இலங்கையில் கொரோனாத்தொற்று வேகமான சமூகப்பரவலாக உருமாறியுள்ள நிலையில் அதனைக்கட்டுப்படுத்தும் வகையில் அண்மையில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை உள்ளடக்கிய வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு..,
90.கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இப்பிரதேசத்தில் பொது இடமொன்றில் உள்ள ஆட்கள் ஒவ்வொருவரும் அல்லது அத்தகைய ஆள் இன்னோராளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பவராக வரக்கூடிய வேறேதேனும் இடத்திலுள்ள ஆள் ஒவ்வொருவரும்-
(அ) எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்றை அணிந்திருத்தல் வேண்டும்:
(ஆ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியைப் பேணுதல் வேண்டும்.
91. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட் – 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில்-
(அ) ஆட்களின் நடமாட்டத்தை மட்டுப்படுத்துவது:
(ஆ) நோய்க்குட்பட்ட ஆளொருவரை அல்லது நோய்க்குட்பட்டவரெனச் சந்தேகிக்கப்பட்ட ஆளொருவரைச் சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தல் நோக்கத்துக்காக ஒரு வைத்தியசாலைக்கு, அவதானிப்பிடத்துக்கு அல்லது தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொண்டு செல்வது அல்லது கொண்டு செல்வதற்கு எவரேனுமாளைத் தேவைப்படுத்துவது, அல்லது
(இ) ஒரு நோய்க்குட்பட்டவரெனச் சந்தேகிக்கப்பட்ட எவரேனும் ஒருவரை, இலங்கை முழுவதற்குமான முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான நோயரும்பற் காலப் பகுதியை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பணிப்பதும் அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பணிப்பதும், முறையான அதிகாரிக்குச் சட்டமுறையானதாதல் வேண்டும்.
92. (1) ஆளொவ்வொருவரும், 91 ஆம் பிரிவின் கீழ் ஆட்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்படுவதன் மேல், கொரோனா வைரஸ் தொற்று நோய் 2019 (கொவிட்-19) பரவுவதனைத் தடுப்பதற்காக, முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்டவாறான அத்தகைய காலப் பகுதிக்கு அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் தங்கியிருத்தல் வேண்டும்.
92. (2) உப ஒழுங்கு விதி (1) இன் கீழ் தீர்மானிக்கப்பட்ட காலப்பகுதியின் போது, ஆளொருவர்-
(அ) கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் பிரவேசித்தலோ அல்லது இடப்பிரசேத்திலிருந்து விட்டு செல்லுதலோ ஆகாது:
அல்லது
(ஆ) கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் ஏதேனும் பொது இடத்திற்குப் பயணித்தலோ, கொண்டு செல்லுதலோ அல்லது அதனுட் பிரவேசித்தலோ ஆகாது,
அல்லது
(இ) கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட் – 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் பயணித்தலாகாது.
ஆளொருவர், முறையான அதிகாரியினால் அனுமதிக்கப்பட்டாலொழிய, உப ஒழுங்கு விதி (1) இன்கீழ் தீர்மானிக்கப்பட்ட காலப்பகுதியினுள் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்திலுள்ள ஏதேனும் நிறுவனத்தை, தொழிலிடத்தை அல்லது வேறேதேனும் ஒத்து வளவுகளைப் பொது மக்களுக்குத் திறந்து வைத்தலாகாது.
93. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட் – 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பை அல்லது பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவைப்பட்ட அத்தியாவசிய சேவைகளை அல்லது வேறேதேனும் சேவையை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனம், வேலைத் தளம், பல்பொருள் அங்காடி, கடை, விற்பனை நிலையம் அல்லது வேறேதேனும் தொழிலிடம் என்பன தொழிற்படுத்தப்படுவதனை அல்லது பணியாற்றுவதனை முறையான அதிகாரி அனுமதிக்கலாம்.
94. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இப்பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பை, தேசிய பொருளாதாரத்தை, பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதற்கு அல்லது கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) பரவுவதைத் தடுப்பதற்குத் தேவைப்படுகின்ற அத்தியாவசிய சேவைகளை அல்லது வேறேதேனும் சேவையை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனத்தின் அல்லது வேலைத்தலத்தின் தொழில்தருநர் அல்லது அதற்குப் பொறுப்பாகவுள்ள ஆள்,
(அ) முறையான அதிகாரியினால் விதிக்கப்பட்டவொரு நேரத்தில் வளவுகளினுள் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களினதும் வேறு ஆட்களினதும் அதிக பட்ச எண்ணிக்கையை விஞ்சுதலாகாது:
(ஆ) அத்தகைய நிறுவனத்தினுள் அல்லது வேலைத்தளத்தினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்றை அணிந்திருப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும்:
(இ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(ஈ) நிறுவனத்தினுள் அல்லது வேலைத்தளத்தினுள் பிரவேசிக்கும் முன்னர் ஆள் ஒவ்வொருவரினதும் உடல் வெப்பநிலை அளவிடப்படுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(உ) நிறுவனத்தினுள் அல்லது வேலைத்தளத்தினுள் பிரவேசிக்கின்ற ஆட்களுக்குச் சவர்க்காரம் அல்லது கிருமிநீக்கியுடன் போதிய கைகழுவும் வசதியை அளிக்க வேண்டுமென்பதுடன் அத்தகைய நிறுவனத்தினுள் அல்லது வேலைத் தளத்தினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் அத்தகைய நிறுவனத்தினுள் அல்லது வேலைத் தளத்தினுள் பிரவேசிக்கு முன்னர் தமது கைகளைக் கழுவுவதனை உறுதிப்படுத்துதலும் வேண்டும், அத்துடன்
(ஊ) நிறுவனத்தினுள் அல்லது வேலைத் தளத்தினுள் பிரவேசிக்கின்ற ஆள் ஒவ்வொருவரினதும் பெயர், ஆள் அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு விபரங்கள் பற்றிய பதிவேட்டைப் பேணுதல் வேண்டும், அத்துடன்
(எ) முறையான அதிகாரியினால் காலத்துக்குக்காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
95. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் அத்தியாவசிய அல்லது வேறேதேனும் சேவையை வழங்குகின்ற ஒரு பல்பொருள் அங்காடியின், கடையின் விற்பனை நிலையத்தின் அல்லது வேறேதேனும் தொழிலிடத்தின் சொந்தக்காரராகவுள்ள அல்லது அதற்குப் பொறுப்பாகவுள்ள ஆளொருவர்,
(அ) முறையான அதிகாரியினால் விதிக்கப்பட்டவொரு நேரத்தில் வளவுகளினுள் அனுமதிக்கப்பட்ட ஆட்களின் அதிக பட்ச எண்ணிக்கையை விஞ்சுதலாகாது,
(ஆ) அத்தகைய வளவுகளினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்று அணிந்திருப்பதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(இ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(ஈ) வளவுகளினுள் பிரவேசிக்கு முன்னர் ஆள் ஒவ்வொருவரினதும் உடல் வெப்பநிலை அளவிடப்படுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(உ) வளவுகளினுள் பிரவேசிக்கின்ற ஆட்களுக்குச் சவர்க்காரம் அல்லது கிருமிநீக்கியுடன் போதிய கை கழுவும் வசதியை அளிக்க வேண்டுமென்பதுடன் அத்தகைய வளவுகளினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் அத்தகைய வளவுகளினுள் பிரவேசிக்க முன்னர் தமது கைகளைக் கழுவுவதனை உறுதிப்படுத்துதலும் வேண்டும்,
(ஊ) முறையான அதிகாரியினால் காலத்துக்குக்காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
96. எவரேனுமாளின் உடல் வெப்பநிலையானது, முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்ட உடல் வெப்பநிலையை விடக் கூடுதலாகவுள்ள விடத்து அத்தகைய ஆள், 94 ஆம், 95 ஆம் ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்டவாறு அத்தகைய வேலைத் தளத்தினுள் அல்லது வளவுகளினுள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுதலாகாது.
97. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் பொது மக்களை இடம்பெயர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு மோட்டார் வாகனத்தின் சாரதி, நடத்துநர் மற்றும் சொந்தக்காரர் முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்டவாறாக இரு பயணிகளுக்கிடையே அத்தகைய சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டுமென்பதுடன் முறையான அதிகாரியினால் காலத்துக்குக் காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதலும் வேண்டும்.
98. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் நடமாட்டத்தின் மீதான மட்டுப்பாடு முறையான அதிகாரியினால் தளர்த்தப்படுமிடத்து, ஒரு பொது இடத்தினுள் அல்லது ஆளொருவர் இன்னோராளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பவராக வரக்கூடிய வேறேதேனும் இடத்தினுள் பிரவேசிக்கின்ற ஒரு கூடத்தை, கருத்தரங்கை அல்லது வேறேதேனும் ஒத்த ஒன்றுகூடுதலை ஒழுங்கேற்பாடு செய்கின்ற அல்லது ஒழுங்குபடுத்துகின்ற அல்லது அத்தியாவசிய சேவைகளுக்குட்பட்ட எல்லாச் சேவைகளையும் பெற்றுக்கொள்கின்ற அத்தகைய ஆள் ஒவ்வொருவரும், முறையான அதிகாரியினால் காலத்துக்குக் காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
ஆகிய சட்ட ஒழுங்கு விதிகளும் இந்த விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.