24

24

“இறுதிக் கட்ட யுத்தத்தில் வெளிநாடொன்று கப்பலை அனுப்ப அனுமதி கோரியதற்கு அனுமதி வழங்கியிருந்தால் புலிகளைச் சேர்ந்தவர்களும் பிரபாகரனும் தப்பியிருக்க வாய்ப்பிருந்தது” – மகிந்த சமரசிங்க

“இறுதிக் கட்ட யுத்தத்தின் வெளிநாடொன்று கப்பலை அனுப்ப அனுமதி கோரியிருந்தது. அனுமதி வழங்கியிருந்தால் புலிகளைச் சேர்ந்தவர்களும் பிரபாகரனும் தப்பியிருக்க வாய்ப்பிருந்தது” ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(24.11.2020)  நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான முதல்நாள் குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதிக்கான செலவீனங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்திருந்த நேரத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது. தமது பாதுகாப்பு தொடர்பான அச்சத்திலேயே மக்களும் வாழ்ந்தனர். இவ்வாறான நிலைமையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவை மக்கள் தெரிவு செய்தனர்.

இதேவேளை இறுதிக் கட்ட யுத்த காலத்தில் நான் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவே இருந்தேன். அப்போது வெளிநாட்டு  தூதுவர்களுடன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.  அதில் நாடொன்று நந்திக்கடல் பகுதியில் சிக்கியுள்ள சிவில் மக்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக கப்பலொன்றை அனுப்ப அனுமதி கேட்டனர். ஆனால் ஜனாதிபதி அதற்கு அனுமதி வழங்கவில்லை. அப்படி அனுமதி வழங்கப்படும் போது விடுதலைப் புலிகளை சேர்ந்தவர்களும் அதில் தப்பியிருப்பர். அதேபோன்று பிரபாகரனும் தப்பி வெளிநாட்டுக்கு சென்றிருப்பார். அது நடந்திருந்தால் இன்னும் நாட்டில் யுத்தம் இருந்திருக்கும். இந்நிலையில் வெளிநாடுகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

2015 ஆம் ஆண்டில் வெளிநாட்டவர்களை மகிழ்விப்பதற்காக ஜெனிவா தீர்மானத்தை கொண்டு வந்து காட்டிக்கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினர். அது தொடர்பாக அப்போதிருந்த ஜனாதிபதிக்கும் தெளிவு இருந்திருக்கவில்லை.ஆனால் எங்களின் ஜனாதிபதி அமைச்சரவையின் அனுமதியுடன் ஜெனிவா தீர்மானத்தில் இருந்து நாட்டை மீட்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் நாங்கள் வெளிநாடுகளுடன் காட்டிக்கொடுப்பு இன்றி நட்புறவுடன் நடந்துகொள்வோம்” எனவும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

2021 வரவு செலவுத்திட்டம் – நப்கின்களுக்கான 15% வரிக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு !

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சுகாதார நப்கின்களுக்கான 15% வரிக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ கவிரத்ன மற்றும் டயானா கமகே ஆகியோர் இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் தங்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர்.

இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க, நாட்டில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இதைவிட முக்கியமானது என்ன? என கேள்வியெழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்” – சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

“கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில்

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையில் போரில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர மூவின மக்களுக்கும் உரிமையுண்டு. அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் இருக்கவேகூடாது. எனவே, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது.

நல்லாட்சியில் இருந்த நினைவேந்தல் உரிமை, கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தான். போரில் இறந்த உறவுகளை நினைவுகூர அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்பட வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்றார்.

“இறுதியுத்தத்தில் இராணுவம் தவறு செய்யவில்லை எனில் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்சுகிறீர்கள்..?” – சரத் வீரசேகரவிடம் கஜேந்திரகுமார் கேள்வி !

“இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? எதற்காக நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? அப்படி அதுவும் இடம்பெறவில்லை என்பதை நிரூபியுங்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினறுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி எழுப்பியமையானது  இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான விவாதங்களை இன்றையதினம் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தியிருந்தது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, “பரணகம ஆணைக்குழுவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆறு போர்க் குற்றவியல் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தார்கள். போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் கூறியிருந்தார்கள். அதற்குப் பின்னரும் எதற்காக இதனைக் கேட்கின்றீர்கள்? இந்த மக்கள் துன்பப்பட்ட போது நீங்கள் எங்கே நின்றீர்கள்? நீங்கள் ஒருபோதுமே போர்க் களத்தில் இருக்கவில்லை” என குறிப்பிட்டார்.

இதனிடையே குறுக்கிட்ட கஜேந்திரகுமார் “போரின் இதிக்காலத்தில் நான் இங்குதான் நின்றேன். உங்களுடைய பிரதமருடைய சகோதரர் பஸில் ராஜபக்‌ஷவுடன் தொடர்பில் இருந்தேன். உங்களால் இறுதியாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காக அவருடன் தொடர்புகொண்டிருந்தேன். தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பஸில் ராஜபக்‌ஷவுடன் பேசிக்கொண்டிருந்தேன்” என கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இதன்போது இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஜோபைடன் பதவியேற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ட்ரம்ப் சம்மதம் !

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்க, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் தனது தோல்வியை ஏற்க தயங்கிவந்த ட்ரம்ப், பைடன் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசாங்க அமைப்பிடம் பரிந்துரைத்துள்ளார்.

எனினும், டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் ட்ரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை ஜோ பைடனை தேர்தல் வெற்றியாளராக உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர்.

ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அதிபர் அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த நடவடிக்கைகளை அமைப்பு தொடங்கும் என்றும் ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு 6.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஜி.எஸ்.ஏ நிர்வாகி எமிலி மர்ஃபி தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் அணியினர், இந்த அதிகார மாற்றத்தின் தொடக்கத்தை வரவேற்றுள்ளனர். அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியான ஜோ பிடன், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ – மனுசநாணயக்கார வேண்டுகோள் !

“கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று (23.11.2020) உரையாற்றிய அவர், மதம், இனம் அரசியல் என்பதை காரணம் காட்டி இதனை பிரிக்காது பொதுவாக இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்தோடு 200 மேற்ப்பட்ட நாடுகள் அதற்கு அனுமதி வழங்கியுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய மனுஷ நாணயக்கார, உலக சுகாதார ஸ்தாபனம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசிக்கு மாத்திரம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி வேண்டுமென கூறும் அரசாங்கம்,  உடல்களை புதைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியை பொருட்படுத்தவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.

“இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது” – சுகாதார அமைச்சு வலியுறுத்தல் !

கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்தல் தொடர்பிலான தீர்மானம் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த விசேட மருத்துவர் சுதத் சமரவீர கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறும்போது,

“இதுவரை காலமும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடைமுறையே அமுலானது. இது உலகளாவிய ரீதியில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது. வைரஸ் தொற்று பரவும் விதம் போன்றவற்றை ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாக முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் நாட்டு நலன் கருதி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள்” என  சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.

பிள்ளையானை பிணையில் விடுதலை செய்தது மட்டக்களப்பு மேல்நீதிமன்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாகவே சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(பி்ள்யைான்) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தரான எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோரையும் தலா 2 சரீரப்பிணையில்  மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

பிள்ளையான் உள்ளிட்ட  ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரின் பிணை மனு கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த  மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன், அவர்கள் அனைவருக்கும் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும்  டிசம்பர் 8ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

“ரிஷாத் பதியுதீனைப் படுகொலை செய்வதற்கான பொறுப்பு கருணா அம்மானிடம் வழங்கப்பட்டுள்ளது என்ற கருத்து தொடர்பாக அரசு விசாரணைகளை தொடரவேண்டும்” – நளின்பண்டார வேண்டுகோள்!

“பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைப் படுகொலை செய்வதற்கான பொறுப்பு கருணா அம்மானிடம் வழங்கப்பட்டுள்ளது என்ற நாமல் குமாரவின் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக அரசு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று(23.11.2020) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சஹ்ரானின் தாக்குதல் விடயத்தில் ஒரு புள்ளியாகப் பார்க்கப்பட்ட நாமல் குமார நேற்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதிலே பல சர்ச்சைக்குரிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. ரிஷாத் பதியுதீனைப் படுகொலை செய்ய 15 கோடி ரூபா ஒப்பந்தத்தில் திட்டமொன்றை கருணா அம்மானுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா அம்மான் அரசுடன் தொடர்புபட்டவர். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேண்டிய ஒரு நபர். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு முன்னர் நாமல் குமார இப்படித்தான் காணொளி வெளியிட்டார். ஆகவே, இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். பிரான்ஸிலுள்ள துஸார பீரிஸ் என்கின்ற நபரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இவ்வாறு தொடர்புபட்டிருந்தால் அவரை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

“தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவேந்துவதை அனுமதிக்க முடியாது. மீறி நினைவேந்துவதாயின் வெளிநாடுகளுக்கு சென்று நினைவேந்துங்கள்”  – அமைச்சர் தினேஷ்குணவர்த்தன

“தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவேந்துவதை அனுமதிக்க முடியாது. மீறி நினைவேந்துவதாயின் வெளிநாடுகளுக்கு சென்று நினைவேந்துங்கள்”   என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அது அவர்களின் சொந்த உரிமை. அதில் அவர்கள் ஏதோவொரு வழியில் சாதித்துக் காட்டுவார்கள். அதை ஜனாதிபதியோ அல்லது அரசோ அல்லது வேறு ஆட்களோ தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் தினேஷ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் அடைக்கலம் கோரி அங்கு வாழும் சில முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரின் தாளத்துக்கு இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் மக்களும் ஆடுகின்றார்கள். இந்த நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். எனவே, இங்கு அவர்களை  நினைவுகூர அனுமதி இல்லை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெளிநாடுகள் தடை செய்திருந்தாலும் அங்கு வாழும் தமிழர்கள் மாவீரர் நாளை பகிரங்கமாக நினைவுகூருகின்றார்கள் என்பதற்காக இங்கு நாம் அனுமதி வழங்க முடியாது. இங்கு மாவீரர் நாள் நிகழ்வை நடத்த கடந்த நல்லாட்சியில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை படுமுட்டாள்தனமாகும்.

அது ஆட்சியில் இருக்கும் தம்மைக் காப்பாற்றி வந்தமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ரணில் அரசு வழங்கிய நன்றிக் கடனாகும். நாட்டின் சட்டத்தை மீறி நீதிமன்றத் தடையுத்தரவுகளை மீறி மரணித்த விடுதலைப்புலிகளை நினைவு கூருவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள் விரும்பினால் வெளிநாடுகளுக்குச் சென்று மாவீரர்களைச் சுதந்திரமாக நினைவேந்தலாம். அங்கு அவர்களுக்குத் தடைகள் இருக்காது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.