்கள் எனக் கேட்டால் “ என் புள்ளைய படிக்க வைச்சு கெம்பஸூக்கு அனுப்பிட வேணும் ” என்ற பதிலை இப்பொழுதும் கேட்க முடியும். அது போலத்தான் உயர்தரம் படிக்கின்ற மாணவர்களிடமும் இலக்கு என்ன என கேட்டால் “ படிச்சு எப்படியாச்சும் கெம்பஸ் போய்டனும்” என்கின்ற  பதிலே கிடைக்கும்.  இன்னமும் இந்த சமூகம் கல்வியை நம்பி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது என்பதே இந்த பதில்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இப்படியான சமூகம் ஒன்றில் வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தலைமுறைக்கு ஆக்கபூர்வமான முன்மாதிரிகளாக திகழவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கான இலவசக்கருத்தரங்குகளை செய்தல்,  தமிழர் பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை ஆவணப்படுத்தல் மற்றும் அதற்கான தீர்வுத்திட்டங்களை ஆவணங்களாக வெளிக்கொண்டுவருதல், மாணவர்களுக்கான உளப்படுத்தல் கருத்தரங்குகளை மேற்கொள்ளுதல், இறுதி வருட மாணவர் ஆய்வுகளை சமூகத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தல் என பயணிக்க எத்தனையோ வழிமுடுறைகள் உள்ளன.

இவையெல்லாவற்றையும் விடுத்து விட்டு இன்னமும் பகிடிவதைகள் , சீனியர் – யூனியர் பிரச்சினைகள், தேவையற்ற சண்டைகள் என பல்கலைக்கழக மாணவர்கள் பயணிப்பது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பதை உணர்ந்து செயலாற்ற மாணவர்கள் முன் வரவேண்டிய அதே நேரத்தில் மாணவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தான் என்ற கோணத்தில் சிந்திக்க விரிவுரையாளர்களும் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் தானே. அவர்களுடன் தோழமையாக பழகுவதாலும் பல ஆரோக்கியமான மாற்றங்களை  ஏற்படுத்தலாம் என்பதை விரிவுரையாளர்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறாக பயணிக்க முனைகின்ற போது மட்டுமே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனக்கான அடையாளத்தை பேணிக்கொள்ள முடியும்.

தங்களுக்குள்ள சமூகப்பொறுப்பை  உணர்ந்து கொள்ளாது,  பிரிவினைகள் பாராட்டி நீ – நான் பெரியவன் என பல்கலைக்கழக சமூத்தினர் இனியும் பயணிப்பார்களாயின் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமானது தன்னுடைய அடையாளங்கள் அனைத்தையும் இழந்து உயர் கல்வி கற்பிக்கப்பட்டாலும்  மீண்டும் பாலர்பாடசாலையாகவே மாறிவிட வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை மாணவர்களும் – விரிவுரையாளர்களும் நினைவில் வைத்து செயலாற்ற வேண்டும்.

“எங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனாவைரஸ் தொற்று இல்லை“ – வடகொரிய ஜனாதிபதி  கிம் ஜாங் உன்.

“எங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனாவைரஸ் தொற்று இல்லை“ என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் எல்லைப் பகுதி நகரான கேசாங்கில் கொரோனாவைரஸ்  அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைத்து, முழு ஊரடங்கு உத்தரவை ஜனாதிபதி  கிம் ஜாங் பிறப்பித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் எல்லை மூடலை வடகொரியா தொடரும் என்றும், பிற நாடுகளின் உதவி இதில் தேவை இல்லை என்றும் வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

மேலும், கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்க ஜனாபதிபதி  கிம் ஜாங் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். சீனாவிலிருந்து வருபவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு வடகொரிய அரசு தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கொரோனாவைரஸ் தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி  கிம் ஜாங், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனாவைரஸ் தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

மேலும் 75-வது ஆண்டு விழாவில் ஏவுகணைகளின் அணிவகுப்பையும் வடகொரியா நடத்தியது. ஏவுகணைச் சோதனை காரணமாக பொருளாதாரத் தடைக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த அணிவகுப்பை வடகொரியா நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் !

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 1-ம் தேதி உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், டிரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளைக் கவனித்து வந்த டிரம்ப், 4 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ம் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து, தான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே, டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் 10-ம் தேதி முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பின் ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து தனது ஆதரவாளர்களை நோக்கி  கையசைத்தார். அதன்பின்னர் டிரம்ப் கூறியதாவது: “நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரது பிரார்த்தனைகளுக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்“ என்றார்.

பிரான்ஸில் விமான விபத்து – ஐவர் பலி !

பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள லொச்சிஸ் நகரில் இருந்து நேற்று(10.10.2020)  இரவு இலகுரக விமானம் ஒன்று 2 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது. அதேபோல், நாடியா செக்ஹயர் நகரில் இகுந்து லொச்சிஸ் நகர் நோக்கி டிஏ40 என்ற சுற்றுலா பயணிகள் விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக இலகுரக விமானமும், சுற்றுலா விமானமும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.