06

06

கொரோனாத்தொற்று அச்சம் – தனக்குத்தானே மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாய் !

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தபுரம் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் நித்தியானந்தன் பாசமலர் (35) என்பவர் தனக்குத்தானே மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக அப்ககுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

அண்மையில் இவரின் குடும்பத்தார் அவர்களது உறவினர் வீடான அனுராதபுரத்திற்கு சென்று திரும்பிய நிலையில் அவரின் குடும்பத்தினரை பொது சுகாதார பரிசோதகர்களால் பதின்நான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் வீட்டின் அறையில் கடந்த 28ம் திகதி தனக்குத்தானே மண்ணெண்னையை ஊற்றி தீ மூட்டிய நிலையில் சம்பவத்தை கண்ட அவரின் கணவர் தீயில் இருந்து மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 4ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் மழை – யாழில் 74ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு !

யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 22 ஆயிரத்து 620 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனர்த்த நிலைமைகளின்போது இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், யாழ். மாவட்டத்தில் தற்போது 21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 358 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 340 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 93 வீடுகள் முழுமையாகவும், இரண்டாயிரத்து 969 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாக என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

ஹார்டிக் பாண்ட்யா அபாரம் – அவுஸ்ரலியாவை பழிவாங்கியது இந்தியா !

அவுஸ்ரேலியாவுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்கின்றது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்திருந்த இந்திய அணி மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 போட்டியில் ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இன்று களம் கண்டது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகள் இழப்புக்கு 194 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மத்தேயு வேட் 58 ஓட்டங்களையும் ,ஸ்டீவன் ஸ்மித் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

195 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 .4 ஓவர்களில் வெற்றியிலக்கைக் கடந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 52 ஓட்டங்களையும் விராட் கோலி 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 பந்தில் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றுள்ளது.

இந்த நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹார்டிக் பாண்ட்யா தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 2 க்கு 0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் முள்ளங்கி அறுவடை – நாசாவின் முயற்சி வெற்றி !

பூமியில் இருந்து 408 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஐப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நிறுவியுள்ளன.

அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் பூமியில் இருந்து உணவை கொண்டு சென்றாலும் அதை நீண்ட நாட்களுக்கு உண்ண முடியாது. இதனால் விண்வெளி வீரர்கள் விட்டமின் சத்துக்கள் உள்ள மாத்திரைகளையே உணவாக சாப்பிடுகிறார்கள்.

இந்த நிலையில் புவி ஈர்ப்பு விசை சிறிதும் இல்லாத விண்வெளி நிலையத்தில் காய்கறி செடிகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். விண்வெளி வீரர்களுக்கு வழங்குவதற்காக இந்த முயற்சியை மேற்கொண் டனர்.

இதற்காக குளிர்சாதன பெட்டி போன்று இயந்திரத்தை உருவாக்கி, செடிகள் வளருவதற்கு ஒக்சிஜன் மற்றும் செயற்கை சூரிய ஒளியை அளிக்கும் கருவி ஆகியவற்றை இணைத்தனர்.

அந்த இயந்திரத்துடன் பூமியில் உள்ள மண், உரம், சில செடி வகைகள் ஆகியவற்றை விண்வெளி வீரர்கள் எடுத்துக்கொண்டு கடந்த மாதம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். பின்னர் செடிகளை இயந்திரத்துக்குள் வைத்து தண்ணீர் ஊற்றி விஞ்ஞானிகள் பராமரித்தனர். இதில் பல செடிகள் பாதியிலேயே அழுகிவிட முள்ளங்கி செடி மட்டும் 27 நாட்களுக்குள் முழுவதுமாக வளர்ந்தது. இதையடுத்து அந்த முள்ளங்கி செடியை விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் அறுவடை செய்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை - நாசாவின் முயற்சி வெற்றி!! -  Live LK

இந்த வீடியோவை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் காய்கறியை பயிரிட்டு அறுவடை செய்வது இதுவே முதல் முறை.

பிரான்சின் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம் !

பிரான்சில் மோசமான நோக்கத்துடன் போலீசாரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் போலீசாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கார் மற்றும் தடுப்புகளை கொளுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த மசோதாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Protesters hold a banner reading 'For our freedom' and show a defaced portrait of Paris police prefect Didier Lallement during a demonstration in Paris against the security law [Francois Mori/AP]
இந்தநிலையில் இந்த பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் போலீசாருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டம் போராக மாறிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கார், மற்றும் தடுப்புகளுக்கு தீ வைத்து கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

குடும்ப வறுமை காரணமாக 05 குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்த தந்தை – பஞ்சாப்பில் சோகம் !

பாகிஸ்தானின் பஞ்சாப்பில் குடும்ப வறுமை காரணமாக தன்னுடைய 05 குழந்தைகளையும் கால்வாயில் தள்ளி தந்தை ஒருவர் கொலை செய்துள்ளமையானது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வந்துள்ளதாவது,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டம் படோகி பகுதியை சேர்ந்தர் முகமது இப்ராகிம். இவருக்கு நடியா (7 வயது), ஜைன் (5 வயது), ஃபிசா (4 வயது), தஷா (3 வயது), அகமது (1 வயது) என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளது. இதற்கிடையில், முகமது இப்ராகிம் கடந்த சில நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்ததால் போதிய வருமானம் இல்லாமல் அவரது குடும்பம் வறுமையால் திணறிவந்தது. இதனால், முகமதுக்கும் அவரது மனைவிக்கும்
இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வறுமை காரணமாக முகமதுக்கும் அவரது மனைவிக்கும் இடையே இன்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்திற்கு பின்னர் முகமதுவின் மனைவி சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மனைவியுடனான வாக்குவாதத்தால் கோபமடைந்த முகமது தனது 5 குழந்தைகளையு அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கால்வாய்க்கு சென்றுள்ளார்.
வறுமை மற்றும் மனைவியின் மீது இருந்த கோபத்தில் தனது 5 குழந்தைகளையும் முகமது கால்வாய்க்குள் வீசியுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற முகமதுவின் மனைவி சிறிது நேரத்தில் வீட்டில் வந்து பார்த்தபோது கணவர் மற்றும் குழந்தைகளை காணவில்லை என்பதால் சந்தேகமடைந்து அருகில் உள்ள கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு கணவர் மட்டும் நின்று கொண்டிருந்ததை கவனித்த அவர் குழந்தைகள் பற்றி கேட்டுள்ளார். அதற்கு குழந்தைகளை கால்வாய்க்குள் வீசிவிட்டதாக கணவர் கூறியதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கால்வாய்க்குள் வீசப்பட்ட 5 குழந்தைகளையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் ஃபிசா (4 வயது) மற்றும் அகமது (1 வயது) ஆகிய இரண்டு குழந்தைகளின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டது. எஞ்சிய குழந்தைகளின் நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை. இதையடுத்து, வறுமையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெற்ற குழந்தைகள் 5-யும் கால்வாயில் வீசிக்கொன்ற தந்தை முகமதுவை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சகோதரனை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சகோதரி !

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம – அட்டுலுகம பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சகோதரியே இந்த கொலையை செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கூரிய ஆயுதமொன்றினால் தனது சகோதரனை குத்தி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் 31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொலைக்கான காரணம் என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“ஆயிரம் ரூபாய் சம்பளம் எனக்கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம்” – ஹட்டனில் போராட்டம் !

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் இந்த அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கோரி ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஹட்டன் நகரில் இன்று (06.12.2020) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இதன் போது, ஏமாற்ற வேண்டாம், வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உள்வாங்கு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்ற பல்வேறு வசனங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்தி இந்த போராட்டமானது ஹட்டன் நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது.

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, நுவரெலியா மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் மஞ்சுள சுரவீர முன்னெடுத்தார்.

கொரோனா வைரஸ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடைவெளிகளை ஏற்படுத்தி 15 உறுப்பினர்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

“இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை தமிழ் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணமல்ல.அவர்களிடம்  திறமையின்மையே காரணம்” – முத்தையா முரளிதரன்

“இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை தமிழ் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணமல்ல.அவர்களிடம்  திறமையின்மையே காரணம்” என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தனியார் ஊடகமொன்றிற்கு செய்தி வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கருத்து தெரிவித்துள்ள முத்தையா முரளிதரன்,

“வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்களே உள்ளனர். யுத்தம் காரணமாக 30 வருடங்களாக அங்கு கிரிக்கெட் விளையாடப்படவில்லை. யுத்தத்திற்கு முதல் பலர் விளையாடியிருப்பார்கள் எனினும் அப்போது இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்றிருக்காததால் அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்திருக்கலாம்,

அத்துடன் 30 வருடங்களின் பின் விளையாடும்போது அவர்களின் திறமை கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. பயிற்சி, வசதிகள் அங்கு குறைவாக இருந்தது. வீரர்கள் திறமையை காட்டினாலும், நாட்டின் தெற்கு, மத்திய பகுதி வீரர்களை விட குறைவாக இருந்தமையினாலேயே அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது என்றுமுரளிதரன் தெரிவித்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் படி கருத்து வெளியிட்டுள்ள சரத்பொன்செகாவின் கருத்துக்களை கண்டிக்கின்றோம்” – வீ.இராதாகிருஷ்ணன்

“தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் படி கருத்து வெளியிட்டுள்ள சரத்பொன்செகாவின் கருத்துக்களை கண்டிக்கின்றோம்” –  என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், மஹர சிறைச்சாலை சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் எதிரொலிக்கும் என்பதால் அரசாங்கம் அதற்கு பொறுப்புகூறியாகவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தலவாக்கலையில் இன்று (06.12.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படியே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். மக்கள் சார்பில் பாராளுமன்றத்தில் கருத்துகளை கூறுவதற்கும்,உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு தொடர்பில் அல்லாமல் ஏனைய விடயங்களை பேசுவதற்கான அனுமதி அவர்களுக்கு இருக்கின்றது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் துவேசம் கக்கும் உறுப்பினர்களே அதிகம் இருக்கின்றனர். அவ்வாறு துவேசம் பேசும் ஒரு அமைச்சர்தான் கூட்டமைப்பினரை தடைசெய்யவேண்டும் என சொல்கின்றார்.

அவருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. மக்கள் நினைத்தால் மட்டுமே அதனை செய்யமுடியும். அவரின் கருத்தை நாம் கண்டிக்கின்றோம். சரத் பொன்சேகாவும் தமிழ் மக்களின் மனம் புண்படும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதனையும் கண்டிக்கின்றோம்.

பிள்ளையானை விடுதலைசெய்தது எமக்கு பிரச்சினை இல்லை. அவ்வாறு தமிழ் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அப்போதுதான் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது நடைமுறை சாத்தியமாகும். மஹர சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும். இச்சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமை மாநாட்டிலும் எதிரொலிக்கும்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையே தொடர்ந்தது. தற்போது அது அதிகரித்துள்ளது.” -என்றார்.