22

22

“விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை” – மனோகணேசன் காட்டம் !

“விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(11.22.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எவராவது மரணித்தால் சவப்பெட்டி வாங்குவதற்குக் கூட திண்டாட வேண்டியுள்ளது. அவர்கள் இவ்வாறு துன்பப்படுகையில் மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமல்வீரவங்ச கருத்து வெளியிடுகின்றார்.

விமல் வீரவன்சவின் வீட்டிலுள்ள நாயை பராமரிப்பதற்குக் கூட மாதமொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா செலவிடப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிடுகின்றார்.

விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை. அந்தத் துரோகி கட்சிக்கு மட்டுமல்ல கொழும்பு மாவட்ட மக்களுக்கும் இன்று துரோகம் இழைத்துள்ளார். கொழும்பு மாநகர சபைக்கு சைக்கிளில் வந்த அவர் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு இன்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் விமலுக்குத் தக்க பாடத்தை புகட்டுவார்கள்” – எனவும் குறிப்பிட்டுள்ளார் மனோகணேசன்.

பிரேஸிலில் கறுப்பினத்தவர் அடித்துப்படுகொலை – கொலைக்கு நீதி கேட்டு அதிகரிக்கும் மக்கள் போராட்டம் !

தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோவை ஒரு பாதுகாவலர் பிடித்துக்கொள்ள மற்றொரு பாதுகாவலர் அவரின் முகத்தில் கடுமையாக தாக்கினார்.
கருப்பினத்தவர் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் அடித்து கொலை - பிரேசிலில் தொடரும் போராட்டம் || Tamil News Protests in Brazil after security guards beat black man to death
இந்த தாக்குதலில் ஜோவோ அல்பெர்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்பொருள் அங்காடியில் வேலை செய்துவந்த பெண் ஊழியரை
ஜோவோ அல்பெர்டோ தாக்கியதாகவும், அந்த பெண் ஊழியர் கடை பாதுகாவலர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, கடை ஊழியர்கள் இருவர் அல்பெர்டோவை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோவோ அல்பெர்டோவை பாதுகாவலர்கள் தாக்குவதை அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பெண் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ பிரேசில் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், சமூகவலைதளத்திலும் வைரலானது.
இதையடுத்து, கருப்பினத்தவர் மரணத்திற்கு நீதிகேட்டு பிரேசிலின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சம்பவம் நடைபெற்ற பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் பேரணியும் நடத்தி வருகின்றனர்.
WIN NEWS INDIA
இதற்கிடையில், ஜோவோ மீது தாக்குதல் நடத்திய பல்பொருள் அங்காடி ஊழியர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்சை தலைமையிடமாக கொண்ட அந்த பல்பொருள் அங்காடி நிறுவனம் தனது அங்காடியில் பணியாற்றிய அந்த 2 ஊழியர்களையும் நீக்கியுள்ளது.  ஜோவோ கொலைக்கு கண்டனம் தெரிவித்து பிரேசிலில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் போலீசார், ராணுவம் என பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரேசிலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
அண்மையில் ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜ்ப்ளைட் என்னும் கறுப்பினத்தவர் அந்நாட்டு பொலிஸாரால் அடித்துக்கொலை செய்யப்பட்டமை உலக அளவில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு செலவுக்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தமைக்காக பாராளுமன்றத்தை தீயிட்டு கொளுத்திய மக்கள் !

மத்திய அமெரிக்க நாடுகளில் கவுதமாலாவும் ஒன்று. அந்நாட்டின் ஜனாதிபதி அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டி. கொரோனா வைரஸ், புயல், கனமழை என பல்வேறு பேரிடர்களால் கவுதமாலா பெரும் இன்னலை சந்தித்து வருகிறது. அந்நாட்டில் ஊழல் பெரும் பிரச்சனையாக நிலவி வருகிறது.
இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான நாட்டின் வரவு-செலவுத் தொகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு செலவுக்காக மட்டும் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். அதேவேளை நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையும் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஜனாதிபதி அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டி, துணை ஜனாதிபதி காஷ்டிலோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து கவுதமாலாவில் போராட்டங்கள் வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் நாட்டின் முக்கிய பகுதிகளில் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் கவுத்தமாலா சிட்டியில் அமைந்துள்ள நாட்டின் பாராளுமன்றம் கட்டிடத்தின் முன் இன்று ஆயிரக்கணக்கான போராட்டகாரர்கள் திரண்டனர்.
சுகாதாரம், கல்விக்கு தொகையை குறைத்ததை கண்டித்து ஜனாதிபதி அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டி, துணை ஜனாதிபதி காஷ்டிலோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், பாராளுமன்ற  கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்த போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை தீவைத்து கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் துணை ஜனாதிபதி காஷ்டிலோ தான் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால், ஜனாதிபதி ஜியாம்மாட்டி ராஜினாமா செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

“என்னை தோற்கடிப்பதற்காக பெரிய மருத்துவநிறுவனங்களும் , செய்தி ஊடகங்களும் செயற்பட்டன” – ட்ரம்ப் குற்றச்சாட்டு !

“என்னை தோற்கடிப்பதற்காக பெரிய மருத்துவநிறுவனங்களும் , செய்தி ஊடகங்களும் செயற்பட்டன” என்ற குற்றச்சாட்டை டொனால்ட்ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.

உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ந் திகதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 270 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலே வெற்றி என்கிற நிலையில், ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்றார். டிரம்புக்கு 232 ஓட்டுகளே கிடைத்தது.

ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, தனக்கு எதிராக முன்னணி மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்ததாக புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

இதன் போது  அவர் மேலும் கூறியதாவது:-

பெரிய மருந்து நிறுவனங்கள் எனக்கு எதிராக செயல்பட்டுள்ளன. எனக்கு எதிரான விளம்பரங்களுக்காக அவை கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. நான்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றேன். கிட்டத்தட்ட 7 கோடியே 40 லட்சம் வாக்குகளை நாங்கள் கண்டுபிடிப்போம். எங்களுக்கு எதிராக மருந்து கம்பெனிகள் செயல்பட்டன. ஊடகங்கள் எங்களுக்கு எதிராக இயங்கின. எங்களுக்கு எதிராக நேர்மையற்ற செயல்கள் நிறைய நடந்தன. இதுபோன்று நான் பார்த்ததே இல்லை” என கூறியுள்ளார் ட்ரம்ப்.

அதைத் தொடர்ந்து அமெரிக்க மக்களுக்கு மருந்துச்சீட்டுகளின் பேரில் வழங்கக்கூடிய மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கான விதிகளையும் அவர் அறிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “இதன் மூலம் நோயாளிகள் பலன் பெறுவார்கள். அவர்கள் மருந்துகளுக்கு அதிக விலை கொடுத்தார்கள். 51 ஆண்டுகளில் முதல் முறையாக மருந்துகளின் விலையை நாங்கள் குறைத்துள்ளோம். இதன் மூலம் 30 முதல் 50 சதவீதம் வரையில் மருந்து விலை குறையும்” என குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.

“இல்லங்களின் வாசல்களில் தீப ஒளியை ஏற்றி மாவீரர் தினத்தை அஞ்சலியுங்கள்” – தமிழ்த் தேசியக் கட்சிகள் வேண்டுகோள் !

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் ஓரிடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்துவது இம்முறை சாத்தியமில்லாத நிலையில், வீட்டு வாசல்களில் தீபங்களை ஏற்றி மாவீரர்களை நினைவுகூர அழைப்பு விடுப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் நேற்று (21.11.2020) நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு சார்பில் மாணிக்கவாசகர் இளம்பிறையன், கருணாகரன் குணாளன், தனூபன், வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லம் சார்பில் வேந்தன் (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர்) உட்படப் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் .
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனாத் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி நீதிமன்றங்களின் ஊடாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடையை அரசு ஏற்படுத்தி வரும் நிலையில் எவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என இதன்போது ஆராயப்பட்டது.
இதன் முடிவில் நவம்பர் 27ம் திகதி அனைத்து இல்லங்களின் வாசல்களிலும் தீப ஒளியை ஏற்றுமாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது எனவும், மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக ஊடகங்கள் மூலமாகத் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது கருத்துக் கூறப்பட்டது.

“வில்பத்து பகுதியில் உண்மையாகவே காடழிப்பு இடம்பெறவில்லை. உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யவுள்ளேன்” – ரிசாட் பதியூதின்

“வில்பத்து பகுதியில் உண்மையாகவே காடழிப்பு இடம்பெறவில்லை. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யவுள்ளேன்” என விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

ஸ்கைய்ப் காணொளி மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றையதினம் இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“நீங்கள் மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் எத்தனை சிங்கள மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டார்கள்..?” என ஆணைக்குழு அவரிடம் வினவப்பட்டது. அதன்போது பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த ரிசாட் பதியூதின் “வடமாகாணத்தில் 2 வீதம் மக்கள் சிங்களவர்களும் 5 வீதம் முஸ்லிம்களும் உள்ளனர். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்களை அவர்களது கிராமங்களிலிருந்து வெளியேற்றினர். 2009 ஆம் ஆண்டில் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கவில்லை. அப்போது பசில் ராஜபக்ஸவே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தார் ஆனால் நான் அவரின் திட்டத்தை ஆதரித்தேன்.

மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை அருகே வசிக்கும் சுமார் 5,000 சிங்களவர்கள் கலபோகஸ்வேவ நமல்கம என்ற பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அங்கு 100 வருடங்களுக்கு அதிகமான பெரிய மரங்கள் இருந்தன. மீள்குடியேற்றத்தின் போது அந்த மரங்களும் வெட்டப்பட்டன. ஆனால் அவர்களுக்கு எதிராக யாரும் முறையிடுவதில்லை மாறாக அனைவரும் வில்பத்து கல்லாறு காடழிப்பு பற்றியே அதிகம் பேசுகின்றார்கள். உண்மையாகவே அங்கு காடழிப்பு இடம்பெறவில்லை. எனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யவுள்ளேன்´ என்றார்.

அவர் இவ்வாறு தெரிவித்த சந்தர்ப்பத்தில் கல்லாறு தீர்ப்பை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு நீதிபதிகள் ஆணைக்குழுவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

“கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு இடமளிக்கப்படாது” – பிரதீப் உந்துகொட

“கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும்வரை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது” என  ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22.11.2020) நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சில தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாயகக் கோட்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றார்கள். உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் பற்றியும் பாராளுமன்றத்தில் கதைக்கின்றார்கள்.

நாட்டில் தற்போது முதுகெலும்புள்ள அரசியல் தலைவர்களே ஆட்சியில் இருக்கின்றார்கள். எனவே, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு இடமளிக்கப்படாது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“யாழ் தலைமை காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” – அங்கஜன் இராமநாதன்

கடந்த வெள்ளிக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாண காவல்துறையினரால் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி யாழ்ப்பாண காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகி குறித்து காவல்துறை அதிகாரி தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைபடுத்தும் முகமாக “சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் ஊடகங்கள் வாயிலாகவும் இதற்கான தங்களுடைய கண்டனங்களை பலரும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் “தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ் நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ் தலைமை காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” வெள்ளிக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாண காவல்துறையினரால் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி யாழ்ப்பாண காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகி குறித்து காவல்துறை அதிகாரி தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைபடுத்தும் முகமாக “சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என நீதிமன்றில் கூறியிருந்தார்.

30 வருட கால கொடிய யுத்தத்தினால் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர் நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவரது கருத்தானது, அனைத்து இலங்கை நாட்டில் வாழும் மூவின மக்களையும் ஒரே சட்டத்தால் பரிபாலிக்கும். காவல்துறையில் உயர் பதவியில் இருப்போர் இன ஐக்கியத்தை குழப்புவதும் மற்றும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

மற்றும் கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின் போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும்” என அவர் மேலும் தெரிவித்தார்

இலங்கையில் வேகமெடுக்கும் கொரோனா மூன்றாம் அலை – ஒரு மாதத்தில் 70 பேர் பலி! 

நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலையில் சிக்கி கடந்த ஒரு மாதத்தில் அதாவது (ஒக்டோபர் 22 – நவம்பர் 21) மட்டும் 70 பேர் பலியாகியுள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் அதிகூடிய உயிரிழப்புகள் நேற்றே பதிவாகியுள்ளது.

5 ஆண்களும், 4 பெண்களுமே நேற்று பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 3 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.

நேற்று மரணமடைந்தவர்களின் விபரம் வருமாறு:-

75ஆவது உயிரிழப்பு

கொழும்பு 02, கொம்பனித்தெரு பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இவரது சாவுக்கான காரணம், அதிக இரத்த அழுத்தம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் மற்றும் திடீர் அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

76ஆவது உயிரிழப்பு

வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்துக்கான காரணம், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொரோனாத் தொற்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

77ஆவது உயிரிழப்பு

கொழும்பு 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 89 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலியாகியுள்ளார். இவரது உயிழப்புக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

78ஆவது உயிரிழப்பு

கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதான பெண் ஒருவர், வீட்டில் திடீரென சாவடைந்துள்ளார். இவரது மரணத்துக்கான காரணம், கொரோனாத் தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

79ஆவது உயிரிழப்பு

கொழும்பு 10, மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளார். இவரது சாவுக்கான காரணம், நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொரோனாத் தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

80ஆவது உயிரிழப்பு

கொழும்பு 13, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான பெண் ஒருவர், வீட்டில் திடீரென மரணமடைந்துள்ளார். இவரது உயிரிழப்புக்கான காரணம், கொரோனாத் தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

81ஆவது உயிரிழப்பு

கொழும்பு 06, வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, கொழும்பு கிழக்கு, முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பலியாகியுள்ளார். இவரது சாவுக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் மற்றும் பக்டீரியாத் தொற்று மற்றும் திடீர் அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

82ஆவது உயிரிழப்பு

வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். இவரது உயிரிழப்புக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட உக்கிரமான நியூமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

83ஆவது உயிரிழப்பு

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த, 76 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பலியாகியுள்ளார். இவரது சாவுக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் மற்றும் குருதி நஞ்சடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்றும் 491 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 16 ஆயிரத்து 256 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 590 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 98 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .