January

January

கம்போடியாவுக்கு நன்கொடையாக 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வழங்கிய சீனா – முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரதமர் ஹுன்சென் !

கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடுப்பூசிகளில் சினோபார்ம் தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் லட்சக்கணக்கானோர் போட்டுள்ளனர். இதில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ முக்கியமானவர் ஆவார்.

இந்த வரிசையில் கம்போடிய பிரதமர் ஹுன்சென்னும் சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். நாட்டிலேயே முதல் நபராக இந்த தடுப்பூசியை அவர் போட்டுள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இன்று நான் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்த விவகாரத்தில் நான்தான் முதலில் இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் அதை நான் வழக்கமாக வைத்துள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

கம்போடியாவுக்கு நன்கொடையாக சீனா வழங்கியிருக்கும் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை ஏற்பதாக கூறியுள்ள ஹுன்சென், நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த 10 லட்சம் டோஸ்கள் போதாது என்றும், நாட்டில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் நாம் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்” – மாவை சேனாதிராஜா

“அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் நாம் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்”  என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.

புதிய ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் எமக்கு கருத்துகளை கூறமுடியாது. அது அவர்களது தீர்மானமாகும். அதற்கு நாம் பதிலளிக்க வேண்டியதும் இல்லை. தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ள தீர்மானத்தில் பிரகாரம் ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்” என்றும் அவர் கூறினார்.

கேகாலை ஆயுர்வேத மருத்துவரின் கொரோனா பாணியை எடுத்துக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா !

கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் மருந்தினை பயன்படுத்திய இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கொரோனாவினால் பாதிக்கப்ட்டுள்ளார்.

துரித அன்டிஜென் பரிசோதனையின் போதே அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அமைச்சரின் பத்து உதவியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர் தனது மருந்தினை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசென்றவேளை இராஜாங்க அமைச்சர் அதனை பயன்படுத்தியிருந்தார்.

“அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது” -ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது” என ஜே.வி.யின் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அச்சம் காரணமாக இந்தியா கோரியதை வழங்க தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் பங்குகளை விற்பதன் மூலம் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 வீத பங்குகளை இந்தியாவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்ட பின்னர் தனக்கு ஏதாவது தரவேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தனக்கு ஏதாவது வேண்டுமென கோரியது அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம்” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு இந்திய பிரதமர் மோடி பதில் !

“நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம்” என இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதிக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் டுவிட்டர் செய்திக்கு அளித்துள்ள பதில் செய்தியில் இந்திய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளமைக்காகவும் நட்புறவு அயல்நாடுகள் குறித்த தாராள மனப்பான்மைக்காகவும் இலங்கை ஜனாதிபதி இந்திய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கு தனது டுவிட்டர் செய்தியில் பதிலளித்துள்ள இந்திய பிரதமர்

“நன்றி கோத்தபாய ராஜபக்ச அவர்களே நோய்பரவலிற்கு எதிராக கூட்டாக போராடும் அதேவேளை நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய அரசாங்கம் அயல்நாடுகளிற்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கும் மில்லியன் டோஸ்களிற்கு அதிகமான கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றது” என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஆராய்ச்சியின் போது வௌவாலிடம் கடி வாங்கிய வுகான் விஞ்ஞானி – கொரோனாவிற்கான காரணத்தை தேடி பயணிக்கும் குழுவின் தேடலில் அதிர்ச்சி !

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைரஸ் செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வில் வைரஸ் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான வுகான் நகரில் உள்ள ஒரு குகையில் கடந்த 2017-ம் ஆண்டு வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த விஞ்ஞானி வௌவாலிடம் கடி வாங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெய்லி மெயில் மற்றும் டெய்லி ஸ்டார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிவரும் சீனாவில் ’வௌவால் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷிங் ஷன்லி தனது குழுவுடன் வுகானில் உள்ள ஒரு குகைப்பகுதிக்கு 2017-ம் ஆண்டு சென்றுள்ளார். சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர்கள் வௌவாலை பிடித்து அதில் பரிசோதனை செய்துள்ளனர்.

அந்த குழுவில் இடம்பெற்றிருந்த வைரஸ் ஆராய்ச்சிளர் சியூ ஜியி என்ற அந்த குகையில் பிடித்த ஒரு வௌவாலில் இருந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

“நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள்” – ரோகித போகொல்லாஹம

“நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள்” என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னதாக ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு தமிழ் கட்சி கூட்டணி சிவில் சமூகத்தவர்களின் ஆதரவுடன் இலங்கை தொடர்பான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதனை உரிய முறையில் எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத மரபு சார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் ஈழத்தை பெறுவதற்கான தங்களின் முயற்சியில் தோல்வியடைந்தவர்கள் நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளவர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலையீடுகள் குறித்து தீவிரமாக உள்ளவர்களை பொறுப்புக்கூறும் விடயத்தை பயன்படுத்தி அரசியல் செய்யவேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை 2009 இல் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவந்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் படி தமிழ்தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்தியமையை அந்த கட்சி மறந்துவிட்டது எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானம் கொண்டுவரப்படுவது நிச்சயம் என்பதால் இலங்கை மேலும் தாமதிக்காமல் நிலைமை குறித்து ஆராய்வது முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ள விடயங்களையும விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விடயங்களையும் இலங்கை தனக்கு சார்பாக வாதிடுவதற்காக பயன்படுத்தவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் கட்சிகளின் கருத்துக்களை சாதாரணமாக கருதக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி போர்முனையில் யுத்தத்தை நடத்துவதற்கு பிரிட்டனும் பிரான்சும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் அவர்கள் இந்த விடயத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தின என யுத்தகால வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் குறித்த தனது அரசாங்கத்தின் குறித்து அவ்வேளை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சராக காணப்பட்ட டேவிட் மில்லிபாண்டின் கருத்து என்னவென நான் உங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை என ரோகித போகொல்லஹம தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் குரலாக செயற்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு முதல்தடவையாக இரண்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், 2013 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் அந்த கட்சியிலிருந்து விலகியுள்ள போதிலும் அவர் ஜெனீவா குறித்த பொது நிகழ்ச்நிரலின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்புடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடனும் இணைந்து செயற்படுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார். ஜெனீவா பெரும் சவாலாக காணப்படப்போகின்றது இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலகநாடுகளின் உண்மையான நலன்களும் நோக்கங்களும் பரந்துபட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியை மீள இலங்கைக்கு அழைத்து வரக்கோரி கணவர் தொலைத்தொடர்பு கோபுரம் மீதேறி போராட்டம் !

கம்பஹாவில் வதியும் கப்பல் தள பணியாளர் ஒருவர் தனது மனைவியை ஜோர்தானிலிருந்து திருப்பி அழைக்குமாறு கோரி நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைத்தொடர்பு கோபுரம் மீதேறி போராட்டம் ஒன்றை நடத்தினார்.

இவரது மனைவி (24வயது) கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஜோர்தானில் தொழில்புரிந்து வருகிறார். தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

இந்த அவல நிலை குறித்து அப்பெண்ணின் கணவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது மனைவியை திருப்பி அழைக்க விரும்பினால் 4 லட்சம் ரூபா பணம் தருமாறு கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நபர் தொலைத்தொடர்புக் கோபுரம் மீதேறி போராட்டம் செய்த பின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் கலந்துரையாட உடன்பட்டார்.

“மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும்” – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை !

“மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும்” என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(18.01.2021) மண்டைதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனைக் கண்டித்து பொதுமக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு,கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

போன தடவையும் பொலிஸார் பஸ்ஸுடன் தான் வந்தனர். நீங்கள் மீண்டும் திருப்பி வர முயற்சி செய்தால் நாங்கள் பகிரங்கமாகச் சொல்கின்றோம் , பிரதேச செயலகம்,  மாவட்ட செயலகம் உட்பட அனைத்தும் முடங்கும். சிவில் நிர்வாகம் முடக்கப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு,கிழக்கு முழுவதும் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என தெரிவித்துள்ள அவர் முழுமையாக விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என வேலணை பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த பைலை என்னால் முடியாது என திருப்பி அனுப்புங்கள் எனவும் சிவாஜிலிங்கம் வேலணை பிரதேச செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

“மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது” – கஜேந்திரன்

“மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.

இன்று(18.01.2021) மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனை கண்டித்து பொதுமக்களும் தமிழ்அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களிடம் பேசும் போதே கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

29 குடும்பங்களை சேர்ந்த மக்களும் தங்களின் சொந்த நிலங்களை இழக்க தயாரில்லை. மீண்டும் மீண்டும் மக்களை குழப்பும் விதத்தில் காணி திணைக்களம் நடந்துகொள்கின்றது. பிரதேச செயலாளர் இந்த பிரதேசத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர்களிற்கு இதனை தெரிவிக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் நிலங்களை அளப்பதற்கு அனுப்புகின்றனர் ஆற்றில் ஒடும் நீர் நித்திரையா முழிப்பா என பார்ப்பதற்கு கொள்ளி வைத்து பார்ப்பது போல காணித்திணைக்களம் செயற்படுகின்றது, இது மக்களை குழப்புகின்ற முயற்சி மக்களிற்கு இதில் விருப்பமில்லை என காணித்திணைக்களத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்.

மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை அரசாங்கம் எடுக்கவில்லை,காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் தான் அலுவல்கள் இடம்பெறுகின்றன. காணித்திணைக்களத்திடம் இந்த நோக்கத்தை கைவிடுமாறு பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும். வாழ்க்கையில் கடற்படையினருக்கு காணி கொடுப்பதற்கு ஒருபோதும் மக்கள் இணங்கமாட்டார்கள் இந்த மக்களும் தங்கள் காணிகளை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என அவர் தெரிவித்தார்.