“இலங்கைத்தீவானது சிங்கள பௌத்தர்களதும் தாயகம் என்பதை ஏற்றுகோள்கிறோம், ஆனால், அது சிங்கள் பௌத்தர்களுக்கு மட்டுமே தாயகபூமி அல்ல” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட விவாதத்தின் வெளிவிவகார அமைச்சு மீதான விவாதத்தில் நேற்று (25-11-2020) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தன்னுடைய உரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் பேசியதாவது,
இங்கே அமர்ந்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் அவர்கள் மறைந்த எனது தந்தையாரின் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவர். அதன் அடிப்படையில் அவரில் நானும் மரியாதை வைத்துள்ளேன். அதே போன்று வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்களும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், அவருக்கும் எனக்குமான நட்பும் மிக நீண்டது.
இருப்பினும் , இந்த வெளிவிவகார அமைச்சின் முக்கியமான இருவருடனுமான எனது தனிப்பட்ட மதிப்பானது எந்த விதத்திலும் , இன்றைய நாளில் இந்த வெளிவிவகார அமைச்சு மீதான விவாததில் நான் ஆற்றவேண்டியிருக்கும் எனக்குரிய கடப்பாட்டில் எதுவித தாக்கத்தையும் செலுத்தாது.
இலங்கை சம்பந்தமான புவிசார் அரசியல் போக்குகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, அதன்பிரகாரம் அந்த புவிசார் அரசியல் போக்குகளை இலங்கைக்கு, பயனதரக்கூடிய வகையில், கையாள்வது குறித்தான மூலோபாயங்களை வகுப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது வெளிவிவகார அமைச்சின் ஒரு கடமை என வெளிவிவகார அமைச்சினால் 2020 இல் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கடமைகளும் செயற்பாடுளும் என்ற தலைப்பின் கீழுள்ள பந்தி 8 குறிப்பிடுகிறது.
இதே போன்றதொரு உள்ளார்ந்த அர்த்தத்தில் வெளிவிவகார அமைச்சரின் செயலாளர் ஒரு மாநாட்டில் குறிப்பிட்டவற்றை மீள நினைவுகூருகிறேன்.
“புவிசார் அரசியலில் இலங்கை கேந்திர முக்கியத்துவமான ஒரு அமைவிடத்திலும் புவிசார் அரசியலின் மூலோபாய ரீதியிலும் முக்கியமான இடத்திலும் இருப்பதனால், பலம்பொருந்திய சர்வதேச சக்திகள் தமக்கிடையான போட்டியில் இலங்கையை ஒரு பகடைக்காயாக பாவித்துவிட்டு ஈற்றில் தூக்கியெறியும் நிலமைக்கு இலங்கையை செல்லவிடாமல் பாதுகாப்பதே அரசினதும் வெளிவிவகார அமைச்சினதும் கடமையாக இருக்க வேண்டும்” எனும் சாரப்பட வெளிவிவாகர செயலாளர் குறிப்பிட்டு இருந்தார்.
உண்மையில் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இவ்வாறுதான் அமையவேண்டும். இலங்கை புவிசார் அரசியலில் முக்கியமான இடத்திலிருப்பதை புரிந்து கொள்வதென்பது ஒன்றும் விளங்கிக்கொள்ள சிக்கலான ஒரு விடயமோ அல்லது ஒரு இரகசியமோ அல்ல. இது இன்று நேற்றல்ல , இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது கூட நேச அணிகளின் படைகள் தமது கிழக்கு கடற்பிராந்திய கட்டளைத் தலைமையகத்தை திருகோணமலையை தளமாகக் கொண்டே அமைத்திருந்தார்கள். இந்து சமுத்திர பிராந்தியத்தின் மத்தியில் அதைக்கட்டுப்படுத்தகூடிய புள்ளியில்அமைந்திருப்பது, இலங்கையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், இங்கு எழும் கேள்வி என்னவென்றால் இந்த முக்கியத்துவத்தை சிறிலங்கா அரசு எவ்வாறுபயன்படுத்துகிறது? என்பதுதான்.
உண்மையில் சிறிலங்கா அரசு அதன் வெளிவிவகாரக் கொள்கை விடயத்தில் என்ன செய்துள்ளது என்பதும், சிறிலங்காவை சரவ்தேச சக்திகளின் பந்தாட்டத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வெளிவிவாகர அமைச்ச்சர் குறிப்பிட்டமைக்கமைய, வெளிவிவாகர அமைச்சர் இலங்கை என எந்த கட்டமைப்பை அடையாளப்படுத்தினாரோ? அந்த கட்டமைப்புக்கு நன்மை தரக்கூடியவகையில் எவ்வாறு அதன் வெளிவிவகாரகொள்கை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? என்பதும் தான் இங்கு இருக்கும் மிகப்பெரிய. வினாக்கள்.
உண்மையில் இலங்கையின் வெளிவிவகாரக்கொள்கை என்பது சீரழிந்து செல்கின்றதென்பதே நிதர்சனமாகும். உண்மையில் என்னுடைய பார்வையில் இது ஒரு துன்பியல் நிகழ்வாகவே அமைந்துள்ளது. 1948ம் ஆண்டிலிருந்து இலங்கை தனது கேந்திரமுக்கியத்துவத்தை தனது சொந்த நாட்டு மக்களில் ஒரு தொகுதியினருக்கு எதிராக, குறிப்பாக தமிழ்த் தேசத்து மக்களுக்கு எதிராக அவர்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தி வருகிறது.
அத்தோடு 1948ம் ஆண்டிலிருந்தே இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையானது இந்தியாவை ஐயத்துடன் பார்ப்பதாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் தெற்கில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்வதனால் இயல்பாகவே இந்நாட்டில் வாழும் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவுக்கு ஒரு கரிசனை இருக்கும. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையானது இந்தியாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. சிறிலங்கா அரசு இதனை பல வழிகளில் செய்து வந்துள்ளது.
இதன் உச்சகட்டமாக , ரஷ்யா – அமெரிக்க பனிபோர் நிலவிய எண்பதுகளில், இந்தியாவானது அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக கூறியிருந்தாலும் சோவியத் யூனியனுடன் மிக நெருக்கமான உறவை பேணி வந்திருந்த காலப்பகுதியில், மறுபுறமாக அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தன அமெரிக்காவின் பக்கம் முழுமையாக சாய்ந்திருந்தார்.
அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதனை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என நம்புகிறேன். அந்த புவிசார் அரசியல்போட்டியின் இலங்கையின் ஸ்திரத்தன்மையை ஆட்டம் காணச்செய்தது. தமிழர்களின் உரிமைக்கான ஆயுத போராட்டத்துக்கு வெளிப்படையாகவே ஆதரவை வழங்குமளவிற்கு இலங்கையின் ஸ்திரத்தன்மை நிலைகுலைந்திருந்தது.
இந்த புவிசார் அரசியல் போட்டியால் ஈற்றில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிலைக்கு இலங்கையை தள்ளியிருந்தது.
அந்த ஒப்பந்தத்தில் தமிழ்தேசியப் பிரச்சனைக்கான தீர்வினைக் காண்பது தொடர்பாகப் பேசப்பட்டு இருந்தாலும் அதன் பின்னிணைப்பு ஆவணங்கள் அனைத்தும் இலங்கை இந்தியாவின் பிராந்திய மூலோபாய நலன்களுக்கு பாதகமாக செயற்படாது என்ற நிபந்தனைகள் அனைத்துக்கும் இணங்கி சரணடைந்திருந்தது என்பதை காட்டிநிற்கிறது .
அதன் தொடர்ச்சியாக, மீண்டும் நாடு ராஜபக்ஷ அணியின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது. அவர்கள் எந்தவொரு வழிவகையிலும் தமிழர்களின் உரிமைகள் அங்கீகரீக்கப்படுவதை தடுத்துவிட வேண்டும் என ஒரு வெறித்தனத்துடனும் தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதை மறுதலிக்கும் மனோபாவத்துடனும் செயற்படுகின்றார்கள். இந்த நோக்கத்திற்காகவே இன்று நிலவும் புதிய பூகோள அரசியல் போட்டியில் சீனாவுடன் சார்ந்து செல்லும் நிலையை தேர்ந்தெடுத்துள்ளனர். சீனா, வழமையாகவே , நாடுகளின் உள்விடயங்களில் பெரியளவில் தலையீடு செய்வதில்லை என்பதும் மாறாக இந்தியா அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் மனித உரிமைகள் விடயத்தில் கட்டுப்பாடுகள் விதித்து, நாட்டின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கட்டுபாடுகளையும் நிபந்தனைகளையும் விதிக்கின்ற அணுகுமுறையை வழமையையும் கொண்டிருப்பது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில், இலங்கை, மிக வெளிப்படையாக மனித உரிமைகளையும், நாட்டின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டும் என்பதனையும் மறுதலிக்கும் விதமாக எதிர்த் திசையை நோக்கிச் சென்று சீன சார்பு நிலையை எடுத்திருக்கின்றது. எந்தவொரு முடிவுகளையும் சுயமாக எடுக்கமுடியாத அளவுக்கு இன்று அது சீனாவை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு அது சென்றுள்ளது.இலங்கை சுயமாக முடிவுகளை எடுக்க முடியாத அளவுக்கு தனது சுயாதீனத்தை சீனாவிடம் இழந்து நிற்கின்றது என்பதை இன்று இங்கே இருக்கின்ற வெளிவிவகார அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் நிராகரிக்க நிர்ப்பந்திக்கப்படகூடும். ஆனால் அது தான் இன்று நிதர்சனமாகி இருக்கும் யதார்த்தம் என்பதை அனைவரும் அறிவோம்.
உங்கள் நாட்டின் சக பிரஜைகளின் உரிமைகளை, உங்கள் சக தேசத்து மக்களாக இங்கே இருக்கின்ற தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதை நோக்காக கொண்டு, இன்று நீங்கள் உங்கள் நாட்டிற்கான எந்தவொரு முடிவுகளையும் சுயமாக எடுக்க முடியாத அளவுக்கு உங்களது சுயாதீனத்தை இழந்து நிற்கும் அளவுக்கு நீங்கள் சீனாவின் பக்கமாக சார்ந்து நிற்கின்றீர்கள். இதை விட நீங்கள் இலங்கையானது நாம் அனைவரும் ஒன்றாகவும் சம அந்தஸ்துடனும் வாழ்வதற்குரிய அளவுக்கு விசாலமனாது என்பதை ஏற்றிருந்திருக்க வேண்டும்.
இலங்கைத்தீவானது சிங்கள பௌத்தர்களதும் தாயகம் என்பதை ஏற்றுகோள்கிறோம், ஆனால், அது சிங்கள் பௌத்தர்களுக்கு மட்டுமே தாயகபூமி அல்ல, இது தமிழர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமான தாயகபூமியுமாகும். அந்த அடிப்படையில் இந்த இலங்கைத்தீவில் பல தேசங்கள் இருக்கின்றன. தமிழர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களோ? அல்லது சிங்கள தேசியத்தை நிராகரிப்பவர்களோ? அல்லது பௌத்த மதத்தை பாதுக்கக்க வேண்டும் என்பதை நிராகரிப்பவர்களோ அல்ல.
அப்படியிருக்கும் போதும் நீங்கள் ஏன் ஏனையவர்களது அடையாளாங்களை அங்கீகரிக்க மறுக்கின்றீர்கள்? இலங்கையானது பல்லின மக்களின் கூட்டாக பல தேசம் கொண்ட நாடு என்பதை எந்தவகையிலும் மறுதலிக்க வேண்டும் எனும் வெறித்தனமான உங்கள் நிலைபாடு இன்று உங்கள் சொந்த இறைமையையே விட்டுக்கொடுக்க வேண்டிய நிலமைக்கு இன்ன்று உங்களை தள்ளியிருக்கின்றது. அந்த ஒரே நோக்கத்திற்காக உங்கள் நாட்டின் கேந்திர முக்கியத்திவம் வாய்ந்த சொத்துகளையே பிறருக்கு விற்கும் அளவுக்கு உங்கள் இறைமையை விட்டுக்கொடுத்து நிற்கின்றீர்கள்.
தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் உரிமைகளை அங்கீகரிக்க மறுத்தும் இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தானதும் என்கிற பாதையை தேர்ந்தெடுத்து அதில் செயற்படுவதாக இருந்தால், நீங்கள் நிச்சயமாக இந்த புவிசார் அரசியல் விளையாட்டுக்குள் சிக்க வேண்டி இருக்கும். இவ்வாறான இனவாத சித்தாந்தங்களால் மீண்டும் துருவமயப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், எந்தளவுக்கு நீங்கள் இந்த புவிசார் அரசியல் விளையாட்டுக்குள் சிக்குகிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் மீண்டும் எதிரிகளை சம்பாதித்து கொள்வீர்கள்.
அப்படி நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் எதிரிகள் தமது ஆயுதமாக இன்று நீங்கள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளையே பாவிப்பார்கள் என்பதனை மனதிற் கொள்ளுங்கள். இன்று தமிழர்களுடைய உரிமைகளை நீஙக்ள் மறுதலிக்கலாம். ஒரு இனப்படுகொலை செயன்முறை மூலம் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டையும், தேசத்தின் தாங்குதூண்களையும் சிதைக்கும் அளவுக்கு வடக்கு கிழ்க்கில் குடியேற்றங்க்ளை நிகழ்த்தலாம். ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் இன்று களமிறங்கியிருக்கும் இந்த புவிசார் அரசியல் விளையாட்டுகள் இறுதியில் உங்களையும் உடைத்தெறியும் இது நிச்சயமாக நடக்கும் என்பதை ஞாபத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எனது இந்த வார்த்தைகளை குறித்துக்கொள்ளுங்கள். இந்த புவிசார் அரசியல் போட்டி உஙகள நிச்சயம் நிர்மூலமாக்கும்.
என்று நீங்கள் இனவாதத்தை கைவிட்டு, நீங்கள் நாட்டின் தென்பகுதியில் நீங்கள் கொண்டிருக்கும் உரித்துகளை போலவே தமிழ் மக்களும் வடக்கு கிழக்கில் அனைத்து உரித்துகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுகொண்டு இணைந்து செயற்பட முன்வருகிறீர்களோ, அன்றுதான் , இலங்கையில் வசிக்கும் அனைவரும் நன்மையடையக்கூடிய வகையில் அனைவரும் இணைந்து இந்த புவிசார் அரசியல் வெளியை சரியான முறையில் கையாள முடியும். அப்படி செயற்பட்டால் மட்டுமே அனைவருக்கும் தோல்வியை தராத வகையில் அந்தப் பூகோளப் போட்டியைக் கையாள முடியும்.
இந்த முயற்சியில் உங்களுடன் இணைந்து செயல்பட தமிழர்கள் எப்போதும் தயாராக இருந்த போதிலும், தமிழர்களை புறம்தள்ளி செயற்படும் உங்களின் போக்கு நிச்சயம் இறுதியில் உங்களுக்கு தோல்வியையே தரும் என்பதில் ஐயம் இல்லை. அதில் இருந்து நீங்கள் தப்பி ஓடவே முடியாத நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், நடைமுறையில் நீங்கள் இந்த புவிசார் போட்டியில் இன்று இந்தியாவையும், அமெரிக்காவையும் எதிர்த்து நிற்கிறீர்கள். நீங்கள் சீனாவுடன் இனைந்து பணியாற்ற வேண்டாமென நான் கூறவில்லை. நிச்சயமாக நீங்கள் சீனாவுடனும் இணைந்து பணியாற்றவேண்டும். ஆனால், இந்த நாடுகளுக்கிடையான இந்த உறவுநிலையானது இந்த புவிசார் அரசியலின் ஒரு மூலோபாயமாக இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், குறிப்பாக சீனா இந்த மூலோபாய உறவுநிலைப் போட்டிக்குள் தன்னை நுழைத்துக்கொண்ட இன்றைய நிலையில் நீங்கள் இந்த நாட்டின் கேந்திர முக்கியத்துவத்தை சீனாவிடம் விட்டுக்கொடுப்பதென்பது, இந்தப் பயங்கரமான புவிசார் அரசியல் போட்டியில் உங்களுக்கு தோல்வியையே தருகின்ற நிலைக்கு நிச்சயம் திரும்பும் என்பது திண்ணம்.
தமிழ்ர்களின் உரிமையைகளை மறுதலிப்பதற்காக நீங்கள் இந்த பூகோள அரசியல் போட்டியை கையாளும் தவறான அணுகுமுறையானது, எந்த மக்களின் பெருமிதத்திற்காக நீங்கள் இதை செய்கிறீர்களோ? அதே உங்களின் சொந்தமக்களின் இறைமையையும் நீங்கள் அழித்துக்கொள்கிறீர்கள் என்பதை மீண்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்” எனவும் அவர் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.