January

January

“கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும். எக்காரணத்திற்காகவும் அந்த நடைமுறை மாற்றப்படாது” – சுகாதாரதுறை அமைச்சர் உறுதி !

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுமெனவும் எக்காரணத்திற்காகவும் அந்த நடைமுறை மாற்றப்படாது எனவும், சுகாதாரதுறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று(07.01.2021)நாடாளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோ புள்ளேயிடம், வைரஸ் தொடர்பான விசேடநிபுணர்கள் குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில், கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டுமென அதில் தெரிவித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

அதற்கமைய சம்பந்தப்பட்ட அறிக்கை தற்போது சடலங்கள் தகனம் செய்யப்படுமா அல்லது அடக்கம் செய்யப்படுமா என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே, மத ரீதியான அல்லது வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அந்நடைமுறையை மாற்றப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.

இதே நேரத்தில் முஸ்லீம்கள் தங்களுடைய உறவினர்களின் ஜனசாக்களை எரிக்க வேண்டாம் என இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

“பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள்”- பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை வேண்டுகோள் !

பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது மேலாளர் வைத்தியர் டெர்னி பிரதீப் குமார இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, அப்புறப்படுத்தப்பட்ட சுமார் 150 கோடி முகக்கவசங்கள் கடலுக்குள் வீசப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாடு மற்றும் சுற்றுச்சூழலையும் கடற்கரையையும் பாதுகாக்க உதவுமாறும் பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளார்.

“தற்போதைய மாகாண சபைகள் முறைமைக்குப் பதிலாக தமிழர் பகுதிகளில் பிராந்திய சபைகளை அலகாகக் கொண்ட முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும்” – தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனை !

“தற்போதைய மாகாண சபைகள் முறைமைக்குப் பதிலாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட-கிழக்கை உள்ளடக்கியதாக பிராந்திய சபைகளை அலகாகக் கொண்ட முறைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென புதிய அரசியலமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக எதிர்க்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசின் தன்மையானது மத்தியினதும் பிராந்தியங்களினதும் நிறுவனங்களாலான ஒரு சுதந்திரமான, இறைமையுடைய, சுயாதீனமான ஐக்கிய [ஒன்றுபட்ட] குடியரசாக இருக்க வேண்டும் என்றும் அரசியலமைப்பானது பிராந்தியத்தின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டுமெனவும் யோசனையில் முன்மொழிந்துள்ளது.

ஆளுகை அடிப்படையில் அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்களில் , மேற்கூறிய பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் ஒரு பிராந்திய சபையைக் கொண்டிருக்க வேண்டும் என்று முன்மொழிவு கூறுகிறது, சபையின் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியால் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமெனவும் பின்னர் சபையின் அங்கீகாரத்துக்கு விடப்படவேண்டுமெனவும்,குறித்த பிராந்தியத்தின் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபை அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயற்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சபைகள் சில விடயங்களில் சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.தேசியக் கொள்கையைப் பொறுத்தவரை, அனைத்து பிராந்தியங்களுடனும் கலந்தாலோசிக்கப்படுவதுடன் அவற்றின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அத்துடன் தேசியக் கொள்கை சட்டவரையறை கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும், பிராந்தியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயத்தைப் பற்றிய சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும், மேலும் அவை பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தைக் குறைக்காது. இந்த சட்டமூலங்களுக்கு வாக்களிப்பதன் மூலம் சபைகள் ஒப்புதல் அளித்தால், மத்திய சட்டவாக்கசபை [ நாடாளுமன்றம்] பகிர்ந்தளிக்கப்பட்டவிடயங்கள் தொடர்பான சட்டங்களை உருவாக்க முடியும்.

மேலும், அதிகாரப் பகிர்வை பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விடயத்தில்,ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் ஒரு பிரதிநிதித்துவ தூதுக்குழுவின் ஒப்புதலுடன் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் அங்கீகாரம் இருக்க வேண்டும். தேசியபந்தோபஸ்து, தேசிய பாதுகாப்பு, ஆயுதப்படைகள், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் தேசிய பொருளாதார விவகாரங்கள் மத்திய அரசுடன் அவசியம் இருக்க வேண்டும் – இவை தவிர பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் வழங்க வேண்டிய விடயங்கள் மற்றும் செயற்பாடுகளின் பட்டியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.

இதில் ஏனையவற்றுடன் , நிலம் (மத்திய பட்டியலில் உள்ள ஒரு விடயத்திற்கு மத்திய அரசு பயன்படுத்தும் அரச காணி தவிர), சட்டம் ஒழுங்கு, பிராந்திய காவற்துறைச் சேவை (தேசிய காவற்துறை படையால் கையாளப்பட்டவை தவிர மற்ற அனைத்துக் குற்றங்களும் அடங்கும்), கல்வி (மூன்றாம் நிலை கல்வி உட்பட), சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் கட்டுமானம், விவசாயம் மற்றும் விவசாய சேவைகள், நீர்ப்பாசனம், மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ச்சி, மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உள்ளூர் அரசு, பிராந்திய பொதுச் சேவை, மத மற்றும் கலாசார விவகாரங்கள், பிற சமூக பொருளாதார மற்றும் கலாசார விடயங்கள் , கூட்டுறவு மற்றும் கூட்டுறவு வங்கிகள், தொழில்கள் மற்றும் வரி விதிப்பு, மத்திய மானியங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு கடன்கள் மற்றும் மானியங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (அந்நிய நேரடி முதலீடு) ஆகியவை உள்ளடங்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூற்றின் பிரகாரம் ‘பிராந்திய பொதுச் சேவை ஆணைக்குழு’ மற்றும் ‘பிராந்திய காவற்துறை ஆணைக்குழு’ இருக்கும். மேலும், அரச நிலத்தைப் பொறுத்தவரை, பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் சேனநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின்படி அதன் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும், நிலங்களை சுவீகரித்தல் மற்றும் விடுவிக்கும் அதிகாரம் பிராந்தியங்களுக்கு இருக்க வேண்டும்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உத்தியோகபூர்வ மொழிகளாகவும், நாடு முழுவதும் நிர்வாக மொழியாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது. சிங்களமும் தமிழும் தற்போதுள்ள அரசியலமைப்பின் கீழ் உத்தியோகபூர்வ மொழிகளாகும், அதே சமயம் ஆங்கிலம் இணைப்பு மொழியாகும்.

நிறைவேற்று அதிகாரத்தைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறக்கூடிய ஒரு வைபவ ரீதியான ஜனாதிபதி இருக்க வேண்டும் என்றும், அமைச்சரவையின் தலைவராக இருக்கும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் செயற்படுவதாகவும், விடயங்களை ஒதுகீடு செய்தல் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரம் உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

சட்டமன்றத்தைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் இரு தரப்பு சட்டமன்றமாக இருக்க வேண்டும், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அவை மற்றும் பிராந்தியங்களின் பிரதிநிதிகளால் ஆன இரண்டாவது அவை ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதிகாரப் பகிர்வைப் பாதிக்கும் திருத்தங்களின் விடயத்தில், இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு அதிகமாகவும் , இரண்டாவது அவையிலுள்ள அனைத்து பிராந்திய பிரதிநிதிகளின் அங்கீகாரமும் அதற்கு இருக்க வேண்டும்.

நீதித்துறையைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் மற்றும் பிராந்திய சபைகள் உருவாக்கிய சட்டம் தொடர்பான அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு ரீதியான விளக்கத்தின் விடயங்களையும் கேட்டுத் தீர்மானிக்க அரசியலமைப்பு நீதிமன்றத்தை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.

மேலும், அடிப்படை உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை விசாரணை செய்வதற்கு மாகாண மேல் நீதிமன்றங்கள் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

“இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது” – பேராசிரியர் சரித ஹேரத்

“இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் குறைகளை மறைத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

மாகாண சபைத் தேர்தல் முறைமையை நீக்கி புதிய தேர்தல் முறைமையை கடந்த அரசு அறிமுகப்படுத்தியது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் அப்போதைய அரசு தோல்வியடைந்ததால் மாகாண சபைத் தேர்தலை நடத்த எவ்வித நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை.

கடந்த அரசு எல்லை நிர்ணய அறிக்கையைக்கொண்டு வந்து அதை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வேண்டுமென்றே தோற்கடித்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலையை ஏற்படுத்தித் தேர்தலைக்   காலவரையறையின்றி பிற்போட்டுள்ளது.

நல்லாட்சி அரசு தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மாத்திரமல்ல மக்களின் ஜனநாயக உரிமையையும் பலவீனப்படுத்தியுள்ளது. ஆகவே, மாகாண சபைத் தேர்தல் குறித்து கருத்துரைக்கும் தார்மீக உரிமை கடந்த அரசின் உறுப்பினர்களுக்குக் கிடையாது.

ஐக்கியக் தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முறையற்ற செயற்பாடுகள் அனைத்துக்கும் மூல காரணமாகும்.

மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் என்பது தற்போதைய அரசின் நோக்கமல்ல. தேர்தலைப் பழைய முறையிலும், புதிய முறையிலும் நடத்த முடியாத நெருக்கடி நிலை காணப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது  அரசின் பொறுப்பாகும். ஆனால், இந்தியாவின் அவசரத்துக்காக தேர்தலை விரைவாக நடத்த முடியாது. தேர்தல் திருத்த முறைமை குறித்து அரசு உரிய கவனம் செலுத்தியுள்ளது ” என்றார்.

“3000 வருடங்களாக இருந்த தமிழ் மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” – சி.வி. விக்னேஸ்வரன்

“3000 வருடங்களாக இருந்த தமிழ் மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” என  நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா கூட்டத் தொடரின் போது செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் என்ன செய்ய வேண்டுமென்பது தொடர்பாக வட, கிழக்கிலுள்ள மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடினோம். இந்த நிலையில் எதிர்வரும் காலத்தில் என்ன வேண்டும்? என்பது தொடர்பாக பேசுவதற்கும் நாங்கள் குழுவொன்றை நியமித்துள்ளோம்.

இந்த நிலையில், அந்தந்த இடங்களிலுள்ள மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவதோடு தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றே சட்டங்களும் கூறுகின்றன. அதன்படியே, அந்தந்த இடங்களிலுள்ள மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே நிவர்த்தி செய்து கொண்டு தங்களை ஆட்சி செய்வதற்கு இடமளிக்குமாறே நாங்களும் கோருகின்றோம். மாறாக, மத்திய அரசாங்கம் எங்களை அடிபணிய வைத்து ஆட்சி செய்யும் போது எங்களால் எதனையும் செய்ய முடியாது.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நாங்கள் முன்வைக்கும் எந்தவொரு யோசனையையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது. குறிப்பாக, வட, கிழக்கில் ஆரம்பத்தில் சிங்கள மக்கள் இருந்ததாகவும் தற்போதே தமிழ் மக்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், அது மிகப் பெரிய பொய்யாகும். வட , கிழக்கில் அதிகளவான சிங்கள மக்கள் இருக்கவில்லை. 3000 வருடங்களுக்கு மேலாக தமிழ் பேசும் மக்களே அங்கு இருக்கின்றனர். சிங்கள மொழியானது 1400 வருடங்களுக்கு முன்னே பிறந்தது. அவ்வாறாயின் 3000 வருடங்களாக இருந்த மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” என்றார்.

“அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர்” – நீதி அமைச்சர் அலி சப்ரி

“அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர். எனினும் எந்தவித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களுக்கு பிணை வழங்காது தடுத்து வைக்கவும் முடியாது  என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.

எனினும் இவர்களை விடுவிப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும், இன்னமும் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் சபையில் கேள்வி எழுப்பியதற்கே நீதி அமைச்சர் அலி சப்ரி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதே நேரம் , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் மாவை.சேனாதிராஜாவிடம் தெரிவித்திருந்தாக மாவை.சேனாதிராஜா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.

ட்ரம்ப் தரப்பின் அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு அடுத்த ஜனாதிபதி நானே என்பதை உறுதிப்படுத்தினார் ஜோ பைடன் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் திகதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக டிரம்ப் கூறி தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.
இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது. எனினும் டிரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வந்தார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜோ பைடன் வருகிற 20-ந் திகதி பதவி ஏற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது.
இதையடுத்து தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தங்களது வாக்குகளை கடந்த டிசம்பர் 14-ந் திகதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவரில் அனுப்பி வைத்தனர்.
அந்த வாக்குகள் எண்ணப்படுவதற்காக அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான கேப்பிடல் கட்டிடத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணிகளை தடுப்பதற்காக, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
அதன்பின்னர் பாராளுமன்றத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வானார். அவர் வெற்றி பெற்றதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றளித்தார். அதன்பின்னர் அதிகார மாற்றத்திற்கு ஜனாதிபதி டிரம்பும் ஒப்புதல் அளித்தார். இதனால், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்பதில் இருந்த கடைசி சிக்கலும் நீங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி  வரும் 20ம் திகதி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இடையே சந்திப்பு !

கிழக்கு மக்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோக பூர்வ விஜயமென்றினூடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற பிரதி நிதிகளையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுமார் இருபது நிமிடங்களிற்கு மேலாக இடம் பெற்ற இக்கலந்துரையாடலின் போது வட-கிழக்கு தமிழ் மக்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்தும், கிழக்கு மாகாண மக்களிற்கு இருக்கின்ற விசேடமான பல்வேறுபட்ட அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகள் அதிலும் குறிப்பாக வீட்டுத்திட்டம், குடிநீர் பிரச்சனை மற்றும் மலசல கூடங்கள் உட்பட வாழ்வாதார கட்டமைப்புக்களை ஏற்படுத்துதல், போன்றவை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய துனை உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைகளை செவிமடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் தமிழ் மக்களுக்கான பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுப்பதில் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

“மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும்” – ஜீவன் தொண்டமானிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதி !

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று (07.01.2021) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுகளுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கேல் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

“இந்தியா, இலங்கையின் உண்மை நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள்” – இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் வேண்டுகோள் !

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் இன்று(07.01.2021) கொழும்பில் சந்தித்துள்ளனர்.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களால் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. “ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் வாக்குறுதி, அறிவிப்பு என்ற அளவுகளில் மட்டுமே நிற்கிறது. ஆகவே இந்திய தோட்டத்துறை வீட்டு மற்றும் நலத்திட்டங்கள் உடன் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும். இராமேஸ்வரம் – மன்னார், தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவையை ஆரம்பிக்க உங்கள் பக்கத்தில் ஆவன செய்யுங்கள். நோர்வூட் கிளங்கன், நுவரெலியா மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர் இயந்திரங்கள் இரண்டு கொடுங்கள். இந்தியா, இலங்கையின் உண்மை நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள்”  போன்ற பல கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 13ஆம் திருத்தம், மாகாண சபைகள் தொடர்பான இந்திய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. புதிய அரசியலமைப்பு வரைபு குழுவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி யோசனைகளை முன் வைத்துள்ளது. எதிரணியில் இருந்தாலும் நாமே, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பெரிய அரசியல் இயக்கம்.

இன்றைய இலங்கை அரசு செல்வாக்கு இழந்து வருகிறது. வெகுவிரைவில் இனவாதம் இல்லாத இலங்கையை எமது தேசிய கூட்டணி உருவாக்கும். என தமிழ் முற்போக்கு கூட்டணி, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக்கூறியது.

மேலும், இன்றைய நரேந்திர மோடி அரசே, இலங்கையில் வாழும் எமது மக்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறது. அதன் பிரதிபலிப்பாகவே, இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரும் மக்கள் கூட்டத்தை நாம் பிரதமர் மோடிக்காக நோர்வூட்டில் கூட்டினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இச்சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் தூதரக அதிகாரிகள், கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.