December

December

மரணச்சடங்கிற்கு சென்ற கொரோனா நோயாளி – யாழில் 50 பேர் தனிமைப்படுத்தலில் !

யாழ்.நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த மரண சடங்கில் கலந்து கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் குறித்த நபர் நாவாந்துறை – கண்ணாபுரம் பகுதியில் மரண சடங்கு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த சுமார் 50ற்கும் மேற்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றர்.

இறந்த முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை தடைசெய்யுமாறு கூறி மன்னாரில் விழிப்புணர்வு போராட்டம்!  

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறுக் கோரி மன்னாரில் அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக குறித்த விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை ஒன்று கூடிய மக்கள் அமைதியான முறையில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னாரின் இளம் சட்டத்தரணிகள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரியும் உயிருடன் இருக்கின்றபோது உடலுக்கு கொடுக்கின்ற மதிப்பினை அவர்கள் மரணிக்கின்றபோது அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை விழிர்ப்புணர்வு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர்.

மேலும் கொரோனா தொற்றால் இறந்த உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றது. எனவே உலக சுகாதார ஸ்தாபனத்தின் செயற்திட்டங்களை உள்வாங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து குறித்த விழிர்ப்புணர்வு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் !

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்லை தாண்டி வருகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் உரிய வகையில் எல்லைதாண்டி வந்தவர்களை கட்டுப்படுத்தினால் தமது வாழ்வாதாரத் தொழிலை சிறந்த முறையில் செய்ய முடியும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

இந்திய -இலங்கை அரசாங்கங்கள் உரிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி எல்லை மீறி தமது பகுதிகளில் வருகின்ற மீன்பிடி படகுகளை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி தமக்கு  வாழ்வாதாரத் தொழிலை நிம்மதியாக செய்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு கோரி இந்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத் திட்டம்  தோல்வி !

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம், மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டினால் கடந்த 2ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சமர்ப்பணத்தின்போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் முஸ்லீம் ஜனசாக்கள்  எரிக்கப்படும் விவகாரம் – முஸ்லீம்களை மாலைதீவிற்கு அழைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் வலியுறுத்தல்! 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்து போகும் முஸ்லீம் மக்களுடைய உடல்கள் எரிக்கப்படுவது அம்மக்களுடைய மத நம்பிக்கைகளை சிதைப்பது போன்றது என பலரும் தம்முடைய ஆதங்கத்தை வெளியிட்டு வருவதுடன் போராட்டங்களையும் ஆங்காங்கே மேற்கொண்டு வருகின்றனர். உலகின் அமைப்புக்கள் பலவும் இதனை எதிர்த்து தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் இலங்கையின் முஸ்லீம்களிற்கு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்கவேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் முதலமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்த போது,

“இலங்கை முஸ்லீம்களை மாலைதீவிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்காதமை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . இலங்கை முஸ்லீம்களை அந்த நாட்டிலிருந்து மாலைதீவிற்கு வந்து வசிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களுக்கு தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் இறுதிசடங்கினை நடத்துவதற்கான சிறுபான்மை முஸ்லீம்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும்.

இதேவேளை கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான அனுமதி அந்த நாட்டிடம் கோரப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என ஊடக பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.அமைச்சரவையிலும் இது குறித்து ஆராயப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் உதவி கோரப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சு பதிலளிக்ககூடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் தன்னிச்சையான முடிவுகள் எதனையும் எடுக்காது இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் முடிவை அடிப்படையாக வைத்தே அரசாங்கம் தனது முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் குழுவொன்றை அமைக்கும் போது அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காவிட்டால் அவ்வாறான குழுவை நியமிக்கவேண்டிய அவசியம் இல்லை நீங்கள தன்னிசை;சையான முடிவுகளை எடுக்கலாம் எனவும் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வேறு எங்காவது எடுத்துச்செல்லுவது குறித்து யாராவது தெரிவித்தால் அது குறித்தும் நிபுணர்களுடன் ஆராய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை மாலைதீவில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு உதவுமாறு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராய்ந்து வருவதாக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதியின் விசேட வேண்டுகோலை மாலைதீவு ஜனாதிபதி ஆராய்ந்துவருகின்றார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவினை அடிப்படையாக வைத்தே மாலைதீவு ஜனாதிபதி இது குறித்து ஆராய்கின்றார் கொரோனா வைரசினால் எதிர்நோக்கப்படும் சவால்களிற்கு தீர்வை காண்பதற்க்கு உதவும் நோக்கிலும் மாலைதீவு இது குறித்து ஆராய்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் அரசியல்கைதிகளை ஜனாதிபதி விடுவித்தால் நாம் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம் ” – ஞானாசார தேரர் 

‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்ற பெயரில் சிறைச்சாலைகளில் காலத்தைக் கழிக்கின்ற தமிழ்க் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து ஜனாதிபதி விடுவித்தால் அதை நாம் எதிர்க்க மாட்டோம்” என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் பழிவாங்கல் காரணமாக நானும் சிறையில் சில காலத்தைக் கழித்தேன். அவ்வேளையில் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலருடன் நேரில் பேசியிருக்கின்றேன். அவர்கள் தங்கள் துயரங்களை நேரில் என்னுடன் பகிர்ந்தார்கள். அவர்களில் சிலர் 15 வருடங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

குற்றம் செய்தார்களோ இல்லையோ அவர்கள் சிறைகளில் பல வருடங்கள் தண்டனைகளைப் பெற்று விட்டார்கள். எனவே, அப்படியானவர்களை அரசியல் தீர்மானம் எடுத்து ஜனாதிபதி விடுவித்தால் அதற்கு நாம் ஆட்சேபனை தெரிவிக்கமாட்டோம்.

எமது இந்த நிலைப்பாட்டை தமிழ் அரசியல்வாதிகள் சிலரிடமும் நாம் தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் பலர் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை தமது அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர். அதனால் சிறைகளில் பல வருடங்கள் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசிடம் நாம் நேரடியாகத் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவித்தால் அந்த விடயத்தைத் தமிழ் அரசியல்வாதிகள் தலையில் வைத்துக் கொண்டாடி இனமுறுகலை ஏற்படுத்தக்கூடாது.

சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புனர்வாழ்வு வழங்கி விடுவித்த அரசு, தமிழ் அரசியல் கைதிகளையும் ஏதோவொரு விதத்தில் விடுவிக்க முடியும். எனினும், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிதான் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்” – என்றார்.

அரசியல் கைதிகளுடைய விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி தமிழ்அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும் என பல தமிழ் அரசியல் தலைவர்களும் இணைந்து பிரதமரிடம் மனு ஒன்றினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுக்கடை நீதிமன்ற வளாக தீ !

இன்று கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுகுறித்து ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவில் இருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளர்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” என ஐக்கிய மக்கள் சக்தியின்கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள். அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நான் கொச்சைப்படுத்தமாட்டேன்.

ஆனால், நாட்டின் சட்டத்தை மீறி அவர்கள் செய்த மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதனால்தான் அவர்களைப் பகிரங்கமாக நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு எதிராக நாடாளுமன்றில் நான் உரையாற்றினேன்.

ஆயுதப் போராட்டத்தால் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களை நேரில் கண்டறிந்தவன் நான். போர் முடிவுக்கு வந்திராவிட்டால் அவர்களின் அவலங்கள் தொடர்ந்திருக்கும். மீண்டுமொரு போரை தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டபோது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எனக்குத் தந்த அமோக ஆதரவை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வைப் பகிரங்கமாக நடத்த அனுமதிக்க முடியாது என நான் வலியுறுத்திய காரணத்தால் என்னைத் தமிழ் மக்களுக்கு எதிரானவனாக வெளிக்காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயன்றுள்ளார்கள். ஆனால், நான் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. இன்றும் தமிழ் மக்களை நான் நேசிக்கின்றேன். அரசியல் தீர்வே அவர்களின் கனவாக இருக்கின்றது. எனவே, முழு நாடும் ஏற்கும் ஒரு தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும்.”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாராளுமன்றில் பொன்சேகா மாவீரர் தினத்தன்று புரவி புயல் வடக்கில் வீசியிருந்தால் மகிழ்வடைந்திருப்பேன் என கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

லண்டனில் புதிய உருவ அமைப்பை காட்டும் கொரோனா வைரஸ் – ஊரடங்கு மேலும் தீவிரம் !

பிரித்தானியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

லண்டனில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் அங்கு 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி மெட் ஹன்ஹாக் கூறியதாவது:-

லண்டன் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் 3 அடுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்கள், மால்கள் மூடப்படும். பொது இடங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் புதிய மாறுபாடு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தெற்கு இங்கிலாந்தில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்க கூடும்.

சில இடங்களில் ஒவ்வொரு வாரமும் பாதிப்பு 2 மடங்காகி வருகிறது. மக்களை பாதுகாக்கவும், அதிக அளவு பாதிப்புகளையும், நீண்ட கால பிரச்சனைகளையும் குறைக்க முடியும் என்பதால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பைடன் தான் – ட்ரம்ப் தரப்பின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி !

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். பைடன் 306 வாக்குகளும், நடப்பு ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 50 மாகாணங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 538 தேர்வாளர்கள் குழுவினர் வாக்களித்தனர்.
அரிசோனாவில் 11 பேர், ஜார்ஜியாவில் 16 பேர், நெவடாவில் 6 பேர், பென்சில்வேனியாவில் 20 பேர், விஸ்கான்சினில் 10 பேர் என தேர்வாளர்கள் குழுவினர் ஜோ பைடனுக்கு வாக்களித்தனர்.
அந்தந்த மாகாணங்களில் தேர்வாளர் குழுவினர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுத்து வாக்களித்து கையெழுத்திட்டனர்.
தேர்வாளர் குழுவினர் வாக்களிப்பால் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்பில்லை. மேலும் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை. அமெரிக்காவில் அதிபராவதற்கு இவர்களது அங்கீகாரம் அவசியமானது.
இதன்படி,  கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளை ஜோ பைடன்  பெற்றார். இதன் காரணமாக  270 தேர்தல் வாக்குகளை பெற்று ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதை ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக  பதவியேற்பதற்கு இந்த நடைமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஏனெனில், டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ஆகும். மேலும், தேர்தலை எதிர்த்து டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பதில் சட்டரீதியான சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.