23

23

சி.வி. விக்னேஸ்வரனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  க.வி.விக்னேஸ்வரனுக்கு 81 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

இதனையடுத்து இன்று நண்பகல் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது இருவரும் பொதுவான விடயங்களை பேசிக்கொண்டபோதிலும், அரசியல் விவகாரங்கள் பேசப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் அ.அரவிந்குமார் !

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமாரைத் தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாகக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

ருவிட்டர் பதிவொன்றில் மனோ கணேசன் இதனைக் கூறியுள்ளார்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து அரவிந்குமார் எம்.பியை இடைநிறுத்தியுள்ளேன். இன்று கூடும் த.மு.கூ. நாடாளுமன்றக் குழு இது தொடர்பில் ஆராயும்” என்று மனோ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அரவிந்குமார் தொடர்பான மேலதிக நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் கேட்டுக்கொள்ளப்படும் என்றும் மனோ அறிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டக்கு எதிராக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பிக்கள் வாக்களித்திருந்த நிலையில், அரவிந்குமார் மட்டும் ஆதரவாக வாக்களித்தார்.

 

சட்டப்பூர்வமாக கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசிடம் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் !

“கொரோனா வைரஸ் தொடர்பாக அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் எவையும் சட்டபூர்வமாக செயற்படுத்தப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் கொவிட் – 19 தொடர்பான விவாதம் இன்று (23) நடைபெற்ற நிலையில்  (23.10.2020) அங்கு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும்  தெரிவிக்கையில்,

“நாம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கொரோனா தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு வலியுறுத்தினோம். கடந்த வாரம் நான் செயலாளர் நாயகத்திற்கு ஓர் சட்டவரைபை கையளித்துள்ளேன். அதனை, அரசாங்கம் பார்க்க முடியும். அவை தொடர்பான சட்டங்களை உருவாக்க முடியும். மாற்றங்களைச் செய்ய முடியும்.

ஆனால், மிக முக்கியமானது நீங்கள் அவற்றைச் செயற்படுத்த வேண்டும். ஏனெனில், நீங்கள் இதுவரை ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான சட்டங்களைக் கூட முறையாகச் செயற்படுத்தவில்லை.

இந்நிலையில், நாம் எல்லோரும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் அவ்வாறே செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், இவை சட்டத்திற்கு முரணானவை. இவை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அல்ல, பொலிஸ் ஊரடங்கும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தான் அதனை வர்த்தமானியில் பிரசுரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து சுமந்திரன் தெரிவிக்கையில், “ஆம்! அவற்றை நீங்கள் அவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்? ஆனால், நான் அங்கத்துவம் பெற்ற இலங்கை மனித உரிமை ஆணைக்குழு,  இவை எவையுமே சட்டபூர்வமாக செயற்படுத்தப்படவில்லை என அரசாங்கத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இவற்றை சட்டபூர்வமாகச் செயற்படுத்துங்கள் என்றே நான் எப்போதும் கோரி வருகிறேன்” என்று சுட்டிக்காட்டினார்.

“ஒக்ரோபர் 22 இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான, இருண்ட யுகம் தோன்றியுள்ளது” – ஈ.சரவணபவன்

“ஒக்ரோபர் 22 இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான, இருண்ட யுகம் தோன்றியுள்ளது” என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (22.10.2020) அறுதிப்பெபும்பான்மையுடன் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில்  20ஆவது திருத்தம் தொடர்பாக ஈ.சரைவணபவன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ஒக்ரோபர் 22 இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. தனிப்பட்ட ஒருவரின் கைகளில் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கொடுத்து , ஜனநாயக ரீதியில் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும் 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் 91 மேலதிக வாக்குகளால் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  நேற்று நிறைவேறியுள்ளது.

ஜனநாயகத்தின் பேரைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ராஜபக்சக்களின் சதியை திட்டமிட்டபடி நிறைவேற்றியுள்ளனர். இதன் விளைவை ஒட்டுமொத்த இலங்கையர்களும், எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான, இருண்ட யுகம் தோன்றியுள்ளது.

இந்தத் திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து முதுகில் குத்தி விட்டு கட்சி தாவிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே முக்கியமான காரணம்.

அவர்களில் 6 பேர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரவிந்தகுமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா ஆகிய எட்டுப்பேரே இந்தத் துரோகத்தைப் புரிந்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி மலர துணைபோயுள்ளனர்.

20 ஆவது திருத்தம் நிறைவேறிவிட்டதே என்ற துயரை விடவும், இந்த எட்டுப் பேரும் செய்த துரோகமே இன்னும் அதிக வலியை மக்களிடம் உண்டாக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் முஸ்லிம் மக்களை ஈவிரக்கம் இல்லாமல், ஐந்தறிவு ஜந்துக்கள் போல நடத்துவதற்கும், கலவரங்களைத் தூண்டி விட்டு இழப்புக்களை ஏற்படுத்துவதற்கும் சூத்திரதாரிகளான ராஜபக்சக்களுக்கு , அதே முஸ்லிம் இனத்தின் பிரதிநிதிகள் தோள் கொடுக்க எப்படி முடிந்தது?.

அவ்வளவு எளிதில் தங்கள் இனத்துக்கு ராஜபக்சக்கள் இழைத்த கொடுமைகளை மறந்துவிட்டு, சுயநலத்துக்காக ஓடிப்போய் ஒட்டிக்கொள்ளபவர்களை முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என அழைக்கமுடியுமா? அதேபோன்றுதான் அரவிந்தகுமாரும் , 20 ஆம் திருத்தத்துக்காக ராஜபக்சக்களுக்கு அடிமையானதன் மூலம் தனக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னமும் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க மனமில்லாமல் நாடகமாடும் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததம் மூலம் தன் மீது பெரும் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தைப் படுகுழிக்குள் தள்ளியுள்ள 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்ற துணைபோனதன் மூலம் இந்த எட்டுப் பேரும் செய்த துரோகத்தை மக்கள் மன்னித்தாலும், வரலாறும், காலமும் அவர்களை மன்னிக்கப் போவதில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

“அரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல, காலவோட்டத்துக்கேற்ப சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும் ” – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

“அரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல, காலவோட்டத்துக்கேற்ப சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும் ” என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.தேர்தல் ஆணைக்குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டார். அவரிடம் சுயாதீனம் இருக்கவில்லை. தேர்தலை நடத்தவேண்டிய இடத்தில் இருந்துக்கொண்டு தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். இவ்வாறு 19 இல் பல குறைப்பாடுகள் உள்ளன. அச்சட்டம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு இந்த நாட்டில் 42 வருடங்களாக அமுலில் உள்ளது. அரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல, காலவோட்டத்துக்கேற்ப சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும்.

அந்தவகையில் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 9 பேரடங்கிய நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அக்குழுவின் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 6 மாதங்களுக்குள் வரைவு நகலை வழங்குவதாக குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். எனவே, 20 என்பது தற்காலிக ஏற்பாடு, அதனை ஒத்திவைக்கமுடியாது. அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான ஆரம்பமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். முழுமையானதொரு அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்

“20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பார்த்து அல்ல“ – பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 20ஆவது திருத்தச்சட்டம் பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியிலும் அறுதிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. எதிர்பாராத திருப்பமாக பலர் ஆதவரளித்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. இதில்  குறிப்பாக ஐக்கியமக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே இதற்கு ஆதரவளித்திருந்தமை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன்.

இந்நிலையில் “20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பார்த்து அல்ல“ என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலை எதற்காக வைக்கின்றோம்? ஜனாதிபதி ஒருவரை நியமிக்க. நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதற்காக. அவரை ஜனாதிபதியாகி அவரின் கைகளை கட்டி கங்கையில் வீசிவிட்டு நீந்த சொல்வது சரியா? அவர் மூழ்கும் வரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பின்னர் நாம் கூறுகிறோம் நீங்கள் நீரில் மூழ்கிறீர்கள் என்று. இது நகைப்புக்குரிய விடயம். ஜனாதிபதி என்றால் அதிகாரம் இருக்க வேண்டும். நாட்டிற்கு வேலை செய்ய. நான் இதை செய்தது நாடு தொடர்பில் சிந்தித்து. எனக்கு கோட்டாபய ஜனாதிபதி மீது அதிக நம்பிக்கை உள்ளது. எனக்கு நம்பிக்கையுள்ளது அவர் நாட்டை கட்டி எழுப்புவார் என்று என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார். இது தவிர 20க்கு ஆதரவு வழங்குவோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவர் என  குறிப்பிடப்பட்டமையும் நோக்கத்தக்கது.

20க்கு எதிராக 19 தமிழ்பாராளுமன்ற வேடபாளர்கள் வாக்கு !

நாட்டின் 9ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 09பேர் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், 19 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (10), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (02), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (01), தமிழ் முற்போக்குக் கூட்டணி (அரவிந்குமார் தவிர 5 பேர்) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷும் எதிராக வாக்களித்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,ஈழமக்கள் ஜனநாயக கட்சி , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள எஸ்.வியாழேந்திரன்,தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் . சுரேன் ராகவன் ஆகியோரும் 20 இற்குச் சார்பாக வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்அரவிந்த குமாரும் இந்தப் பட்டியலில் இணைந்தார்.

9 ஆவது நாடாளுமன்றத்துக்கு மக்களின் அங்கீகாரத்துடன் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். தேசியப் பட்டியல் ஊடாக மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“முஸ்லிம்கள் தொப்பி பிரட்டிகள் என்று விமர்சிப்பதை 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்” – உறுப்பினர் இம்ரான் மக்ரூப்

“முஸ்லிம்கள் தொப்பி பிரட்டிகள் என்று விமர்சிப்பதை 20க்கு ஆதரவளித்த  முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்” நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் தெரிவித்துள்ளார்.

20ஆம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது;

“முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இன்று இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்.

இன்று இவர்கள் செய்தது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம். இவர்கள் ஆதரவு அளித்ததால்தான் இன்று இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 18 ஆம் 19 ஆம் 20 ஆம் திருத்த சட்டம் என மூன்றுக்கும் அதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுக்கு இந்த சட்டமூலங்களில் என்ன உள்ளது என்றாவது தெரியுமா? என எனக்கு தெரியவில்லை.

இவர்களின் தேர்தல் பிரச்சாரங்களை எடுத்து பார்த்தால் முழுவதும் இனவாதம் பேசியே வாக்கு சேகரித்தனர். இந்த அரசு ஆட்சிக்கு வந்தால் இலங்கை மியன்மாரை போன்று மாறும் என கூறினர். இன்று எந்த முகத்தை கொண்டு மீண்டும் மக்கள் முன் செல்வர். இவர்கள் இந்த அரசுக்கு வழங்கிய இந்த அதிகாரம் மூலம் விசேடமாக கிழக்கில் தொல்பொருள் செயலணி போன்று பல வழிகளில் பறிபோகவுள்ள எமது காணிகளுக்கும் சிங்கள குடியேற்றங்களுக்கும் எமது உரிமைகளுக்கும் என்ன தீர்வை வழங்கப்போகிறார்கள்.

இன்னும் ஓரிரு தினங்களில் ஊடகங்கள் முன்வந்து எமது மாவட்ட அபிவிருத்திக்காக ஆதரவாக வாக்களித்தோம் என கூறுவார்கள்.பசி என்பதற்காக ஹராமான உணவுகளை என்னால் உண்ண முடியாது. இவர்கள் உண்பார்களா? என எனக்கு தெரியாது.

எதிர்வரும் காலங்களில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாம் அமைக்கவுள்ள ஆட்சியில் இவர்களுக்கு நாம் சிறந்த பதிலை வழங்குவோம்” என தெரிவித்தார்.