17

17

கருத்துச் சுதந்திரத்தை கற்பித்தமைக்காக ஆசிரியர் படுகொலை!!!

கருத்துச் சுதந்திரம்: வல்லரசுகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் எப்போதும் ஆபத்தான ஆயுதம்!

பிரஞ்ச் எழுத்தாளர் வோல்ரயர் கருத்துச் சுதந்திரம் பற்றி குறிப்பிட்டது: “I disapprove of what you say, but I will defend to the death your right to say it” – “நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உனக்கு சொல்வதற்குள்ள உரிமைக்காக எனது உயிரையும் கொடுத்து போராடுவேன்”

ஆம்! நேற்று மாலை மூன்று மணியளவில் பிரான்ஸ் தலைநகரான பரிஸின் புறநகர பாடசாலை ஒன்றின் வரலாற்று விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரத்திற்காக உயிரையும் கொடுத்து போராடியுள்ளார். 47 வயதான சம்பந்தப்பட்ட ஆசிரியர் மதஅடிப்படைவாதியால் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பாடசாலைக்கு அருகே இடம்பெற்றுள்ளது.

இதுபற்றித் தெரியவருவதாவது படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரம் பற்றிய கற்பித்தலை மேற்கொள்ள பிரான்ஸின் தலைநகரில் நடைபெற்ற சார்லி ஹப்துல் படுகொலைக்கு காரணமான மொகம்மது நபியின் கார்ட்டூன்களை காண்பித்து விளக்கி உள்ளார். அதற்கு முன்னதாக இஸ்லாமிய மாணவர்கள் தங்கள் உணர்வுகளைப் பாதிக்கும் என்று கருதினால் வகுப்பை விட்டு வெளியேறவும் அனுமதி வழங்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர்கள் வெளியேற சில இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பில் தொடர்ந்தும் இருந்தனர். அதன்பின் ஒரு பெற்றார் இதனை ஒரு பிரச்சினையாக விடியோவில் பதிவிட இது ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவாகி இச்சம்பவம் சர்ச்சைக்குரியதாகியது. பிரான்ஸில் வசிக்கும் மொஸ்கோவைச் சேர்ந்த செச்சினிய அடிப்படைவாதி அந்த ஆசிரியரை கழுத்தறுத்து தனது மத அடிப்படைவாதத்தை நிரூபித்துள்ளார்.

Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers. – Article 19:

ஒவ்வொருவருக்கும் கருத்தைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. அவ்வுரிமையானது தடைகளேதுமின்றி சுதந்திரமாக கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கருத்தியல்களையும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளுக்கு அப்பாலும் தேடவும் பெறவும் பரப்பவுமான உரிமையயை வழங்குகின்றது.

விஞ்ஞானம் தொழில்நுட்பம் நாகரீகம் நவீனத்தை நோக்கி நகர்ந்த போதும் மனதனின் அடிப்படைச் சிந்தனைகளில் இன்னமும் அடிப்படைமாற்றங்கள் நிகழவில்லை. வல்லரசுகள் முதல் அடிப்படைவாதிகள் வரை இன்னமும் அடிப்படை உரிமைகளை சாதாரணர்களுக்கு வழங்குவதை தங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தானதாகவே நோக்குகின்றனர். அடிப்படைவாதிகளுக்கு மொகம்மது நபிக்கு கார்ட்டூன் வரைந்ததைப் பொறுக்க முடியவில்லை தங்கள் கொலைவெறியயை காண்பிக்கின்றனர் அமெரிக்க பிரித்தானிய வல்லாதிக்க சக்திகளுக்கு தங்களைப் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளியே வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை விக்கிலீக்ஸ்யை உருவாக்கிய ஜூலியன் ஆசான்ஜ் மீது பொய் வழக்குகளைச் சோடித்து அவரை படுகொலை செய்ய முயற்சிக்கின்றனர். சர்வதே மனித உரிமை அமைப்புகள் அவரை விடுவிக்க கோரியும் பிரித்தானிய அரசு தனது அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு சேவகம் செய்வதில் எவ்வித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கையயை வைத்திருக்கின்றோம் என்ற பெயரில் இந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் மிக மோசமான மனித விழுமியங்களுக்கு புறம்பான செயற்பாடுகளையே செய்கின்றனர். மத எல்லைகளுக்கு அப்பால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பெரும்பாலும் மனிதத்தை நேசிப்பவர்களாகவும் பண்பட்டவர்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடவுளை அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வணங்குபவர்கள் பெரும்பாலும் ஒப்பீட்டளவில் அன்பு பண்பு நேர்மை குன்றியவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

சகிப்புத் தன்மை பொறுமை கருத்துக்களை கேட்கும் இயல்பு கருத்துக்களை அலசி ஆராயும் ஆளுமை நம்பிக்கை தன்னம்பிக்கை இவைகளின் பற்றாக்குறையானது தனிப்பட்ட உறவுகளிலும் சமூக உறவுகளிலும் அரசியலிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இந்த உலக சமூகத்தை அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் இட்டுச்செல்கின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிலிபைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டொரேற்ரே போன்ற அரசியல் தலைவர்கள் இந்த அமைதியற்ற வன்முறையான சமூகத்தின் பிரதிபலிப்புகள். சமூகத்தில் மேற்குறிப்பிட்ட விழுமியங்களின் பற்றாக்குறையினால் பண்பற்ற சமூக நோக்கற்ற பிரபல்யவிரும்பிகள் ஆட்சிக்கு வருகின்றனர்.

“வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்” – ஔவை பாட்டி சொன்னது. இப்போது இது ரிவேர்ஸில் நடைபெறுகின்றது என்று கொள்ளலாம்.

கோன் இறங்க குடி இறங்கும்! குடி இறங்க காடெரியும்!! மதவெறியர் கழுத்தறுப்பர்!!!

குறிப்பு: பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு இக்கட்டுரையயை சமர்ப்பணம் செய்கின்றேன்.

“ஜனாதிபதியால் கிழக்குமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அனுராதா ஜஹம்பத் குட்டி ஜனாதிபதியாக செயற்படுகிறார்” – இரா.சாணக்கியன் கவலை !

“ஜனாதிபதியால் கிழக்குமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அனுராதா ஜஹம்பத் குட்டி ஜனாதிபதியாக செயற்படுகிறார்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்றையதினம் (16.10.2020)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டு பத்து மாதங்கள் தான் ஆகின்றது. அதற்குள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தை நான் கலாமதி பத்மராஜாவின் இடமாற்றமாக பார்க்கவில்லை. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமாகவே பார்க்கின்றேன்.

இடமாற்றம் தொடர்பில் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும், மண் தொடர்பான அனுமதி தொடர்பான பிரச்சினை, மயிலித்தேமடு தொடர்பான பிரச்சினை, அரசுக்கு ஆதரவான சிலரை இடமாற்றிய செயற்பாடுகள் தொடர்பாகவே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன்.

மயிலித்தே மடு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவர் கிழக்கு மாகாணத்தின் குட்டி ஜனாதிபதியாக இருந்து தன்னுடைய வேலைத்திட்டத்தை திணிப்பதாக உள்ளது. எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கி சரியான முறையில் செயற்படுகின்றவரே ஆளுநராக இருக்க வேண்டும். மாறாக தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரி என நினைக்கின்றவர் பொருத்தமற்றவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு !

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கட்சியின் செயற்குழு ஒருமனதாக கமல்ஹாசனை தேர்வு செய்துள்ளதாக துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும்,  கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டுவது, மற்றும் தேர்தல் அறிக்கை தயரிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதாகவும், 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

“மிகவும் கனமான இதயத்துடனும், நிறைய சிந்தனைகளுக்கும் பிறகு கிரிக்கெட்டிலிருந்து விடைபெற முடிவு செய்துள்ளேன்” – விடைபெறுகிறார் பாகிஸ்தான்வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த உமர் குல், தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான்  தேசிய ரி-20 கிண்ண தொடர், முடிந்ததும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ராவல்பிண்டியில் தெற்கு பஞ்சாப் (பாகிஸ்தான்) அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடும் பலூசிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

தனது ஓய்வு குறித்து 36 வயதான உமர் குல், டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘மிகவும் கனமான இதயத்துடனும், நிறைய சிந்தனைகளுக்கும் பிறகு, இந்த தேசிய ரி-20 கிண்ண தொடருக்குப் பிறகு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற முடிவு செய்துள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் பாகிஸ்தான் அணிக்காக இறுதியாக 2016ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

உமர் குல், பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகள், 130 ஒருநாள், 60 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2002ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரில் விளையாடிய உமர் குல், 2003ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்டில் கடைசியாக 2013ஆம் ஆண்டு விளையாடினார். ஒருநாள், ரி-20 சர்வதேச போட்டிகளில் கடைசியாக 2016ஆம் ஆண்டு விளையாடினார்.

2007ஆம் ஆண்டு ரி-20 உலகக் கிண்ண தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இருந்தார். அதேபோல 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி ரி-20 உலகக் கிண்ண தொடரில் வென்றபோதும் அதே பெருமை அவருக்குக் கிடைத்தது.

“பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மேலாக ஓர் அரசு செயல்படுகிறது. அதுதான் ராணுவம், ஐஎஸ்.ஐ எனும் இரு அரசுகளாகும்”  – முன்னாள் பிரதமர்  நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு !

“பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மேலாக ஓர் அரசு செயல்படுகிறது. அதுதான் ராணுவம், ஐஎஸ்.ஐ எனும் இரு அரசுகளாகும்”  என முன்னாள் பிரதமர்  நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். சிகிச்சைக்காக லண்டனுக்கு நவாஸ் ஷெரீப் சென்றுள்ளார். இந்நிலையில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்(பிடிஎம்) தொடங்கியுள்ளன.இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக பேரணிகள், கூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளன. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியும் நடத்த முடிவு செய்துள்ளன.

இதற்கிடையே இந்த கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம், பேரணி குஜர்ன்வாலா நகரில் நேற்று (16.10.2020) நடந்தது. இந்த கூட்டத்தில் பி.டி.எம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான், பிபிபி கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற நவாஸ் ஷெரீப் அதில் பேசியதாவது:

ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வாதான் என்னுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். 2018-ம் ஆண்டு தேர்தலில் இந்த தேசத்துக்கு தகுதியில்லாத இம்ரான் கானை ஆட்சியில் ராணுவம் அமரவைத்தது. நாடு மோசமாக சீரழிந்ததற்கு நேரடியான குற்றவாளியான ஜெனரல் பஜ்வா இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் மக்கள் இன்று சந்திக்கும் துயரங்கள், வேதனைகளுக்கு ஜெனரல் பஜ்வாதான் பொறுப்பேற்க வேண்டும். என்னுடைய ஆட்சியை கவிழ்த்ததற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பும், ஐ.எஸ்.ஐ தலைவர் ஜெனரல் பியாஸ் ஹமீதுவும் காரணம். என்னுடைய ஆட்சியை கவிழ்த்தற்கு ஹமீதும் பதில் அளிக்க வேண்டும்.

என்னை நீங்கள் துரோகி என்று குற்றம்சாட்டலாம், என் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம், பொய்யான வழக்குகளை பதிவு செய்யலாம். ஆனால், தொடர்ந்து நான் என் மக்களின் நலனுக்காகப் பேசுவேன். இம்ரான் கானின் பெயரைக் கூற ஒருபோதும் அஞ்சமாட்டேன். என்னையும், என் குடும்பத்தாரையும் துரோகிகள் என்று இம்ரான் தரப்பு அழைக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. தகுதியில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும்தான் ஆட்சி நடத்துகின்றன. ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும் சேர்ந்து இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?

ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் அரசு ஏன் நீடிக்கவில்லை. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மேலாக ஓர் அரசு செயல்படுகிறது. அதுதான் ராணுவம், ஐஎஸ்ஐ. இரு அரசுகள் நிர்வாகத்தில் இருந்தால் யார் பொறுப்பேற்பது?

இவ்வாறு நவாஸ் ஷெரீப் நேற்றையதினம் பேசியுள்ளார்.

“ஓக்ஸ்போர்ட்  கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வோர் குரங்குகளாக மாறிவிடுவார்கள்” – இங்கிலாந்தை கிண்டல் செய்யும் ரஷ்ய ஊடகங்கள்!

பிரித்தானியாவில்  தயாராகும் ஓக்ஸ்போர்ட்  கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ் தடுப்புக்கு பயன்படுத்தப்படுவதால், அதை போட்டுக்கொள்வோர் குரங்குகளாக மாறிவிடுவார்கள் என ரஷ்யாவில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசியுமே அபாயமானதுதான் என்ற கருத்து படங்கள் மூலமும், வீடியோக்கள் மூலமும் சமூக ஊடகங்களில்  பரப்பப்பட்டு வருகிறது.
அத்துடன், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சில ரஷியாவின் பிரபல தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் குரங்காகிவிட்டது போன்ற ஒரு புகைப்படம், ஒரு குரங்கு, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் இருப்பது போன்ற புகைப்படம் உள்ளிட்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

‘நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வகுப்பில் காட்டியதால் அசிரியரின் தலையை வெட்டி கொலைசெய்த 18வயது இளைஞர் – பிரான்ஸில் பதற்றம் !

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நேற்று(16.10.2020)  மாலை, தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பள்ளி அருகே இந்த சம்பவம் நடந்ததை அடுத்து இதுபற்றி தகவல் அறிந்த பாரிஸ் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த ஆசிரியர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால் கோபமடைந்த ஒரு நபர் அவரை கொன்றதாக தெரியவந்தது. குற்றவாளியை காவல்துறையினர்  சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பிரான்சில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி காவல்துறையினர்  கூறுகையில், ‘நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வகுப்பிற்கு காட்டியதால் ஆத்திரமடைந்த ஒரு நபர் அந்த ஆசிரியரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார். அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பி ஓடினார். இதனால் அவரை சுட்டு கொல்லப்பட்டார்’ என கூறினர்.
இது கோழைத்தனமான தாக்குதல் என ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை கற்றுக் கொடுத்தமைக்காக ஆசிரியர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். ஆசிரியர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்படுவார்” – பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண !

“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்படுவார் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண,   அவரை கைதுசெய்வதற்கான கால அவகாசத்தை பொதுமக்கள் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும்” எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களை பார்க்கும் ரிஷாட் பதியுதீன் இன்னமும் கைதுசெய்யப்படாதமை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி விமர்சிக்கப்படுவதுடன், காவல்துறையினரும் பாதுகாப்பு தரப்பினரும் குற்றம் சாட்டப்படுகின்றனர். என்னையும் குற்றம் சாட்டுகின்றனர் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்டு மக்களே எங்களை விமர்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவது தாமதமாவது குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர், அல்லது அவர்கள் தங்களதும் நாட்டினதும் பாதுகாப்பு குறித்து கவலையடைந்திருக்கலாம் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களது கரிசனைகளை புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் இந்த கைதுகளை முன்னெடுக்கும்போது காவல்துறையினர் முன்னெடுக்கவேண்டிய பொறிமுறைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினர் திறமைசாலிகள் என்ற போதிலும் அவர்களிடமிருந்து தப்பி மறைந்திருக்க தீர்மானிப்பவர்களை உடனடியாக அவர்களால் கைதுசெய்ய முடியாது. அவர்களை சில மணிநேரங்களில் சில நாட்களில் கைது செய்யமுடியும்.

ரிஷாட் கைது செய்யப்படவிருந்த நேரத்தில் ஊடகங்களுக்கு அது குறித்து தெரிவிக்கப்பட்டதால் ஊடகங்கள் அதனை செய்தியாக்கி மக்களுக்கு தெரிவித்தன. ரிஷாட் பதியுதீனிடம் வாக்கு மூலத்தை பெற்ற பின்னரே அவரை கைதுசெய்யும் நடைமுறையை பின்பற்றவிருந்தோம். எனினும் அவர் கைது செய்யப்படவுள்ளார் என்ற செய்தி வெளியானதும் தப்பி தலைமறைவாகிவிட்டார் எனவும் கமால் குணரட்ண மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் பொறுப்பேற்பு !

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று (17.10.2020) மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிருவாக சேவை விசேட தர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 14 ஆந்திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டதையடுத்தே இன்று சமயவழிபாட்டின் பின்னர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மதஸ்தலங்களுக்குச் சென்று ஆசிர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டார்.

இதன்போது அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில்,

“சவால்மிக்க பொறுப்புவாய்ந்த கடமையொன்றினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. இதனைத் திறம்பட மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்புகளை பெரிதும் எதிர்பார்கின்றேன். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து இனமக்களுக்கும் இனமத பேதமின்றி சேவை வழங்குவதுடன் கடந்த காலங்களைவிட குறைவில்லாமல் எமது பணி சிறப்பாக அமையும்” என குறிப்பிட்டிருந்தார்.

ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாபதிபதியிடம் மகிந்த தேசப்பிரிய கோரிக்கை !

ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்களை நடத்தாமல் ஆளுநர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மூலம் மாகாண சபைகளை நிர்வகிப்பது சட்டபூர்வமானது அல்ல என எஸ்.சி.எஃப்.ஆர் 35/2016 மனு மீதான விசாரணையின் உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி அவர் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ,

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன்னாள் சபாநாயகர், அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து 2018 நவம்பர் முதல் டிசம்பர் வரை நிர்வாகித்த இடைக்கால அரசாங்கத்தில் மாகாண சபைகள் (திருத்தம்) சட்டத்தை 2017 ஆம் ஆண்டில் சில ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

மேலும் 1988 ஆம் ஆண்டு மாகாண சபை சட்டத்தின் பழைய விதிகளைச் செயல்படுத்துதல்., அந்த முன்மொழிவைச் செயல்படுத்துவதன் மூலம், ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் விரைவில் நடத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கருதுகிறது என மஹிந்த தேசப்பிரிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இந்த விவகாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கும் தெரிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.