24
24
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மைக் பொம்பியோவின் வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாட்டின் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு மீண்டும் அறிக்கையினூடாக உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர் அதிகாரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“கோட்டாபய ராஜபக்சவின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு ஆற்றில் தூக்கி வீசிவிட்டு நீந்தி வரச் சொல்கின்றனர்- அவரால் எப்படி செயற்பட முடியும். அதனாலேயே 20க்கு ஆதரவாக வாக்களித்தேன்” என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினருமான டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று(23.10.2020) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொரோனா சுகாதார நெருக்கடிகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார்,
அவர் மேலும் பேசுகையில்,
“கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோதே போரை நிறைவு செய்தார். நகரங்களை அழகுபடுத்தினார். அவரிடம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
அண்மையில் நாட்டில் நடந்தது என்ன? உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் 250 இற்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தோம். அதற்குப் பொறுப்புக்கூற யாரும் இல்லை. காலையில் ஒருவரும் மாலையில் ஒருவரும் விசாரணைக்குச் செல்கின்றனர்.
கோட்டாபய ராஜபக்ச திறமைமிக்கவர். அவரின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு ஆற்றில் தூக்கி வீசிவிட்டு நீந்தி வரச் சொல்கின்றனர். அவர் மூழ்கப்போகின்றார். இந்தநிலையில்தான் நான் எனது வாக்கை அவருக்கு ஆதரவாகப் பயன்படுத்தினேன்.
இதே நிலைமை சஜித் பிரேமதாஸவுக்கு ஏற்பட்டிருந்தாலும் நான் மாற்று அணியில் இருந்திருந்தாலும் இதே முடிவையே எடுத்திருப்பேன். எனவே, 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக எனக்கு எதிராக கட்சி எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தொடர்பில் கவலையில்லை.
நாட்டுக்கு அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவரே தேவை. அதற்காக எனது வாக்கைப் பயன்படுத்திய மன நிறைவுடன் இப்போது என்னால் நிம்மதியாகத் தூங்க முடிகின்றது” – என்றார்.
“நான் எப்போதும் இந்திய- அமெரிக்கச் சமூகத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளேன்” என ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோபைடன் கூறும்போது, “நான் எப்போதும் இந்திய- அமெரிக்கர்களுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளேன். ஏனெனில் குடும்பம், கடமை, சுய ஒழுக்கம், மரியாதை, பணிகள் ஆகியவற்றில் நாம் ஒற்றுமையாக உள்ளோம்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு. இலங்கையில் உள்ள வாய்ப்புகளை ஆராய, கொரிய முதலீட்டாளர்களை தான் தொடர்ந்தும் ஊக்குவித்து வருகிறோம்” என இலங்கைக்கான கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் நேற்று(23.10.2020) இடம்பெற்ற இருதரப்புக் கலந்துரையாடலின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கையில் பாரிய முதலீட்டாளர்களில் ஒருவராக கொரியாவும் காணப்பட்டதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் தற்போது 115 க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் கடந்த ஆண்டு 327 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து அரசாங்கத்தை பாராட்டிய கொரியத் தூதுவர், கொரோனா நெருக்கடியைச் முகாமைத்துவம் செய்வதில் கொரிய அரசு, இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை மற்றும் கொரிய நாடுகளுக்கு இடையிலான அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விடயம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
“கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதா? அது இப்போது சமூகத்தில் பரவுகிறதா? என்பதை அரசாங்கம் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் விளக்க வேண்டும்” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
COVID-19 தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஆரம்பித்துவைத்து நேற்று (23.10.2020) பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
குறித்த நிறுவனம் மீது முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குறித்த தொழிற்சாலை சுகாதார நடவடிக்கைகளை புறக்கணித்து அவர்களின் உடல்நிலையை பொருட்படுத்தாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தியது என்றும் கூறினார்.
தொழிலாளர்கள் காய்ச்சல் மற்றும் வாந்தியெடுத்த போதும் அவர்களுக்கு வலி நிவாரணி மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு வேலை செய்ய வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தொழிற்சாலை அவர்களின் உற்பத்தி இலக்குகளை அடைவதில் மட்டுமே அக்கறை கொண்டிருந்தது என்றும் அனுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டினார்.
மேலும் இரண்டு நாட்களுக்குள் 1,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளமை தொழிற்சாலையின் அலட்சியம் மிகவும் தெளிவாக காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை முறையான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தாமல் சிலர் இந்தியாவில் இருந்துவந்து பிரண்டிக்ஸ் தொழிற்சாலைக்குள் சென்றனர் என வெளியாகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அத்தோடு கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது இப்போது சமூகத்தில் பரவுகிறதா? என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் அதை உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் விளக்க வேண்டும் என்றும் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
“தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். பௌத்த மகா சங்க சபையினர், பொது மக்கள் எதிர்பார்த்த விசேட விடயங்கள் இந்த திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்” என சீயம் நிகாய பௌத்த பீடத்தின் அஸ்கிரி தரப்பு ஆவண அதிகாரி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தம் தொடர்பில் கண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,
பௌத்த மகா சங்க சபையினர், பொது மக்கள் எதிர்பார்த்த விசேட விடயங்கள் இந்த திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். பிரதமர் நியமித்த குழுவின் பரிந்துரைகளிலும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களில் இது தொடர்பாக கூறப்பட்டிருந்தது. துரிதமாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
நாட்டின் பௌத்த சங்க சபையின் குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். பௌத்த பிக்குகளின் இந்த அர்ப்பணிப்பு தொடர்பாக விசேட கவனத்தை செலுத்தி மிக விரைவில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோருகிறோம்.
பௌத்த பிக்குமார் வழிநடத்திய அரசாங்கம் எதிர்பார்த்தபடி செயற்படவில்லை என்றால், எதிர்காலத்தில பிக்குமார் மீது குற்றம் சுமத்தப்படலாம். ஏதோ ஒரு பாதிப்பான நிலைமை காணப்படுகிறது. எனவே அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தி புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற துரிதமாக நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அறிவிப்புகளும் விழிப்புணர்வுகளும் தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.” என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23.10.2020) இடம்பெற்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
“கொரோனாவுடனேயே நாம் அனைவரும் வாழவேண்டிய சூழல் உள்ளது. இது எமது நாட்டில் மாத்திரம் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அல்ல. பூகோள ரீதியான தொற்றுநோயாகும். சரியான தகவல்கள் இந்த வைரஸ் தொடர்பில் வைத்திய நிபுணர்களிடமும் இல்லை. வரலாற்றில் எந்தவொரு சுகாதார அமைச்சருக்கும் இல்லாத சவால் தற்போதைய சுகாதார அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களுக்கும் செவி கொடுக்க வேண்டும். தனிமைப்படுத்தல் நிலையங்கள் காணப்படும் மோசமான நிலைமை காரணமாக அங்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் இரண்டாம் நபர்கள் தொடர்பில் சமூகத்தில் பீதியொன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இவர்களை குற்றவாளிகள் போன்று பார்க்கின்றனர்.
சுகாதார அறிவித்தல்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். தமிழ்மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் கொரோனா தொற்று தொடர்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வுகள் பெரும்பாலும் சிங்கள, ஆங்கில மொழிகளில் மாத்திரமே வெளியிடப்படுகின்றன.
தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அதன் காரணமாக தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” – எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வௌியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு மேலதிகமாக மேலும் மூன்று யோசனைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக என தெரிவித்தார்.