08

08

அமெரிக்காவின் பாதுகாப்புச்செயலாளராக முதல் ஆபிரிக்க – அமெரிக்கர் கறுப்பினத்தவர் நியமனம் !

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற (ஜெனரல்) லாயிட் ஆஸ்டினை தெரிவு செய்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கறுப்பின பாதுகாப்புச் செயலாளராக லாயிட் ஆஸ்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவியில் லாயிட் ஆஸ்டின் அமர்ந்தால் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆபிரிக்க – அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தை மேற்பார்வையிடும் மத்திய கட்டளைக்கு தலைமை தாங்கிய முதல் கறுப்பின அமெரிக்கர் என்பதும் குறிப்பட்டத்தக்கது.

இங்லாந்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி – உலகின் முதல் தடுப்பு மருந்து 90வயது மூதாட்டிக்கு !

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்ப முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் இன்று (08.12.2020) பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போட்டப்படுகிறது என்ற கேள்வியும், ஆர்வமும் உலகம் முழுவதும் எழுந்தது. அந்த கேள்விக்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
பரிசோதனைகள் தவிர்த்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதல்நபராக 90 வயது மூதாட்டியான மார்க்ரெட் கெனென் என்பவருக்கு போடப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகாரப்பூர்வாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை மார்க்ரெட் கெனென் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து நேரப்படி சரியாக காலை 6.31 மணிக்கு மார்க்ரெட்டுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்கு பின்னர் செலுத்தப்பட உள்ளது.

ஆஸிக்கு ஆறுதல் வெற்றி – தொடரை கைப்பற்றியது இந்தியா !

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில், அவுஸ்ரேலியா அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 5 இலக்குகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மத்தியு வேட் 80 ஓட்டங்களையும் க்ளென் மேக்ஸ்வெல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆஸி.க்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்தியாவுக்கு 187 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வொஷிங்டன் சுந்தர் 2 இலக்குகளையும் நடராஜன் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியால், 20 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 7 இலக்குகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவியிருந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதன்போது இந்திய அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லி 85 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்வெப்சன் 3 இலக்குகளையும் மேக்ஸ்வெல், ஆடம்செம்பா, சீன் அபோட் மற்றும் ஹென்ரிவ் டை ஆகியோர் தலா 1 இலக்குகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலிய அணியின் மிட்செல் ஸ்வெப்சன் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக ஹர்திக் பாண்ட்யா தெரிவுசெய்யப்பட்டார்.

“சம்பந்தரும் சேனாதிராஜாவும் தான் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட காரணமானவர்கள்” – ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு !

“சம்பந்தரும் சேனாதிராஜாவும் தான் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட காரணமானவர்கள்”  என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (08.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“சம்பந்தரும் சேனாதிராஜாவும் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் யுத்தத்தை நிறுத்த விரும்பவில்லை.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்கள். எனவே அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசுக் கட்சியுடன் எந்த காலத்திலும் இணைவதற்கு அனுமதிக்க மாட்டேன். ஆனால் இணைப்பதற்கு அவர்கள் தற்போது முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள். எனினும் நான் உயிருடன் இருக்கும் வரை அந்த முயற்சியை கைகூடாது சம்பந்தரும் சேனாதிராஜாவும் தங்களுடைய பதவிகளை துறக்க வேண்டும்.

ஏனெனில் தமிழ் மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள். தமிழ் மக்கள் இன்றைய நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்கள்தான்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனாவுக்கான சுதேச மருந்து – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் !

சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான மருந்தினைப் பெற்றுக்கொள்ள அதிகமானோர் படையெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியில் அமைந்துள்ள வைத்தியரின் வீட்டில் 15  ஆயிரக்கணக்கான மக்கள்  குறித்த மருந்துகளை கொள்வனவு செய்ய குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்ட நிலையில் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 120 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசினை குணப்படுத்த கூடிய ஆயுர்வேத மருந்து தன்னிடமுள்ளதாக கடந்த வாரம் சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டார தெரிவித்திருந்ததுடன், சுகாதார அமைச்சர் மருத்துவரின் வீட்டிற்கு சென்று மருந்தினை பயன்படுத்தி பார்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை ஒழிக்கும் மருந்தினைப் பெற்றுக்கொள்ள படையெடுக்கும் 15  ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் | Athavan News

“நான் மடு வர அனுமதியளிக்க வேண்டும் என்று பிரபாகரனிடம் கூறினார்கள்.நான், பயங்கரவாதத்தை ஒழித்துதான், மடு தேவாலயத்திற்கு வருவேன் என்று உறுதியளித்தேன்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

“பிரபாகரனிடம் நான் இங்கு வர அனுமதியளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.அன்று நான், பயங்கரவாதத்தை ஒழித்துதான், மடு தேவாலயத்திற்கு வருவேன் என்று உறுதியளித்தேன்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்காவை இன்று (08.12.2020) திறந்துவைத்து உரையாற்றும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் காற்றாலை மின் உற்பத்திப் பூங்கா இன்று திறப்பு

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“ஒரு வேலையை ஆரம்பித்து, அதனை முடிப்பதானது உண்மையில் மகிழ்ச்சியான ஒரு விடயமாகும். இன்று மன்னாரில் அனைத்து வீதிகளும் காபட் செய்யப்படுகின்றன. மடு வீதியை புனரமைத்து நான் வருகைத் தரும்போது, பிரபாகரனிடம் நான் இங்கு வர அனுமதியளிக்க வேண்டும் என்று கூறினார்கள். மத வழிபாட்டில் ஈடுபடக்கூட, பயங்கரவாதிகளிடம் அனுமதிக் கோர வேண்டியிருந்தது. அன்று நான், பயங்கரவாதத்தை ஒழித்துதான், மடு தேவாலயத்திற்கு வருவேன் என்று உறுதியளித்தேன்.

அதேபோன்று, கிராமங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே நாம் மேற்கொண்டோம். எதிரணியினரின் விமர்சிப்புக்கு மத்தியிலும்தான் நாம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டோம். 2015இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால், சரியான வேலைத்திட்டமொன்று இருக்கவில்லை. இதனால்தான் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.அவர்கள் எம்மை பழிவாங்கினார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழவே மக்கள் விரும்புவார்கள். இதனாலேயே எம்மை மீண்டும் ஆட்சிக்கு மக்கள் கொண்டுவந்தார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிறந்து 20 நாட்களில் கொரோனாவால் உயிரிழந்த சிசு – கொழும்பில் சம்பவம்!

பிறந்து 20 நாட்களேயான சிசு குழந்தையொன்று கொரோன வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் சிசு உயிரிழந்துள்ளது.

சிசுவின் உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்காக 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர்” – மனுஷ நாணயக்கார

“குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்காக 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(07.12.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களிடம் மேலும் கூறும்போது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்தாலும் வெற்றியடைந்துள்ளதைப் போலவே காண்பித்துக்கொள்வார்கள். இவர்கள் தோல்வியடைந்தாலும் நாடு தோல்வியடைய நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

பிள்ளையான் மற்றும் சில் துணி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர பசில் ராஜபக்ஷவின் பயணத்தடை நீக்கம் மற்றும் அரச தரப்பிலுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டமை என அரசாங்கத்தினது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மாத்திரமே ஆளுந்தரப்பு வெற்றிகண்டுள்ளது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டை தோல்வியடைச் செய்ய நாம் தயாரில்லை.

இவ்வாறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்கா 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்? தற்போது பல அரச அதிகாரிகள் தானாக பதவி விலகியுள்ளனர். அந்த வெற்றிடங்களுக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொவிட் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உண்மையான மருந்து நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ஆனால் போலியான மருந்துகளால் மக்களால் ஏமாற்ற வேண்டாம். இவ்வாறான தவறுகளை மக்களுக்கு காண்பிக்கும் ஊடகங்களும் நாடு அபாயத்திற்குச் செல்லும் போது பொறுப்பு கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

“இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கொள்கை ரீதியாக நாங்கள் இணங்க மாட்டோம்” – ஜி.எல்.பீரிஸ்

“இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கொள்கை ரீதியாக நாங்கள் இணங்க மாட்டோம்”  என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (08.12.2020) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கல்வி அமைச்சரிடம், பொத்துவில் உப கல்வி வலயம், கல்வி வலயமாக தரமுயர்த்தப்படுமா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “உப கல்வி வலயங்களை உருவாக்குவதற்காக இலங்கை கல்விக் கொள்கையில் எவ்வித அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. அந்தக் கல்விக் கொள்கைகளை நாம் அனுமதிப்பதில்லை என்பதுடன் அதனை முற்றாக நிராகரிக்கிறோம். என்றாலும், கிழக்கு மாகாண சபையால் பொத்துவில் உப கல்வி வலயமொன்று நடத்தப்பட்டுச் செல்வதாக அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசிய மட்டத்தில் உப கல்வி வலயங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் குறித்த உப கல்வி வலயத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகளும் இலங்கை நிர்வாக சேவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அதேபோன்று, உப கல்வி வலயங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் அவ்வாறான உப கல்வி வலயங்களில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரமும் வழங்கப்படாது. சிறிய தேவைகளுக்காக பொத்துவில் பகுதியில் உள்ளவர்கள் அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், புதிய கல்வி மறுசீரமைப்புக் கொள்கையில் புதிய தொழில்நுட்பங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

கல்வி முகாமைத்தும் மற்றும் நிர்வாக முறைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய கல்வி முகாமைத்துவம் மற்றும் நிர்வாக முறைகள் உருவாக்கப்படும். விரைவாக இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆகவே, பொத்துவில் பகுதிக்கு தனியான கல்வி வலயமொன்று உருவாக்கப்படாது. இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறான கருத்திட்டங்களுக்கு அமைய கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கொள்கை ரீதியாக நாங்கள் இணங்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கியமக்கள் சக்தி தீப்பந்தமேந்தி போராட்ம் !

ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்துக்கு எதிராக தீப்பந்தமேந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.

மஹர படுகொலை, ஷானி அபேசேகர விவகரம், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், முகப்புத்தகத்தில் பதி​வேற்றம் செய்தமையால் 50 பேர் கைது செய்யப்பட்டமை ஆகிய விடயங்கள் தொடர்பில் எதிர்ப்பும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

sajith 1