14

14

“இலங்கை அரசுடனான சமாதான அனுசரணைப்பணியில் நோர்வேயே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பினார்” – எரிக் சொல்ஹெய்ம்

“இலங்கை அரசுடனான சமாதான அனுசரணைப் பணியில் நோர்வேயே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பினார்” என நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அவர் வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் .

அந்த நேர் காணலில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கைக்கான சமாதான அனுசரணைப் பணியில் பிரான்ஸ் பங்கேற்க வேண்டுமென அப்போதைய அரசதலைவர் சந்திரிகா விரும்பியதாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார். இருந்த போதிலும் இலங்கைக்கான அனுசரணை பணியில் நோர்வேயே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதன் அடிப்படையிலேயே நோர்வே இந்தப்பணியில் இறங்கியதாகவும் எரிக்சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்க்காக 1998 ம் ஆண்டு நோர்வேயில் உள்ள தமது அலுவகத்திற்கு நேரில் வருகைதந்த தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு இந்த வேண்டுகோளை முன்வைக்கவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

கொரோனா கால நிலையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைக்குறைப்பு !

தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொவிட் 19 நிலைமையை கருத்திற்கொண்டு பருப்பு, ரின் மீன், பெரிய வெங்காயம், சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பெரிய ரின் மீன் ஒன்று 200 ரூபாவிற்கும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 100 ரூபாவிற்கும், சீனி ஒரு கிலோ கிராம் 85 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அத்தியாவசிய பொருட்களை சதொச விற்பனை நிலையங்களில் 500 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யும்போது, பருப்பு கிலோ ஒன்றை 150 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், தெங்கு அபிவிருத்தி சபை, குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் என்பன கொழும்பு நகரத்திற்கான தேங்காய் விநியோகத்தை அதிகரித்துள்ளன. எனவே, நுகர்வோர், சதொச விற்பனை நிலையங்களில் நியாயமான விலையில் தேங்காயினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு ஊடகவியலாளர்களை தாக்கிய மரக்கடத்தல்காரர்கள் இருவர் கைது !

முல்லைத்தீவு – முறிப்பு காட்டுப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களான க.குமணன் மற்றும் ச.தவசீலன் ஆகியோரை மூர்க்கமாக தாக்கிய மரக்கடத்தல் காரர்களில் இருவர் நேற்று (13.10.2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட கும்பலில் பிரதான நபரான அனோசன் என்பவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2வது சந்தேக நபரை 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஊடகவியலாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ஊடகச் சாதனங்கள், பணம் உள்ளிட்டவற்றை உடைமையில் வைத்து இருந்தார் என்ற குற்றச்சாட்டில், 2வது சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நால்வரில் அடையாளம் காணப்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் தேடப்படுகின்றனர்.

“முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மீதான அரசியல் பழிவாங்கல்களில் இருந்து அவரைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாம் அவருக்குத் துணையாக நிற்போம்” – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்

“முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மீதான அரசியல் பழிவாங்கல்களில் இருந்து அவரைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாம் அவருக்குத் துணையாக நிற்போம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(14.10.2020) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டைச் சர்வதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு பௌத்த பீடங்களே எதிர்ப்புத் தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. கத்தோலிக்க ஆயர் பேரவையும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அத்துடன் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை, அரசை ஆதரித்த கடும்போக்குவாதிகள் மத்தியில் அரசின் மீது பாரிய சந்தேகத்தை உண்டு பண்ணியுள்ளது.

எனவே, அரசுக்கு எழுந்துள்ள இவ்வாறான எதிர்ப்புக்களைத் திசை திருப்பி கடும்போக்குவாதிகளைத் திருப்திப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற அரசு முயற்சிக்கின்றது. இந்த அரசியல் பழிவாங்கல்களில் இருந்து அவரைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாம் அவருக்குத் துணையாக நிற்போம்.

தற்போது பொருட்களின் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பிழையான பொருளாதாரக் கொள்கையால் இதைச் சமாளிக்க முடியாமல் அரசு அவதியுறுகின்றது. எமது அரசு அதிகரித்த பத்தாயிரம் ரூபா சம்பளத்தைக் கொண்டே அரச ஊழியர்கள் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தமது வாழ்வைக் கொண்டு செல்கின்றனர். ஆனால், கூலித் தொழில் செய்யும் மக்களின் நிலையே கவலைக்கிடமாக உள்ளது. எமது அரசு பெற்றோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தமையாலேயே அவர்களுக்கும் ஒரு வேளையாவது உண்ண உணவு கிடைக்கின்றது.

ஐம்பது கொரோனா நோயாளிகள் அடையாளம் கானப்பட்டபோதே நாட்டை முடக்கினார்கள். ஆனால், இன்று ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் அடையாளம் காணப்பட்டும் இதுவரை தொற்றில் இருந்து ஏனையவர்களைப் பாதுகாக்கத் தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை” – எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

“ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லீம் மக்கள் ஆதரவளிக்காததால் அரசு முஸ்லீம்களை பழிவாங்குகின்றது- இதனை அரசு நிறுத்த வேண்டும்” – ஏ.எல்.எம். நஸீர்

“ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லீம் மக்கள் ஆதரவளிக்காததால் அரசு முஸ்லீம்களை பழிவாங்குகின்றது- இதனை அரசு நிறுத்த வேண்டும்” என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் ஊடாக அரசு ஆணை பிறப்பித்துள்ளமை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர் அதில் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையின் ஆரம்ப வரலாற்றில் இருந்து இன்றை வரைக்கும் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத் திருநாட்டுக்குத் தேசப்பற்றுடையவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ ஏதோ ஒரு பெரும்பான்மைக் கட்சிக்குத்தான் தங்களது ஆதரவையும் நல்கி வருகின்றனர்.

ஆனால், தற்போதைய அரசானது சிறுபான்மை மக்களுக்குக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்களுக்குப் பாரியதொரு ஆதரவைத் தரவில்லை என்ற காரணத்தால் இப்போது அதற்கான பழிவாங்கல் நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு மேற்கொண்டு வருகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் ஊடாக அரசு ஆணை பிறப்பித்துள்ளமையானது முஸ்லிம்களைப் சீண்டிப் பார்க்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது. இது ஓர் ஜனநாயக நாடு – ஜனநாயகமான ஓர் அரசு என்றால் இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” – என்றுள்ளது.