19

19

800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய்சேதுபதியிடம் முரளிதரன் வேண்டுகோள்!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.

படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடப்படுகின்றது.

என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தாப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை . அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்

ஒவ்வொரு முறை எனக்கு எற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன் அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை  நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. என  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து !

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த கல் இலங்கையில் மலை பிரதேசமான நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றாகும்.

இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் கோவிலாகவே நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகிறது. அந்த ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்படும் போது குறித்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் பின்பு இதுவரை காலமும் அந்த கல் பூஜிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படும் ஶ்ரீ இராமபிராணின் கோயிலுக்கான அடிக்கற்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் மற்றும் ஆவாஎலிய ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகியவற்றில் வைத்து விசேட பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த கல் சீதாஎலிய சிதையம்மன் ஆலயத்திலும் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூஜையிலே வைக்கப்பட்டு பரிபாலன சபையின் மூலமாக கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழிபாடுகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.

வியட்நாமில் கனமழை – 90 பேர் வரை பலி – பலர் மாயம் !

வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு  காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி சுமார் 90 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், “வியட்நாமில் குவாங் ட்ரை, துவா தியன், ஹியூ, குவாங் நம் ஆகிய மாகாணங்களில் கனமழை  பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 90 பேர் பலியாகி உள்ளனர். 34 பேர் மாயமாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களின் வீடுகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை வரை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் 600 மில்லி மீட்டர்வரை மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வியட்நாம் பிரதமர் நியுவென் ஷுவான் ஃபுக் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வியட்நாமில் அடுத்த வாரமும் கனமழை  பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மீட்புப் பணிகளை வியட்நாம் அரசு முடுக்கி விட்டுள்ளது.

சூப்பர் ஓவர்களாக நீண்ட நேற்றைய ஐ.பி.எல் ஆட்டம் – பஞ்சாப் திரில் வெற்றி !

மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நேற்று  நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது. ரோகித் சர்மா 9 ஓட்டங்களிலும், சூர்யகுமார் யாதவ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
38 ஓட்டங்களுக்குள் மும்பை அணி 3 இலக்குகளை இழந்தது. குயின்டன் டி காக் 53 ஓட்டகளும், குருணால் பாண்ட்யா 34 ஓட்டங்களும் எடுத்தனர். பொல்லார்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 34 ஓட்டங்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 இலக்குகள்  இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது.
பஞ்சாப் சார்பில் ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.
177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். அகர்வால் 11 ஓட்டங்களிலும் , கிரிஸ் கெயில் 24ஓட்டங்களிலும், நிகோலஸ் பூரன் 24 ஓட்டங்களிலும், மேக்ஸ்வெல் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினார்.அவர் 77 ஓட்டங்களில் வெளியேறினார்.
2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணிஅதன்பின் ஆடிய தீபக் ஹூடா பொறுப்புடன் ஆடினார். இறுதியில் 20 பந்துப்பரிமாற்ற  முடிவில் பஞ்சாப் அணி 6 இலக்குகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி சமனில் முடிந்தது. ஹூடா 23 ஆட்டம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை அணி சார்பில் பும்ரா, 3 விக்கெட்டும், ராகுல் சஹர் இலக்குகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. கேஎல் ராகுலும், பூரனும் இறங்கினர். மும்பை சார்பில் பும்ரா பந்து வீசினார்.
சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து, மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் ஷமி பந்து வீசினார். மும்பை அணிக்கும் இந்த சூப்பர் ஓவரில் 05 ஓட்டங்களே  கிடைக்க போட்டி மீண்டும் சமனானது.
இதையடுத்து, 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ஓட்டங்கள் எடுத்தது.  அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி  கிறிஸ்கெய்ல் – மயங்க்அகர்வால் ஆகியோரின் அதிரடியுடன் 15 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.

“20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரம் காட்டும் அரசு கொரோனாவைக் கூட பெரிதாக கவனத்தில் எடுக்காமல் இருக்கிறது” – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

“20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரம் காட்டும் அரசு கொரோனாவைக் கூட பெரிதாக கவனத்தில் எடுக்காமல் இருக்கிறது” என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

அரசாங்கத்திலுள்ள குறைகளை நாம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டுவோம். இது எதிர்க்கட்சியொன்றின் வகிபாகமாகவே நாம் கருதுகிறோம். இன்று 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ளவே அரசாங்கம் தீவிரம் காட்டுகிறது.

இதனால்தான் கொரோனாவைக் கூட பெரிதாக கவனத்தில் எடுக்காமல் இருக்கிறது. எவ்வாறாயினும், 20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க நாம் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம்.

இது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்று ஏற்கனவே நாம் அறிந்துள்ளோம். இப்படியான இந்த சட்டமூலத்தை நாம் நிச்சயமாக தோற்கடித்தே ஆக வேண்டும். 19ஆவது திருத்தச்சட்டத்தை தற்போது ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இது முற்றிலும் பிழையான, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தாகும்.

உண்மையில் 19ஆல், நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றுதான் நாம் வலியுறுத்தி வருகிறோம். 19 பிளஸின் ஊடாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இதனைவிடுத்து, யாருடைய அதிகாரத்தையும் குறைத்து இன்னொருவருக்கு அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும் என நாம் விரும்பவில்லை. 19 தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியாக பொய்களை மட்டும்தான் கூறிக்கொண்டிருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் உங்களிடம் உண்மையை பேசுகின்றேன் . பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன் ”  – அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி !

“நான் உங்களிடம் உண்மையை பேசுகின்றேன் – பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன் ” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு நேற்றையதினம்(18.10.2020) உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாக சிலர் கூறுகின்றனர். உண்மை அதுவல்ல.நாங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்கே ஊடகங்களில் உலருவதற்கில்லை. அமைச்சர் நிமால் சிறிபால இரண்டு வாரங்களில் பெருந்தோட்ட கம்பனிகளை ஒரு தீர்மானத்துக்கு வந்து தீர்வை வழங்குமாறு கேட்டிருக்கின்றார்.

நான் உங்களிடம் உண்மையை பேசுகின்றேன். நான் உங்களிடம் உண்மையை கூறுவதாலேயே எனக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை வழங்கினீர்கள். கொரோனோ இலங்கையை மீண்டும் தாக்கும் என யாரும் நினைக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனிப்பட்ட ரீதியில் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். நிச்சயமாக ஆயிரம் ரூபா கிடைக்கும். நாட்டின் சூழ்நிலையையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். கடந்த அரசாங்கத்தின் போது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தான் எதிர்கட்சியில் இருந்துக்கொண்டு ஆளுங் கட்சிக்கு ஆதரவு வழங்கவேன் என்றார்.

ஆதரவு என்றால் ஆளுங்கட்சியுடன் இணைந்து அல்ல. எமது மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாயின் அதற்கு ஆதரவு வழங்குவேன் என்றார். ஆனால் இன்று எதிர்கட்சியிலே இருப்பவர்கள். மக்களை பற்றி எண்ணாது எம்மிடம் கேள்விகளை மாத்திரம் தொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்று நாங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு ஆதரவு கேட்கவில்லை. நாங்கள் கூட்டணி அமைக்கவும் கேட்கவில்லை. மக்களுக்குதானே ஆதரவு கேட்கின்றோம்.

அனைத்து தொழிச்சங்கங்களும் ஒற்றுமையாக இருந்தால்தானே எதனையும் சாதிக்க முடியும். ஒற்றுமைதான் எமது பலம். இன்று எம்மீது சிலருக்கு பயம் ஏற்பட்டுள்ளது காரணம் அவர்களுக்கு எனது பலம் தெரிந்துள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது தெரிகிறது. நான் மலையகத்தை மாற்றி காண்பிப்பேன் அந்த நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது, எனத் தெரிவித்துள்ளார்.

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைக்குண்டுடன் கைது !

சாவகச்சேரி – கச்சாய் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி- கச்சாய் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று (18.10.2020) இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர். இந்த சுற்றிவளைப்பின்போது யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 31 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்,  குறித்த இளைஞன் வவுனியா பேருந்து நிலையத்தில் சாதாரண ஊழியராக பணியாற்றுவதாகவும் யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் பிரதான சந்தேகநபராக தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார்  கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வார தேடலுக்குப்பின் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் கைது !

பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிசாத் பதியூதீன் தெஹிவளையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிசாத்தை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும், கைது செய்வதற்காக சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதும் ரிசாத் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கை காரணமாக அவர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ரிசாத் பதியூதீன் தலைமறைவாக இருக்க உதவி செய்த அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிபொலிஸ்மாஅதிபர் அஜித்ரோகண கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.