25

25

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் காலமானார்! 

கால்பந்து என்றாலே ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருபவர் அர்ஜென்டினாவின் முன்னாள் வீரர் மாரடோனா. கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தவர். எல்லாக் காலங்களிலும் தலைசிறந்த வீரராக கருதப்படும் மாரடோனா மாரடைப்பால் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கால்பந்து வரலாற்றில் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் மாரடோனா என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவது தொடர்பில் கருத்து வெளியிட்ட போப்பிரான்சிஸ் !

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவது தொடர்பில்  போப் பிரான்சிஸ் பேசியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இவ் விவகாரத்தில் போப் தனது மவுனம் கலைத்திருப்பதாக உலக ஊடகங்கள் கூறுகின்றன.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் உய்குர் முஸ்லிம்கள், உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர்.

சீனாவின் மற்ற மாகாணங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது.

மேலும் அங்குள்ள மசூதிகளை சீன அரசு இடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சீனாவின் இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச அரங்கில் கண்டனக் குரல் எழுந்தது. பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் போப் இவ்விவகாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திவந்தன.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, இனவாத வன்முறைகளுக்காக சீனாவை போப்பிரான்சிஸ் கண்டிக்கவில்லை என்ற அதிருப்தி நிலவியது.

இந்நிலையில் போப்பிரான்சிஸ் முதன்முறையாக இவ்விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ளார்.

லெட் அஸ் ட்ரீம்: தி பாத் டூ ஏ பெட்டர் ஃப்யூச்சர் (Let us Dream: The Path to A Better Future) என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள புத்தகத்தில் போப் பிரான்சிஸ், “நான் அடிக்கடி சிறுமைப்படுத்தப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களை நினைவுகூர்கிறேன். இனபேதத்தால் துன்புறுத்தப்படும் ரோஹிங்கியாக்கள், உய்குர் இன மக்களை நினைக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் யாசிதி இன மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது. எகிப்திலும், பாகிஸ்தானிலும் வெடிகுண்டுகளுக்குப் பலியாகும் கிறிஸ்துவர்களை நினைவுகூர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

போப் பிரான்சிஸின் இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கூகுளில் ஆபத்தான உள்ளடக்கங்கள் – கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா வழக்கு !

“பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்ற கூகுள் தவறிவிட்டது” எனக்கூறி கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா வழக்கு தொடர்ந்துள்ளது.

இணைய தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சேர்ச் ’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவில் ‘கூகுள் சேர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்ற கூகுள் தவறிவிட்டது. எனவே கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷிய அரசு நிர்வாக நடவடிக்கைகளை திறந்துள்ளது. கோர்ட்டில் வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் 65 ஆயிரத்து 670 அமெரிக்க டாலர்  அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

“நாங்கள் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்காக யாரிடமும் சண்டையிடவில்லை” – அமைச்சர் மகிந்தசமரசிங்க

“நாங்கள் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்காக யாரிடமும் சண்டையிடவில்லை” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (25.11.2020) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் பேசிய அவர்,

எந்தவொரு உறுப்பு நாட்டிற்கும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து வாய்மூல அறிவிப்பின் ஊடாக விலகிச் செல்வதற்கு உரிமையிருக்கின்றது. மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய்யாகும்.

நாங்கள் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்காக யாரிடமும் சண்டையிடவில்லை. அனைத்து விடயங்களையம் நியாயப்படுத்திய பின்னரே அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். அதற்காக ஏனைய உறுப்பு நாடுகள் எம்மை எதிர்க்கவில்லை. இந்த நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்த விடயத்தையே அரசாங்கம் செய்திருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜெனீவா விவகாரம் குறித்தோ அல்லது இணை அனுசரணை விடயத்திலோ நான் இந்த விவகாரத்துடன் தொடர்புபடவில்லை. அப்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன என்னை ஜெனீவா செல்லும்படி கோரிய போதிலும், அதனையும் நான் நிராகரித்திருந்தேன்.

எமக்கு மிகச் சிறந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் இருக்கின்றனர். அதேபோல இறுதிப்போரில் சிவிலியன்களை காப்பாற்ற வெளிநாடுகள் கப்பல் அனுப்ப கோரியபோது அப்போதைய அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அதனை நிராகரித்ததாக நான் கடந்தமுறை நாடாளுமன்றில் கூறியிருந்தேன். பொதுமக்களையும் நாங்கள் போரில் பாதுகாக்க மறக்கவில்லை. 15 ஆயிரம் பேர் வரை இறுதிப்போரின்போது எம்மிடம் சரணடைந்தார்கள். அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தினோம். சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைய இதனை நடத்திமுடித்தோம்.

இலங்கை இராணுவமே வடபகுதியில் கன்னி வெடிகளை அகற்றியது. மாறாக வெளிநாடுகளில் இருந்து எவரையும் அழைத்துவரவில்லை எனவும்  குறிப்பிட்டுள்ளார்

“சுகாதார நாப்கின்களுக்கு எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை” – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

பெண்கள் பயன்படுத்தும் சுகாதார நப்கின்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நேற்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலுவாகக் குரல் எழுப்பிய நிலையில், சுகாதார நாப்கின்களுக்கு எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு 15 சதவீத வரி முன்மொழியப்பட்டுள்ளமைக்கு எதிராக நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுந்தொனியில் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் டயானா கமகே மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் கீதா குமாரசிங்க ஆகியோர் இதுவிடயத்தில் வலுவான கருத்துக்களை முன்வைத்தனர்.

‘இந்த நாட்டில் நூற்றுக்கு 52 சதவீதமானோர் பெண்களாவர். அவ்வாறிருக்கையில் வரவு – செலவுத்திட்டத்தில் சுகாதார நாப்கின்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெண்களின் சுகாதாரப்பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், சுகாதார நாப்கின்களை அத்தியாவசியப்பொருளாக அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்’ என்று சபையில் டயானா கமகே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

“எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” – த.கலையரசன்

“எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை மாவீரர்தின அனுஷ்டிப்பு நடவடிக்கைகள் நீதிமன்ற தடையுத்தரவுகள் மூலமாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“விடுதலைக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூறும் இந்த மாதத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையில் அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி மற்றும் மாவீரர் கல்லறைகளை உடைத்து வருவதோடு பொது மக்கள் குறித்த பகுதிக்குள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் இருப்பது மீளவும் எம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மரணித்தவர்களை நினைவு கூற முடியாமல் தடுக்கின்ற விடயம் என்பது மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாகவே பார்க்கின்றேன். அஞ்சலி செலுத்த முடியாமல் தடுக்கின்ற செயற்பாடுகள் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை எவ்வாறு கையாளுகின்றது என்பதை உணர்த்துகிறது. மக்கள் உள்ளங்களில் இருக்கின்ற தியாகங்களை உள்ள குமுறல்களை வெளிப்படுத்த முடியாத வகையில் இந்த அரசு தடையாக இருக்கின்றது.இந்த அரசு பதவியேற்ற கையோடு இறுக்கமான கெடுபிடிகளை கையாள்வது இந்த நாட்டில் ஜனநாயகம் தமிழ் மக்களுக்கான தீர்வு ,தமிழ் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் எதிர்காலத்தில் உருவாக போகின்றது என்பதற்கான அடி அத்தியாயமாகத்தான் இந்த விடையம் விளங்குகின்றது.

எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலயங்களில் பூஜை  செய்யக்கூடாது என ஆலய குருமார் ,நிருவாகத்தினரை அச்சுறுத்தி வருகின்றனர்.  ஜே.வி.பி கட்சியின் மறைந்த தலைவர் ரோஹண விஜேயவீர  போன்றோரை அனுஷ்டிக்க முடியும் என்றால் ஏன் தமிழ் மக்கள் அனுஷ்டிக்க முடியாது .

அம்பாறை மக்களுக்கு விடிவை பெற்று தர போகின்றேன் என்ற கருணா முடிந்தால் அனுஷ்டிக்க அனுமதியை பெற்றுத்தர முடியுமா? இதனை விடுத்து பொத்துவில் கனகர் கிராம மக்களை குடியேற்றம் விடையத்தில் அரச அதிபருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அந்த மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது இதனை குழப்பும் வகையில் கருணா அந்த இடத்திற்கு சென்றுள்ளார். எமது மக்களை குழப்ப வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை விடையம் மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது . அந்த மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அராஜக செயற்பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தீர்வை பெற்றுதர முடியாதவர் அம்பாறை மக்களுக்கு எதனை சாதிக்க போகின்றார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஆபிரகாம் சுமந்திரன், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து புதிய தூதுவர் டொமினிக் ஃபர்க்லரை இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சுவிட்சர்லாந்து தூதுவருடன் ஐ.நா. தீர்மானம், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்

இதேவேளை இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை வலுப்படுத்த சுவிட்சர்லாந்து முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று இதன்போது தூதுவர் வாக்குறுதியளித்தார் என்று அவர் மேலும் கூறினார்.

ஆப்கானிஸ்தான் இராணுவம் மீது தலீபான்கள் தாக்குதல்! 

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் சுமார் 2 மாதங்களாக அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை எந்த வகையிலும் ஆப்கானிஸ்தானில் வன்முறையை குறைக்கவில்லை. அங்கு தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியிலுள்ள பாக்லான் மாகாணத்தில் பாக்லான் இ மர்காசி என்ற மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் சோதனை சாவடியை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களை தாக்கியுள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையே பல மணிநேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம் அடைந்தனர். மேலும் இந்த மோதலில் 12 பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை!

பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
இந்நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறி உள்ளார்.

“அரசை ஆதரித்த காரணத்தால்தான் பிள்ளையான் பிணையில் விடுதலையாகியுள்ளார்” – சார்ள்ஸ் நிர்மலாநாதன்

“அரசை ஆதரித்த காரணத்தால்தான் பிள்ளையான் பிணையில் விடுதலையாகியுள்ளார்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இராஜாங்க அமைச்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பயங்கரவாதத் தடைச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் சாட்சி இல்லாமல் சிறையில் இருந்துள்ளார் என்ற தர்க்கத்தை அரச தரப்பினர் முன்வைக்கின்றனர்.

இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், எமது இளைஞர்கள் சாட்சிகள் இல்லாது வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 வருடங்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதனையும் அனைவரும் மறந்துவிடக்கூடாது. பிள்ளையானுக்குப் பிணை கொடுக்க முடியும் என்றால் 20 வருடங்களாக சிறையில் உள்ள எமது அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தவர்களுக்குப் பிணை வழங்க முடியாது என அரச தரப்பினர் எம்மிடம் கூறினார்கள். அப்படியென்றால் பிள்ளையான் எவ்வாறு பிணையில் விடுதலையாக முடியும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் எமது தமிழ் இளைஞர்கள் பொய்க் குற்றச்சாட்டில் வெறுமனே குற்ற ஒப்புதல் சாட்சியங்களை வைத்துக்கொண்டு தடுத்து வைத்திருப்பது நியாயமானதா? இது வெறுமனே அரசின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறும் செயற்பாடாகும். அரசை ஆதரித்த காரணத்தால்தான் பிள்ளையான் பிணையில் விடுதலையாகியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.