20
20
“எமது விடுதலையை துரிதப்படுத்தி, எமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுங்கள்” என கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இந்த அவசர கோரிக்கையை ஊடகங்கள் வாயிலாக அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களிடம் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளும் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் ஜி.எச். விடுதிகளில் 48 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். கொழும்பு நகரப் பகுதிகளிலும் சிறைச்சாலைகளிலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்று காரணமாக நாம் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதிகளிலேயே எமக்கான சுயதனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்து வந்தோம். எனினும், கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து அரசியல் கைதிகளுக்கும் கடும் காய்ச்சலுடன் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
நேற்று எமது விடுதிகளைச் சேர்ந்த சிலருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஆகவே, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனச் சிறைச்சாலையில் பொதுச் சுகாதாரப் பிரிவு கவனப்படுத்தியுள்ளது.
போதிய தொற்று நீக்கல் செயற்திட்டம் மற்றும் ஊட்டச்சத்தான உணவு பராமரிப்பு இன்மைகளுக்கு மத்தியில் நாம் தொடர்ந்து விடுதிகளிலேயே சுயதனிமைப்படுத்தல் முறையை மேற்கொண்டு வருகின்றோம்.
நீண்டகாலம் சிறைத்தடுப்பிலுள்ள எம்மவர்களுள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் வயதானவர்களும் இருப்பதால் அரசியல் கைதிகள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதனைத் தெரியப்படுத்துகின்றோம்.
இவ்வேளையில் அரசியல் கைதிகளான எமது விடுதலையைத் துரிதப்படுத்துவதுடன், எமது உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரி நிற்கின்றோம்” – என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாத அமர்வையொட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வரைவு ஒன்றின் உள்ளடக்கம் பற்றி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில் இருவருமே சுமந்திரனின் வரைவு அரசுக்கான கால அவகாசம் வழங்குதாக கூறி அதனை நிராகரிப்பதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் “விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று(19.12.2020) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் பின்னர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நான் அவர்களுக்குக் கொடுத்த ஆவணத்தில் இரண்டே இரண்டு விடயங்கள்தான் இருக்கின்றன.
ஒன்று – இதுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானங்களால் எங்களுக்குப் பெரிய நன்மையாக ஏதும் வந்து விடவில்லை. அதனால் இனிமேல் இதையே முன்கொண்டு நடத்துவதில் அர்த்தமில்லை. ஆகையினால் இதிலும் காட்டமான, தீவிரமான நடவடிக்கை அவசியம். அதற்கு உதாரணமாக – முன்மாதிரியாக சிரியாவிலும், மியன்மாரிலும் ஏற்படுத்தப்பட்ட பொறிமுறைகளை காட்டி ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டுக்கு நாங்கள் போக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது – இந்த விவகாரம் ஒரு சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஒரு புதுக் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இவை இரண்டும்தான் அதில் உண்டு. அதில் கால நீடிப்பு என்றோ, கால அவகாசம் என்றோ, அதே தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றுவது என்றோ எதுவுமே இல்லை.
ஆனால், இவர்கள் இருவரும் நான் அப்படி ஒரு பிரேரணை வரைவைத்தான் முன்வைக்கின்றேன் என்று வேண்டுமென்றே விஷமத்தனமான, பொய்யான பிரசாரம் ஒன்றை முன்வைக்கின்றனர். அது தவறு என குறிப்பிட்டுள்ளார்.
“கொரொனாவுக்குப் ‘பாணி மருந்து’ கண்டு பிடித்துள்ளார் என ஓடித்திரியும் ‘பாணி தம்மிக’ இந்துக் கடவுளான காளியம்மன் பற்றிப் பேசுவதை உடன் நிறுத்த வேண்டும்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:-
“நான் இந்த நாட்டு வைத்தியரின் பாணி மருந்தை இதுவரை குடிக்கவில்லை. இனிமேல் குடிக்கும் எண்ணமும் இல்லை.
எங்கள் வீட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இதுவரை வராமைக்குக் காரணம், எங்கள் வீட்டு ‘சித்த வைத்திய’ பானங்கள்தான். இவை நாம் எப்போதும் பாரம்பரியமாக எங்கள் பூட்டன், பூட்டி காலத்திலிருந்து பின்பற்றி வரும் இயற்கை மருந்து பானங்கள்.
இங்கே எனது பிரச்சினை என்னவென்றால், இந்தப் ‘பாணி தம்மிக’ என்ற நாட்டு வைத்தியர், தனக்குத் துணையாக ‘காளியம்மனை’ அழைத்துள்ளதாகும். இவர் தனக்குக் காளியம்மன் அருள் பாலித்திருக்கின்றார் எனக் கூற, இவரை எதிர்ப்போர் காளியம்மனையும் சேர்த்து விமர்சிக்கின்றார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். காளியம்மன், பார்வதி தேவியின் ஓர் அவதாரம். பார்வதி, இந்துக்களின் மூத்த தாய்க் கடவுள்” – என்றார்.