இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்து போகும் முஸ்லீம் மக்களுடைய உடல்கள் எரிக்கப்படுவது அம்மக்களுடைய மத நம்பிக்கைகளை சிதைப்பது போன்றது என பலரும் தம்முடைய ஆதங்கத்தை வெளியிட்டு வருவதுடன் போராட்டங்களையும் ஆங்காங்கே மேற்கொண்டு வருகின்றனர். உலகின் அமைப்புக்கள் பலவும் இதனை எதிர்த்து தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் இலங்கையின் முஸ்லீம்களிற்கு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்கவேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் முதலமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்த போது,
“இலங்கை முஸ்லீம்களை மாலைதீவிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்காதமை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . இலங்கை முஸ்லீம்களை அந்த நாட்டிலிருந்து மாலைதீவிற்கு வந்து வசிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கவேண்டும்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களுக்கு தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் இறுதிசடங்கினை நடத்துவதற்கான சிறுபான்மை முஸ்லீம்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும்.
இதேவேளை கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான அனுமதி அந்த நாட்டிடம் கோரப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என ஊடக பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.அமைச்சரவையிலும் இது குறித்து ஆராயப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் உதவி கோரப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சு பதிலளிக்ககூடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் தன்னிச்சையான முடிவுகள் எதனையும் எடுக்காது இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் முடிவை அடிப்படையாக வைத்தே அரசாங்கம் தனது முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் குழுவொன்றை அமைக்கும் போது அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காவிட்டால் அவ்வாறான குழுவை நியமிக்கவேண்டிய அவசியம் இல்லை நீங்கள தன்னிசை;சையான முடிவுகளை எடுக்கலாம் எனவும் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வேறு எங்காவது எடுத்துச்செல்லுவது குறித்து யாராவது தெரிவித்தால் அது குறித்தும் நிபுணர்களுடன் ஆராய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை மாலைதீவில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு உதவுமாறு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராய்ந்து வருவதாக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதியின் விசேட வேண்டுகோலை மாலைதீவு ஜனாதிபதி ஆராய்ந்துவருகின்றார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவினை அடிப்படையாக வைத்தே மாலைதீவு ஜனாதிபதி இது குறித்து ஆராய்கின்றார் கொரோனா வைரசினால் எதிர்நோக்கப்படும் சவால்களிற்கு தீர்வை காண்பதற்க்கு உதவும் நோக்கிலும் மாலைதீவு இது குறித்து ஆராய்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.