14

14

“புலிகள் இயக்கத்தை தோற்கடித்த போது அதன் பினாமியும் அரசியல் கரமுமான தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாமல் விட்டு விட்டோம்” – அமைச்சர் சரத் வீரசேகரக

“புலிகள் இயக்கத்தை தோற்கடித்த போது அதன் பினாமியும் அரசியல் கரமுமான தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாமல் விட்டு விட்டோம்” என பொதுமக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அட்மிரல் சரத்வீரசேகர இதனை கூறியுள்ளார்.

அந்த செவ்வியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

“இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாக கூட்டமைப்பினர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். அதை விடுத்து எமது நாட்டில் கூட்டாட்சியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அவர்கள் மற்றைய நாடுகளுடன் கலந்துரையாடினால், அவர்கள் செய்து கொண்ட சத்தியப்பிரமாணத்துக்கு எதிராகவே நடந்து கொள்கின்றனர்.

அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு பிழை செய்து விட்டாரென நான் நினைக்கிறேன். இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவர் அனுதாபம் காட்டியுள்ளார்.

ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட போது அவரது நாசி அரசியல் கட்சி அழிக்கப்பட்டது. அதேபோல் பொல்பொட் கொல்லப்பட்ட போது கைமர்ரோக் அரசியல் கட்சியும் அழிக்கப்பட்டது. அவ்வாறே சதாம்ஹூசெய்ன் கொல்லப்பட்ட போது அவரது பாத் அரசியல் கட்சி முடக்கப்பட்டதுடன்,ஹொஸ்னி முபாரக் தோற்கடிக்கப்பட்ட போது அவரது தேசிய அரசியல் கட்சியும் முடக்கப்பட்டது.

எனினும் உலகின் மோசமான பயங்கரவாத இயக்கமான புலிகள் இயக்கத்தை தோற்கடித்த போது அதன் பினாமியும் அரசியல் கரமுமான தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாமல் விட்டு விட்டோம். அதுதான் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விட்ட தவறு.

அவர் தமிழ் அரசியல்வாதிகள் மீது அனுதாபம் காட்டி அவர்களை மன்னித்து விட்டார். அதனால் புலிகளின் பினாமி கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது அந்த அனுதாபத்தை தனக்கு அனுகூலமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது.

சுமந்திரன் மற்றும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் சிங்களவர்களை வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசி வருவதுடன் சிங்களவர்கள் நாடாளுமன்றத்துக்கு வரக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

நாம் யுத்தக் குற்றங்களை இழைத்திருந்தோம் என்பதை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததால்தான் நான் ஜெனீவா சென்றேன்.

அங்கு உலகப் பிரபல்யம் பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பான சட்டவிற்பன்னர்கள் இலங்கை யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

எவ்வாறெனினும் அப்போதைய இலங்கை வெளிநாட்டமைச்சராக இருந்த மங்களசமரவீர ஜெனீவாவுக்குச் சென்று நாம் யுத்தக் குற்றங்களை இழைத்ததாக ஏற்றுக் கொண்டதுடன், எமக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் 30/1 தீர்மானத்தையும் இணைஅனுசரணைக்கு உட்படுத்தினார்.

எந்தவொரு வாக்கெடுப்பும், விவாதமும் இன்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு அதனை அங்கீகரித்தது. 47 நாடுகள் எம்மை ஆதரிக்கப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்ட பின்னர், நான் ஜெனீவா சென்று எனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய காலவரையறையில் எமது பக்கத்து வாதத்தை முன்வைத்தேன். என்னால் முடிந்ததை நான் செய்தேன்.” என்றார்.

“அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்” – அங்கஜன் இராமநாதன்

“அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்” என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(14.12.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தமிழ் அரசியல், சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. அரசியல் கைதிகள் என்றால் அனைவரும் ஒன்றே. அவர்களின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையொன்றை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கதைத்துள்ளோம். அவரும் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்த பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளனர். இதற்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கொரோனா தடுப்பூசியை பெற நடவடிக்கை மேற்கொள்ளாது அரசும் அமைச்சும் ஆயர்வேத பானங்களை அருந்திக் கொண்டிருக்கின்றனர் ” – ஹர்ஷன ராஜகருணா

“கொரோனா தடுப்பூசியை பெற நடவடிக்கை மேற்கொள்ளாது அரசும் அமைச்சும் ஆயர்வேத பானங்களை அருந்திக் கொண்டிருக்கின்றனர் ” ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிலை இழந்துள்ளவர்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு நிவாரணமும் அறிக்கவில்லை.

நாளொன்றுக்கு 500 முதல் 600 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமையானது நாட்டில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

இதன்மூலம் நாடு எந்தளவிற்கு அபாய நிலையை அடைந்துள்ளது என்பது சுகாதாரத் துறையினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்கூட கொரோனா தடுப்பிற்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. மாறாக அமைச்சர்கள் அனைவரும் ஆயர்வேத பானங்களை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கொரோனா கட்டுப்படுத்தலுக்காக செயற்பாட்டு ரீதியில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அநாவசிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை தமிழர் அரசியலில் போரை ஆதரித்தவர்கள் எதிர்ப்பு அரசியலையும் பொருளாதார மேம்பாட்டையும் தமது சொந்த நன்மைகளை எதிர்பார்த்தவர்கள் இணக்க அரசியலையும் ஆதரித்து வந்துள்ளார்கள்” – விக்னேஸ்வரன்

“இலங்கை தமிழர் அரசியலில் போரை ஆதரித்தவர்கள் எதிர்ப்பு அரசியலையும் பொருளாதார மேம்பாட்டையும் தமது சொந்த நன்மைகளை எதிர்பார்த்தவர்கள் இணக்க அரசியலையும் ஆதரித்து வந்துள்ளார்கள்”  என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் வழங்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார் .

கேள்வி :- நீங்கள் வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்காதது உங்களைப் பல கண்டனங்களுக்குள் உள்ளாக்கியுள்ளது. உங்கள் பக்கக் கருத்துக்களைக் கூற முடியுமா?

பதில் :- கட்டாயமாக! வட கிழக்குத் தமிழ் மக்களின் அரசியலானது எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் என்று இதுகாறும் இருந்துவந்துள்ளது. அல்லது எதிர்ப்புக்காக நடுநிலைமையும் அல்லது இணக்கத்திற்காக நடுநிலைமை என்றும் இடம்பெற்றுள்ளன. பொதுவாக போரை ஆதரித்தவர்கள் எதிர்ப்பு அரசியலையும் பொருளாதார மேம்பாட்டையும் தமது சொந்த நன்மைகளை எதிர்பார்த்தவர்கள் இணக்க அரசியலையும் ஆதரித்து வந்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையிலான தனது தனித்துவப் பெரும்பான்மை நிலையில் இருந்து சறுக்குவதற்குக் காரணம் அவர்கள் தமது சொந்த நலன்களை முதன்மைப்படுத்தி அப்போதிருந்த அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தி வந்தமையே. இணக்க அரசியலால் தமது ஆதரவாளர்களை கவனிக்க, சென்ற அரசாங்கத்தின் கடைசி காலத்தில் அவர்களுக்கு நிதி கிடைத்தமை உண்மையே. ஆனால் அது மட்டுமே அவர்களுக்குக் கிடைத்த நன்மை. அரசியல் ரீதியாக அவர்களால் முன்னேற முடியவில்லை.

திரு. சுமந்திரன் அவர்கள் இந்த இணக்க அரசியலுக்காக போர்க் குற்ற விசாரணை முடிவடைந்துவிட்டது என்று கூடக் கூறியிருந்தார். ஒற்றையாட்சிக்குள் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப் பரவலை  கூட்டாட்சி என்று அடையாளம் காட்டினார். “எக்சத்” “ஏகிய” பற்றி நிறையப் பேசினார். தற்போது அவரின் பேச்சுக்கள் மாறிவருவதை எல்லோரும் அவதானிக்கலாம். விசாரணை முடிந்தது என்று முன்னர் கூறியவர் விசாரணை வேண்டும் என்று இன்று கூறுகின்றார். மேலும் கூட்டாட்சி வேண்டும் என்கின்றார். என்ன நடந்தது? தமது இணக்க அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டதே காரணம்.

என்றாலும் எதிர்ப்பு அரசிலுக்குள் மீண்டும் போவதையும் அவர் விரும்பவில்லை போலத் தெரிகின்றது. ஆகவே இம்முறை இரண்டும் இல்லாமல் நடுநிலைமை வகிக்கக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. அவர்கள் வாக்களிக்கும் தினத்தில் காலை 11 மணிக்குக் கூடியே தமது முடிவுக்கு வந்துள்ளனர்.என்னைப் பொறுத்த வரையில் நான் குறித்த நடுநிலை நிலையை சுயமாகக வெளிப்படுத்த முன்வந்ததற்கான காரணம் பின்வருமாறு –

எதிர்ப்பு அரசியலால் நாம் கண்ட நன்மை ஒன்றுமில்லை. அத்துடன் இணக்க அரசியல் என்று கூறி சுயநலமிகள் இணக்க அரசியல் செய்து வந்ததால் எம் மக்கள் கண்ட நன்மை ஒன்றுமில்லை. ஏற்கனவே அரசாங்கத்தை நான் காரசாரமாக சாடியாகிவிட்டது. 20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தேன். திரும்பவும் வேண்டும் போது அவ்வாறு செய்வேன். அதாவது உண்மைகளை எடுத்துரைப்பேன். ஆனால் பொதுவாக எதிர்த்து வாக்களிப்பதே எனது நிலைப்பாடு என்று பலர் எண்ணியிருந்தார்கள். நான் அவ்வாறு எண்ணவில்லை.

ஆகவே நான் வாக்களிக்காமல் இருப்பதே மேல் என்று எண்ணினேன். காரணம் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு அரசியலைக் காட்டி வந்த முன்னைய அரசியல்வாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலையே வெளிப்படுத்தி வந்திருந்தார்கள். அவர்களை எதிரிகளாகவே அப்போதைய அரசாங்கத்தினர் பார்த்தார்கள். அதனால் அவர்களுடன் அரசாங்கங்களும் பேசவில்லை. இவர்களாலும் அவர்களுடன் பேசமுடியவில்லை.

நான் அவ்வாறு எனது காலத்தைத் தொடங்க விரும்பவில்லை. ஏற்கனவே 2ம் வாசிப்பில் நான் வாக்களிக்காது இருந்திருந்தேன். அதே போல்த் தொடர்ந்தால் என்ன என்று எண்ணினேன். காரணம் எமது அரசியல் கைதிகள் பற்றி அரசாங்கத்துடன் பேச வேண்டி இருக்கின்றது. மற்றும் ஒரு புதிய அரசியல் யாப்பு நிர்மாணத்தை நாம் எதிர் கொண்டுள்ளோம். முன்னைய அரசாங்கம் காலத்தில் எமது வாக்குகளுக்குப் பலம் இருந்தது. அப்போது “எமது சிறைக் கைதிகளை வெளிவிடுங்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கின்றோம்” என்று கூறியிருக்கலாம். எமது பிரதிநிதிகள் அவ்வாறு கூறவில்லை. தமது வாக்கை மக்கள் நலன் கருதிப் பாவிக்கவில்லை. இப்பொழுது அவ்வாறான ஒரு நிலை இல்லைபேசித் தீர்க்க வேண்டியுள்ளது.

அரசாங்கம் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி ஆகியோருடன் பேசுவதென்றால் பக்கச் சார்பில்லாமல் இருப்பதே உசிதம் என்று நான் கண்டு கொண்டேன். ஒன்றை எதிர்ப்பது வெற்றியல்ல. ஒன்றுடன் இணைவதும் வெற்றியல்ல. வருவதற்கு முகம் கொடுக்கக் கூடியதாக இருப்பதே வெற்றி. எமது தமிழ் அரசியல்வாதிகள் இதுவரையில் போர்களை வென்று யுத்தத்தைத் தோற்றுவிட்டார்கள். எமது மக்களின் தற்போதைய ஒன்றுபட்ட குறிக்கோளை அடைவது தான் எனது ஒரேயொரு இலக்கு. அதற்கு முகம் கொடுக்க நான் தயாராகின்றேன்.

ஆங்காங்கே எனக்கு எதிராக என் மக்கள் குறை கூறுவதைப் பொருட்படுத்தமாட்டேன். ஏனென்றால் அவர்கள் நன்மை கருதியே நான் பயணிக்கின்றேன். அது அவர்களுக்குத் தெரியாவிட்டால் நான் என்ன செய்வது? என்னை எனது மிக நெருக்கமான நண்பர்கள், நலன் விரும்பிகள் கூட குறை கூறியுள்ளார்கள். அவர்கள் மனோநிலையை நான் மதிக்கின்றேன். ஆனால் எனது பாதையில் இருந்து நான் சறுக்கமாட்டேன். அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதோ வாக்களிப்பதோ அல்ல முக்கியம். அரசாங்கத்தின் மனதை மாற்றுவது, எம் சார்பாக அவர்களைத் திசை மாற்றுவதே எனது கடமையும் கடப்பாடும். அதனைச் செய்வேன். வருங்காலம் எனது செயலைச் சீர்தூக்கிப் பார்க்கட்டும்!ஆகவே நான் வாளாதிருந்ததற்குக் காரணம் இவை தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக நடுநிலை வகித்தார்கள் என்பதை அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மின் காற்றுவீசி ஓடாமல் இருப்பது போல்த்தான் விசையாக ஓடும் போதும் காட்சி அளிக்கும். அதற்காக இரண்டு நிலைகளையும் ஒரே நிலையென்று கூறலாமா? எனவும் அவர் தனது பதிலை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு பண்ணையாளர்கள் பிரச்சினை – “மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள்” – செ.அடைக்கலநாதன்

அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கால்நடை பண்ணையாளர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும், இல்லையென்றால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை சம்பந்தமாக நேரடியாக அவர்களை சந்திக்க நேர்ந்தது.

உண்மையில் இந்த அரசாங்கமானது திட்டமிட்டு இந்தப் பண்ணையாளர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்களை ஓரங்கட்டி அவர்களுடைய உடைமைகளை இல்லாதொழிக்கின்ற திட்டத்தோடுதான் செயற்படுகின்றது என இந்தப் பண்ணையாளர்கள் கவலை தோய்ந்த முகங்களோடு கூறுகின்ற நிலையை பார்க்கின்றபோது அரசாங்கமானது திட்டமிட்டு செய்கின்ற நிலைப்பாட்டை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஜனாதிபதி தான் வெற்றி பெற்றவுடன் கூறிய விடயம் நான் சிங்கள மக்களால் வென்றிருக்கின்றேன் என்பதாகும். ஒரு நாடு ஒரு சட்டம் என அவர் சொல்கின்ற விடயம் காணாமல் போயிருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருக்கின்ற பிள்ளையானிடமும் கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற வியாழேந்திரனிடமும் நான் ஒரு கேள்வியை கேட்கின்றேன்.

இந்த மக்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்? நீங்கள் இந்த மண்ணை காப்பாற்றுவதற்கான செயற்பாட்டை கட்டாயம் செய்தாக வேண்டும்.

எங்களுடைய கால்நடை பண்ணையாளர்களின் துன்பங்களை நீங்கள் நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும். இல்லையென்றால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான வாக்குகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த கடமையும் பொறுப்பும் உங்களிடம் இருக்கின்றது. ஏனென்றால் நீங்கள் அரசாங்கத்தோடு இருக்கின்றீர்கள்.

இந்த அரசாங்கம் எங்களுடைய நிலங்களை கபளீகரம் செய்கின்றது. ஆனால் நீங்கள் கூட்டமைப்பை தாக்குவதும் தேவையில்லாத கதைகளை கதைப்பதுமாகத்தான் உங்களுடைய செயற்பாடுகள் இருக்கின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

“தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பில் அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்கள் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நேர்மையாக ,தீவிரமாக ஈடுபட வேண்டும்”- ஈ.சரவணபவன் வலியுறுத்தல்! 

“தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பில் அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்கள் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நேர்மையாக ,தீவிரமாக ஈடுபட வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் உட்படத் தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் பலரை விடுவிக்கக் கோரி அரச தரப்பினரால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பதற்கு வழி தேட வேண்டிய நிலையில் ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கின்றார்கள். அவர்களைச் சட்டபூர்வமாக விடுவிக்க முடியாது என்பதும், எல்லோரையும் பொதுமன்னிப்பில் விடுவித்தால் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதும் தெரிந்த விடயம்.

இப்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புட்ட 607 கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்புவது பற்றியும், சிறுகுற்றங்கள் செய்து சிறையிலுள்ள 800 கைதிகளை விடுவிப்பதற்கும், தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கும் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

இப்படிப் பலர் விடுவிக்கப்படும்போது, அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் இத்தகைய காரணங்களைக் காட்டி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் சாத்தியங்கள் உண்டு. அதற்காகச் சில அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது அரசின் தேவையாகவும் இருக்கலாம்.

இத்தகைய சந்தர்ப்பதில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம். எனினும், ஒரு சில அரசியல் கைதிகளை மட்டும் விடுவிப்பது என்ற நிலையுடன் அந்த முயற்சி நின்றுவிடக் கூடாது என்பதுதான முக்கியமான விடயம். வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்ற காரணங்களை அரசு கற்பித்து, பலரின் விடுதலை தட்டிக்கழிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அதனால் சட்டமா அதிபர் வழக்குகளைத் திரும்பப் பெறுவதன் ஊடாக, அவர்களைப் பொதுமன்னிப்புக்கு உரியவர்களாக்க முடியும் என்ற விடயம் வலியுறுத்தப்பட வேண்டும்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் நேர்மையாகவும், தீவிரமாகவும் ஈடுபட வேண்டும் என்று கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசுடன் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கவனமெடுக்குமாறு நீதியமைச்சரிடம் மனு ஒன்றினை கையளித்திருந்ததுடன் தமிழ்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடமும் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் மனு ஒன்றை கையளித்திருந்தமையும் குறிப்பிடத்ததக்கது.