07

07

முடிவுக்கு வந்தது அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் – 2020 – ட்ரம்பை வெற்றி கொண்டார் ஜோபைடன் !

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பெருமளவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. ஆரம்பம் முதலே ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் எண்ணிக்கை தற்போது நிறைவு பெற்றது. இந்த மாநிலத்திலும் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார்.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அமெரிக்க அதிபராக பைடன் விரைவில் பதவியேற்க உள்ளார்.
தற்போதைய அதிபர் டிரம்பிற்கு 214 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டிருந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் விபரம் ஜோ பிடன் – 284 டொனால்ட் ட்ரம்ப் -214

“நாம் அமெரிக்கர்கள் , நாம் எதிரெதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது ” – நெகிழ வைக்கும் ஜோபைடன் டுவீட் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறார். ஆனால் வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் என குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் கூறி வருகிறார்.
இருவரும் இப்படி மறைமுகமாக மோதி வரும் நிலையில் ஜோ பைடன் டுவிட்டர் பதிவுகள் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ‘நாம் எதிரெதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது, நாம் அமெரிக்கர்கள். நம்முடைய அரசியலின் நோக்கம் முற்றிலும் இடைவிடாத போர் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’ என பைடன் பதிவிட்டுள்ளார்.

வியன்னா படுகொலைத்தாக்குதல் விவகாரம் – மூடப்பட்டன இரண்டு பள்ளிவாசல்கள் !

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவின் சிட்டி சென்டர் பகுதிக்கு கடந்த 2-ம் திகதி துப்பாக்கியுடன் வந்த ஒரு பயங்கரவாதி அங்கு இருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான்.இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். இது போல வியன்னா நகரின் பல இடங்களில்டி துப்பாக்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

இந்நிலையில் வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி சென்றுவந்த இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரியா மந்திரி சூசேன் ராப் நிருபர்களிடம் கூறியதாவது:-
திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர் இரண்டு வியன்னா மசூதிகளுக்கு பலமுறை விஜயம் செய்ததாக உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு மசூதிகள் வியன்னாவின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ளன, ஒன்று ஒட்டாக்ரிங் மாவட்டத்தில் மெலிட் இப்ராஹிம் மசூதி என்றும் மற்றொன்று மீட்லிங் பகுதியில் உள்ள தெவ்ஹிட் மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.
உள்நாட்டு புலனாய்வு அமைப்பு “இந்த மசூதிகளுக்கு வருகை தாக்குதல் நடத்தியவரின் தீவிரவாத எண்ணங்களை அதிகரித்ததாக எங்களிடம் கூறியது. மசூதிகளில் ஒன்று மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, ராப் கூறினார்.
ஆஸ்திரியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மத சமூகத்தின் அறிக்கையில்  “மதக் கோட்பாடு மற்றும் அதன் அரசியலமைப்பு” பற்றிய விதிகளையும், இஸ்லாமிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தேசிய சட்டங்களையும் மீறியதால் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஒரு மசூதி மூடப்படுவதாகக் கூறி உள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் காவலில்  வைக்கப்பட்டுள்ள 16 பேரில் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

“பென்சில்வேனியாவில் நாம் வெல்லப் போகிறோம். மொத்தம் 300க்கும் மேற்பட்ட தேர்தல் சபை வாக்குகள் நமக்கு கிடைக்கும்” – பைடன் நம்பிக்கை !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதி ஆக முடியும் என்ற நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளுடன் வெற்றியை நெருங்கி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.
கடும் போட்டி உள்ள பென்சில்வேனியாவில் 20 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன, தற்போதைய நிலவரப்படி  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இது டொனால்டு டிரம்பிற்கு பெரிய தோல்வியாக அமையும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கடுமையான அழுத்தத்தை அடுத்து, உடனடியாக எண்ணுவதை நிறுத்த மறுத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் பென்சில்வேனியாவில் உள்ள தேர்தல் அதிகாரிகளை தேர்தல் நாளில் (நவம்பர் 3) இரவு 8 மணிக்கு காலக்கெடுவுக்குப் பிறகு வந்த அனைத்து அஞ்சல் வாக்குகளையும் பிரித்துப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தேவைப்பட்டால், அந்த வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாமுவேல் ஏ அலிட்டோ ஜூனியர் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ஜோபிடன் கூறியதாவது:-
இன்னும் இறுதி அறிவிப்பு வரவில்லை, வெற்றி அறிவிக்கப்படவில்லை, ஆனால் நமது எண்ணிக்கை நமக்கு தெளிவான மற்றும் உறுதியான தகவலை சொல்கின்றன. பென்சில்வேனியாவில் நாம் வெல்லப் போகிறோம். மொத்தம் 300க்கும் மேற்பட்ட தேர்தல் சபை வாக்குகள் நமக்கு கிடைக்கும்.
நமக்கு 7.4 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. டொனால்ட் டிரம்பை விட 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கிறோம். நாம் பென்சில்வேனியாவை வெல்லப் போகிறோம். நாம் 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசோனாவில் முதல் ஜனநாயகவாதிகளாக இருக்கப் போகிறோம்.
நாம் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஜார்ஜியாவில் முதல் ஜனநாயகவாதிகளாக இருக்கப் போகிறோம். நீல சுவரை நம் நாட்டின் நடுவே மீண்டும் கட்டியுள்ளோம். அமெரிக்கர்களின் வாக்களிப்பு ஒரு நள்ள மாற்றத்தைத் தேர்ந்தெடுத்தது. இவ்வாறு பைடன் தனது உரையில் கூறினார்.

“கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலைமையை மக்களிடம் மறைக்க அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது” – எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு !

நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலைமையை மக்களிடம் மறைக்க அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஊடக சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது,

“சமூகத்தில் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் சமூக ரீதியாகப்பரவவில்லை என அரசாங்கம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாகத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நகரம் மற்றும் கிராமங்களிலுள்ள இளைஞர், யுவதிகள் முழுமையாக அநாதையாக்கப்பட்டுள்ளார்கள். தொழிலை இழந்த நிலையில் அவர்கள் உட்கொள்ள உணவு , தங்கி இருந்த விடுதிகளுக்குச் செலுத்தப் பணம் இல்லை, முதலாளிமார்கள் குறித்த விடுதியிலிருந்து யுவதி, இளைஞர்களை அகற்ற முயற்சிக்கிறார்கள்.

எனவே, அரசாங்கம் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்“ – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா !

“இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்“  என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல்  நேற்று (06.11.2020) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றைய  கூட்டத்தில், நெடுந்தீவு பிரதேச சபை தலைவரினால் தமது பிரதேசத்திற்கான போக்குவரத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்ட நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய டக்ளஸ் தேவானந்தா , “நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பூரணமாக நிதி வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, குறித்த வீடுகளுக்கான மீதித் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வீடமைப்பு திட்டங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தினை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தூதுவர் பதவி அல்ல, எந்தவொரு பதவியையும் ஏற்க நான் தயாரில்லை” – மகிந்த தேசப்பிரிய உறுதி !

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவருக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இது தொடர்பாக மஹிந்த தேசப்பிரியவிடம் வினவியபோது  “தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய , “அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தூதுவர் பதவி அல்ல, எந்தவொரு பதவியையும் ஏற்க நான் தயாரில்லை. ஓய்வு காலத்தை மிகவும் அமைதியான முறையில் வாழ விரும்புகின்றேன். எனது ஓய்வை ஏற்கனவே அறிவித்துவிட்டேன்.

நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்த காலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல் போனது கவலைதான்” என்றார்.

இலங்கையில் கொரோனாத்தொற்றால் இளைஞர் பலி – 30ஆவது மரணம் !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்றும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு 15, மோதரையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் இறப்பையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

“போலி தகவல்களை வழங்கும் நபர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை” – பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது போலி தகவல்களை வழங்கும் நபர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது எவரேனும் ஒருவர் அவருடைய பெயர் அல்லது விலாசம் தொடர்பில் பிழையான விபரங்களை வழங்கினால் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும்.

இதேவேளை, தன்னை பிறிதொரு நபரை போன்று அடையாளப்படுத்தினாலும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும். இது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய குற்றச்செயலாக இருப்பதுடன், பிரிதொரு நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது அங்கே மோசடிகளும் இடம்பெற்றுள்ளது என்ற நிலைப்பாட்டிற்கு வரமுடியும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சந்தேக நபர்களினால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படுவதால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து , அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை நிரூபிக்கவும் உரிய ஆதாரங்கள் எம்மிடம் இருக்கும். அதற்கமைய மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்.