22

22

பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐரோப்பிய யூனியன் அனுமதி !

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகளிடம் பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.

இதையடுத்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அனுமதியளித்ததையடுத்து அந்நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியனில் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியனியன் கமிஷன் நேற்று ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஐரோப்பிய யூனியனில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கோண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கும் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் டிசம்பர் 27-ம் திகதி முதல் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஒரே நாளில் ஐரோப்பிய நாடுகளில் பைசர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள சம்பவம் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முக்கியத்துவம் பெறுகிறது.

நீதி அமைச்சர் அலி சப்ரி மீது, நடவடிக்கை எடுக்குமாறு சிங்கள ராவய அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு !

கொவிட்-19 மூலம் இறந்தவர்களை தகனம் செய்வதற்கு எதிராக செயற்பட்டுவரும் நீதி அமைச்சர் அலி சப்ரி மீது, நடவடிக்கை எடுக்குமாறு சிங்கள ராவய அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இந்த முறைப்பாட்டை இன்று(22.12.2020) பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் பொதுவான சட்டத்தைக் கடைப்பிடிப்பது இந்த நாட்டு மக்களின் கடமையாகும். இவ்வாறான நிலையில் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் அரசாங்கத்தின் நடைமுறைக்கு எதிராக செயல்பட்டு வரும் நீதி அமைச்சர் அலி சப்ரி மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் தகனம் செய்யும் நடைமுறையின் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படை வாதத்துக்குள் தள்ளப்படலாம் என நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு பிரிவாக செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் தேசிய ஒளிபரப்பினை தடைசெய்யக்கோரி பொதுபல சேனா அமைப்பு, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று(21.12.2020) திங்கட்கிழமை கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கை கொரோனா தடுப்பூசியினை பெறுவதற்கான உதவிகளை நாம் செய்வோம் ” – ஐ.நா பிரதமருக்கு உறுதி !

உலக நாடுகள் அனைத்திலும் இன்றைய திகதிக்கு மிகப்பெரிய பேசுபொருளாகியிருப்பது கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பானதாகவேயுள்ளது. இந்தநிலையில் இலங்கை அரசும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுதல், விநியோகம் மற்றும் பாதுகாப்பான நிர்வாகத்திற்காக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஐ.நா தூதுக்குழு குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரசியா பெண்ட்சே மற்றும் யுனிசெப் அமைப்பிற்கான இலங்கை பிரதிநிதி ஆகியோர் பிரதமரை இன்று சந்தித்தனர்.

ரஸ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை  ( Sputnik V ) இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து தீர்மானிப்பதற்காக அடுத்த வாரம் ரஸ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ்தேசியக்கட்சிகள் நாங்கள் முரண்பட்டு நின்றால் அது தெற்கு அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகப் போய்விடும் ” –  இரா.சம்பந்தன்

“தமிழ்தேசியக்கட்சிகள் நாங்கள் முரண்பட்டு நின்றால் அது தெற்கு அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகப் போய்விடும் ”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது. இதை அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் உணரவேண்டும் . இது தொடர்பில் தமிழ்த் தேசியக்கட்சிகளுடன் நேரில் பேசி இறுதி முடிவை எடுப்போம்.

இதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். நாங்கள் முரண்பட்டு நின்றால் அது தெற்கு அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகப் போய்விடும்.எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் , சர்வதேச ரீதியிலும் ஓரணியில் நின்று தமிழர்களின் உரிமைக்காக, நீதிக்காகக் குரல்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமையால் இம்முறை ஜெனீவா விவகாரத்தை நாம் தக்க முறையில் கையாள வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – மேலும் ஐவர் பலி !

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.அரசாங்கம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் 68, 55, 77, 83 வயதுடைய நான்கு ஆண்களும், 77 வயதுடைய ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜோ பைடனின் வெற்றி செல்லுபடியற்றது – மீண்டும் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றில் மனுத்தாக்கல் !

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாததோடு தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கக் கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையில் அமெரிக்க தேர்தல் சபை ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தது. ஆனாலும் டிரம்ப் தரப்பு தேர்தல் முடிவை மாற்றி அமைப்பதற்கான தங்களது சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் முடிவை மாற்றியமைக்க கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், பென்சில்வேனியா மாகாணத்தின் தேர்தல் சபை உறுப்பினர்களை மாகாண சட்டமன்றம் தேர்வு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி எண்ணப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் டிரம்ப் தரப்பு கோரியுள்ளது.

“புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பைசர் தடுப்பூசிக்கு உள்ளது” – ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான் 

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளன. இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கடந்த சில நாட்களுக்கு முன்னரே இங்கிலாந்து, அமெரிக்கா போன்று நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மார்டனா தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷியாவில் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவதால் தற்போதைய தடுப்பூசிகள் பயனளிக்காமல் செல்லலாம் என பரவலான கருத்துக்கள் நிலவி வந்தன. இந்நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே தற்போதைய புதிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய யூனியனில் உள்ள சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் நம்புவதாக ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தற்போதுவரை நமக்கு கிடைத்த தகவலின்படி, புதியவகை கொரோனா வைரஸ் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியில் (பைசர் தடுப்பூசி) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. புதிய வகை கொரோனா வைரசையும் தற்போதுள்ள தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோசை எடுத்து கொண்டார் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் !

அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு.
இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அமெரிக்க நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேயர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது.
அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை  வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கிமை குறிப்பிடத்தக்கது.

“இங்கிலாந்தில் பரவும் புதிய வகை வைரஸ் இலங்கைக்கும் பரவும் அபாயம்” – எச்சிக்கின்றது அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் சங்கம் !

இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், இலங்கைக்கும் பரவுவதற்கான அபாய நிலை இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனவே இது குறித்து தீவிர அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளும், இந்தியா, தென்னாபிரிக்கா துருக்கி இஸ்ரேல் போன்ற நாடுகளும் பிரித்தானியாவுக்கான விமானப் பயணங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த புதிய உருமாற்றம் அவுஸ்திரேலியா, டென்மார்க் முதலான நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மிகவும் வேகமாக பரவிவரும் இந்த வைரஸின் புதிய உருமாற்றம் விசேடமானது என சிரேஷ்ட வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து நபர்கள் வருகைத்தரும்போதும், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போதும் அந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு வருகிறது ரஸ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் ? – அடுத்த வாரம் ரஷ்ய தூதுவருடன் இலங்கை பேச்சு !

ரஸ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை  ( Sputnik V ) இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து தீர்மானிப்பதற்காக அடுத்த வாரம் ரஸ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ள அவர்,  பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மருந்துகள் கிடைப்பதற்கு முன்னரே ரஸ்ய மருந்து அரசதுறையினருக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

ரஸ்ய மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் நான் ரஸ்ய தூதுவரை அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளிற்காக சந்திப்பேன் எனத்தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்களிற்கு இடையில் அந்த மருந்தினை வழங்க அவர்கள் தயாராக உள்ளனர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.ரஸ்ய அரசாங்கம் தனது மருந்தினை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராகவுள்ளதால் அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மூலம் அந்த மருந்தினை கொண்டுவரமுடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அமைச்சர் அதனடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்,எனவும் தெரிவித்துள்ளார்.

எந்த மருந்தினை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும்? என்ன விலை? என்பது போன்ற விபரங்களை தீர்மானிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினர் ஊடாக மருந்துகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,நாங்கள் தற்போது மொடேர்னா மற்றும் பைசர் நிறுவனத்தின் மருந்துகள் மற்றும் சீனா மருந்துகள் குறித்து கவனம் செலுத்துகின்றோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விலை சேமிப்பதற்கான காலநிலை போன்றவற்றின் அடிப்படையில் எந்த மருந்தினை விரைவில் இலங்கைக்கு கொண்டுவரமுடியும் என தீர்மானிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.