December

December

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு !

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக  தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டது என ஐக்கியமக்கள் சக்தி தொடர்ச்சியாக குற்றஞசாட்டி வருகின்ற நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது,

அரசாங்கம் தாமதமின்றி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும். அரசாங்கம் சுகாதார பிரிவினரின் பி.சி.ஆர் சோதனையிடும் திறனையும் வளங்களையும் அதிகரிக்கவில்லை.முகக்கவசங்கள் தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.

கொரோனா வைரசினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் மயப்படுத்தியுள்ள அரசாங்கம் எதிர்கட்சியினரின் திட்டங்களை பலவீனப்படுத்தியுள்ளது .கொரோனா வைரசிற்கான மருந்திற்கு முன்னுரிமை வழங்க வண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

“யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரியுள்ளார்.

யாழ். மருதனார்மடத்தில் திடீரெனக் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்தார்கள். இந்தநிலையில், இங்கு பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் பகுதியிலிருந்து கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள் என்ற தகவல் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் வெளியில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கக் கூடும். தொற்றாளர்கள் தாம் சென்று வந்த இடங்கள் தொடர்பில் எதையும் மறைக்காமல் உண்மைகளைக் கூற வேண்டும்.

வர்த்தகர்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். அவர்கள் வெளியிடங்களில் வர்த்தக ரீதியில் தொடர்புகளை வைத்திருப்பவர்கள். அவர்கள் அனைவரும் பீ.சி.ஆர். பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

அதேவேளை, புதிய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி பீ.சி.ஆர். பரிசோதனையைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும், சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் கடமைகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மினுவாங்கொடை, பேலியகொட போல் பெரிய கொத்தணிகளைப் போன்றோ அல்லது அக்கரைப்பற்று போல் சிறிய கொத்தணியைப் போன்றோ ஒரு நிலைமை யாழ்.குடாநாட்டிலும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என இங்குள்ள மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சினை – தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் கூட்டாக கள விஜயம் !

இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் மேய்ச்சல் தரை இன்றி தவித்து வருவதாக கூறி மட்டக்களப்பு மயிலந்தனை மடு ,மாதவனை  மடு பண்ணையாளர்கள் கடந்த இரு மாத காலங்களாக பல்வேறுபட்ட கோரிக்கை முன்னிறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தனர்.

மட்டக்களப்பு மயிலந்தனை மடு ,மாதவனை  மடு மேய்ச்சல் தரை விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் கூட்டாக கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுராதா ஜகம்பத் சிங்கள குடியேற்றத்தை ஆதரித்ததாக   பண்ணையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சாணக்கியன்,தவராஜா கலையரசன்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் ,  ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , கோவிந்தன் கருணாகரன் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்ட இளைஞரணியினர்களும் குறித்த இடத்தில் வருகை தந்திருந்தனர்.

இங்கு குறைகளை எடுத்துரைத்த பண்ணையாளர்கள்
மயிலந்தனை  மடு பண்ணையார்கள் சார்பான வழக்காளிகளாக  மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரன் இருவரையும்  சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டனர்.

கொரோனாவிற்காக உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் ஔடதங்கள் தொடர்பாக ஆய்விற்கு உட்படுத்த தேசிய ஆராய்ச்சி சபைக்கு பிரதமர் பரிந்துரை !

கேகாலை தம்மிக பண்டார என்பவரின் கொரோனாவுக்கான ஆயுர்வேத ஒளடத பானியை பெறுவதற்காக ஆயிரக்கணக்கினாலானோர் திரண்டிந்தனர். இந்த நிலையில் குறித்த ஔடதபானி உண்மையிலேயே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தானா..? யார் அதனை விற்பனை செய்ய அனுமதித்தது ? என பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் கொரோனாவிற்காக தேசிய மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவமொன்றை, கலாநிதி ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜாகொட ஆகியோரினால் கொரோனாவிற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானியை மேலும் விஞ்ஞான ரீதியில் ஆய்விற்கு உட்படுத்தி உறுதிபடுத்துவதற்கு பிரதமர் தேசிய ஆராய்ச்சி சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானி தொடர்பான ஆராய்ச்சி பத்திரமொன்று ரஜரட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர்களின் தலையீட்டுடன் முன்வைக்கப்படுவதுடன், அது தொடர்பான ஆய்விற்கு இந்நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உடலியல் விஞ்ஞானம் தொடர்பான நிபுணத்துவ அறிவுமிக்க சிரேஷ்ட பேராசிரியர்கள் ஐந்து பேர் மற்றும் தேசிய ஆராய்ச்சி சபைக்காக தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹல ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், உலகில் கொரோனா தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி வகைகள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவிற்காக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த மூன்று தடுப்பூசிகள் தொடர்பான சீ.டீ.ஏ. அறிக்கை தேசிய ஆராய்ச்சி சபையினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சியிடம் கையளிக்கப்பட்டது.

“ நான் ஒரு அட்டைக்கத்தி வீரனல்லன். நான், சோழன் பரம்பரையில் வந்த தமிழ் இலங்கையன் ” – மனோகணேசன்

“ நான் ஒரு அட்டைக்கத்தி வீரனல்லன். நான், சோழன் பரம்பரையில் வந்த தமிழ் இலங்கையன் ” என பாராளுமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் பாராளுமன்றில் மனோகணேசன் “சரத்பொன்சேகா தமிழர் தொடர்பாக கூறியதற்காக தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருந்தார். இந்நிலையில்  பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவதற்காக மனோகனேசன் போன்றோர் செயற்பட்டதாக பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்ற நிலையில் இது தொடர்பாக தனது நிலைப்பாடு பற்றி அறிக்கை ஒன்றை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு:-

“சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச போன்றோருடன், அவர்களது முகத்துக்கு நேரேயே, பகிரங்கமாக உண்மையை, அவர்களது தாய்மொழியிலேயே எடுத்துக் கூறி, “உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்” எனத் துணிச்சலாக அடித்து கூறும் எனக்கு, சில உள்நாட்டு, வெளிநாட்டு அறிவாளிகள் இப்போது அறிவுரை கூற வருகின்றார்கள்.

அதென்ன அறிவுரை? மனோவும், சரத்தும் ஒரே கூட்டணிகாரர்கள்தானே? தேர்தலுக்கு முன் சரத் பற்றி மனோவுக்குத்  தெரியாதா? 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத்துக்கு ‘ஓட்டு’ வாங்கி கொடுத்தவர்தானே என எங்களைச் சிலர் விமர்சிக்கின்றார்கள்.

ஒரே கூட்டணியில் இருந்து விட்டு, பின்னர் எனது முகநூலில், ருவிட்டரில் சரத் பொன்சேகா உட்பட பலரை நான் விமர்சிக்கிறேன் எனவும் என்னை இவர்கள் விமர்சிக்கின்றார்கள். இந்த, சில அறிவாளிகளுக்கு சில விடயங்கள் எப்போதும் புரிவதில்லை. இவர்கள் தூங்குவதாக நடிக்கின்றார்களா? அல்லது உண்மையிலேயே தூங்குகின்றார்களா? எனத் தெரியவில்லை.

இந்த நாடு ஒரு பேரினவாத நாடு. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எல்லாவற்றிலும் இனவாதம் நீக்கமற நிறைந்துள்ளது. இதுதான் யதார்த்தம். இதை நான் எப்போதும் சொல்லி வருகின்றேன். இந்த நாட்டில் இவர்கள் எவரும் நெல்சன் மண்டேலா கிடையாது. இருப்பவர்களை வைத்து, அவ்வப்போது, சொல்ல வேண்டியதை முகத்துக்கு நேரே சொல்லி, அடித்து, திருத்தி, எமது பாதையில் நான் போகிறேன்.

இதைவிட வேறு என்ன செய்ய முடியும்? எதிரணியில் இருந்து விலகி ஆளும் அணியில் சேர சொல்கின்றார்களா? ஆளும் அணி நியாயமானதாக இருந்தால் அதை நான் செய்வேன். நல்ல ஒரு அமைச்சுப் பதவியை வரப்பிரசாதங்களுடன் கேட்டு வாங்கி கொள்ளலாம். ஆனால், இன்று ஆளும் அணி இதைவிட, பேரினவாதமாக அல்லவா இருக்கின்றது? அங்கே சென்று நான் எப்படி ஆடை அணிந்து வாழ்வது?

2010ஆம் வருட தேர்தலில், பொன்சேகாவை நிறுத்தி நாம் வெல்லவில்லை. ஆனால், இதனால் இனவாத வாக்கு வங்கி சரிபாதியாக உடைந்தது.

இந்த அறிவாளிகளுக்கு எமது இந்த சாணக்கியம் புரிவதில்லை.

இந்த நாட்டில் நானோ, எந்தவொரு தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாகி, அரசு அமைக்க முடியாது என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும். ஆகவே, இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு ஆளும் அணி, எதிரணி என்று பிரித்து பார்க்காமல், இனவாதம் பேசுகின்றவர்களை நேரடியாக கண்டிக்கும் என்னை இந்த ‘அறிவாளிகள்’ பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. முட்டாள்தனமாக குறை கூறாமலாவது இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான விமர்சனத்தை எதிர்கொள்ள அவசியமானால் என்னைத் திருத்திக்கொள்ள நான் எப்போதும் தயார். ஆகவே, யார் வேண்டுமானாலும் வந்து கேள்வி கேளுங்கள்.

அதேபோல் மாற்று வழி என்ன? ஆயுதம் தூக்குவதா? சரணடைவதா? குறட்டைவிட்டு தூங்குவதா? விலைபோய் பணம் சம்பாதிப்பதா? என்று ஆலோசனை கூறுங்கள். நான் ஒரு அட்டைக்கத்தி வீரனல்லன். நான், சோழன் பரம்பரையில் வந்த தமிழ் இலங்கையன். நேரடியாக நாடாளுமன்றத்திலும், பிரபல சிங்கள ஊடகங்களிலும், இனிய சிங்கள மொழியில் பேசிவிட்டுதான், நான் அவற்றை எனது சொந்த முகநூல் தளத்தில் பதிவிடுகின்றேன்.

எனது உத்தியோகபூர்வ முகநூல், ருவிட்டர் பொதுவெளி தளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என நான் நன்கு கற்று அறிந்துள்ளேன். இப்போது என்னைப் பார்த்துதான் பல பொது மனிதர்கள் இதை கற்று வருகின்றார்கள்.

இதைவிட நெருக்கடியான 2005 – 2010 காலத்திலேயே இன்றைய ஜனாதிபதி, பலமிக்க பாதுகாப்பு செயலாளராக இருந்தவேளையிலேயே தெருவில் இறங்கி போராடியவன், நான்..!

ஆகவே, அறிவாளிகள் எனத் தம்மை தாமே நினைத்துக்கொண்டு பொதுவெளியில் உளறிக்கொட்ட வேண்டாம். என்னை என் வழியில் போக விடுங்கள்…!” –என்று அந்த முகநூல் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி பொது உயர்தரப் பரீட்சை மாணவர்களின் அடிப்படை உரிமை மீறல் மீதான மனு ஒத்திவைப்பு !

புதிய பாடத்திட்டத்திற்கும், பழைய பாடத்திட்டத்திற்கும் வேறுபாடுகள் காணப்படுவதாகவும், இதனால் மதிப்பெண்களுக்கு இடையே பாரிய வித்தியாசங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டி 2019 ஆம் ஆண்டில், உயர்தர பரீட்சைக்கு, புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றி சித்தியடைந்த மாணவர்களினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு, புவனேக அலுவிஹாரே, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோத்தாகொட ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் தமக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதாகவும், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தாம் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும், பெளதீகவியல் மற்றும் பொறியயில் பீடங்களுக்கு அரச பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதில் அநீதி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு பாடத்திட்டங்களுக்கும் சமனான அல்லது நியாயமான Z மதிப்பெண்களை வழங்கும் வகையில், உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன். இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, பெளதீகவியல் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, இடைக்கால தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் ஜீ.எல் பீரிஸ், கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 25 பேர், மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரலில் மாகாணசபை தேர்தல் !

பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமருக்கும், ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விபரங்கள் ஆராயப்பட்டன.

இந்தச் சந்திப்பு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என மாகாண சபை அங்கத்தவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக பிரதமரிடம் பேசியிருக்கின்றோம்.கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார்” – மட்டக்களப்பில் எம்.ஏ.சுமந்திரன் !

திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (11.12.2020) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

IMG 8426

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரனின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம்,இரா.சாணக்கியன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம்,இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்,தவிசாளர்கள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

“திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று மூன்று வழக்குகள் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது அதில் ஒரு வழக்கில் நானும் ஏனைய இரு வழக்கில் சட்டத்தரணி சயந்தனும் ஆஜராகினோம்.

இதில் ஒன்று கன்னியாவெண்ணீருற்று பகுதில் பிள்ளையார் கோவில் ஒன்றினை அமைப்பது தொடர்பான வழக்கு.அங்கு பௌத்த தாதுகோபுரம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றது.அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவு ஒன்றினைப்பெற்றிருந்தோம்.இன்று அரச தரப்பு அங்கு பிள்ளையார் கோவில் ஒன்றை கட்டுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்கள்.தாதுகோபுரத்தினை கட்டமாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்குவதற்கு தயார் எனவும் தெரிவித்திருந்தார்கள்.

எங்கே அந்த பிள்ளையார் கோவிலை கட்டுவது தொடர்பான இடத்தினை காண்பித்தார்கள் ஆனால் அந்த இடம் எங்களுக்கு ஏற்புடையதாகயிருக்கவில்லை,ஆகையினால் நாங்கள் காண்பிக்கின்ற இடத்தினை அவர்கள் பார்வையிட்டு அங்கு தொல்பொருட்கள் இல்லையென்ற உறுதிமொழியை வழங்கிய பின்னர் அங்கே கட்டலாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இது பாரிய முன்னேற்றம்.இந்த வழக்கு பெப்ரவரி 03ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நில அளவையிலாளர்கள் நாங்கள் காண்பிக்கும் இடங்களுக்கு சென்று அது பொருத்தமான என்பதை பார்த்து அனுமதியை வழங்கிய பின்னர் அங்கு பிள்ளையார் ஆலயம் கட்டப்படும்.

மற்றைய இரண்டு வழக்குகளும் தென்னமரவாடியிலும் திரியாயிலேயும் விவசாயிகளின் காணிகளை அபகரிப்பதை தடுத்து நாங்கள் இடைக்கால தடையுத்தரவினைப்பெற்றிருந்தோம்.அந்த வழக்கில் சட்டத்தரணி சயந்தன் அவர்கள் ஆஜராகியிருந்தார்.அங்கும் அந்த இடைக்கால தடையுத்தரவினை நீடிக்ககூடாது என்று அரசதரப்பு வாதிட்டது.அந்த வயல்காணிகளுக்குள்ளும் தொல்பொருட்கள் இருப்பதாக கூறினார்கள்.நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.இடைக்கால தடையுத்தரவினை நீடித்திருத்திருக்கின்றது.விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்யமுடியும்.

அதேவேளையில் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் எங்காவது தொல்பொருட்கள் இருப்பதை அடையாளம் காட்டினால் அவர்கள் விவசாயிகளுக்கு முன்னறிவித்தல் வழங்கி அந்த அடையாளம் காட்டுதலை செய்யவேண்டும்.அவ்வாறு செய்தால் விவசாயிகளும் அந்த பொருட்களை சேதமின்றி பாதுகாப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.அந்த வழக்கும் பெப்ரவரி 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாநகரசபை வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக சில தரப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் வேறு பலரும் சேர்ந்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கின்றோம்.

நாங்கள் இரண்டாம் வாசிப்பின்போதும் வாக்களிக்கவில்லை. மூன்றாம் வாசிப்பு என்பது ஒரு சம்பிராயபூர்வமான விடயமாகும். இரண்டாம் வாசிப்பே முக்கியமானதாகும். இந்த நாட்டிலே சென்ற வருடமும் வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்குள் கொவிட்-19 பிரச்சினை வந்திருக்கின்றது. அரச நிதியை உபயோகிப்பதில் பலவிதமான சிக்கல்கள் இருந்தது. ஆகவே இந்த நாட்டிற்கு வரவு செலவுத் திட்டமொன்று அத்தியாவசியமாகும்;.

சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலே பல குறைபாடுகள் இருக்கின்றன. அது குறித்து வரவுசெலவுத் திட்ட விவாதத்திலே வெளிப்படையாகவே பேசியிருக்கின்றோம். எங்கள் எதிர்ப்பை காண்பித்திருக்கின்றோம். ஆனால் வரவுசெலவுத் திட்டம் ஒன்று தேவை. ஆகவே எதிர்த்து வாக்களிக்கவில்லை. அதேவேளை அதற்கு ஆதரவாகவும் வாக்களிக்க முடியாது. ஏனென்றால் அதிலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் விஷேடமாக வடக்கு கிழக்கு சம்பந்தமான ஒதுக்கீடுகளில் பாரபட்சம் இருந்தது. நாங்கள் அதனை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். ஆகவே இரண்டாம் வாசிப்பின்போது நாங்கள் ஒதுங்கியிருப்பதாக எடுத்த தீர்மானத்தையே மூன்றாம் வாசிப்பின்போதும் நாங்கள் நடைமுறைப்படுத்தினோம்.

இதற்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களை கொவிட் காலத்திலே நாங்கள் சந்தித்தபோது அவருக்கு தமிழ் அரசியல் விடுதலை குறித்து பேசியிருந்தோம். பெயர்ப்பட்டியல் கேட்டிருந்தார். அதனை கொடுத்திருந்தோம். அது குறித்து கவனம் செலுத்துவதாக சொல்லியிருந்தார். இன்னும் அவர்கள் எதுவும் செய்யவில்லை.

தற்போது கொடுக்கப்பட்டிருக்கின்ற கடிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு.கஜேந்திரன், நீதியரசர் விக்னேஸ்வரன், மனோகணேசன் மற்றும் அவருடைய கட்சியினர் ஆகியோரும் சேர்ந்து கைச்சாத்திட்டு கொடுக்கப்பட்ட ஒரு மகஜராகும். அதனை நாங்கள் பிரதமரிடம் கொடுத்தபோது ஜனாதிபதியுடன் கலந்து பேசி முடிவொன்றை சொல்வதாக கூறியிருந்தார்.

மயிலந்தனை,மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களெல்லாம் தயாராக இருக்கின்றது. அது ஒரு எழுத்தாணை வழக்கு. குறித்த எழுத்தாணை பெறுவதற்கு முன்னர் கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட வேண்டும். அநேகமாக நாளை கோரிக்கைக் கடிதம் அனுப்பப்படும். அதற்குப் பின்னர் ஒருவாரகால அவகாசம் கொடுத்து நாங்கள் வழக்கை தாக்கல் செய்யலாம்.

தொடர்ச்சியாக நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு இந்த விடயங்களை அறிவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். நாங்கள் அறிவிப்பதற்கு முன்பதாகவே அவர்கள் அழைப்பினை மேற்கொண்டு இது குறித்து எங்களிடம் விசாரிப்பார்கள். ஆகையால் எல்லா விடயங்கள் சம்பந்தமாகவும் முழுமையான அறிவித்தல்கள் சர்வதேச சமூகத்திற்கு தொடர்ச்சியாக எங்களால் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

மட்டக்களப்பிற்கு நாங்கள் வந்ததன் நோக்கம் மாநகரசபை பாதீட்டை சுமுகமாக ஒரு கட்சியாக சேர்ந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்காகவே நாங்கள் இருவரும் இங்கு வந்துள்ளோம்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் 31 பேருக்கு கொரோனா – முடக்கப்படும் அபாயத்தில் யாழ்..?

யாழ்ப்பாணத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 24 பேர் மற்றும், நேற்று தொற்று கண்டறியப்பட்டவரின் உறவினர்கள் ஏழு பேருக்கு இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (12.12.2020) காலை பெறப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 31 பேருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மருதனார் மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும், உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும் 38 வயதுடைய குடும்பத் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த புதன்கிழமை எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.

இந்த நிலையில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. அதன் போதே 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“நீங்கள் கொலை செய்து பழக்கப்பட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் பச்சை குழந்தைகளை கொன்றீர்கள். உங்களிடம் இரக்கம் இருக்குமா?” – ஜனசாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து மௌலவி போராட்டம் !

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமைக்கு எதிராக வவுனியாவை சேர்ந்த  மௌலவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக காலை 10.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மௌலவி ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது,

கொரோனா ஒரு கொடிய உயிர் கொல்லி நோயல்ல, பன்றி இறைச்சியில் உள்ள வைரசைவிட கொரோனாவில் கொடிய வைரஸ்கள் கிடையாது.  காய்சலும், தலையிடியும், சளியும்  எப்படி ஒரு மனிதனை கொல்லும். கொரோனாவுக்கு தீர்வு உடல்களை எரிப்பதா? ஏன் இந்த அநியாயத்தை முஸ்லீம்களுக்கு செய்கிறீர்கள் இன்று வரை இறப்பவர் கொரோனாவினால் தான் இறக்கின்றார் என்று எந்த ஒரு வைத்தியரும் நிரூபிக்கவில்லை. யார் இந்த அரசுக்கு பிடிக்காதோ? அவர்களிற்கு கொரோனா என சொல்கிறார்கள்.

எனவே  பரிசோதனைக்கு செல்பவர்கள் உங்களிற்கான பரிசோதனை அறிக்கையை வைத்தியர்களிடம் கேளுங்கள். இலங்கையில் இறந்த ஒருவருக்கும் கொரோனா இல்லை. வைத்திய துறையிலேயே இருக்கும் அறிவார்ந்த வைத்தியர்கள் இந்த அதிகாரிகளிற்கு பயந்து பின்னால் நிற்கின்றார்கள். சாணக்கியன் நேர்மையாக கதைத்தார் இறைவன் அவருக்கு அருள் புரிவார். கூலிப்படைகள் அவருக்கு எதிராக கதைத்தார்கள். அரசியல் வாதிகள் கைப் பொம்மைகளாக இருக்கிறார்கள். ஆளும் கட்சியிலும்  நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள் மிகவிரைவில் அவர்கள் வெளியிலே வருவார்கள்.

முள்ளிவாய்க்காலில் உரிமை கேட்டவர்களை மெனிக்பாமில் அடைத்தீர்கள் இது நியாயமா?, தமிழனும், முஸ்லீமும் கதைத்தால் தீவிரவாதி. ஆட்சி வெறி, அதிகார வெறி அரசியல் துஷ்பிரயோகம் ஆகியவையே உங்களை இப்படி செய்விக்கின்றது.

20 நாள் குழந்தையை எரித்தீர்கள்.  நீங்கள் கொலை செய்து பழக்கப்பட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் பச்சை குழந்தைகளை கொன்றீர்கள். உங்களிடம் இரக்கம் இருக்குமா? தமிழ்மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள் மூன்று இனத்தையும் அழித்த கருணா உங்களுக்கு நண்பன்  உரிமைக்காக போராடிய பிரபாகரன் பயங்கரவாதி என்றீர்கள் என தெரிவித்தார்.