“முஸ்லிம்களுக்கு எதிரான வாதம் அதிகரித்து வருகிறது. வெறுப்புணர்வு குழுக்கள் ஒன்றிணைந்து முஸ்லிம்களை இலக்கு வைக்கின்றனர்” என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (22.10.2020) இடம்பெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் நிலையானதொன்றாகும். நீதித்துறையின் சுயாதீனம் இந்த திருத்தம் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதை ஓய்வு பெற்ற சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதுதொடர்பில் நீதி அமைச்சரினால் எந்த பதிலும் இல்லை.
நாம் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.முழு அதிகாரங்களையும் தனித்தலைவருக்கு கொடுப்பது பாரதூரமானது. 19ஆம் திருத்தம் பல பரிமாணங்களை கொண்டது.இதனூடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் பல நீக்கப்பட்டன.புதிய அரசியலமைப்பிற்கு இது வழிவகுத்தது.என்றாலும் எதிர்பாத்த விடயங்கள் இடம்பெறவில்லை.
19 திருத்தம் இரு அதிகார மையங்களை கொண்டிருந்தது.ஜனாதிபதியும் பிரதமரும் இரு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்ததால் பொருத்தமின்மை இருந்தது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசியல்,கலாசார பொருத்தமின்மை இருந்தது. இன்று ஜனாதிபதிக்கு அதிக அதிகாரமிருக்கிறது.
18 ஆம் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கவில்லை என்பதை உயர் நீதிமன்ற வழக்கின் போது கூறியிருந்தேன். பெரும்பான்மைவாதம் ஜனநாயகத்தின் முக்கியங்களை அழித்து வருகிறது. உலக ரீதியில் இதுவே நடந்துள்ளது.பெரும்பான்மைவாதமானது புதுவகையான நியாயமான தீர்வுகளை அழிப்பதாக இருக்கும்.
மேலும் முஸ்லிம்களை ஒதுக்குவது தேசியத்தை கட்டியெழுப்ப பாதிப்பாகும். பெரும்பான்மை இனவாதம் மிகவும் பயங்கரமானது. சிறுபான்மை இனவாதம் அவ்வாறானதல்ல. வியாபாரத்தில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான வாதம் அதிகரித்து வருகிறது. வெறுப்புணர்வு குழுக்கள் ஒன்றிணைந்து முஸ்லிங்களை இலக்கு வைக்கின்றனர்.
20ஆவது திருத்தத்தில் பல ஏற்பாடுகள் யாப்பிற்கு முரணாக உள்ளது. நீதித் துறை சுயாதீனம் பேணப்பட வேண்டும். அரசியலமைப்பு பேரவை நாடாளுமன்ற சபையாக மாற்றி இருப்பதுடன் அதன் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கி இருப்பது மிகவும் பயங்கரமானதாகும்” என்றார்.