27

27

ஐ.சி.சியின் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணிக்கு தலைவராக எம்.எஸ்.டோனி தேர்வு !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது. அந்த அணிக்கு எம்.எஸ்.டோனியை தலைவராக தேர்வு செய்துள்ளது.
ஐசிசி அறிவித்துள்ள டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:
1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் கெய்ல், 3. ஆரோன் பிஞ்ச், 4. விராட் கோலி, 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. கிளென் மேக்ஸ்வெல், 7. எம்எஸ் டோனி (விக்கட் கீப்பர்& கேப்டன்), 8. பொல்லார்ட், 9. ரஷித் கான், 10, பும்ரா,  11. மலிங்கா.

“ கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் மூலம் சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் பெற முயல்கின்றனர்” – நாரம்பனவே ஆனந்த தேரர்

கொரோனா வைரஸ் தாக்கத்தல் இறந்த முஸ்லீம்களுடைய உடலை தகனம் செய்வது தொடர்பாக அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்  “ கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் மூலம் சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் பெற முயல்கின்றனர்”  என அஸ்கிரிய பீடத்தின் பிரதிபதிவாளர் நாரம்பனவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது என்பது தற்போது தீர்வு காணமுடியாத புதிராக மாறிவிட்டது.

தற்போது காணப்படும் நிலவரத்தின் மத்தியில் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பிரிவினைகளை உருவாக்காமல் சட்டத்தினை பின்பற்றவேண்டும். எந்தசக்திக்கும் எந்த செல்வாக்கிற்கும் அடிபணியாமல் ஒரேநாடு ஒரே சட்டம் என்பதனை நடைமுறைப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமை.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றுபடவேண்டிய தருணத்தில் மதபதற்றத்தினை அதிகரிப்பதற்கு இந்த விவகாரம் பயன்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம்” – ‘அழிக்கப்படும் சாட்சியங்கள்’ நூல் வெளியீடு விழாவில் சி.வி.விக்னேஸ்வரன் !

“சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம்” என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ‘அழிக்கப்படும் சாட்சியங்கள்’ நூல் வெளியீடு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

இன்றைய இந்த நூல் வெளியீட்டு விழா சற்று வித்தியாசமானது. எத்தனையோ புத்தக வெளியீடுகள், நூல் ஆய்வரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு அவ்வந்த நூல்களின் இலக்கியச்சுவைகள் பற்றியும், தமிழ் மொழி நடை பற்றியும், வட்டார வழக்குகள் பற்றியும், உலக நடப்புக்கள் பற்றியும், மதம், இலக்கியம், வரலாறு, சமூகவியல், சட்டம், அரசியல் பற்றி எல்லாம் பல விதமான உரைகளை உரையாற்றியிருக்கின்றோம். ஆனால் இன்றைய இந்த ஆவணக் கையேட்டை சற்று கனத்த மனதுடன் துக்கம் தொண்டையை அடைக்க வெளியீடு செய்ய வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியிருக்கின்றோம்.

IMG 20201227 WA0030

இந்த நூலில் ஆராய்வதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ எந்த மொழி நடையோ இலக்கியச் சுவையோ ஆழமான கருத்துக்களோ இல்லை. மாறாக துன்ப வலிகளைச் சுமந்து கொண்டு நடைப்பிணங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து இறுதியில் மரணத்தைத் தழுவிக் கொண்ட எம்மிடையேயான ஒரு மக்கள் தொகுதியின் நினைவுகளும் புகைப்படங்களுமே இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. அறவழிக் கண்ணீர் போராட்டங்களின் போது கண்ணை மூடிய கணிசமான எம் மக்களின் நினைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணக் கையேட்டு வெளியீட்டு வைபவம் அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலியாகவே நடைபெறுகின்றது.

இந்த நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளைத் தொடர்ந்து பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் வகைதொகையின்றி இராணுவப் படைகளாலும் புலனாய்வுப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களைத் தேடி அலைந்த அவர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் எனப் பலர் தமது இறுதி மூச்சுவரை மகனை அல்லது மகளை அல்லது சகோதர சகோதரிகளை அல்லது உற்றவரை, உறவினரைத் தேடி அலைந்து, அவர்களுக்காக நீதிகோரிய போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு இறுதியில் நோய் வாய்ப்பட்டு இறப்பைத் தழுவிக் கொண்ட 74 பேரின் பதிவுகள் இந்த நூலில் காணப்படுகின்றன. ஏமாறிய நிலையில் இவ்வுலகைவிட்டு ஏகியவர்களின் விபரக்கோவையே இன்று வெளியிடப்படும் நூல்.

IMG 20201227 WA0028

பண்டைய தமிழ் மக்களின் வரலாறுகள், அவர்களின் இருப்புக்கள், பாரம்பரியங்கள் என்பன நூல் வடிவிலோ, ஓலைச் சுவடிகளிலோ அல்லது கற்களில் வடித்தோ முறையாக பேணப்படாமையால் இன்று எமது சரித்திர வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருகின்றன. தினம் தினம் மாற்றி எழுதப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை மக்களின் சாசனங்கள் வாயிலாக வரலாறுகள் தமிழர்க்கு எதிராகத் திரிக்கப்பட்டு எழுதப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாகிய 3000 வருடங்கள் பழைமை வாய்ந்த தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டு கிறீஸ்துவுக்குப் பின் 6ம் 7ம் நூற்றாண்டளவில் வழக்கிற்கு வந்த சிங்கள மொழி பேசுவோரே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் எனவும் தமிழ் மக்கள் அதன் பின்னைய காலங்களில் குடியேறிய மக்கள் எனவும் சிருஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இனப்படுகொலையின் ஒரு அம்சமாகவே இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கைத் தீவை விட சிறிய நாடாகிய சிங்கப்பூரில் பல மொழிகளைப் பேசுகின்ற பல் இன மக்கள் வாழுகின்ற போதும் அந்த நாட்டில் மொழி வேறுபாடு இல்லை. மத வேறுபாடு இல்லை. ஆனால் அங்கு சுபீட்சம் நிலவுகின்றது. நாடும் வளம் பெற்று வளர்ந்து வருகின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆனால் எமது நாட்டில் இரண்டு பிரிவினர்களுக்கிடையே தான் பிரச்சனை வலுவடைந்துள்ளது. நிலவுகின்ற இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பது ஒரு காரியமே அல்ல. எனினும் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுத்துவிடக்கூடாது என்ற மனப்பாங்குடன் செயற்படும் சிங்களத் தலைவர்களின் பிழையான வழிகாட்டல்களே தமிழ் மக்கள் மீது பல விதமான ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடக் காரணமாக இருந்து வந்துள்ளன.

யுத்தம் நிறைவு பெற்ற 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்திடம் தமது கணவரை முறையாக கையளித்த பெண்கள், பிள்ளைகளை கையளித்த தாய்மார்கள், சகோதரங்களைக் கையளித்த சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் போன்றோரை கையளித்தவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் அவ்வாறான கையளிப்புக்கள் எதுவும் நடக்கவில்லை அவ்வாறான எந்தவொரு அரசியல் கைதிகளும் தம்மிடம் இல்லை எனக் கூறி இப்போது மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அது சம்பந்தமான விசாரணையை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் கேட்டுவரினும் அக் கோரிக்கைகளுக்கு இணங்காது தான்தோன்றித்தனமாக இலங்கை அரசாங்கம் நடந்து வருகின்றது. அதுபோலவே இன்றைய கை நூலில் ஆவணப்படுத்தப்படும் வரலாற்றுப் பதிவுகள் தொடர்ந்து எம் கைகளில் கிட்டாமல்ப் போனால் இன்னும் சற்றுக் காலம் செல்ல இந்த நிகழ்வுகள் எல்லாம் பொய்யாகப் புனையப்பட்டவை என ஜெனீவாவிலும் உலக அரங்கிலும் கூறத் தொடங்கிவிடுவார்கள். ஆகவேதான் மரணித்தோரின் பதிவுகள் இந்நூலின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு வருங்கால நிரூபணங்களாக பதியப்பட்டுள்ளன.

எனவே எமது வரலாறுகள் நன்மையானதோ தீமையானதோ அனைத்தும் ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது. முன்னர் தான் நாம் எமது சரித்திரங்களை எழுதிவைக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறு வாளாதிருப்பது எமக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வளவு கோரக் கொடுமைகளின் பின்பும் தமிழ் மக்கள் அமைதியாக இங்கு இருந்து வருவது பிறநாட்டவர்க்கு வியப்பை அளித்தாலும் ஏதோ ஒரு விடிவு காலம் அண்மையில் வரப் போகின்றது என்ற எண்ணமே எம் மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்து எம்மை ஓட்டி வருகின்றது. காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்படுவதே மனித வாழ்க்கை. தொடர்ந்து கஷ்டத்தையே எம் மக்கள் அனுபவித்து வரவேண்டிய அவசியமில்லை. விடிவு விரைவில் வரும் என நம்புவோம்.

தமிழ் மக்கள் என்றுமே சிங்கள மக்களை அடக்கி ஆளவோ அல்லது அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கவோ விரும்பவில்லை. மாறாக தாம் வாழுகின்ற பகுதிகளில் தம் மக்கள் சுபீட்சத்துடன் வாழ தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு ஆட்சி முறைமையையே விரும்புகின்றார்கள். இதை சர்வதேசச் சட்டம் அங்கீகரிக்கின்றது. ஆனால் பேரினவாதிகளோ இந்த நாடு முற்றுமுழுதாக சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சிங்கள பௌத்த தேசம் எனவும் சிறுபான்மை மக்கள் தாம் போடுகின்ற பொரியை உண்டு விட்டு கைகட்டி வாய் பொத்தி தங்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். அதன் விளைவே சில காலங்களுக்கு முன்பு அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கான மூலாதாரங்கள்.

எம் மக்கள் ஏற்கனவே முப்பது ஆண்டுகளுக்கு மேலாக துன்பச் சுமைகளைச் சுமந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களின் எந்த அழுத்தங்களையோ அல்லது அவர் தரும் துன்பங்களையோ கண்டு எம்மவர் துவண்டுவிடமாட்டார்கள். ஒரு நாள் பேரழிவையே தாங்கமாட்டாத இந்தப் பேரினவாதிகளுக்கு அடி மழை, வெள்ளங்கள் ஏற்பட்ட காலத்தில் முதலாவது உதவி, அக்காலத்தில் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானித்த தலைவர்களிடமிருந்தே, எடுத்துச் செல்லப்பட்டது என்பது வரலாற்று உண்மை. மாத்தறையில் உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட பௌத்த பிக்குமார்கள் வெளிப்படையாக இயக்கங்களிற்கு நன்றி தெரிவித்தார்கள்.

இன்றும் நாம் அதையே நினைவுகூர விரும்புகின்றோம். சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம். காரணம் ஒற்றையாட்சிக்குக் கீழ் பெரும்பான்மையினரின் ஆதிக்க வெறியாட்டம் இதுவரையில் நாம் அறிந்த உண்மையே. சமஷ்டி என்கின்ற ஒரு சொல்லைக் கேட்டவுடனேயே நாக பாம்பை மிதித்துவிட்டவர்கள் போல சிங்கள அரசியல்வாதிகள் துள்ளிக் குதிக்கின்றார்கள். நாட்டைக் கூறு போடப் போகின்றோம் என்று கூச்சலிடுகின்றார்கள், ஓலமிடுகின்றார்கள். உண்மை நிலையை விளங்கிக் கொள்ளாத சிங்கள மக்களும் அதனை நம்பி தமிழ் மக்கள் மீது வன்முறையில் ஈடுபட எத்தனிக்கின்றார்கள்.

சிங்களக் குடிமக்கள் பழகுவதற்கு இனியவர்கள். பண்பானவர்கள். ஆனால் இனம் என்று வருகின்ற போது சுயநலம் மிகுந்த அரசியல் தலைவர்களின் வன்முறை அரசியல் கலாச்சாரத்தின் தூண்டலில் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுகின்றார்கள். உடமைகள் அழிக்கப்படுகின்றன. உயிர்கள் அழிக்கப்படுகின்றன. நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறாக இன்னோரன்ன துன்பங்களைத் தமிழ் மக்களுக்குப் புரிவதற்கு அவர்கள் தூண்டிவிடப்படுகின்றார்கள்.

நான் வன்முறைக் கலாசாரத்தை விரும்புவதில்லை. மாறாக நீதியின் வழியில் எமக்கு கிடைக்க வேண்டிய சகல உரித்துக்களும் நேர்மையான அரசியல் முன்னெடுப்புக்கள் வழியாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன். ஆனால் தொடர்ச்சியான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நில அபகரிப்புக்களும் முப்படைகளின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் பல புரியப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்களப் பொது மக்கள் இடையே உண்மையை உணர்த்த வேண்டும். உலக நாடுகளுக்கும் உண்மையை உரக்கக் கூறவேண்டும். சட்டத்தின்பாற்பட்ட சகல நடவடிக்கைகளையும் தவறாது எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கியுள்ளது.

இறையருளால் குற்றம் இழைத்தவர்கள் தமது குற்றங்களை உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எது எப்படியோ எமக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான எமது நடவடிக்கைகள் தொடர வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களையும் அவர்களின் இருப்புக்களையும் உறுதி செய்யும் வரையிலும் எதுவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத நிலையில் பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற எமது இளைஞர் யுவதிகள் விடுவிக்கப்படும் வரையிலும் எமது பணி ஓயாது. மக்கள் நலனுக்காக நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற முன்வருவோமாக! இந்த நூல் வெளியீடு எம் மக்கட் தலைவர்களை ஒன்று சேர்ப்பதாக! நூல் வெளியீட்டாளர்களுக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு எதிர்காலக் கல்விக்கு 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50000 வரையான நூல்கள் – லிற்றில் எய்ட்!

மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வியில் வீழ்ச்சியடைந்த தமிழ் சமூகத்தை மீண்டும் மேன்நிலைப்படுத்த; லிற்றில் எய்ட் பல்வேறு கல்வி நடவடிக்கைகளிலும் மாணவர்களின் ஆளுமை விருத்தியிலும் மிகக் கவனம் எடுத்து வருகின்றது. அதன் ஒரு முக்கிய நகர்வாக இன்று அதிகாலை 11,000 கிலோ கிராம் நிறை கொண்ட 50,000 வரையான சிறுவர்களுக்கான ஆங்கில நூல்கள் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சென்றடைந்தது. இந்நூல்களின் இலங்கைச் சந்தைப் பெறுமதி 22 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடபடுகின்றது. ஸ்கொட்லாந்தில் உள்ள புக் அப்ரோட் என்ற சர்வதேச நிறுவனத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் லிற்றில் எயட், காலத்திற்குக் காலம் தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கு சிறுவர்களுக்கானபல்வேறு துறைசார்ந்த ஆங்கில நூல்களை அனுப்பி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று கிளிநொச்சியயை வந்தடைந்த நூல்கள் தமிழ் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாடசாலை மற்றும் நூலகங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

எம் வி ரக்னா என்ற கப்பலில் டிசம்பர் 22இல் இலங்கை வந்தடைந்த நூல்கள் இன்று கிளிநொச்சியில் உள்ள லிற்றில் எய்ட் நிறுவனத்தில் இறக்கப்பட்டது (படங்கள்). 22 ‘பலட்களில்’ கொண்டுவரப்பட்ட நூல்கள் தறகாலிகமாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் துளசிகன் மேற்பார்வையில் இறக்கப்பட்டது, வடக்கில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்துவரும் சிறகுகள் அமைப்பினர் லிற்றில் எய்ட் நிறுவனத்தோடு கரம்கோர்த்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். நடுநிசியில் மழையயையும் பொருட்படுத்தாமல் நூல்கள் பத்திரமாக லிற்றில் எய்ட் நிறுவன மண்டபத்தில் இறக்கப்பட்டது.

இப்பணிகளில் லிற்றில் எய்ட் அறங்காவல் சபை உறுப்பினர்கள் குகன், தயாளன் ஆகியோரும் ஈடுபட்டு இருந்தனர். தமிழ் பகுதிகளில் நூல்களும் நூலகங்களும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஈடுபாடு இல்லாமல் இல்லை. 2012இல் நூலகவியலாளர் என் செல்வராஜா லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் ஆகியோர் இஸ்கொட்லாந்திற்கு நேரடியாகச் சென்று அவ்வமைப்பினருடன் இறுக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தோம். அதன் பயனாகவே இவை சாத்தியமாகி வருகின்றது. இந்நூல்களை சேகரித்து கொழும்புத்துறைமுகம் வரை அனுப்பி வைப்பதற்கு ஏற்பட்ட பத்து இலட்சம் ரூபாய்கள் வரையான செலவை புக் அப்ரோட்டே பொறுப்பேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு சுங்கத் திணைக்களத்தில் ‘கிளியரன்ஸ்’ அனுமதி பெற்று லிற்றில் எய்ட் நிறுவனத்திற்கு இவ்வளவு தொகையான நூல்களைக் கொண்டு சேர்ப்பது லிற்றில் எய்ட் பொறுப்பாக இருந்தது, அதற்கான நிதியயை சேகரிப்பதில் லிற்றில் எய்ட் தலைவர் என் கதிர் செயலாளர் என் சுகேந்திரன் ஆகியோருடைய உழைப்பு குறிப்பிடத்தக்கது.

நல்ல நூல்கள், நல்ல நண்பர்கள்!
வாசிப்பதால், மனிதன் பூரணமடைகின்றான்!!
ஆகவே வாசிப்பை நேசிப்போம்!!!

லிற்றில் எய்ட்.

 

கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட மறுக்கும் ட்ரம்ப் – பேரழிவு ஏற்படும் என பைடன் எச்சரிக்கை !

உலக அளவில் கொரோனாவைரஸ்  பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டால் தான் அது சட்டமாக்கப்பட்டு, கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கப்படும். ஆனால், இந்த மசோதாவில் அமெரிக்கர்களுக்கு குறைவான உதவியே கிடைக்கிப்பதாகவும், வெளிநாடுகளே அதிக பலனடைவதாகவும் கூறி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க டிரம்ப் மறுத்து வருகிறார்.
மேலும், கொரோனா நிவாரணமாக அமெரிக்கர்களுக்கு தலா 600 டாலர் வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பதை 2 ஆயிரம்  டாலராக  அதிகரிக்கும்படியும் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதனால், கொரோனா நிவாரண மசோதா சட்டமாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மசோதாவில் டிரம்ப் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் 1 கோடி அமெரிக்கர்கள் வேலையின்மை காப்பீடு பலன்களை இழக்க நேரிடும் எனவும் ”
பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஜேர்மனியில் முதலாவது கொரோனா தடுப்பூசி 101 வயதான மூதாட்டிக்கு !

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. ஜேர்மனியில் இதுவரை 30 ஆயிரத்து 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 21-ந்தேதி அனுமதி அளித்தது. இதையடுத்து ஜெர்மனியில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி நேற்று (26.12.2020) தொடங்கியது. அங்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல் தடுப்பூசியை சாக்சானி அன்ஹால்ட் பகுதியில் பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் 101 வயது எடித் குய்சல்லாவுக்கு டாக்டர்கள் செலுத்தினர். முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறியதாவது:-

தொற்றுநோயை வெல்வதற்கு தடுப்பூசி முக்கியமாகும். இது எங்கள் வாழ்க்கையை திரும்பப்பெற அனுமதிக்கும். இது நம்பிக்கையின் நாள். அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பது ஒரு நீண்ட தூர முயற்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

“வனவளத்திணைக்களத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிப்போம்” – வவுனியா விஜயத்தில் செ.கஜேந்திரன் !

வவுனியாவிற்கு நேற்று (26.12.2020) விஜயம் செய்த அவர் கற்குளம்3 மற்றும் கற்குளம் 4, மதுராநகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

மக்கள் குறைகளை கேட்டறிந்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,

இந்த பகுதியில் உள்ள பெருமளவான குடும்பங்களிற்கு காணிகளிற்கான உறுதிபத்திரங்கள் வழங்கப்படவில்லை, வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை. அதிகமான மக்கள் தற்காலிக கொட்டில்களிலேயே வசித்து வருகின்றனர். உப குடும்பங்களும் தமது பிள்ளைகளுடன் சிறிய வீடுகளிலேயே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. மலசலகூடம் இல்லை. அவர்கள் காலைக்கடன்களை கழிப்பதற்கு கூட பற்றைகளை பயன்படுத்தும் நிலையே காணப்படுகின்றது. பல வருடங்களாக அவர்களுக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை.

அத்துடன் பற்றைகளாக இருக்கும் தமது காணிகளை துப்புரவாக்கி பயிர் செய்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நெருக்கடிகள் ஏற்ப்படுத்தப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனினும் அருகில் உள்ள சிங்கள கிராமங்களை சேர்ந்த மக்கள் சுதந்திரமாக அந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நீண்ட காலமாக பராமரித்த காணிகளை வனவள திணைக்களம் சொந்தம் கொண்டாடுகின்றமை தொடர்பாக உரிய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவரது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறோம் இதனை பேசி தீர்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் அந்த நிலமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எமது அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகித்து வருவோம்” என்றார்.

படைப்புழு தாக்கம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிய ஜனாதிபதி களவிஜயம் !

நேற்று (26.12.2020) பிற்பகல் அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு போன்ற இடங்களுக்கு பயணித்த  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயிகளுடைய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

அங்கு சென்ற ஜனாதிபதி சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழு தாக்கத்தினால் பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது என்று விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

காட்டு யானைகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.டிவிவசாய நிலங்களுக்கு வந்து தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்ததற்காக விவசாயிகள் ஜனாதிபதியை பாராட்டினர்.

இதன்போது ஜனாதிபதியுடன் மிரிசவெட்டிய விஹாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெட்டுனுவெவே ஞானதிலக தேரரும் வருகைதந்திருந்தார்.

“ நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை. சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ எவையும் கிடைக்கவில்லை” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களிற்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில் மாகாணாசபை தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிடவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் சுதந்திரக்கட்சி பொதுஜனபெரமுனவுடன் இணைந்தே களமிறங்கியிருந்தது. பொதுஜனபெரமுனவின் வெற்றியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்களவு காணப்பட்டது. எனினும் ஆட்சியமைத்தது முதல்  பெரமுன சுதந்திரக்கட்சியினை முன்னிலப்படுத்தாத போக்கே தொடர்ந்தது. இந்நிலையில் சுதந்திரக்கட்சியினர் பலரிடையேயும் அதிருப்தியான நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இதே நிலை தொடருமாயின் பெரமுனவிலிருந்து பிரிந்து தனித்தே தாம் மாகாணசபைத்தேர்தலில் களமிறங்க நேரிடும் என ன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலுமு் தெரிவித்துள்ளதாவது,

நாடாளுமன்ற தேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இம்முறை எங்களை நியாயமான முறையில் நடத்தாவிட்டால் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள் எங்களிற்கு நெருக்கடி தருவார்கள் . எங்கள் வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படாவிட்டால்  பிரிந்துசெல்ல தீர்மானித்துள்ளோம்.

பொதுதேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது, சிலமாவட்டங்களில் எங்கள் கட்சியினருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. களுத்துறை நுவரேலியாவில் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை . கம்பஹாவில் வெற்றிபெறக்கூடிய எங்கள் வேட்பாளர்களில் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது .

நாங்கள் சமர்ப்பித்த வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டிருப்பார்கள் தற்போது சுதந்திரக்கட்சிக்கு 14 உறுப்பினர்களே உள்ளனர்.  தமிழர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதன் ஒரு பகுதியாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.  இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13வதுதிருத்தம் உருவானது.

நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 13 திருத்தம் உதவியுள்ளதா? என்பது குறித்து பார்க்கவேண்டும். மாகாணசபை முறை குறித்து உரிய ஆய்வுகள் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன். 30 வருடங்களிற்கு பின்னரும் மாகாணசபை முறை வெற்றியாதோல்வியா? என்பதை நாங்கள் இன்னமும் உறுதிசெய்யவில்லை.

மாகாணசபைமுறைக்காக செலவிடப்படும் நிதி குறித்தும் கேள்விகள் எழுகின்றன. நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை. மாகாணசபைகளில் நாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் உரிய பலாபலன்கள் கிடைக்கவில்லை,சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ கிடைக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தெற்கின் சிங்கள பத்திரிகைகள் மீது பாயாத பயங்கரவாத தடைச்சட்டம் வடக்கின் தமிழ்பத்திரிகைகளை குறிவைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்”  – மனோ கணேசன்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை மீது யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் யாழ். காவல்துறையினரால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல தரப்பினரும் ஊடக அடக்குமுறைக்கு எதிரான தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ”தமிழ் ஊடகங்களை அடக்குவதிலும் ஒடுக்குவதிலும் ராஜபக்ச குடும்ப அரசு கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது என்பதற்கு ‘உதயன்’ மீதான வழக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“வரலாற்றில் தடம் பதித்தவர்களின் பிறந்த தினத்தையும், நினைவேந்தல் தினத்தையும் நினைவூட்டுவதும், அது தொடர்பான பதிவுகளை இடுவதும் – பிரசுரிப்பதும் ஊடகங்களின் பணி. இந்தநிலையில், கடந்த நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமன்று அது தொடர்பான செய்தியுடன் அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டதாக ‘உதயன்’ மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெற்கில் சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மற்றும் கட்டுரைகளில் பிரபாகரனின் படமும் வெளிவருகின்றது. இந்தநிலையில், ‘உதயன்’ பத்திரிகையைக் குறிவைத்தே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்துள்ளது.

‘உதயன்’ பல்லாண்டு கால வரலாற்றைக்கொண்ட பத்திரிகை. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகவும் அன்று தொடக்கம் குரல் கொடுத்து வரும் பத்திரிகை. எனவே, இந்தப் பத்திரிகை மீதான அரசின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” – என்றுள்ளது.

இதே நேரம் உதயன் மீதான பயங்கரவாததடைச்சடடத்தை கண்டித்து இரா.சம்மந்தன், எதிர்கட்டசி தலைவர் சஜித்பிரேமதாஸ ஆகியோரும் தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.