20

20

சபாநாயகரின் முகக்கவசம் எங்கே..? – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்வி!

“சபாநாயகர் சபைக்கு தவறான எடுத்துக்காட்டு“ என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டொன்றினை இன்றைய பாராளுமன்ற அமர்விலே முன்வைத்துள்ளார்.
கொரோனா பரவல் வேகமாக இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் சபாநாயகர் மகிந்தயாப்பா அபேவர்த்தன அவர்கள் முகக்கவசம் அணியாது வந்தமையினை சுட்டிக்காட்டி பேசும் போதே இவ்வாறு வெர் குறிப்பிட்டுள்ளார்.
447777
“சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் என பாராளுமன்றத்தில் கூறிக்கொண்டு சபாநாயகரே முகக்கவசம் இல்லாது சபையை வழிநடத்துகின்றார், சபாநாயகர் சபைக்கு தவறான எடுத்துக்காட்டாகவுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், உடனடியாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டு  வலியுறுத்தினார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கைக்கு பதில் தெரிவித்த சபாநாயகர் “இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டு மழைகள் பொழிந்துகொண்டு இருந்த நேரத்தில் கூட பாராளுமன்றம் கூடியது, இப்போது எவ்வாறு பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பது“ என்றும் கூறினார்.

“தமிழ் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கவுள்ள 20 திருத்தச் சட்டத்தை எதிராக  எஸ். வியாழேந்திரன்,  சிவநேசதுரை சந்திரகாந்தன் இருவரும் வாக்களிக்க வேண்டும்” – இரா.துரைரெட்ணம் கோரிக்கை !

“தமிழ் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கவுள்ள 20 திருத்தச் சட்டத்தை எதிராக  எஸ். வியாழேந்திரன்,  சிவநேசதுரை சந்திரகாந்தன் இருவரும் வாக்களிக்க வேண்டும்” என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம்  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மசாபா மன்ற கட்சி காரியாலயத்தில் இன்று (20.10.2020) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் ,

இலங்கை அரசாங்கம் புதிய ஆட்சியை அமைத்து 3 மாதங்கள் கடந்த நிலையில் புதிய அரசு 20 திருத்தச்சட்டம் தொடர்பான பல விடயங்களையும் உள்ளடக்கி பாராளுமன்றம் கொண்டு வர முயற்சித்த வேளையில் நீதிமன்றம் சென்று பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதிநிதிகளை நீண்ட காலத்துக்கு பின்பு அதிகூடிய வாக்குகளையளித்து 4 தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்யப்பட்டது என்பது ஒரு செய்தியை தெளிவாக தமிழ் மக்கள் கூறியுள்ளனர்.

அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் நலன்கள் தொடர்பாக இந்த 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பாகவும் சரியாகவும் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இம் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அந்த வாக்கை பெற்ற தமிழ் பிரதிநிதிகள் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு விரோதமாக முன்வைக்கப்பட்டிருக்கும் 20 திருத்தச் சட்டத்துக்கு சார்பாக வாக்களிக்கப் போகின்றார்களா? எதிர்ப்பாக வாக்களிக்கப் போகின்றார்களா? என்பதை சர்வதேசமும் மாகாண தேசியமும் உற்று நோக்கி வருகின்றது.

மட்டக்களப்பை பொறுத்தமட்டில் மக்கள் நலன் சார்ந்து தெரிவு செய்யப்பட்ட குறிப்பாக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய இருவரும் தமிழ் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க ஜனநாயக விரோத அடிப்படை சம்மந்தப்பட்ட தொடர்பாக முன்வைக்கப்போகும் 20 திருத்தச்சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் .

எனவே அந்த மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்த மக்கள் வாக்களித்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர்கள் சிறப்பானவர்கள் தமிழ் மக்களுக்கு விரோதமாக செல்லமாட்டர்கள் என நாங்கள் நம்புகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களித்த தமிழ் மக்கள் தமக்கு விரோதமாக செல்லமாட்டர்கள் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள் .
எனவே அப்படி ஆதரித்து வாக்களிக்கும் பட்சத்தில் மக்கள் இவர்களை நிகராகரிக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் கைக்குண்டுடன் மூவர் கைது !

கிளிநொச்சி பளை காவல் துறை பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் இன்று (20.10.2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

18.10.2020 அன்றைய தினம் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக தரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட  கைகலப்பு காரணமாக மோட்டார் சைக்கிளை ஒரு சாரார் அபகரித்துள்ளனர்.  இதன் போது பாதிக்கப்பட்டவர் 19.10.2020 அன்றையதினம் ஒர் கைக்குண்டினை காட்டி மோட்டார் சைக்கிளை தரும் படி மிரட்டிய நிலையில் சம்பவம் தொடர்பான தகவல் கிளிநொச்சி பளை காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்ப இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கைக்குண்டை  வைத்திருந்த நபரை கைது செய்ததுடன் அச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தும் கொவிட் 19 – கொரோனா பாதிப்பால் பார்வையை இழந்த 11வயது சிறுமி!

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான 11 வயது சிறுமி ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் சிறுமியின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து வருகிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும்.
இதுகுறித்த வரைவு அறிக்கை கூறியதாவது:-
11 வயது சிறுமி ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால்தூண்டப்பட்ட அக்யூட் டெமிலினேட்டிங் நோய்க்குறி (ஏடிஎஸ்) இருப்பதைக் கண்டுபிடித்தோம். குழந்தை வயதினரிடையே பதிவான முதல் பக்கவிளைவு இதுவாகும் என்று கூறியுள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஷெபாலி குலாட்டி கூறியதாவது:-
இந்த சிறுமி பார்வை இழப்புடன் எங்களிடம் வந்தார் எம்.ஆர்.ஐ  சோதனை ஏ.டி.எஸ் பாதிப்பை காட்டியது, இது ஒரு புதிய பக்கவிளைவாகும். இருப்பினும், வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பதை இப்போது நாம் அறிவோம்.
ஏடிஎஸ் என்பது  நரம்புகள் மெய்லின் எனப்படும் பாதுகாப்பு அடுக்குடன் மூடப்பட்டிருக்கும், இது மூளையில் இருந்து வரும் செய்திகளை உடலின் வழியாக விரைவாகவும் சுமுகமாகவும் நகர்த்த உதவுகிறது.
மெய்லின் பாதிப்பால் மூளை சமிக்ஞைகளை சேதப்படுத்தும் மற்றும் பார்வை, தசை இயக்கம், புலன்கள், சிறுநீர்ப்பை மற்றும் குடல் இயக்கம் போன்ற நரம்பியல் செயல்பாடுகளின் வரம்பை பாதிக்கும் என கூறப்படுகிறது.

20 வது திருத்தத்தில் மேலும் மூன்று திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு !

அரசியலமைப்பில் 20 வது திருத்தத்தில் மேலும் மூன்று திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று மாலை (19.10.2020) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சரவை எண்ணிக்கை மற்றும் தணிக்கை சேவைகள் ஆணையத்தின் அமைப்பு தொடர்பாக அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ள உட்பிரிவுகள் மாறாமல் இருக்கும்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை, தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய அனர்த்தம் தொடர்பான பிரச்சினைகள் தவிர, அவசரகால மசோதாக்களை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதை மட்டுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்த திருத்தங்கள் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் குறித்த விவாதத்தின் குழு நிலை கூட்டத்தின் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஜனாதிபதி அரசாங்க நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசாங்கக் குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு கோடியை கடந்தது உலக கொரோனா பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.  இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.06 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3.03 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 72 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.22 லட்சத்தைக் கடந்துள்ளது.

“நான் பணிபுரியும் முறையை முதலில் பாருங்கள். தொடர்ந்து நான் பணிபுரியும் முறையைப் பார்த்து குற்றச்சாட்டுகளைச்  முன்வையுங்கள்“ – யோஷித ராஜபக்ஷ

“நான் பணிபுரியும் முறையை முதலில் பாருங்கள். அதனைத் தொடர்ந்து நான் பணிபுரியும் முறையைப் பார்த்து குற்றச்சாட்டுகளைச்  முன்வையுங்கள்“ என பிரதமரின் பணியாளர் சபை பிரதானியும் பிரதமர் மகிந்தராஜபக்ஸவின் மகனுமாகிய யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியதனை தொடர்ந்து , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, யோஷித ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,

“பிரதமரின் பணியாளர் சபை பிரதானி பதவி, சட்டப்பூர்வமாகவே வழங்கப்பட்டது. இதேவேளை நான் 2016ல் இராணுவத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டேன். நான் விசாரணை இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டேன். எனவே, அந்த நேரத்தில் நான் என் தந்தைக்கு வேலை செய்தேன். எனவே அந்த பயிற்சியால், எனக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை கிடைத்தது. எனவே நான் அங்கு இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

மேலும், நாங்கள் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் சரி, சமுதாயத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும். நல்லது அல்லது கெட்டது என்பதை சமூகம்தான் தீர்மானிக்கிறது. நான் பணிபுரியும் முறையைப் முதலில் பாருங்கள். அதனைத் தொடர்ந்து நான் பணிபுரியும் முறையைப் பார்த்து குற்றச்சாட்டுகளைச்  முன்வையுங்கள்.

அத்துடன் நான் இன்னும் பதவியேற்று ஒரு வாரம் கூட இல்லை. ஆகவே ஒரு வருடத்திற்கு பின்னர் எதனையும் என்னிடம் கேளுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் பணியாளர் சபை பிரதானியாக அண்மையில் யோஷித ராஜபக்ஷ பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிரைலயில் அது தொடர்பாக சிலர்  தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே யோஷித ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரொய்டர்ஸ் செய்தியாளரையும் ஜோபைடனையும் குற்றவாளிகள் எனக்கூறிய ட்ரம்ப் !

அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து டிரம்பிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது தன்னிடம் கேள்வி கேட்ட ரொய்டர்ஸ் செய்தியாளர் ஜெஃப் மேசனை ஒரு குற்றவாளி என்று குறிப்பிட்ட டிரம்ப், எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் ஒரு குற்றவாளி என்றும் தெரிவித்தார்.
‘நீங்கள் ஒரு குற்றவாளி. நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், ஜோ பிடன் ஒரு குற்றவாளி, அவர் நீண்ட காலமாக ஒரு குற்றவாளியாக இருக்கிறார், அதைப் புகாரளிக்காததற்காக நீங்கள் ஒரு குற்றவாளி மற்றும் உங்கள் ஊடகமாகும். அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டம். ஒரு நல்ல நேரம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் நோய்த்தொற்று  நிபுணர் டொக்டர்.ஆண்டனி பேஹ்சி மீதும் தன்னுடைய எதிர்ப்பை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். “

என்னவாக இருந்தாலும் எங்களை தனியாக விட்டுவிடுங்கள் என மக்கள் கூறுகின்றனர். கொரோனா குறித்த செய்திகளால் அவர்கள் சோர்வடைந்து விட்டனர். பேஹ்சி மற்றும் கொரோனா தடுப்புக்குழுவில் உள்ள முட்டாள்களின் பேச்சை கேட்டு மக்கள் சோர்வடைந்துவிட்டனர். பேஹ்சி இங்கு 500 ஆண்டுகளாக இருந்தது போல் உள்ளார். பேஹ்சியின் பேச்சை கேட்டிருந்தால் 7 லட்சம் முதல் 8 லட்சம் இறப்புகளை நாம் சந்திக்க நேரிட்டிருக்கும்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் செனெட் சபை உறுப்பினர் அலெக்சாண்டர் கூறுகையில், ‘ஆண்டனி நமது நாட்டின் மிகவும் மதிப்பிற்குறிய பொதுசேவையாளர். அவர் டோனால்ட் ரேகன் உள்பட 6 அதிபர்களின் கீழ் பணி செய்துள்ளார். அவரின் ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று பரவியிருக்கும்’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அலேக்சாண்டரின் கருத்துக்கு எதிராக தன்னுடைய கருத்தை முன்வைக்கும் போதே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
.

தொடரும் சென்னை சூப்பர்கிங்ஸின் தோல்விகள் – பட்லரின் அதிரடியுடன் வென்றது ராஜஸ்தான் !

ஐ.பி.எல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற  வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி சென்னை அணியின் டுபிளசிஸ் மற்றும் சாம் கர்ரன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த டு பிளசிஸ் 10 ஓட்டங்களில்  வெளியேறினார். அடுத்து வந்த வாட்சன் 3 பந்தில் 8 ஓட்டங்களில் எடுத்த நிலையில் வெளியேறினார்.
25 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்திருந்த சாம் கர்ரன் ஷ்ரேஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த வந்த அம்பதி ராயுடு, கேப்டன் டோனி அணியின் ஓட்டத்தை  உயர்த்த முற்பட்டனர்.  ஆனால்,  ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி வீரர்களால் அணியின் ஓட்டத்தை உயர்த்தமுடியவில்லை.
19 பந்துகளை சந்தித்த ராயுடு 13 ஓட்டங்களிலும், 28 பந்துகளை சந்தித்த கேப்டன் டோனி 22 ஓட்டங்களிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.  இதனால், 20 பந்துப்பரிமாற்றங்கள்   முடிவில் 5 இலக்குகளை  இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 126 ஓட்டங்ககள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் முக்கிய இலக்குகளை இழந்த ராஜஸ்தான், அதன் பின் நிதானமாக ஆடியது. ஜோஸ் பட்லரும், ஸ்மித்தும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், 17.3 பந்துப்பறிமாற்றங்களில்  3 இலக்குகளை இழந்து  126 ஓட்டங்களை  எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.  பட்லர் 70 ஓட்டங்களும், ஸ்மித் 26 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். மேலும் இந்த வெற்றியுடன் 08 புள்ளிகளை பெற்ற ராஜஸ்தான் ரோஜல்ஸ் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.

“சர்வதேச அளவில் இலங்கையின் காப்பாளனாக சீனா செயற்படுவதானது  இந்து மா சமுத்திர  பிராந்தியத்தின் இந்திய தலைமைத்துவ பாத்திரத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்” – சிவசக்தி ஆனந்தன்

“சர்வதேச அளவில் இலங்கையின் காப்பாளனாக சீனா செயற்படுவதானது  இந்து மா சமுத்திர  பிராந்தியத்தின் இந்திய தலைமைத்துவ பாத்திரத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்”  என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்  குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கை தமிழர் தொடர்பான விடயங்களில் இந்தியா தீவிர அக்கறை காட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33ஆண்டுகளைக் கடந்துள்ளபோதும் தற்போது வரையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மாறிமாறி ஆட்சிபீடமேறிய ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர்.

அவ்வாறான நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை நாடாளுமன்றில் கொண்டிருக்கின்றோம் என்ற இறுமாப்புடன் அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் காணப்படும் ஒரேயொரு ஏற்பாடான 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

விடயதானத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகரவே மாகாண சபை முறைமைகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவருவதோடு, இந்திய எதிர்நிலை வாதத்தினையும் தோற்றம்பெறச் செய்து வருகின்றார். அதேநேரத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

ஆனால் இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆட்சியில் உள்ளவர்கள் எந்தவிதமான பிரதிபலிப்பையும் செய்ததாக இல்லை. அதேநேரம் ஜனநாயக கட்டமைப்புக்களை தகர்த்து ஜனநாயக விழுமியங்களுக்கு மரணஅடி அளிக்கப்போகும் 20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் முனைந்து கொண்டு இருக்கின்றது.

அதற்கு அடுத்ததாக புதிய அரசியலமைப்பு ஒன்றையும் உருவாக்குவதற்கான முனைப்புக்கள் செய்யப்படுகின்றன. ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டில் சர்வாதிகாரத்தினை முன்னெடுக்கும் வகையில் தனி நபருக்கான அதிகாரக்குவிப்பை இலக்கு வைத்தே புதிய அரசியலமைப்பு மேற்கொள்ளப்படப் போகின்றது என்பது திண்ணம்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுயையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அந்த தார்மீக கடமையிலிருந்து இந்தியா தவறும் பட்சத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு மாகாண சபை முறைமையும் நீர்த்துப்போகும் போராபத்தே உள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. தற்போது கூட பிராந்தியத்தின் தலைமைப் பாத்திரத்தினைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது தமிழர்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பினையும் கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்தியா தனது நலன்களுக்கு அப்பால் சென்று உரிய தலையீடுகளை செய்ய வேண்டும். கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்தியா தமிழர்களின் விடயத்தில் தீவிரத்தன்மையை காட்டியது. இத்தகைய பகடைக்காய்களாக பயன்படுத்தும் நிலைமையை இந்தியா கைவிட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

சமகாலத்தில், ஆட்சியாளர்கள் சீனாவுடன் கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுவடைந்து செல்கின்றன. அதுமட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார மந்த நிலைமையிலிருந்து மீட்சி பெறுவதற்கு சீனாவின் பங்களிப்பும் கணிசமாக உள்ளதோடு சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் காப்பாளனாக சீனா செயற்படுவதை உறுதி செய்துள்ளது. ஆகவே, இந்த உறவு நிலை மேலும் வலுப்படும் பட்சத்தில் இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதானது, வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு சமாந்தரமாக தென்னிந்தியாவிலும் சுமூகமற்ற நிலைமையொன்று ஏற்படும். அவ்விதமான நிலைமையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமைவதோடு பிராந்திய தலைமைத்துவ பாத்திரத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

எனவே, இந்திய மத்திய அரசானது, தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் மென்போக்கினை விடுத்து நேரடியான தலையீடுகளைச் செய்வதன் மூலமாகவே தமிழர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படுவதோடு இந்தியாவின் பூரண அமைதியும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.