17

17

அரசின் அடக்குமுறைக்கு எதிரான தமிழ்தேசிய கட்சிகளின் கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை – அனந்தி சசிதரன் மற்றும் முன்னணியினர் வெளிநடப்பு !

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10.30மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

குறித்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முதற்தடவையாக வந்திருந்தார். அவரது வருகையை அடுத்து ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துவெளியேறியுள்ளார்.

குறித்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வருகை தர உள்ளார் என்ற தகவலை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.  இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக இன்றைய தினம் ஒன்றிணைந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகியி’ருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன் சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏதோவொரு புள்ளியில் தமிழ்தேசிய தலைமைகள் ஒன்றிணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்னமும் தமிழர்களிடம் கொஞ்சமாவது எஞ்சி நிற்கின்ற நிலையில் – தமிழ்தலைமைகள் தங்களுக்கிடையிலேயே ஒற்றுமை உணர்வு இல்லாமலும் புரிதல் இல்லாமலும் பயணிக்கின்ற தன்மையானது, தமிழர் அரசியலின் அடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவதற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் உள்ள அரசை  எதிர்ப்பதற்கும் மிகப்பெரும் தடை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

வவுனியாவில் இரட்டைக்கொலை – ஒருவர் கவலைக்கிடமான நிலையில் !

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியின் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் நோயாளர் காவு வண்டிமூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான கோபால் குகதாசன் 40 (4 பிள்ளைகளின் தந்தை) மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் வயது 34 ஆகிய இருவர் மரணமடைந்ததாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயவழிபாட்டுக்கு தடைநிற்கும் காவல்துறைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் – எம்.ஏ.சுமந்திரன் உறுதி !

பல தலைமுறைகளாக தமிழர்கள் வழிபட்டு வரும் வவுனியா வடக்கு – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயவளாகத்தை தொல்பொருள்திணைக்களமானது சிங்கள- பௌத்த மயப்படுத்த முனைவதுடன் இதற்கு அப்பகுதி காவல்துறையினரும் துணைபோகின்றமையானது அப்பகுதி தமிழர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வவுனியா வடக்கு – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் விரைவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆலய வழிபாட்டிற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளமை தொடர்பாக, ஆலய நிர்வாகத்தினரை, வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில், சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு நெடுங்கேணி காவல்துறையினர் தடைவிதித்து வருகின்றனர்.

ஆலயத்தில் பூசை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த ஆலயத்தின் பூர்வீகம், வரலாறு என்பனவற்றை கருத்தில் கொண்டு மக்கள் அங்கே வணங்குவதற்கான உரித்து உள்ளது. அதை எவரும் தடுக்க முடியாது என்ற ரீதியிலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உடனடியாகத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.