December

December

பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்டவருக்கும் கொரோனா – அச்சத்தில் அமெரிக்க மக்கள் !

கொரோனா வைரசை ஒழிப்பதில் 95 சதவீதம் செயல்திறன் கொண்ட பைசர் நிறுவத்தின் தடுப்பூசி முதற்கட்டமாக ஐக்கிய அமெரிக்காவில் முன்கள பணியாளர்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பைசர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட தாதி ஒருவருக்கு தடுப்பூசி போட்ட ஒரு வாரத்துக்கு பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மேத்யூ என்ற 45 வயதான நர்ஸ் கடந்த 18-ந்தேதி தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டார். தடுப்பூசி போட்டதால் கையில் ஒரு நாளைக்கு புண் இருந்ததை தவிர வேறு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தடுப்பூசி போட்ட 6 நாட்களுக்கு பிறகு மேத்யூவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

தடுப்பூசி போட்ட ஒரே வாரத்தில் தாதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் மீறப்படும் ஊடகசுதந்திரம் – கொரோனாவைரஸ் பரவல் தகவல்களை உலகுக்கு வெளிப்படுத்திய பெண் பத்திரிகையாளருக்கு 04 ஆண்டு சிறை !

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியபோது சீனாவின் சில பத்திரிக்கையாளர்கள் வுகான் நகருக்கு சென்று வைரஸ் தொடர்பான தகவல்களை சேகரித்து உலகிற்கு சமூக வலைதளம் மூலம் வெளிக்காட்டினர்.
ஆனால், அவ்வாறு வைரஸ் தொடர்பான தகவல்களை உலகிற்கு வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர்களை சீன அரசு கைது செய்துள்ளது.

அந்த வகையில், ஜாங் ஜான் என்ற 37 வயது சீன பெண் பத்திரிக்கையாளரை சீன அரசு கடந்த ஆண்டு இறுதியில் கைது செய்து சிறையில் அடைத்தது. அதில் கொரோனா பரவல் குறித்த உண்மையை வெளியிட்டதற்காக,
குழப்பத்தை தூண்டியதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

விசாரணை முழுமையடைந்து இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை ஷாங்காய் நீதிமன்றம் வழங்கியது. அதில் ஜாங் ஜான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவும், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும்ம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து ஜாங் ஜான் மேல் முறையீடு செய்ய இருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.இதேபோல், சீனாவில் கொரோனா பரவல் குறித்து தனிப்பட்ட முறையில் செய்திகளை வெளியிட்ட பலரும் மாயமாகியுள்ள நிலையில், முதல் நபராக ஜாங்  விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பாராளுமன்றில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் “பிரெக்ஸிட்”  வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றம் !

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து ஓராண்டுக்கு முன்பே வெளியேறியபோதும், இருதரப்பிலும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது.

ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான காலக்கெடு முடியும் கடைசி நேரத்தில் ஒருவழியாக “பிரெக்ஸிட்” வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் 80 பக்கங்களை கொண்ட இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 521 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 73 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்தார்கள்.

இதையடுத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் “பிரெக்ஸிட்”  வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறியது. இதனையடுத்து ‘பிரெக்ஸிட்’ வர்த்தக ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்டார்.  இதனை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ராணி 2-ம் எலிசபெத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ராணி அதில் கையெழுத்திட்டதும் அது சட்டம் ஆக்கப்படும்.

“அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றுள்ளதனால் நாட்டில் ஜனநாயம் மீறப்படுகின்றது” – ரஞ்சித் மத்தும பண்டார

“அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றுள்ளதனால் நாட்டில் ஜனநாயம் மீறப்படுகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

“தேர்தலுக்கு அஞ்சி அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றன்றது. ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. கூட்டணி  விடயம் தொடர்பிலும் நாம்  கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். ஆனால் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்தில் தோல்வியமைந்துள்ளமை தற்போது தெளிவாகின்றது.

அதனாலேயே மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு அஞ்சுகின்றது.  தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றுள்ளதனால் ஜனநாயம் மீறப்படுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“பேசுவதெனில் பலதைப்பேசலாம் . ஆனால் நாம் பொறுப்பான அரசியல்வாதிகள்” – சுமந்திரனுக்கு மாவை பதில் !

தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோதமான மாவை சேனாதிராஜாவின் செயற்பாட்டினால்தான் யாழ். மாநகர சபையை இழந்தோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியதுடன் இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் மாவைக்கு நேற்று(30.12.2020) அவர் அனுப்பிவைத்திருந்தார்.

அந்தக் கடிதம் தொடர்பில் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கும் போது ,

“எம்.ஏ.சுமந்திரனிடமிருந்து மின்னஞ்சலில் கடிதமொன்று வந்துள்ளது என எனக்குச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் அதை நான் படிக்கவில்லை. ஊடகங்கள் தரப்பிலிருந்து விசாரித்ததில் சில உள்ளடக்கங்களை அறிந்துள்ளேன்.

கட்சியின் உள்ளக விடயங்கள், உள்ளுக்குள்ளேயே பேசப்பட வேண்டியவை. அந்த ஒழுக்கத்தை நான் பின்பற்றுகின்றேன். ஆனால், சுமந்திரன் கட்சி தலைமைக்கு எதிராக இரண்டாவது முறையாகப் பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார். அது தவறானது. கட்சி நடவடிக்கைக்குரியது.

நாமும் பேசுவதெனில் பலதைப் பேசலாம். ஆனால், நாம் பொறுப்பான அரசியல்வாதிகள். அதனால் இன்று காலை கட்சிக்குள் இது பற்றி ஆலோசித்து, பதிலளிக்கத்தக்க விடயம் என்றால் உரிய முறையில் பதிலளிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்.மாநகர முதல்வருக்கான தேர்தலில் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்டை விட ஒரு மேலதிக வாக்கைப் பெற்று மேயராக தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் வி.மணிவண்ணனுக்கு ஆதரவளித்த தங்களுடைய கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவாக ஆதரவு வழங்கி கட்சியின் கொள்கைக்குத் துரோகம் செய்த யாழ்ப்பாண மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்குத் துரோகம் இழைத்து, யாழ்ப்பண மாநகர சபையின் எமது கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 10 பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது கட்சியிலிருந்து நீக்குவோம். இந்த நிலைப்பாட்டில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்”  என்றார்.

“வடக்கு – கிழக்கு இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் யோசனையை அரசு குப்பையில் வீச வேண்டும்” – அரசிடம் சரத் வீரசேகர வேண்டுகோள் !

“வடக்கு – கிழக்கு இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் யோசனையை அரசு குப்பையில் வீச வேண்டும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு – கிழக்கு இருத்தல் வேண்டும் என்று புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய இந்த யோசனை தொடர்பாக குறிப்பிடும் போதே  அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டாலும் அவர்களை உயிர்ப்பிக்கும் வகையிலும், அவர்களின் கனவை நனவாக்கும் வகையிலுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

மாகாண சபை முறைமை மூலம் தனி இராஜ்ஜியத்தை நடத்தலாம் என்ற எண்ணத்துடனேயே கூட்டமைப்பினர் உள்ளனர். அதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பூமி என்ற மமதையுடனும், அந்த இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்ற நப்பாசையுடனும் கூட்டமைப்பினர் உள்ளனர்.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவுடன் தொடர்ந்து செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குச் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற யோசனையை அரசு தூக்கிக் குப்பையில் வீச வேண்டும்.

இதன்காரணமாகவே மாகாண சபை முறைமைக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன். அதுதான் மாகாண சபைத் தேர்தல் வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றேன்” – என்றார்.

யாழ்.மாநகரசபை தலைமைப்பதவி கூட்டமைப்பின் கையை விட்டு சென்றதன் எதிரொலி – மாவையின் தூரநோக்கற்ற முடிவுகளை கண்டித்து சுமந்திரன் கடிதம் !

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னால்டை விட ஒரு மேலதிக வாக்கைப் பெற்று மேயராக தெரிவாகியுள்ளார்.

இந்நிலையில் யாழ்.மாநகர சபை தலைவருக்கான வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் தோல்விக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் செயற்பாடுகளே காரணம் எனக்கூறி கடிதம் ஒன்றை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் அக்கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இன்று யாழ். மாநகரசபை மேயர் தெரிவு நடந்த கையோடு இந்தக் கடிதத்தை அவர் அனுப்பி வைத்திருக்கின்றார். அந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு;

“இன்று யாழ் மாநகர சபை மேயர் தேர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. வரவு-செலவு திட்ட முன்மொழிவில் இரண்டு தடவைகள் தோல்வியுற்ற காரணத்தால் எமது மேயர் பதவி இழந்ததை அடுத்து நடந்த நிகழ்வுகளை இங்கே வரிசைப்படுத்த விரும்புகிறேன்:

19/12/20 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் சந்தித்ததை அடுத்து, வீட்டுவாசலில் வைத்து யாழ்.மாநகரசபைக்கு புதிய மேயர் வேட்பாளராக வேறொருவரை நியமிப்பதே உசிதம் என்றும் அதற்குப் பொருத்தமானவர் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சொலமன் சிறில் என்பது என்னுடைய கருத்து என்பதையும் கூறினேன்.

21/12/20 அன்று நீங்கள் எனக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து, நான் சொன்ன கருத்தோடு நீங்கள்உடன்படுவதாகவும் இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறிதரனின்கருத்தும் திரு. சொலமன் சிறில் என்பதே என்றும் சொன்னீர்கள். நீங்கள் யாழ்ப்பாணம் செல்வதாகவும் அங்கே உறுப்பினர்களோடு நடாத்தும் கூட்டத்திற்கு என்னை வரமுடியுமா? என்றும் கேட்டீர்கள். கட்சியின் அரசியல் அமைப்பு யோசனைகள் நிறைவு செய்யும் வரை என்னால் வரமுடியாது என்றும் திருசொலமன் சிறில் வேட்பாளராக வருவதில் எனக்கு உடன்பாடு உள்ளது என்றும் கூறினேன். எப்படியாயினும் இறுதிமுடிவு எடுப்பதற்கு முன்பதாக என்னோடு திரும்பவும் பேசுவதாக கூறியிருந்தீர்கள்.

எட்டு நாட்களுக்குப்பிறகு நேற்றைய தினம் 29/12/2020 காலையில் நீங்கள் எனக்குத்தொலைபேசி அழைப்பெடுத்து மாநகரசபை உறுப்பினர்களில் அநேகமானவர்கள் திரு.ஆர்னோல்டையே திரும்பவும் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று விரும்புவதாகவும், இறுதித்தீர்மானம் எடுப்பதற்காக காலை 10.30 மணிக்கு கூட்டம் ஒன்று நடத்தப்போவதாகவும் சொன்னீர்கள்.

நான் கொழும்பில் இருந்து பிரயாணமாகி வந்துகொண்டிருக்கின்றேன் என்றும் மதியம் 1 மணிக்குப்பின்னரே யாழ்ப்பாணத்திற்கு வந்தடைவேன் என்றும் அதற்குப்பின்னர் கூட்டத்தை நடாத்தினால் நான் கலந்து கொள்வேன் என்றும் உங்களுக்கு நான் அறியத்தந்தேன். அதே தொலைபேசி உரையாடலில், புதிய மேயர் வேட்பாளர் சம்பந்தமாக எனது நிலைப்பாட்டைத் தெளிவாக திரும்பவும் கூறினேன்:

வரவு செலவுத்திட்டம் தோல்வியுற்றால் இராஜிணாமா செய்ய வேண்டியது ஒரு ஜனநாயக விழுமியம் மட்டும்அல்ல, அது ஒரு ஜனநாயக மரபாகவும் இருந்திருக்கின்றது. இந்த மரபு பின்பற்றப்படாத காரணத்தால் தான் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு “இராஜிணாமா செய்தவராக கருத வேண்டும்” என்று அது ஒருசட்டத்தின் தேவைப்பாடாகவும் ஏற்படுத்தப்பட்டது. சட்டத்தின் செயற்பாட்டினால் இராஜினாமா செய்தவர் மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிடுவது சட்டத்திற்கு முரணானது மட்டும் அல்லாமல் ஜனநாயக விழுமியங்களையும் மீறுகின்ற செயலாகும். ஆகையால் இராஜினாமா செய்தவரான ஆர்னோல்ட்டைத் தவிர வேறொருவரைத்தான் எமது வேட்பாளராகதெரிவு செய்ய வேண்டும் என்பதை திட்டவட்டமாக சொன்னேன்.

வரவு செலவுத்திட்டத்தின் தோல்வியின் காரணமாக இராஜினாமா செய்தவர்களை மீளவும் வேட்பாளர்களாக நிறுத்தினால் தமது கட்சி அதை எதிர்க்கும் என்றும், அப்படி அல்லாது வேறு எவரையேனும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நிறுத்தினால், தாம் ஆரதவு கொடுப்போம் என்றும் சில நாட்களுக்கு முன்னர் தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனித்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இவ் அறிவிப்பு எமது கட்சி வேட்பாளரை வேறு கட்சியினர் தெரிவு செய்யும் செயற்பாடு அல்ல. நான் மேற்சொன்ன ஜனநாயக விழுமியத்தின் அடிப்படையிலான அறிவிப்பே அது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் கருத்துக்கு மாறாகவும், நீங்கள் எனக்குச் சொன்ன தங்களது சொந்தக்கருத்துக்கே மாறாகவும், தன்னிச்சையாக நேற்று காலை 10.30 மணிக்கு இலங்கைத்தமிழரசுக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யாழ்.மாநகர சபை மேயர் பதவிக்கு, ஏற்கனவே இராஜினாமா செய்தவரான ஆர்னோல்ட்டையே வேட்பாளராக அறிவித்திருந்தீர்கள்.

உங்களுடைய மேற்சொன்ன, தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம்.

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ் மாநகர சபை தலைமையை எமது கட்சி இழந்தமைக்கு மேற்சொல்லப்பட்ட தங்களது நடவடிக்கைகளே காரணமாகும் என்பதையும், இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் இத்தால் பதிவு செய்கின்றேன்.” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு  !

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.

அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்டை விட ஒரு மேலதிக வாக்கைப் பெற்று மேயராக தெரிவாகியுள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வில், முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அறிவிப்பு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நியமன உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன், 21 வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவானார். எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஆர்னல்ட் 20 வாக்குகளைப் பெற்றார்.

தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

“ஏனைய சமூகத்தின் ஆதங்கங்களை புரிந்து உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என அரசுடன் பேசி வருகின்றோம்” – காதர் மஸ்தான்

“ஏனைய சமூகத்தின் ஆதங்கங்களை புரிந்து உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என அரசுடன் பேசி வருகின்றோம்” என மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(29.12.2020) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“185 நாடுகளில் இறந்தவர்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்து இங்குள்ள சுகாதார பிரிவினர் அடக்கம் செய்தாலும் வைரஸ் பரவும் எனக் கூறுகிறார்கள். அது ஒரு பெரும் பிரச்சனை. இது பல்லின நாடு. இங்கு பல இனங்கள் இருக்கிறது. அவர்களுடைய மத சுதந்திரத்தை வழங்க வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வது தான் மரபு. அந்த உரிமை கிடைக்க வேண்டும். கொரோனா ஏற்பட்டத்தில் இருந்து இறந்தவர்களை எரிப்பதால் அந்த சமூகம் பாதிப்படைந்துள்ளது. அவர்களது மதக் கடமைக்கு பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

நாங்கள் ஆளும் தரப்பு எம்.பி என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம். இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணத்துவ குழு மற்றும் அரச தலைவர்களுடன் பேசி வருகின்றோம். இந்த நிலமைகளை மாற்றி அடக்கம் செய்யும் நிலைக்கு கொண்டு வர முயற்சிகிறோம். அதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தவர்கள் இனியும் காலத்தை இழுத்தடிக்க முடியாது என்பதால் அரசாங்கத்திற்கு உணர்த்துவதநற்காக ஜனநாயக ரீதியாக போராடுகிறார்கள். மக்கள் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. முழுமையாக இஸ்லாமியரும், கிறிஸ்தவரும், பௌத்த மக்களின் ஒரு பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் கூறும் விடயங்களை பார்க்கிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் பார்க்கவில்லை என்பது தான் எமது ஆதங்கம். ஏனைய சமூகத்தின் ஆதங்கங்களை புரிந்து உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என அரசுடன் பேசி வருகின்றோம். எனவே எதிர்காலத்தில் மையங்களை அடக்கம் செய்யும் நிலைமை வரும் என நம்புகின்றோம் என்றார்.