03

03

“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” – அநுர குமார திஸாநாயக்க

“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என ஜே.பி.வி.யின் (மக்கள் விடுதலை முன்னணி) தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில்,  இன்று (03.11.2020)  இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போது கொரோனா, பொதுவான ஒரு எதிரியாக மாற்றமடைந்துள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தும்  காணப்பட்டால், நாடே பெரிதும் பாதிக்கப்படும்.

இன்று இராணுவத்தினர், சுகாதார அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்துதான் நிலைமையை கட்டுப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். எனினும், இந்த கட்டமைப்பில் ஏதேனும் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டால், அது பாரதூரமாக அமைந்துவிடும். இதனை அரசாங்கம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

இது தேசிய ரீதியிலான பிரச்சினை. இதனை முறியடிக்க தேசிய ரீதியிலான பொறிமுறையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம். இந்த விடயத்தில் அரசியல் பேதங்களை கடந்து செயற்பட வேண்டும். அரசாங்கம் இதற்குத் தயார் என்றால், நாமும் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தலில் சுவாரஸ்யம் – மக்கள்தொகை 12 ஆக உள்ள நகரின் முழுமையான வாக்குகளையும் வென்றார் ஜோபிடன் !

அமெரிக்காவில் இன்றையதினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இந்தத்தேர்தலில்இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் என்றொரு பகுதி உள்ளது. அதில் டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற நகரும் மில்ஸ்பீல்டு என்ற நகரும் உள்ளன. அதில், டிக்ஸ்வில்லி நாட்ச் நகரில்தான் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அதுவும், அனைத்து வாக்குகளையும் அவர் சுருட்டிக்கொண்டுள்ளார், அவரை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், டிக்ஸ்வில்லி நாட்ச் நகரின் மொத்த மக்கள்தொகையே 12 தான் (2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி). அதிலும் 5 பேர்தான் வாக்காளர்கள்! அந்த ஐந்து பேர் வாக்களித்ததில், ஐந்து பேருமே ஜோ பிடனுக்குதான் வாக்களித்துள்ளார்கள். ஆகவே, 5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற, ஒரு வாக்கு கூட கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளார் டிரம்ப்.

அதேபோல், 12 மைல் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு நகர் மில்ஸ்பீல்டு, அதன் மக்கள் தொகை 21. அந்த 21 பேரில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன. ஆக, அந்த தொகுதியில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

“கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாணத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு !

“கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாணத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (03.11.2020) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுக்கவிதிகள் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மக்களை பழிவாங்கும் கருவியாக பொலிஸார் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் வைத்தியர்களும் தாதியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுகின்றனர். இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என மேலும் குறிப்பிட்ட அவர் , வடக்கு, கிழக்கில் கொவிட் -19 சிகிச்சை வைத்திய நிலையங்களை உருவாக்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. நிதி பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கில் கொரோனா நோயாளர்களை கையாள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 12ஆயிரம் நோயாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த வைத்தியசாலை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக இங்கு சிகிச்சைக்கு செல்லும் மக்கள் 40 கி.மீ. தொலைவில் உள்ள பருத்தித்துறை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது. இங்கு 12 ஆயிரம் நோயாளர்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு மாற்று வைத்திய முறைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் ”எனவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாத்தொற்றால் இறக்கும் முஸ்லீம்களின் உடலை எரிப்பதை சுயநல அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள்” – சஜித்பிரேமதாஸவிற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி  பதிலடி !

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று(03.11.2020) பாராளுமன்றம் கூடியிருந்தது. இன்றைய கலந்துரையாடல்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போகும்  முஸ்லீம்களின் உடலை எரிப்பது தொடர்பான விவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இன்றைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ “கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களை தமது மத சம்பிரதாயங்களின் பிரகாரம் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அரசாங்கம் இனவாத செயற்பாடுகளை கொரோனா விடயத்திலும் காண்பிப்பதாகவும்”  முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது பதிலை நீதி அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.

இதன்போது பதில் கூறிய நீதி அமைச்சர் அலி சப்ரி,

கொவிட் -19 என்பது மிகவும் அச்சுறுத்தலான நோயாகும். இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் இது அச்சுறுத்தலான நோயாகவே உள்ளது.

நாம் அனைவரும் இந்த நோய்க்கு முகம் கொடுத்து வருகின்றோம். கொவிட் -19 வைரஸ் தொற்று நோய் தாக்கத்தில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதில் முஸ்லிம் மக்களிடையே சில முரண்பாடுகள் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். ஆனால் இதனை அரசியலாக்குவது தகுதியான செயற்பாடாக அமையாது.

முஸ்லிம் மக்களின் வேண்டுகோள் குறித்து வைத்தியர்களிடம் மீண்டும் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தோம். ஆறுமாத காலத்திற்கு முன்னரே நாம் இந்த வேண்டுகோளை விடுத்தோம்.

எனினும் விஞ்ஞான அல்லது மருத்துவ ரீதியில் இது தாக்கத்தை செலுத்தலாம் என வைத்தியர்களிடம் அச்சம் நிலவியது. அது  என்னவென்றால் தகனம் செய்வதில் முஸ்லிம் சமூகம் கேட்பதை போல நடவடிக்கை எடுத்தால் அது வைரஸ் பரவலுக்கு ஏதுவாக அமையலாம் என்ற அச்சம் நிலவியது.

எனினும் ஆறுமாத காலத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக வைத்தியர்கள் எமக்கு கூறினர். இப்போது மீண்டும் நாம் இது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

எனவே இதனை அரசியல் சுயநலன்களுக்காக கையாள வேண்டாம். மனிதாபிமான ரீதியில் இதனை கையாள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விவாதங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்குமு் போது “கொரோனா வைரஸ் தொற்றால் முஸ்லிம்கள் உயிரிழக்கும்பட்சத்தில் அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டும் எனவும், தான் உயிரிழந்தால்கூட தன்னையும் எரிக்கும் நிலை ஏற்படும் எனவும், ஆகவே இந்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசிலனை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

“இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்து அரசாங்கம் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டுகிறது” – அரசின் மீது சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு !

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று பாராளுமன்றம் கூடியிருந்தது.

இன்றைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்து, அரசாங்கம் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டுவதாக  குற்றம்சாட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக நாம் கடந்த ஜனவரி மாதமே எச்சரித்திருந்தோம். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறும் கோரினோம். ஆனால், அரசாங்கம் இவை அனைத்தையும் நிராகரித்தன.

இதனால், இன்று நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது கொரோனாவை வைத்து நாட்டில் பிரிவினைவாதத்தையே அரசாங்கம் தூண்டுகிறது. இஸ்லாம் மக்களை இலக்கு வைத்தே தற்போது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனாவை பரப்புவதே முஸ்லிம் மக்கள்தான் என ஒரு பிரசாரம் கூறப்பட்டது. அத்தோடு அவர்களின் மார்க்கத்துக்கு முரணாக, இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இது அடிப்படைவாத நடவடிக்கையாகும். உலகில் எந்தவொரு நாடும் இவ்வாறு சடலங்களை எரிக்கவில்லை.

இனவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் பரப்புவதில் தான் இந்த அரசாங்கம் தீவிரமாக உள்ளது. மார்ச் மாதத்திலிருந்து நாட்டுக்கு ஒரு வென்டிலேட்டரைக்கூட அரசாங்கம் வாங்கவில்லை. தரமான பி.சி.ஆர். இயந்திரங்களை கொள்வனவு செய்யவில்லை.

கொரோனா தொற்றாளர்களுக்கு படுக்கைகள் இல்லை. ஐ.சி.யு. படுக்கைகள் இல்லை. இவற்றை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் 20 ஆவது திருத்தத்தை மட்டும் உடனடியாக கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார்கள். அரசாங்கத்தின் கொரோனா ஒழிப்பு செய்பாடு இன்று தோல்வியடைந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

துருக்கி நிலநடுக்கம் – 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி !

துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் கடந்த 31-ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 7.0 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான இஸ்மிர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
கடல்நீரும் சுனாமி அலைகளாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்தன. இந்த நிலநடுக்கத்தால் 300-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், மீட்பு நடவடிக்கையில் போது பலரும் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு 91 மணிநேரம் கழித்து (சுமார் 4 நாட்கள்) 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அய்டா ஹிஸ்ஜின் என்ற பெயருடைய அந்த சிறுமி இடிபாடுகளுக்குள் சிக்கி 4 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனாவிலிருந்து விடுபட கிளிநொச்சியில் விசேட யாகம் !

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் நாளை (12.11.2020) விசேட யாகம் இடம்பெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால்  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு இந்து அலயங்களில் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட நிலையில் குறித்த விசேட யாகம் நாளை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணியளவில் பசுமை பூங்கா அருகில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிளிநொச்சி மாவட்ட  செயலகமும், வன்னி பிராந்திய  சைவகுருமார் ஒன்றியமும் இணைந்து குறித்த யாக வழிபாட்டினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன்போது நாடு கொரோனா தொற்றிலிருந்த விடுபடும் வகையில் விசேட யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

“என் கனவுடன் நான் நிஜத்தில் வாழ்ந்தது அதிர்ஷ்டம். முடிவுக்கு வரும் இந்த சகாப்தம் கடினமாக இருக்கும்“ – அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறார் வோட்ஸன் !

“என் கனவுடன் நான் நிஜத்தில் வாழ்ந்தது அதிர்ஷ்டம். முடிவுக்கு வரும் இந்த சகாப்தம் கடினமாக இருக்கும். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்” என  அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன்வோட்ஸன் இன்று அறிவித்துள்ளார்.

முன்னதாகவே அவுஸ்ரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த போதிலும் கூட இந்தியாவின் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவ்வருட ஐ.பி.எல் தொடரில் சென்னை  அணி பெரிய அளவில் சோபிக்கத்தவறியதுடன் லீக் ஆட்டங்களுடன் வெளியேறிய நிலையில் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் வாட்ஸன் ஓய்வு அறிவிக்க இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.

அவுஸ்திரேலியாவுக்கு வாட்ஸன் சென்ற பின் இது பற்றி அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வீடியோ மூலம் தனது ஓய்வை வாட்ஸன் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வாட்ஸன் லீக் போட்டிகளில் மட்டும் பல்வேறு நாடுகளில் விளையாடி வந்தார். இந்த அறிவிப்பின் மூலம் ஐ.பி.எல் மட்டுமின்றி ஆஸி.யில் நடக்கும் பிக் பாஷ் லீக்கிலும் வாட்ஸனின் ஆட்டத்தைக் காண முடியாது.

டி20 ஸ்டார்ஸ் எனும் யூடியூப் சேனலில் வாட்ஸன் அளித்த பேட்டியில், “நான் 5 வயதில் டெஸ்ட் போட்டியைக் காணும்போது, என் அம்மாவிடம் நான் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்று கூறினேன். அது என் கனவாக இருந்தது. ஆனால், இப்போது அதிகாரபூர்வமாக அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் நான் விடைபெறுகிறேன். என்னுடைய கனவுகளுடன் வாழ்ந்ததால் நான் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரன்.

கடந்த மாதம் 29-ம் தேதி கொல்கத்தா, சி.எஸ்.கே அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் முடிந்தவுடனே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டேன்.

இப்போதுதான் சரியான நேரம் என உணர்கிறேன். நான் மிகவும் நேசிக்கும் சி.எஸ்.கே அணியுடன் கடைசியாக கிரிக்கெட் விளையாடினேன். கடந்த 3 ஆண்டுகளாக என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தனர்.
பல காயங்கள், ஓய்வுகள் பின்னடைவுகளுக்குப் பின், 39 வயதில் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடிக்கிறேன். இந்த சகாப்தம் அடுத்துவரும் காலங்களில் மிகவும் கடினமாக இருக்கும். ஆனாலும் முயல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்துசி.எஸ்.கே அணியில் இடம் பெற்று வரும் வாட்ஸன் அந்த ஆண்டு கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்.

2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து கோப்பையை வென்று கொடுத்தார். 2019 ஆம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக இறுதிப்போட்டி வரைசி.எஸ்.கே அணி நகர வாட்ஸன் பங்களிப்பு முக்கியக் காரணமாக அமைந்தது.

2018 ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்காக 555 ரன்களும், 2019இல் 398 ரன்களும் வாட்ஸன் சேர்த்தார். ஆனால், 2020 ஆம் ஆண்டு சீஸன் சிஎஸ்கே அணிக்கே சோகமாக முடிந்த நிலையில் அதில் 11 இன்னிங்ஸில் 299 ரன்கள் மட்டுமே வாட்ஸனால் சேர்க்க முடிந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐ.பி.எல் தொடரில் சிறந்த ஆல்ரவுண்டராக வாட்ஸன் வலம் வந்துள்ளார். இதுவரை 145 போட்டிகளில் 3,874 ரன்கள் சேர்த்துள்ள வாட்ஸன் பந்துவீச்சில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சி.எஸ்.கே அணிக்கு வருவதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்.சி.பி அணிகளில் விளையாடியுள்ளார். இதில் சி.எஸ்.கே அணிக்காக மட்டும் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் ஐ.பி.எல் தொடர் நாயகன் விருதையும் வாட்ஸன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூல் பல்கலைகழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – 19 மாணவர்கள் பலி !

ஆப்கானிஸ்தான் பல்கலைகழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூல் பல்கலைகழகத்தில் தீவிரவாதிகள் நேற்று  (திங்கட்கிழமை) தீவிரவாததாக்குதல்  நடத்தியுள்ளனர. இதில் மாணவர்கள் உட்பட 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை மூன்று தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். இதில் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். தலிபான்களை தவிர்த்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கான் பாதுகாப்புப் படையினர் மற்றும் தலிபான்களுக்கு இடையே சில நாட்களாகவே மோதல் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஆப்கன் அரசு தலிபான்களை அவ்வப்போது விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் ஒரே நேரத்தில் 06 இடங்களில் பயங்கரவாதத்தாக்குதல் – ஐவர் பலி !

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இன்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரடங்கிற்கு முன்னதாக நேற்று இரவு நகரின் பல்வேறு இடங்களில் உள்ள உணவகங்கள், கேலிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் அலைபோதியது.
அப்போது, நகரின் முக்கிய பகுதியில் கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான்.
அதேபோல், வியன்னாவில் தேவாலயம் அமைந்திருந்த பகுதி, யூதர்கள் வழிபாட்டு தளம் அமைந்திருந்த பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் அரங்கேறியுள்ளது. மொத்தம் 6 இடங்களில் ஒரே நேரத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகவலறிந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அப்போது, ஒரு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். எஞ்சிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் வருவதற்கு முன்னர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். ஆனாலும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என ஆஸ்திரிய உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற எஞ்சிய ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவாளர்களை பாதுகாப்பு படையினர் தேடிவருகின்றனர்.
ஆனாலும், இந்த தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். இதனால், ஆஸ்திரிய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 5 (1 பயங்கரவாதி உள்பட) ஆக உள்ளது.
ஆஸ்திரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பிரான்ஸிலும் தேவாலயங்களில் நடைபெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடையோர் ஐ.எஸ் அமைப்பினைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பிரான்ஸிய பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.