11

11

“ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-V 92சதவீத பயனளிக்கிறது” – ரஷ்யா தகவல் !

அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. அது 90 சதவீத பாதுகாப்பானது என நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் உலகின் முதன் கொரோனா தடுப்பூசி என ரஷ்யா அங்கீகரித்திருந்த தன்னுடைய தடுப்பூசியான ஸ்புட்னிக்-V
92 சதவீத பயன் அளிக்கிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபோது, ரஷ்யா ‘ஸ்புட்னிக்-V’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளோம். தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி பரிசோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று ரஷ்யா அறிவித்தது. மேலும், உலகின் முதன் கொரோனா தடுப்பூசி என ரஷ்யா அங்கீகரித்தது.
ஆனால் உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகள் ரஷியாவின் தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பின. நம்பகத்தன்மை இல்லை. நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான ஆய்வு குறிப்புகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தின.
அதன்பின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கல் சற்று குறையத் தொடங்கியதும், கொரோனா தடுப்பூசி குறித்து பெரிதாக பேசப்படவில்லை.
இந்நிலையில் ‘ஸ்புட்னிக்-V’ 3-ம் கட்ட பரிசோதனையில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு டோஸ் கொடுக்கப்பட்டது. 14 நாட்கள் இடைவெளியில் 16 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டது. அதன்பின் கொரோனா பாசிட்டிவ் நபர்கள் 20 பேருக்கு வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் 92  சதவீதம் பயன் அளிப்பது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிபா பின் சல்மான் காலமானார்..!

பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபா (வயது 84). பஹ்ரைன் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த பெருமை பெற்றவர் ஷேக் கலிபா. இவர் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மேயோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரதமர் ஷேக் கலிபா இன்று காலையில் காலமானார்.
அவர் காலமான செய்தியை பஹ்ரைன் அரண்மனை அறிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மன்னர் தெரிவித்ததாக பஹ்ரைன் செய்தி நிறுவனம் கூறி உள்ளது.
ஷேக் கலிபாவின் உடல் அமெரிக்காவில் இருந்து பஹ்ரைன் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார்” – விநாயகமூர்த்தி முரளிதரன்

“நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார்” தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடி பகுதியில் பிரதமரின் இணைப்பாளர் அலுவலகத்தை இன்று(11.11.2020) காலை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றும் போது மேற்கண்டவாறு விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விரட்டியடித்து நாம் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளோம். குறிப்பாக கல்முனை பகுதியில் 89 வீதம் வாக்குகளை பெற்றமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எம்மை பாராட்டினார். கல்முனை தொகுதி மக்களிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பொத்துவிலில் சிறிய மாற்றம் இருந்திருந்தால் நாம் நிச்சயம் வென்றிருப்போம். தேர்தலின் பின்னர் நான் ஓடி ஒளிந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். நிறைவாகும் வரை மறைவாக இருக்க வேண்டுமென சொல்வார்கள். அதற்காக சிறிது இடைவெளி ஏற்பட்டது.

இருந்த போதிலும் நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார். இந்த அடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை என்னை நம்பி ஒப்படைத்துள்ளார். இந்த அதிகாரங்களை பயன்படுத்தி மேலும் பல மாற்றங்களை இந்த பிரதேசங்களில் கொண்டு வருவேன்.

மக்களுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்காக மாத்திரம் நாம் மக்களை ஏமாற்ற கூடாது. எனக்கு கிடைத்த அதிகாரம் மிக்க பதவி ஊடாக மக்களிற்கு உதவி செய்வேன். இதற்கு தற்போது தடையாக உள்ளது கொரோனா நோய். இந்த நோய் காரணமாக அமைச்சுக்கள் செயலிழந்து உள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று தோல்வியடைந்த கலையரசன் என்பவருக்கு தேசிய பட்டியல் கொடுத்துள்ளது. அவர் வாகனத்தில் பவனி வருகின்றார். அவர் ஒரு வேலைத்திட்டம் அம்பாறையில் செய்தால் நான் திரும்பிச்சென்று இருப்பேன். ஒன்றுமே செய்யபோவதில்லை. மக்களை ஏமாற்றவே இருப்பை தக்க வைக்க முயல்கின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது குழப்பம். கலையரசனுக்கு பதவி வழங்கியதால் கூட்டமைப்பின் செயலாளரின் பதவி பறிபோனது. எங்கள் அம்பாறை மாவட்ட மக்களை எமது இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது. நானும் கைவிட்டு போக மாட்டேன் என கூற விரும்புகின்றேன்.

அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனை ஒரு இனவாதமாக எவரும் பார்க்க கூடாது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று எமது மக்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர். எனவே தான் எதிர்வரும் தேர்தல்களில் எம்முடன் ஒரே சின்னத்தில் இணைந்து போட்டியிட கோடிஸ்வரன், கலையரசன் ஆகியோர் உணர்ந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கல்முனை விவகாரம் பற்றி பிரதமரிடம் பேசினேன். துறைசார்ந்த அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் பேசினேன். கொரோனா முடிந்ததும் அவர் கல்முனைக்கு வருவார். கொரோனா முடிந்ததும் முதலாவதாக கல்முனையை தரமுயர்த்துவோம் எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிர்ப்பலி – மேலும் இருவர் மரணம் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இன்று இதுவரை 03 புதிய மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது

இறுதியாக உயிரிழந்தவர்கள் கொழும்பை சேர்ந்த 40 வயது ஆண் என்றும் மற்றுமொருவர் களனிப் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று இத்துடன் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நேற்றையதினம் ஐந்து மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று மாத்திரம் இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 646 பேர் குணமாகிவீடுகளுக்கு திரும்பியதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரைக்குமான காலப்பகுதியில்கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10183ஆக உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்க அலைஅலையாக திரண்ட தமிழ்நாட்டு மக்கள் !

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவும் வீதம் நாளுக்கு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நாடுகளின் பட்டியலில் இந்தாியாவும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இன்னும் வேகமாக கொரோனா வைரஸ் பரவிவருகின்றது. இப்படியான ஒருநிலையில் கூட தமிழ்நாட்டு மக்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பரபரப்பாக தயாராகிவருகினறனர்.  அங்கிருக்க கூடிய பல்பொருள் அங்காடிகளில் மக்கள் அலை அலையாக திரண்டு நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வந்த வண்ணம் உள்ளனர். திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பகுதிகளில் கடல் அலை போன்று மனிதர்கள் குழுமியிருந்தததை காணமுடிந்தது. காணமுடிந்தது.

கண்காணிப்பு கேமராக்கள்

 

தீபாவளி காலங்கள்

பொதுவாகவே தீபாவளி காலங்களில் இந்தப் பகுதிகள் மக்கள் கூட்டங்களால் அலைமோதும். இருந்த போதும் தற்போது உள்ள சூழலில் கொரோனா காரணமாக அதிக அளவு மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தினால் கூட மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிய ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தின் காரணமாக கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் குவிந்துள்ளனர்.

மியான்மார் பாராளுமன்ற தேர்தல் 2020 – ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவிப்பு !

மியான்மரில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தேர்தல் முடிவுகளை முழுமையாக தெரிவிக்க ஒரு வாரம் ஆகும் என மியான்மார் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் அதேசமயம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.

“இலங்கையிலிருந்து சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள் நாடு திரும்பியுள்ளனர்..? ” – பிரித்தானிய ஊடகம் அதிர்ச்சி தகவல் !

“ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் இருப்பதாகவும்  இலங்கையிலிருந்து சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாகவும்”  பிரித்தானிய செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தீவிரவாதிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் கலிபா ஆட்சி வீழ்ச்சியைத் தொடர்ந்தும் அந்த அமைப்பு கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மொஸாம்பிக்கில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களை கொடூரமான முறையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 5.17 கோடியைக் கடந்தது !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.17 கோடியைக் கடந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.63 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 14.14 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சீனாவின் கொரோனா தடுப்பூசி பாவனையால் பிரேசிலில் மோசமான பாதிப்புக்கள் –

உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பில் 3ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 56.75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறுகிறது. பிரேசில், உலகளவில் இரண்டாவது அதிக உயிரிழப்பையும் கொரோனாவால் சந்தித்துள்ளது. அங்கு 1.62 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான தடுப்பூசி உருவாக்க முயற்சிகளில் உலகின்  பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் சீன மருந்து நிறுவனமான சைனோவேக், ‘கொரோனாவேக்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி பிரேசில் நாட்டில் 7 மாகாணங்களில் பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசியின் 60 லட்சம் ‘டோஸ்’களை இறக்குமதி செய்வதற்கு பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அனுமதி அளித்தது.இந்த நிலையில் ‘கொரோனாவேக்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் பரிசோதனையின்போது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக இந்த தடுப்பூசியின் பரிசோதனையை பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் அந்த தடுப்பூசியை பிரேசிலில் தயாரித்து வந்த சாவ் பாவ்லோ மாகாண அரசு நிறுவனமான புட்டான்டன் நிறுவனம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதையொட்டி சாவ் பாவ்லோ மாகாண அரசு வெளியிட்ட அறிக்கையில், “தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் பொதுவாக இத்தகைய பாதிப்பு நிகழ்கிறது. இது குறித்த தகவல், அன்விசா மூலம் வராமல் ஊடகங்கள் மூலம் வந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தி வைக்கும் அன்விசாவின் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது” என கூறி உள்ளது.

ஏற்கனவே இந்த தடுப்பூசி பிரேசிலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெயிர் போல்சொனரோ சந்தேகங்களை எழுப்பி இருந்தார். இந்த தடுப்பூசியை பகிரங்கமாக நிராகரித்த அவர், பிரேசில் மக்கள் கினிப்பன்றிகளாக தடுப்பூசி பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் என அவர் கூறி இருந்தார்.

இந்த தடுப்பூசியை சோதனையின்போது போட்டுக்கொண்ட ஒருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது இறப்புக்கு தடுப்பூசிதான் காரணமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அங்கு 10 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு சோதிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்காவின் பைஸர் மற்றும் அதன் கூட்டாளியான ஜெர்மனியின் பயோஎன்டெக், தங்களது தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைக்காக 44 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது தடுப்பூசியில் பாதுகாப்பு கவலைகள் எதுவும் எழவில்லை என்று பைஸர் கூறி உள்ளது. ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ., தங்களை மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி ஆய்வுக்காக நாடுவதற்கு முன் குறைந்தபட்சம் அதை போட்டுக்கொண்ட பாதி எண்ணிக்கையிலான தன்னார்வலர்களையாவது தொடர்ந்து 2 மாதங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இந்த நிலையை இம்மாத இறுதியில் பைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் அடைந்து விடும் என தகவல்கள் கூறுகின்றன.

மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளின் இறுதிக்கட்ட பரிசோதனைக்கு தொலைவில் இல்லை என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

“டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது” – ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தொடுத்து உள்ளது.
இந்நிலையில்,வெல்லிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜோ பைடன்,  “டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பைடன் மேலும் கூறுகையில்,
“டிரம்பின் நடவடிக்கை ஜனாதிபதியின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இருக்காது. ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது. நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்கிறார்கள். கடந்த 5,6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலில் இருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நான் நம்புகிறேன்.
நடந்து விடும் என்ற பார்வையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நான் நினைக்கிறேன். ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பொம்பியோ தரப்பு இதுவரை கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது வரை எந்த ஆதாரங்களும் இல்லை. குடியரசுக் கட்சியினர் எனது வெற்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து முக்கிய மாகாணங்களில் தேர்தல் பிரசார பாணியில் பிரமாண்ட பேரணிகளை நடத்த டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக தான் கூறும் மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கையை வலியுறுத்தி அவர் இந்த பேரணிகளை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.