01
01
இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“122 பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு மாணவர்களும் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதிருக்க மீண்டும் தொலைக்கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திய வகையில் அரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வசதிகள் குறைந்த கிராமிய பிரதேச மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கும் வகையில் விசேட வேலைத் திட்டத்தை தயாரிப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் 9 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட இருந்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை ஒக்டோபர் 5ஆம் திகதி வழங்கப்பட்டது. உயர் தரப்பரீட்சை முடிவடைந்த்தும் மூன்றாம் தவணை நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 23 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் காட்டு யானைகள் தாக்கி 52 பேர் உயிரிழந்ததாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் பல்வேறு காரணிகளினால் 372 யானைகள் இதுவரையில் உயிரிழந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் மாதம் ஒன்றுக்கு 700 காட்டு யானைகள் பிறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 150க்கும் அதிகமான காட்டு யானைகள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே பல்வேறு சுகாதார காரணிகளால் உயிர் இழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 300க்கும் அதிகமான யானைகள் மனிதரின் துப்பாக்கிச் சூட்டிலும் வலைகளிலும் சிக்கி உயிர் இழக்கின்றன.
இந்தநிலையில், நாட்டில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 6 000 வரையான யானைகள் இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸுக்கும், பிரான்ஸ் நாட்டுக்கு எதிராகவும் ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிராகவும் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிடும் போது “சுதந்திரமான பேச்சுகள் எந்தச் சமூகத்தினரையும் காயப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் கூறுகையில், ”நாங்கள் எப்போதும் சுதந்திரமான பேச்சுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்போம். ஆனால், சுதந்திரமான பேச்சுரிமையிலும் கட்டுப்பாடுகள் தேவை. நமது கருத்துகள் பிற சமூகத்தினரைக் காயப்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் வரம்பு உள்ளது” என்றார்.
கொழும்பில் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தாயாரை சுகாதார அதிகாரிகள் அழைத்து சென்றதால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய 25 வயதான மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹோமாகம தோலவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாயார் மஹரகமவில் உள்ள மீன் கடையில் மீன் கொள்வனவு செய்திருக்கிறார்.அந்த மீன் விற்பனை நிலையத்துடன் தொடர்பான பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பெண்ணும் களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அவரது விசேட தேவையுடைய மகன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை நியமிக்க பங்காளிக் கட்சிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று(31) யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலமையகத்தில் கூடி ஆராய்ந்தனர்.
இதன்போதே மேற்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இந்த முடிவை உடனடியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், க.சிவநேசன் ஆகியோரும் ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் இந்த கலந்துகொண்டனர்.
இதன்போது, தேர்தல்கள் திணைக்களத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றை சுட்டிக்காட்டிய சீ.வீ.கே.சிவஞானம் கூட்டணி கட்சிகள் அனைத்தும் செயலாளர்களை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்தே, பங்காளிக் கட்சிகள் மாவை சேனாதிராஸாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.
“வடக்கு மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலையின் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“சமூகப் பரவல் என்பது அதன் அர்த்தத்தின்படி என்னவென்றால் தொற்றானது எவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்றியது என்பது தெரியாத நிலையாகும். இதுவரையில் நோயாளியாக இனங்காணப்படும் ஒவ்வொருவரும் இன்னொரு நோயாளியுடன் ஏதோவகையில் தொடர்புபட்டவர்களாகவே உள்ளனர். இதனால்தான் வைத்தியர்கள் இதுவரை சமூகப் பரவல் இல்லை என்று கூறுகிறார்கள். அதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சமூகப் பரவலா அல்லது தொடர்புகள் உள்ளதா? இல்லையா? என்பது இங்கு முக்கியம் அல்ல. எமது நாட்டில் தற்போது கொரனாத் தொற்று உள்ளதால் நாம் அனைவரும் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும்.
நாட்டு மக்கள் அனைவரும் சுகாதாரப் பிரிவினரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் கொரொனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தமது பாரிய பங்களிப்பை வழங்க வேண்டும்.
சுகாதார அறிவுறுத்தல்கள் மிகவும் இலகுவானவை. அதாவது முகக்கவசம் அணிதல், கைகளை நன்கு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியனவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். அத்துடன் பெருமளவு மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதும் முக்கியமாகும். பொதுமக்கள் இதனை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என நான் நம்புகின்றேன்.
வடக்கு மாகாண மக்கள் இந்தச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகின்றோம். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் சில நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு எம்மால் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையினர் தெளிவாக மக்களுக்கு வழிகாட்டல்களை மேற்கொண்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். அந்த வழிகாட்டல்களை அனைவரும் கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்தப் பிரதேசத்தில் கொரோனா நோயே இருக்கமாட்டாது” எனவும் அவர் தெரிவித்தார் .
நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பினர் கோமாநிலையிலா? அல்லது செவ்வாய் கிரகத்திலா இருந்தார்கள் ? என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனத்திலெடுக்காமல் ஒளிந்து கொண்டிருந்தவர்கள்தான் என்மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். அவ்வாறானவர்களால் மக்களுக்கு அபிவிருத்தியையோ, அரசியல் தீர்வையோ பெற்றுக் கொடுக்க முடியாது.
அவர்கள்தான் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாத்தவர்கள். நாங்கள் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அதற்குரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்.
இது தெரியாதவர்கள்தான் நான் ஒன்றும் செய்யவில்லை என்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரே குடும்பமாக இருந்தபோதும்கூட இந்த காணிப்பிரச்சினை இருக்கத்தானே செய்தது. அப்போதே இந்த பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கலாம். அப்போது அவர்கள் எங்கிருந்தார்கள்? அப்போது அவர்கள் கோமாநிலையிலா அல்லது செவ்வாய் கிரகத்திலா இருந்தார்கள். வெறுமனே வாயை மூடிக் கொண்டு இருந்துவிட்டு தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் எங்கள்மீது விசமத்தனமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.
கடந்த காலத்தில் மக்களின் பிரச்சினை களை கவனத்திலெடுக்காமல் ஐக்கிய தேசியகட்சியுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் தேசியகூட்டமைப்பு இன்று தன்மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்
எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை இது குறித்து சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கடந்த நல்லாட்சிக்கால அரசாங்கத்தில் தமிழ்தேசியகட்சி சார்பாக பாராளுமன்றம் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.