22

22

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட இலங்கையின் 13 மாவட்டங்களில் கொரோனா பரவல் – ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும் அபாயம் !

மினுவாங்கொடயிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 13 மாவட்டங்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுடத்சமரவீர ஏனைய மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் ஆபத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பொலனறுவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக கம்பஹாவிலிருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் மீன் விற்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீன் விற்பவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்களை விற்பனை செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக தொற்றிற்குள்ளானவர்கள் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் மரணம் !

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரேஸில் நாட்டில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த 28 வயதுடைய தன்னார்வளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேஸில் அரசோ, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேஸில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கவில்லை.

எவ்வாறிருப்பினும் பிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

“கொரோனாவிலிருந்து நம்மைக் காக்க ட்ரம்ப் முதல் படியைக் கூட எடுத்து வைக்கவில்லை“ – பராக் ஒபாமா குற்றச்சாட்டு !

கொரோனா பரவலைத் தடுக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தவறிவிட்டார் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3 ஆம் நாள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   

இந்த நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா  தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அமெரிக்காவில் நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் ஒபாமா பேசும்போது, “ 8 மாதங்களாக நமது நாட்டில் கொரோனா பரவல் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டார். கொரோனாவிலிருந்து நம்மைக் காக்க அவர் முதல் படியைக் கூட எடுத்து வைக்கவில்லை. எந்த வேலை செய்வதிலும் ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், ட்ரம்ப்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு உள்ளது எனவும் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளமையானது பலரையும் ஆச்சரியப்பட சைவத்துள்ளது. ஏனெனில் தன்னுடைய தேர்தல் கால அரசியலிலும் பிரச்சாரங்களிலும் சீனாவை எதிரியாக மட்டுமே ட்ரம்ப காட்டி வந்ததுடன் சீன நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத்தடைகளையும் விதித்தார். இந்த நிலையில் ட்ரம்பினுடைய வங்கிக்கணக்கானது சீனாவில் உள்ளது என்ற ஒபாமாவின் கருத்து பெரிய விவாதங்களை அமெரிக்க ஊடகங்களில் ஏற்படுத்தியுள்ளது.

“இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க முடியாது ”- மைத்திரிபால சிறீசேன திட்டவட்டம் !

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு மைத்ரிபால சிறிசேன எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தை கொண்டுவர முன்னிலையில் இருந்தவன் என்ற ரீதியில் மனசாட்சியின்படி என்னால் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது. அதற்காக வருத்தத்தை தெரிவிக்கிறேன்“ என மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உறுதிமொழிக்கு அமைய அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கருத்து வெளியிட்டமையும் இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.

“1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது” – கருஜயசூரிய ட்வீட் !

“1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவர் தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும்  சர்வாதிகார ஆட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது எனவும் அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது பெரும்பான்மையினரிடமிருந்து வாக்குகளை கொண்டு வரக்கூடும், ஆனால் அது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உதவாது” – பாராளுமன்றில் சீ.வி.விக்கினேஸ்வரன் !

“சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது பெரும்பான்மையினரிடமிருந்து வாக்குகளை கொண்டு வரக்கூடும், ஆனால் அது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உதவாது” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தம் குறித்த நேற்றைய (21.10.2020) பாராளுமன்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பாக பாராளுமன்றில் தொடர்ந்தும் பேசிய சீ.வி.விக்னேஸ்வரன்,

இந்த தீவில் மையத்தில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு கட்சியும் பொதுவாக அந்தக் கட்சியின் சுய நலன்களை மேம்படுத்துவதற்காக சட்டமியற்றுவது துரதிஷ்டவசமானது, அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைத்து மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தங்கள் கடமையை மறந்துவிட்டனர்.

லீ குவான் யூ ஆக விரும்புவோர் முன்னேற வேண்டுமென்றால் தங்கள் பாகுபாடான முன்னறிவிப்புகளைக் கைவிட வேண்டும். லீ குவான் யூ சீன புத்த பாதையை பின்பற்றவில்லை. ஒவ்வொரு சிங்கப்பூரரையும் அவர் அல்லது அவள் எந்த சாயலையும் நேசித்தார். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது பெரும்பான்மையினரிடமிருந்து வாக்குகளை கொண்டு வரக்கூடும், ஆனால் அது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உதவாது.

ஆகவே இந்த 20ஆவது திருத்தச் சட்டம் மூலமாக அதிகாரத்தை தனிமனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.

ஜனாதிபதி பணிக்குழுக்களின் சாக்குப்போக்கில் சிறுபான்மையினரின் நிலங்கள் துறைகளால் சூறையாடப்படுகின்றன. பாதுகாப்பு என்ற போலிக்காரணத்தின் கீழ், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ உறுப்பினர்கள் தங்களது நியாயமான உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளிப்படுத்த அனுமதிக்காமல் தமிழ் பேசுவதை கட்டுக்குள் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மக்கள் நிலங்கள் வனத்துறை போன்ற துறைகளால் பறிமுதல் செய்யப்படுகின்றன. மறைமுகமான உத்தியோகபூர்வ பொருளாதாரத் தடைகளுடன் சட்டவிரோத சாகசங்களால் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வளங்கள் அபகரிக்கப்படுகின்றன.

மஹாவலி  திட்டத்தின் கீழ் காலனித்துவம் மற்ற மாகாணங்களிலிருந்து ஏராளமான மாகாணங்களை எங்கள் மாகாணங்களுக்கு கொண்டு வருகிறது, அதே நேரத்தில் நமது வடக்கு மாகாணத்திற்கு ஒரு துளி மகாவலி நீர் வழங்கப்படவில்லை. உண்மையில் எங்கள் பொறியாளர்கள் மகாவலியில் இருந்து தண்ணீர் ஒருபோதும் வடக்கே விடமாட்டார்கள் என்று கூறுகிறார்கள். பாரம்பரியமான தமிழ் பேசும் பகுதிகளில் வெளிநாட்டினரைக் கொண்டுவருவதற்கும் காலனித்துவப்படுத்துவதற்கும் இது ஒரு மோசடி. வடக்கு மற்றும் கிழக்கில் இது தற்போதைய நிலை.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகங்களிடையே உள்ள இன வேறுபாடுகளை சரிசெய்து நாட்டை முன்னோக்கி வழிநடத்தும் ஒரு அரசியலமைப்பைக் கொண்டுவருவது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். கால் நூற்றாண்டுக்கும் மேலாக நாங்கள் நிர்வாக ஜனாதிபதி பதவியை நீக்குவதாக உறுதியளித்துள்ளோம். இது சம்பந்தமாக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுவெடிப்பை இந்த 20 வது திருத்தத்தை கொண்டுவருவதற்கான வசதியான காரணியாக ஆக்குகிறது. ஏப்ரல் 21 ம் திகதி சோகத்திற்கு வழிவகுத்த 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி அதிகாரங்களை குறைப்பதே அவர்கள் செய்ய முயற்சிக்கின்றனர்.

எனவே ஜனாதிபதிக்கு தடையற்ற அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜனாதிபதி கூடுதல் சாதாரண அதிகாரங்களைக் கொண்டால் மட்டுமே ஒரு குற்றவாளி அல்லது திருடனைப் பிடிக்கவோ அல்லது கைது செய்யவோ முடியும் என்று சொல்வது நகைச்சுவையாகத் தெரிகிறது?

ஏப்ரல் 21 சம்பவத்திற்கு உண்மையான காரணங்கள் சட்டத்தின் பாதுகாப்புக் குழுவின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் ஆகியவையே. இது சமீபத்திய காலங்களில் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. நீதித்துறை, காவல்துறை மற்றும் பொது சேவை ஆகியவை சுயாதீனமாக செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த சோகத்தை நாங்கள் கண்டிருக்க மாட்டோம்.

இந்த 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு இன்று கடுமையாக உழைப்பவர்களும், இன்று அதை ஆதரிப்பவர்களும் நிச்சயமாக அதே திருத்தத்தை ஒழிப்பதற்காக போராடுவதற்கு நாளை வீதிகளில் இறங்குவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

இன்று நீங்கள் கொண்டு வரும் இந்த திருத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் குடும்பத்தின் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு பூமராங் விளைவை ஏற்படுத்தும். தயவுசெய்து உங்கள் கண்களால் உங்கள் விரல்களால் குத்த வேண்டாம். இரு தரப்பிலிருந்தும் என் அன்பான சகாக்கள்! தயவுசெய்து இந்த 20 வது திருத்தத்தை நாளை 2/3 வது பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாம்.

மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் அமைதி ஆகியவற்றை மதிக்கும் நாம் அனைவரும் நமது கட்சி வேறுபாடுகளையும் தனிப்பட்ட கடமைகளையும் மறந்து 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கட்டும் எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையிலேயே இரட்டைக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது” – அமைச்சர் வாசுதேவ நாயணக்கார

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையிலேயே இரட்டைக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால்  நாம் உண்மையாகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை இந்த நாட்டின் ஆட்சியில் இணைத்துக்கொள்ளக்கூடாது என   அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றும் போதே வாசுதேவ நாயணக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காட்டு ஆட்சியிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம். புதிய அரசமைப்பொன்றும் புதிய தேர்தல் முறையும் கட்டாயம் அறிமுகப்படுத்தப்படும். அதுவரை இந்தக் காட்டாட்சி சட்டங்களுடன் பயணிக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் எமக்குள்ளது. அதனால் அதிகாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாது.

இரட்டைக் குடிரிமை இருப்பவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என 19ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடும் என்பதை அறிந்துகொண்டு அதனைத் தடுப்பதற்காகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற சரத்தை உள்வாங்கினர்.

இரட்டைக் குடியுரிமைச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட போதிலும் அவர் அந்தக் குழியைத் தாண்டி வந்தார். ஆனால், நாம் உண்மையாகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை இந்த நாட்டின் ஆட்சியில் இணைத்துக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள்.

வேறு காரணிகளுக்காக இரட்டைக் குடியுரிமைச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தாலும் நாட்டின் சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு இடமளிக்கக் கூடாது. குழுநிலை விவாதத்தில் நீதி அமைச்சர் இந்தச் சரத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகின்றோம். முழுமையான ஜனநாயகம் உலகில் எங்கும் இல்லை. சில நாடுகளில் ஜனாதிபதி முறையும் சில நாடுகளில் பிரதமர் முறையும் உள்ளன. அதேபோன்று  பல்வேறு தேர்தல் முறைகளும் உள்ளன. புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் வரை நாட்டைக் கொண்டு செல்வதற்கான பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே 20ஆவது திருத்தச் சட்ட வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது” – என்றார்.

முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் காலமானார் !

முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் இன்று (22.10.2020) மாரடைப்பால் காலமானார்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது.

1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார். வவுனியாவில் வசித்து வந்த இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தார். 1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 69 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.