18

18

“இலங்கையில் அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்” – கலாநிதி ஹர்ஷ டி சில்வா

“அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படுவதாகவும் இதுவரையில் அவ்வாறு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்”  பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்றையதினம் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

நமது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் அரசாங்கம் விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும் எவரையும் கைது செய்தது கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வெளியிட்ட கருத்து குறித்தும் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

இது ஓர் ஜனநாயக நாடு. கருத்துக்களை வெளியிடக்கூடிய சுதந்திரம் பூரணமாக இருக்க வேண்டியது அவசியமானது.

இதேவேளை, இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாவதாகவும் அதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு பேருக்கும் நீண்ட ஆயுள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்” எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் முக்கியமானதாக இருக்கும்” – எம்.ஏ. சுமந்திரன்

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் முக்கியமானதாக இருக்கும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்களுடன் இது தொடர்பாக ஏற்கனவே பேச்சுகள் இடம்பெற்றிருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடாக அமெரிக்கா தற்போது இல்லாத போதிலும், அதில் எடுக்கப்படக் கூடிய தீர்மானங்களில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய ஒரு நாடாக இருப்பதால், அமெரிக்காவுடனும் பேசியிருக்கின்றோம் எனவும் அவர் கூறினார்.

இந்தப் பேச்சுகள் அடுத்த வாரத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இலங்கை தொடர்பில் பிரதான அனுசரணை நாடுகள் எவ்வாறான அணுகுமுறையை முன்னெடுக்கப்போகின்றன என்பதையிட்டு குறிப்பிட்ட தூதுவர்கள் தமது நாட்டு அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கூட்டமைப்புடன் மீண்டும் பேசுவார்கள் எனவும் தெரிவித்தார். பெரும்பாலும் அடுத்த வாரம் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் என எதிர்பார்த்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். அனுசரணை நாடுகளின் கருத்துக்களை அறிந்த பின்னரே இவ்விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதையிட்டு தீர்மானிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் முடிவுக்கு வருவதால், மற்றொரு தீர்மானத்தைக் கொண்டுவருவதா?அல்லது இதனை வேறு வகையில் கையாள்வதா? என்பதையிட்டு, பிரதான அனுசரணை நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே அனுசரணை நாடுகளுடன் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இதேவேளையில், புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கும் அரசு அதற்கான யோசனைகளைக் கோரியிருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது யோசனைகளை முன்வைக்க இருக்கின்றது எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இதற்கான ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் குறிப்பிட்ட அவர் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட அரசமைப்பு குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் தமது அரசமைப்பு யோசனைகள் அமைந்திருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

புதிய அரசமைப்புக்கான யோசனைகளை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு முன்னர் கோரப்பட்டிருந்த போதிலும், தற்போதைய நிலைமைகளைக் கருத்தில்கொண்டு இந்தக் கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“இலங்கை அரசுக்கு எதிராக போராடிய தீவிரவாத அமைப்பான ஜே.வி.பி, கார்த்திகை 13ஐ கார்த்திகை வீரர்கள் தினமாக அனுட்டிக்கிறது. சிங்களவர்களற்கு ஒருநீதி. தமிழர்களிற்கு ஒரு நீதியா? ” – எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி !

“இலங்கை அரசுக்கு எதிராக போராடிய தீவிரவாத அமைப்பான ஜே.வி.பி, கார்த்திகை 13ஐ கார்த்திகை வீரர்கள் தினமாக அனுட்டிக்கிறது. சிங்களவர்களற்கு ஒருநீதி. தமிழர்களிற்கு ஒரு நீதியா? ” என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (18.11.2020) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாவீரர்தினத்தை அனுஷ்டிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரள வேண்டும். எமது அடிப்படை உரிமையை நிறைவேற்ற யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை. மாவீரர்தின அஞ்சலியை அரசு தடுக்க நினைக்கக்கூடாது. தடுக்க நினைத்து எம்மை கைது செய்தால் விடுதலையாகும் வரை தினமும் அஞ்சலி செய்வோம். அத்துடன், அஞ்சலி நிகழ்விற்கு தடைகள் ஏற்பட்டால் அதை உடைப்பதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிற்க வேண்டும். மக்களை முன்னால் அனுப்பிவிட்டு பதுங்கியிருக்ககூடாது.

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினம் இம்முறை அனுஷ்டிக்கப்படுமா ?இல்லையா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மாவீரர் தினத்தை அனுட்டித்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், தனிமைப்படுத்தப்படுவார்கள்.  என இராணுவத்தளபதியும் எச்சரித்திருந்தார். சில விடயம்தான் கேட்டுச் செய்வது. எங்களின் அடிப்படை உரிமைகளை யாரிடமும் கேட்டுப் பெறவில்லை. உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதை ஐ.நா மனித உரிமைகள் சாசனம் அங்கீகரிக்கிறது.

நினைவுகூர்வதற்கு யாருடைய அனுமதியையும் நாம் பெற வேண்டியதில்லை. நினைவுகூர்வது ஒவ்வொரு மனிதர்களுடைய , சமுதாயத்தினுடைய, இனத்தினுடைய அடிப்படை உரிமை. தமிழ் தேசிய இனவிடுதலை  போராட்டத்தில் உயிரை தியாகம் செய்தவர்களை நினவுகூர, அவர்களின் பெற்றோர், உறவினர்களிற்கு மாத்திரமல்ல, ஒவ்வொரு தமிழனிற்கும், தமிழிச்சிக்கும் உரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள்தான் இதில் அக்கறை காட்ட வேண்டுமென்றில்லை, நாங்கள் தமிழர்கள் உரிமைபெற்ற இனமாக வாழப்போகிறோமா என்பதற்கான அமிலப்பரிசோதனை எங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் நாம் தோல்வியடைந்தால் எதிர்காலத்தில் தமிழினத்தின் விடுதலை சார்பில் எந்த விடயத்தையும் கோருவதற்கான தார்மீக உரிமையை இழக்கின்றோம்.

இலங்கை அரசிடம் நாம் கேட்பது, இலங்கை பிரதமர் மஹிந்தவின் பிறந்தநாள். ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகிறது இந்த அருமையான சந்தர்ப்பத்தை பாவித்து, மாவீரர் தினத்தை தடுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும். அப்படியான முடிவை எடுப்பதன் மூலம்தான் தேசிய நல்லிணக்கத்தையோ, இன ஒற்றுமையையோ ஏற்படுத்தி முடியும். இதைவிடுத்து, தடுக்க வேண்டுமென, முப்படையினர், புலனாய்வாளர்களை பாவித்து அச்சுறுத்துவது தவறான நடவடிக்கை.

வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்திலுள்ள பல துயிலுமில்லங்கள் இராணுவ முகாமாக மாற்றி விட்டனர். எஞ்சியுள்ள துயிலுமில்லங்களில் அஞ்சலிக்கும் உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. 27ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூட வேண்டும். எந்ததடைகள் வந்தாலும் உடைத்தெறிய வேண்டும். இந்த தடையுடைப்பில் அரசியல் தலைவர்கள் முன்னணியில் இருக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னால் பதுங்கியிருந்தடி , மற்றவர்களை போகுமாறு கேட்க முடியாது. என்ன விளைவு வந்தாலும், கைது செய்யப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டாலும் அஞ்சலியை கைவிடமாட்டோம் என்ற உறுதியுடன் மாவீரர்நாளை அனுட்டிக்க முன்வர வேண்டும்.

அரசுக்கும், சர்தேச சமூகத்திற்கும் நாம் சொல்வது மாவீரர்தினத்தை கைவிட முடியாது. அனுஷ்டித்தே தீருவோம். ஆயிரக்கணக்கில் மக்களை கைது செய்ய முடியாமல், எங்களில் சிலரை கைது  செய்து சிறையில் அடைத்தாலென்ன, தனிமைப்படுத்தினாலென்ன நாம் அஞ்சலியை தொடர்வோம். கைது செய்து சிறையில் அடைத்தால் விடுவிக்கப்படும் வரை, சிறையிலிருந்தபடி விளக்கேற்றுவோம். அதற்கு வசதியில்லாவிட்டால் அஞ்சலி நிகழ்வை நடத்துவோம். தனிமைப்படுத்திய இடத்தில் நின்றும் அஞ்சலிப்போம்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட படைவீரர்களிற்கு பொப்பிமலர் தினம் நவம்பர் மாதம் அனுட்டிக்கப்படுகிறது. இலங்கை படையினரும் அஞ்சலி செலுத்துகிறார்கள். இலங்கை அரசுக்கு எதிராக போராடிய தீவிரவாத அமைப்பான ஜே.வி.பி, கார்த்திகை 13ஐ கார்த்திகை வீரர்கள் தினமாக அனுட்டிக்கிறது. சிங்களவர்களற்கு ஒருநீதி. தமிழர்களிற்கு ஒரு நீதியா? அப்படியென்றால் இங்கு இரண்டு நாடுகள் உள்ளது என்பதை இலங்கை அரசே ஒப்புக்கெள்கிறதா?

உறவுகளை இழந்தவர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அஞ்சலி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் நேர மாற்றம் ஏற்பட்டு, பகலில் அஞ்சலி நடந்தால் அந்த இடங்களில் பொதுமக்கள் சென்று அஞ்சலிக்க வேண்டும்.

என்ன தடை வந்தாலும் நாம் அஞ்சலி நிகழ்வை செய்தே முடிக்க வேண்டும். இல்லை, அமிலப்பரிசோதனையில் நாம் தோற்போமாக இருந்தால் எதிர்காலத்தில் எந்தவித நினைவுநாளையும் நாம் அனுட்டிக்க முடியாமல் போகும்” என தெரிவித்துள்ளார்.

தொழிற்கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டார் ஜெர்மி கோர்பின் !

யூத எதிர்ப்பு பற்றிய மிகவும் விமர்சன அறிக்கைக்கு பதிலளித்ததற்காக ஜெரமி கோர்பின், கட்சியின் தற்போதைய தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மரால் (Sir Keir Starmer) இடைநீக்கம் செய்யப்பட்டார். தொழிலாளர் கட்சியின் கட்சியில் யூத எதிர்ப்புக்கு எதிரான விசாரணையைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின் மீண்டும் எதிர்க்கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு அவரது தலைமையின் கீழான கட்சி பொறுப்பு என சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து  என சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒக்டோபர் இறுதியில் கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கோர்பின் தலைமையின் போது யூத-விரோத குற்றச்சாட்டுகளால் தொழிற்கட்சி பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த தேர்தலில் அடைந்த தோல்வியை அடுத்து கோர்பின் பதவி விலகினார்.

இருப்பினும் குறித்த பிரச்சினையின் அளவு அரசியல் காரணங்களுக்காக கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும், எதிர்தரப்பினர் மற்றும் பெரும்பாலான ஊடகங்களாலும் மிகைப்படுத்தப்பட்டது என ஜெர்மி கோர்பின் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு தெரிவித்து சில மணிநேரங்களில் அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப்போட்டி அணிகள் எவ்வாறு தெரிவு செய்யப்படும்? – வெளியிட்டது ஐ.சி.சி !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்ச்சியாக  நடைபெற்று வருகின்கிறது. இதன்படி ,மொத்தம் உள்ள 9 அணிகளும் உள்ளூர், வெளிநாடு அடிப்படையில் குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்க வேண்டும்.

இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 180 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 166 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

கொரோனா வைரஸ் திடீரென ஏற்பட்டதால் பல்வேறு தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இதனால் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சதவீத அடிப்படையில் ஆஸ்திரேலியா 82.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 75 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 60.83 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் 5.59 கோடியைக் கடந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழஒரு வருடத்தை அண்மித்துள்ள நிலையிலும் கூட  இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.59 கோடியைக் கடந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.89 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.  மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 15.65 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி !

இந்தியாவினுடைய எதிர்ப்பு மற்றும் போராட்டக் குழுக்களின் எச்சரிக்கைக்கு மத்தியில், கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தலை பாகிஸ்தான் நடத்தியது. 23 தொகுதிகள் கொண்ட இந்த பகுதியில், பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 10 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 3 இடங்களும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு இடங்களும் கிடைத்தன. மஜ்லிஸ் கட்சி ஒரு தொகுதியில் வென்றது. 7 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால், ஆளுங்கட்சி கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் கில்கிட் பல்திஸ்தான் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற தேர்தலில் மோசடி நடந்துள்ளது- கில்கிட் பல்திஸ்தானில் எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம்
இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.  பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மரியம் நவாஸ் உள்ளிட்ட தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்.மருத்துவ பீட மாணவன் மரணத்தில் சந்தேகம் – கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது இரத்தமாதிரி !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன்சிதம்பரநாதன் இளங்குன்றன் அவர் வசித்த வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த மாணவன் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை சடலத்தைப் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மயூரன், கழுத்து இறுகியதால் மரணம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.
எனினும், மாணவனின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் அவரின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இளங்குன்றனின் உடல் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் மோசடி நடக்கவில்லை என கூறியதற்காக தேர்தல் பாதுகாப்பு உயர் அதிகாரியை பதவியில் இருந்து நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர். டிரம்பின் குற்றச்சாட்டை தேர்தல் பாதுகாப்பு உயர் அதிகாரி கிறிஸ் கிரெப்சும் மறுத்திருந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், நவம்பர் 3ல் நடந்த தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியிருந்தார்.
இதனால் மேலும் கோவப்பட்ட ஜனாதிபதி டிரம்ப், தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்சை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டார் டிரம்ப். கிறிஸ் கிரெப்சின் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளார்.
‘தேர்தல் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மிகவும் தவறானது. தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. எனவே, கிறிஸ் கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என டிரம்ப் மேலும் கூறி உள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் மார்க் எஸ்பரை  அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்  அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

“நான் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும்” – கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்கு ட்ரம்பை அழைக்கிறார் ஜோபைடன் !

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் தாண்டி உள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் மீது புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
டெலாவேரில் உள்ள வில்மிங்டன் நகரில் ஜோ பைடன்  நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்கா விட்டால், இன்னும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும்.  கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நானும், டிரம்ப்பும் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால், அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழக்க நேரிடும்.
தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரை கொரோனாவில் தப்பிக்க வாய்ப்பு குறைவுதான். ஆனால், தடுப்பூசி கண்டுபிடித்து நடைமுறைக்கு வந்துவிட்டால், மக்கள் எவ்வாறு தடுப்பூசியைப் பெறுவார்கள், 30 கோடி அமெரிக்க மக்களுக்கும் எவ்வாறு வழங்கப் போகிறீர்கள் எனும் திட்டம் ஏதும் இருக்கிறதா? அதற்காக அரசு என்ன திட்டத்தை வைத்துள்ளது?
மக்களுக்குத் தடுப்பூசி போடுதல் என்பது மிகப்பெரிய பெரிய பணி. முன்னுரிமை அடிப்படையில்தான் மக்களுக்குக் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும். உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைத்துதான் இந்தப் பணியை நம்மால் செய்ய முடியும். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமான வேகத்தில் செல்கிறது என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது. தடுப்பு மருந்து நமது கைக்குக் கிடைத்தால் மட்டும் போதாது. அதை எப்படி மக்களுக்கு வழங்கப்போகிறோம். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் திகதி வரை காத்திருந்தால், எங்களின் திட்டம் தொடங்கிவிடும். இன்னும் ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இப்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானது, டிரம்ப் எங்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு எவ்வாறு வழங்குவது, ஒவ்வொருவருக்கும் எப்படி வழங்குவது, தொழிலாளர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியனர் அனைவருக்கும் எவ்வாறு வழங்குவது எனச் செயல்திட்டம் இருக்கிறது.
நான் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும்’ என கூறி உள்ளார்.