13

13

“அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி ” – அறிவித்தார் ஜனாதிபதி ட்ரம்ப் !

உலகின் பிற எந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் பெருந்தொற்று, அமெரிக்க வல்லரசு நாட்டை பாடாய்ப்படுத்தி வருகிறது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி 1.58 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பாதித்து இருப்பதாகவும், 2.95 லட்சம் பேருக்கும் கூடுதலோனார் பலியாகி இருப்பதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் அங்கு கடந்த மாதம் 3-ந் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போது அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தனது இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் தனது ஒப்புதலை வழங்கி இருப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், “இன்று நமது நாடு ஒரு மருத்துவ அதிசயத்தை சாதித்துள்ளது. நாம் இந்த 9 மாதங்களில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஒரு தடுப்பு மருந்தை வழங்கி உள்ளோம். இது வரலாற்றில் மிகப்பெரிய விஞ்ஞான சாதனைகளில் ஒன்றாகும். இது கோடானுகோடி உயிர்களை காப்பாற்றும். கொரோனா வைரஸ் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வரும். இந்த தடுப்பூசி அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். 24 மணி நேரத்தில் முதல் தடுப்பூசி செலுத்தப்படும்” என கூறி உள்ளார்.

இதேபோன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கமிஷனர் ஸ்டீபன் எம்.ஹான் கூறுகையில், “அமெரிக்காவிலும், உலகமெங்கும் உள்ள எத்தனையோ குடும்பங்களை பாதித்த இந்த பேரழிவு தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல், இந்த தடுப்பூசி” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தடுப்பூசி சோதனையில் நரம்பியல் பாதிப்பு – நிறுத்தப்பட்டது சீன தடுப்பூசி பரிசோதனை !

தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு சீனாவின் சினோபார்ம் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகிறார்கள். அந்த தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பெரு நாட்டில், சீனாவின் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு கைகளை அசைக்க முடியாத அளவுக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்ட எதனையும் இந்தியா செய்யாததால் இந்தியாவினுடைய மாகாணசபை முறைகளும் இங்கு தேவையற்றது” – அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

“எமது நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களனைவரும் ஒரு குடும்பமாக இருக்கவேண்டுமாயின் மாகாணசபை முறை நீக்கப்பட வேண்டும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகவே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது என்பதனாலேயே நான் ஆரம்பத்திலிருந்து அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றேன்.

13 ஆவது திருத்தம் எம்மீது வலுகட்டாயமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, பொதுமக்களைத் தாக்கி, பாராளுமன்ற உறுப்பினர்களை தனியாக வரவழைத்து தான் இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவினால் எம்மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே அவ்வாறு செய்யப்பட்டது.

ஆனால் உண்மையில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் வலுவிழந்து விட்டதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தல், விடுதலைப்புலிகளை தாக்குதல், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துதல் போன்றவை இந்தியாவினால் செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவை எதனையும் இந்தியா செய்யவில்லை.

மாறாக விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக எமது தரப்பிலிருந்து சுமார் 29,000 பேர் மரணமடைந்ததுடன் சுமார் 14,000 பேர் ஊனமுற்றமையால் இனிமேலும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படக்கூடிய நிலையில் இல்லை என்பதே எனது நிலைப்பாடாகும். ஆகவே அந்த ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையும் எமக்குத் தேவையில்லை.

நாம் இலங்கையைத் தனியொரு நாடு என்றே கருதுகின்றோம். அத்தகைய நாட்டில் அனைவருக்கும் பொதுவான தனியொரு சட்டமே இருக்கவேண்டும். ஆனால் மாகாணசபை அமுலில் இருக்கும் பட்சத்தில் 9 மாகாணங்களுக்கும் வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் வெவ்வேறான சட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

அவ்வாறெனின் இது ‘ஒருமித்த நாடாக’ இருக்காது எமது நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களனைவரும் ஒரு குடும்பமாக இருக்கவேண்டும். அனைவரும் தமக்கு விரும்பிய இடங்களில் வசிப்பதற்கும் தாம் விரும்பிய தொழிலை செய்வதற்கும் சுதந்திரம் இருக்கவேண்டும்.

ஆகவே இந்த மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாதொழித்து, அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.

“இலங்கையில் முஸ்லீம்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது” – முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் !

“இலங்கையில் முஸ்லீம்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது”  என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்றும் அந்தச்சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த முஸ்லீம்களினுடைய உடல்களை தகனம் செய்வது தொடர்பாக பல அமைப்புக்கள் தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய அலுவலகத்தின் தொடர்பாடல் மற்றும் பிரசார உதவியாளர் ரெஹாப் மஹமூர் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பெருமளவானோர் அச்சத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படல், தம்மால் வைரஸ் தொற்று பிறருக்குப் பரவுதல், தமது அன்பிற்குரியவர்கள் வைரஸ் தொற்றினால் துன்பப்படுவதைக் காணுதல் மற்றும் அவர்களின் மரணத்தை எதிர்கொள்ளல் உள்ளிட்ட அச்சம் பலர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், மேற்கூறப்பட்ட அச்சத்திற்கு மேலாக தமது அன்பிற்குரியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களை அடக்கம் செய்யமுடியாது என்றும் அவர்களுக்கான இறுதி கௌரவத்தை அளிக்கமுடியாது என்றும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படும் நாட்டில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது மத ரீதியான நம்பிக்கையின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன், அந்த சடலங்கள் வலுகட்டாயமாகத் தகனம் செய்யப்படுகின்றன. இது இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதற்கு இயலாத சூழ்நிலை காணப்படுவதுடன், அவர்கள் மீதான வன்முறைகள் குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், தற்போது முஸ்லிம்களின் மரணம் கூட நிம்மதியானதாக இருக்காது என்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் கொவிட்19  என்ற காரணத்தைப் பயன்படுத்திக்கொண்டிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் சடலங்களைத் தகனம் செய்வதைக் கட்டாயமாக்கியிருக்கும் மிகச்சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். எனினும் இவ்வருடத் தொடக்கத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் தகனம் செய்தல் மற்றும் அடக்கம் செய்தல் ஆகிய இரண்டிற்குமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முறையாக முஸ்லிம் நபரொருவர் உயிரிழந்தபோது, அவரது குடும்பத்தினரின் விருப்பத்தையும் மீறி அவரின் சடலம் வலுகட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டது. அதற்கு முஸ்லிம் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து வலுவான எதிர்ப்பு வெளிப்பட்டதைத் தொடர்ந்தே சுகாதார அமைச்சினால் ‘தகனம் செய்வது’ கட்டாயமாக்கப்பட்டது.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உரியமுறையில் தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ முடியும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆராய்வதற்கு அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் தகனம் செய்வதைக் கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பலரும் உணர்ந்துகொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஏற்கனவே அடக்கு முறைக்கும் அச்சத்திற்கும் உட்பட்டிருக்கும் ஒரு சமூகத்தை மேலும் வலுவிழக்கச்செய்வதற்கான வழிமுறையையே இலங்கை தெரிவு செய்திருக்கிறது.

நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது” என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதை நிறுத்தக் கோரி பிரித்தானியாவில் போராட்டம் !

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கைகளிற்கு எதிராக லண்டன் உள்ள இலங்கை தூதுரகம் முன்பாக நேற்று(12.12.2020) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்ததன் காரணமாக தகனம் செய்யப்பட்ட 20 நாட்களேயான குழந்தையின் படத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காண முடிந்தது. இதேவேளை பிரிட்டன் அரசாங்கம் இந்த விடயம் குறித்து தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

கட்டாயமாக உடல்கள் தகனம் செய்யப்படுவது முஸ்லீம் சமூகத்தின் மீதும் ஏனைய சமூகத்தினர் மீதும் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து பிரிட்டன் கவனத்தினை ஈர்த்துள்ளது. மனித உரிமை விவகாரங்களிற்கான அமைச்சரான தாரிக் அஹமட் பிரபு இலங்கை உயர்ஸ்தானிகருடன் நேரடியாக இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

“குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படுபவர்களின் படங்கள் ஊடகங்களில் வெளியிடப்படும்” – அமைச்சர் சரத்வீரசேகர !

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் விபரங்களை பகிரங்கப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம்,பாலியல்வன்முறை, கொள்ளை தாக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படுபவர்களின் படங்கள் விபரங்களை ஊடகங்களிற்கு எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை அறிந்துகொள்வதை உறுதி செய்வதற்காகவும் இதன் காரணமாக ஏற்பட்ட அவமானத்தினாலும் அச்சத்தினாலும் குற்றவாளிகள் மீண்டும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்துவதற்காகவுமே படங்கள் விபரங்களை பகிரங்கப்படுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்கள் தொடர்பில் எவரும் 118 இலக்கத்தினை தொடர்புகொள்ள முடியும் நாங்கள் தற்போது குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு !

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக  தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டது என ஐக்கியமக்கள் சக்தி தொடர்ச்சியாக குற்றஞசாட்டி வருகின்ற நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது,

அரசாங்கம் தாமதமின்றி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும். அரசாங்கம் சுகாதார பிரிவினரின் பி.சி.ஆர் சோதனையிடும் திறனையும் வளங்களையும் அதிகரிக்கவில்லை.முகக்கவசங்கள் தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.

கொரோனா வைரசினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் மயப்படுத்தியுள்ள அரசாங்கம் எதிர்கட்சியினரின் திட்டங்களை பலவீனப்படுத்தியுள்ளது .கொரோனா வைரசிற்கான மருந்திற்கு முன்னுரிமை வழங்க வண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

“யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரியுள்ளார்.

யாழ். மருதனார்மடத்தில் திடீரெனக் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்தார்கள். இந்தநிலையில், இங்கு பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் பகுதியிலிருந்து கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள் என்ற தகவல் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் வெளியில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கக் கூடும். தொற்றாளர்கள் தாம் சென்று வந்த இடங்கள் தொடர்பில் எதையும் மறைக்காமல் உண்மைகளைக் கூற வேண்டும்.

வர்த்தகர்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். அவர்கள் வெளியிடங்களில் வர்த்தக ரீதியில் தொடர்புகளை வைத்திருப்பவர்கள். அவர்கள் அனைவரும் பீ.சி.ஆர். பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

அதேவேளை, புதிய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி பீ.சி.ஆர். பரிசோதனையைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும், சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் கடமைகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மினுவாங்கொடை, பேலியகொட போல் பெரிய கொத்தணிகளைப் போன்றோ அல்லது அக்கரைப்பற்று போல் சிறிய கொத்தணியைப் போன்றோ ஒரு நிலைமை யாழ்.குடாநாட்டிலும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என இங்குள்ள மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சினை – தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் கூட்டாக கள விஜயம் !

இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் மேய்ச்சல் தரை இன்றி தவித்து வருவதாக கூறி மட்டக்களப்பு மயிலந்தனை மடு ,மாதவனை  மடு பண்ணையாளர்கள் கடந்த இரு மாத காலங்களாக பல்வேறுபட்ட கோரிக்கை முன்னிறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தனர்.

மட்டக்களப்பு மயிலந்தனை மடு ,மாதவனை  மடு மேய்ச்சல் தரை விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் கூட்டாக கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுராதா ஜகம்பத் சிங்கள குடியேற்றத்தை ஆதரித்ததாக   பண்ணையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சாணக்கியன்,தவராஜா கலையரசன்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் ,  ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , கோவிந்தன் கருணாகரன் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்ட இளைஞரணியினர்களும் குறித்த இடத்தில் வருகை தந்திருந்தனர்.

இங்கு குறைகளை எடுத்துரைத்த பண்ணையாளர்கள்
மயிலந்தனை  மடு பண்ணையார்கள் சார்பான வழக்காளிகளாக  மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரன் இருவரையும்  சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டனர்.

கொரோனாவிற்காக உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் ஔடதங்கள் தொடர்பாக ஆய்விற்கு உட்படுத்த தேசிய ஆராய்ச்சி சபைக்கு பிரதமர் பரிந்துரை !

கேகாலை தம்மிக பண்டார என்பவரின் கொரோனாவுக்கான ஆயுர்வேத ஒளடத பானியை பெறுவதற்காக ஆயிரக்கணக்கினாலானோர் திரண்டிந்தனர். இந்த நிலையில் குறித்த ஔடதபானி உண்மையிலேயே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தானா..? யார் அதனை விற்பனை செய்ய அனுமதித்தது ? என பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் கொரோனாவிற்காக தேசிய மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவமொன்றை, கலாநிதி ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜாகொட ஆகியோரினால் கொரோனாவிற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானியை மேலும் விஞ்ஞான ரீதியில் ஆய்விற்கு உட்படுத்தி உறுதிபடுத்துவதற்கு பிரதமர் தேசிய ஆராய்ச்சி சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானி தொடர்பான ஆராய்ச்சி பத்திரமொன்று ரஜரட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர்களின் தலையீட்டுடன் முன்வைக்கப்படுவதுடன், அது தொடர்பான ஆய்விற்கு இந்நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உடலியல் விஞ்ஞானம் தொடர்பான நிபுணத்துவ அறிவுமிக்க சிரேஷ்ட பேராசிரியர்கள் ஐந்து பேர் மற்றும் தேசிய ஆராய்ச்சி சபைக்காக தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹல ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், உலகில் கொரோனா தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி வகைகள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவிற்காக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த மூன்று தடுப்பூசிகள் தொடர்பான சீ.டீ.ஏ. அறிக்கை தேசிய ஆராய்ச்சி சபையினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சியிடம் கையளிக்கப்பட்டது.