January

January

“இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” – கூட்டமைப்பிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி !

“இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். குறித்த சந்திப்பு இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

TNA

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒருமித்த நாட்டுக்குள்தான் தமிழர்கள் தீர்வு கேட்கின்றார்கள். எனவே, அவர்களின் அபிலாஷைகளான நீதி, சமாதானம், சமத்துவம், கௌரவம் உள்ளடங்கலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது இலங்கை அரசின் பிரதான கடமை என்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பில் நான் எடுத்துரைத்துள்ளேன்.

மாகாண சபை முறைமையில் மாற்றம் வேண்டாம் எனவும், விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை அரசிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்.

இந்தியாவினதும் இலங்கையினதும் இணக்கத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதை இலங்கை அரசின் கவனத்துக்கொண்டு வந்துள்ளேன்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளைச் செய்யும். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனில் இந்தியா அதிக சிரத்தை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடார்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடார்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிகார அமைச்சருக்கம் இலங்கை கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (06.01.2021) நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட குறித்த கலந்துரையாடலின் போது, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் தேசிய நல்லிணக்க்தின் ஊடான உறவுப் பாலத்தினை வலுப்படுத்துவதையும், இந்தியாவுடன் விசேடமாக தமிழ் நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கடற்றொழில் அமைச்சை தனக்கு வழங்கி இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சருக்கு எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களையும், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பற்காக நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

அதேபோன்று 2018 ஆம் ஆண்டு புதிய மீன்பிடி தொடர்பான சட்டம் இலங்கையில் அமுல்ப்படுத்தப்படுவதற்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளவற்றை விற்பனை செய்து,  இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான உதவிகள் தொடரர்பில் இந்திய அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில்,  குறித்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளித்தார்.

அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களினால் எல்லை தாண்டி வந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ரோலர் முறை எனப்படும் இழுவை வலை படகுத் தொழிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள குறித்த தொழில் முறையினால் இரண்டு நாடுகளின் கடல் வளத்திற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் இந்திய வெளியுறவு அமைச்சருக்குத் தெளிவுபடுத்;தினார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர், குறித்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு சுமூகமான தீர்வினை காண்பதற்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அரபிக் கடலுக்கு செல்லுகின்ற இலங்கையின் ஆழ்கடல் பல நாள் கடற்றொழிலாளர்களுக்கான குறுகிய தூரத்தினைக் கொண்ட மாற்று வழியாக இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான இந்தியக் கடற் பரப்பை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கையையும் சாதகமாக பரிசீலிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்தை திடீர் முற்றுகை – 04 பேர் பலி – ட்ரம்ப் மீது ஆட்சிக்கவிழ்ப்பு குற்றச்சாட்டு !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வருகிற 20ந் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது. தேர்தல் சபை வாக்குகளை எண்ணி முறைப்படி வெற்றிச் சான்றை வழங்குவதற்காக, துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் தொடங்கியது.
அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது.
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் - பெரும்  பரபரப்பு | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu  News | தமிழ் நியூஸ் ...
வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மீண்டும் பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது.
இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை காவல்துறை உறுதி செய்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கிடையே வன்முறையின் மூலம் ஆட்சியை கவிழ்க்க ஜனாதிபதி டிரம்ப் சதி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த போராட்டங்கள் மற்றும் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான சவால்கள் ‘ஆட்சிக் கவிழ்ப்பிற்கான முயற்சி’ என்று செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் ஷுமர் குற்றம்சாட்டினார். தேர்தல் முடிவை பாராளுமன்றம் தீர்மானிக்கவில்லை, மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மாகாண சபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு” – ஐக்கிய மக்கள் சக்தி

“மாகாண சபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) ஆரம்பித்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில், அதற்கான யாப்பு உருவாக்கப்பட்டு சம்மேளனம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள கூட்டுக் கட்சிகளுக்கும் ஒன்றாய் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக யாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை ஜனநாயக ரீதியாக முன்வைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்ட முற்போக்கான எண்ணப்பாட்டில் கூட்டணிக்கான யாப்பு வரைவுச் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஜனநாயகத்தை மதிக்கும் சகலரும் இதில் இணைந்து கொண்டு செயற்பட முடியுமான சூழலை இதன் மூலம் நாம் உருவாக்கியுள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பிரவேசம் நிலைத்தல் தன்மை கொண்ட ஏற்பாடாகும்.  கட்சியின் யாப்பு முழுமையாக ஜனநாயக ரீதியான ஏற்பாடுகளை உள்வாங்கிய முற்போக்குத் தன்மை வாய்ந்த யாப்பாகும். தகுதி மற்றும் ஆற்றல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பொரும்பான்மையினரின் ஆதரவிலும் ஒப்புதலிலும் தான் பதவிநிலை நியமனங்கள் வழங்கப்படும். நியமனங்களுடன் பதவிகளுக்கான வேலைத் திட்டங்களும் வழங்கப்படும்.வெறும் நாம ரீதியான பதவிகள் நபர்களை இலக்காகக் கொண்டு வழங்கப்படமாட்டாது.

உலக நாடுகள் மற்றும் நாட்டில் பரவும் கொரோனா தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து பத்திரிகைகளுக்கும் இந்தக் கொரோனா தொற்று பெரும் சவாலாக காணப்படுகின்றது. பத்திரிகைகளின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.

ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எவ்வித நிபந்தனை களுமில்லாது நாம் அதற்கு ஆதரவு வழங்குகின்றோம். ஊடகங்களை நிராகரித்துவிட்டு பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்ற அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதற்காக நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஊடகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கத் தயங்க மாட்டோம்.

எமது கட்சி உருவாகி ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில், நாம் ஜனநாயக ரீதியிலான யாப்பொன்றை உருவாக்கியுள்ளோம். 75 பேரடங்கிய மத்திய செயற்குழு அமையவுள்ளது. இந்த மத்திய செயற்குழுவில் தலைவரால் 50 உறுப்பினர்களின் பெயர்களைப் பிரேரிக்க முடியும். ஆனாலும் பிரேரிப்பதைக் கூட செயற்குழுவிடமே விட்டுள்ளேன். ஏனெனில் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு உறுப்பினரின் தகைமைகளையும் பரிசீலிக்க வேண்டும். மத்திய குழுவின் ஒவ்வொரு நிர்வாக உறுப்பினருக்கும் வெவ்வேறு வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிப்பதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய இடத்தையளிப்பதே எமது கட்சியின் கொள்கை. எமது கட்சியைப் பொறுத்தவரையில் ஆயுட்காலத் தலைவர் என்று எந்தப் பதவியும் இல்லை. தலைமைத்துவத்தை மாற்ற முடியும்.

எமது கட்சி உறுதியானது. தற்காலிகமான கட்சி அல்ல. நீண்ட தூர பயணத்துக்காகவும் தூர நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். கூட்டமைப்பு அமைக்கும் போது எவர் வந்தாலும் நாம் இணைத்துக்கொள்வோம். அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி வந்தாலும் நாம் அதனையும் இணைத்துக்கொள்வோம்.

இது எமது புதிய அரசியல் பயணம் ஜனநாயகத்தை நோக்கிய பயணம். எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றி பெறுவோம்.13ஆவது  அரசியல் அமைப்புக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். வெளிநாடுகளுக்குச் சென்று 13 பிளஸ் என்று சொல்லிக்கொண்டு இங்கு அதற்கு எதிரான கருத்துகளைச் சொல்லும் நிலையில் நாமில்லை. 13 ஆவது அரசியலமைப்பால் நாட்டின் இறைமைக்கு பாதிப்பில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த மாகாணசபை முறைமை இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். அதுவும் தற்போதுள்ள நிலையிலேயே மாகாண சபை முறைமைகள் இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. இதேவேளை, மாகாண சபை முறையை பலப்படுத்த வேண்டுமே தவிர, அதனை பலவீனப்படுத்த எத்தனிக்கக் கூடாது. சிலர் மாகாண சபை முறையை வலுப்படுத்தாது பலவீனப்படுத்து கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,
நாட்டின் இனப்பிரச்சினைக்கு கடந்த 72 வருட காலமாகவே எவ்வித அரசியல் தீர்வும் வழங்கப்படவில்லை. அதுவும் ஜே.ஆர். ஜெயவர்தனவே மாகாண சபை முறை மூலம் தீர்வொன்றை வழங்கியிருந்தார்.

ஆரம்பத்தில் நானும் அதில் ஓர் உறுப்பினராக இருந்தேன். எனவே மாகாண சபை முறைமையை பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

குடிபோதையில் தந்தையை கொலையை செய்த மகன் !

குடிபோதையில் இருந்த மகன் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் ஒன்று கஹவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

கஹவத்தை-ஹவ்பேவத்த பகுதியை சேர்ந்த 70 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் உயிரிழந்தவரின் மகன் (40 வயது) கஹவத்தை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதாகவும் அதனால் சந்தேக நபர் தனது தந்தையை தாக்கி கொலை செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கஹவத்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும்” – அமைச்சர் சரத் வீரசேகர

“இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும்” என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (06.01.2021) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்த அவர் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் 8 தீர்மானங்களை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொண்டுவந்திருந்தார். அவ்வாறே 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்துக்கும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது சரத் வீரசேகர தெரிவித்தார்.

இவ்வாறு இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே கடந்த அரசாங்கம் மேற்கொண்டது என கூறினார்.

இந்த நிலையில் இவை அனைத்தும் ஆதாரமற்றக் குற்றச்சாட்டு என்பதை நாம் இம்முறை ஜெனீவா அமர்வில் நிருபிப்போம் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவின் புதிய பிரேரணைக்கான முன்மொழிவு வரைபை தயாரிக்க தமிழ்தேசிய கட்சிகள் இணக்கம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஐ.நாவின் புதிய பிரேரணைக்கான முன்மொழிவு வரைபை தயாரிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றையதினம் (06.01.2021) மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இதுகுறித்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

முன்மொழிவு வரைபைத் தயாரிக்க மூவர் அடங்கிய குழுவும் இதன்போது நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் அதன் முக்கியஸ்தர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து தலைமையில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரும் கலந்துகொண்டிருந்தனர்.

நியூசிலாந்து அசத்தலான ஆட்டம் – தொடரை இழந்தது பாகிஸ்தான் !

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297  ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 இலக்குகள் இழப்புக்கு 659 ஓட்டங்களை  குவித்து தன்னுடைய ஆட்டத்தை இடைநிறுத்தியது. நியூசிலாந்து சார்பில் தலைவர் வில்லியம்சன் இரட்டை சதமும் ( 238 ), ஹென்றி நிக்கோல்ஸ் 157 ஓட்டங்களும், மிச்சேல் 102 ஓட்டங“களும் பெற்றனர்.
362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 இலக்கு இழப்புக்கு 8 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் இலக்குகள் சரிந்தன. அந்த அணி 186 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அசார் அலி அதிகபட்சமாக தலா 37 ஓட்டங்களை  எடுத்தார். கெய்ல் ஜேமிசன் 48 ஓட்டங்களை கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். போல்ட் 3 இலக்குகளையும், வில்லியம்சன் 1 இலக்கையும்  எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஏற்கனவே 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. பாகிஸ்தான் அணி 2 தொடரை இழந்து ஏமாற்றம் அடைந்தது.
பாகிஸ்தானை இன்னிங்ஸ் கணக்கில் வீழ்த்தி நம்பர் ஒன் இடத்தை பிடித்து நியூசிலாந்து புதிய சாதனை
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தர வரிசையில் முதலாம்  இடத்தை பிடித்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அந்த அணி முதல் இடத்தை பிடித்தது. நியூசிலாந்து அணி 118 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
மேலும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பையும் நியூசிலாந்து பெறுகிறது.

சஜித் பிரேமதாசவை பாராளுமன்றில் பைத்தியம் என அழைத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ !

இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பைத்தியம் என அழைத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பின்னர் அதனை மீள பெற்றார்.

பாடசாலை மாணவர்களிற்கு சீருடையை விநியோகிப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியவேளையே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சஜித் பிரேமதாசவை பைத்தியம் எனக் குறிப்பிட்டார்.

UPDATE : Johnston Fernando acquitted

குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதிலளித்த பின்னரும் எதிர்க்கட்சித் தலைவர் அது குறித்து தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

தன்னை அமைச்சர் அவ்வாறு அழைத்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது கருத்தினை வாபஸ் பெற்ற அதேவேளை ரணில் விக்கிரமசிங்க ஒரு முறை சஜித் பிரேமதாசவை முட்டாள் எனத் தெரிவித்தார் எனக் குறிப்பிட்டார்.

எனினும் அதற்கு பதிலளிக்காத சஜித் பிரேமதாச அரசாங்கம் பாடசாலை சீருடை விடயத்தில் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகின்றது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கும் அமேசான் மழைக்காடு – ஜமைக்கா நாட்டின் பரப்பளவுக்கு இணையான காடுகள் அழிவு !

2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜமைக்கா நாட்டின் பரப்பளவுக்கு இணையான அமேசான் மழைக்காட்டை பிரேசில் இழந்திருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசில் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2020 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜமைக்கா நாட்டின் பரப்பளவுக்கு இணையான அமேசான் மழைக்காட்டை பிரேசில் இழந்திருக்கிறது . சுமார் 11,088 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அமேசானில் காடழிப்பு நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஜெய்ர் போல்சோனரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார், முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசானடகாடுகள்  தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ தயார் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை பிரேசில்ஜனாதிபதி நிராகரித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூமியின் நிலப்பரப்பில் 6 சதவீதத்தை கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அம்சான் காடுகள் உள்ளன .