January

January

“வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகத் இம் மாதம் முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் திறக்க தீர்மானித்துள்ளோம்” – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகத் இம் மாதம் 23ஆம் திகதி  முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் திறக்க தீர்மானித்துள்ளோம்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முழு சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என இன்று (06.01.2021)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரசன்னரணதுங்க தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“சுமார் 10 மாதங்களுக்கு பிறகு கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் வணிக விமானச் சேவைகளுக்குத் திறக்கப்படவுள்ளது.  ஜனவரி 23 ஆம் திகதியாகும் போது வணிக விமான போக்குவரத்துக்கள் சிறிது சிறிதாக வழமைக்குத் திரும்பும்.

விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் நிறுவனங்கள் கட்டாயம் சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் கடைப் பிடிக்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்குப் பயணிகளை அழைத்துவர அனுமதி வழங்கப்படாது.

மார்ச் 19 ஆம் திகதி விமான நிலையங்கள் மூடப்பட்டன. அன்றிலிருந்து நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பக் கடந்த ஜூன் மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சுற்றுலாத்துறைக்குப் பயணிகள் மத்தியில் நல்ல கேள்வி நிலவுகின்றது.

அதனால் ஜனவரி 23 ஆம் திகதியாகும் போது விமான நிலையங்களைத் திறக்க உள்ளோம். தற்போது விமான நிலையங்களை மீள திறப்பதற்குள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் அரசியல் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிணையாளர்களாக நிற்பதற்கு நாங்கள் தயார்” – சார்ள்ஸ் நிர்மலநாதன்

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிணையாளர்களாக நிற்பதற்கு நாங்கள் தயார்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம்(06.01.2021) உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பதற்காக அவர்கள் அனைவரையும் உடனடியாக பிணையில் விடுதலை செய்யவேண்டும்.  விடுதலை செய்பவர்களிற்கு பிணையாளர்களாகயிருப்பதற்கு நாங்கள் தயார்.

கொரோனா தொற்றிலிருந்து உயிர்களை பாதுகாக்கவேண்டியதன் நிமித்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நாட்டில் இடம்பெற்றது உரிமை போர்.சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளிற்கு கொரோனா ஆபத்து உருவாகியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

“விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக்க எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை” – அமைச்சர் ஜி.எல். பீரிஸ்

விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று (06.01.2021) தெரிவித்துள்ளார்.

விமானப்படை வீரர்கள் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைத்துகொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் றோகினி கவிரத்ன நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

“அரச நிறுவனங்களை இராணுவம் ஒரு போதும் கையகப்படுத்தவில்லை” – கமல் குணரத்ன

“அரச நிறுவனங்களை இராணுவம் ஒரு போதும் கையகப்படுத்தவில்லை” என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கொழும்பு மாவட்டத்திற்கான உதவி பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஏனைய நடவடிக்கைகள் எவ்வித மாற்றங்களின்றி வழக்கம் போன்றே தொடர்கின்ற அதேவேளை, சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணியினை மட்டுமே இராணுவம் பொறுப்பேற்றுள்ளது என்றார். மேற்படி நடவடிக்கையானது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒரு நிரந்தர முயற்சி அல்ல .இராணுவம் அதன் முதன்மையான பணியாக இதர துறைகளில் ஈடுபாடு காட்டி வருகின்றது, எனவே தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் அவர்களை வழிநடத்துகிறோம்” என தெரிவித்தார்.

இதேவேளை, உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பதிலளித்த அவர், சபாரி சுற்றுப்பயணமானது சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிக்கும் ஒரு ஆரம்ப திட்டமாகவே காணப்படுகின்றது. “நாம் ஒரு வேலைத்திட்டத்தை மீண்டும் தொடங்கும்போது அதில் மேம்படுத்த வேண்டிய சில பகுதிகளும் காணப்படும்” என சுட்டிக்காட்டினார்.

“சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சி மிக முக்கியமானது, ஏனெனில் இதன் மூலம் ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட இந்த துறையில் ஈடுபட்டுள்ள பல இலங்கையர்கள் தங்கள் வருமானத்தை இழந்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.

எனவே, சரியான நேரத்தில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் கொவிட்-19 தடுப்பூசி சிறந்த பலாபலனை தரும் என தான் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு பதிலளித்த அவர், இதற்கான ஒரு தெளிவான தீர்மானம் குறுகிய காலத்திற்குள் அரசாங்கத்தால் எடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.

சிறைச்சாலை வளாகத்தினுள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வீசுவது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் இதுவரை சிறைச்சாலை முறைமையை நெறிப்படுத்தியுள்ளோம்” என்றும், “சிறைச்சாலைகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளோம், மேலும் இந்த அமைப்பை இயக்க புதிய சிறைச்சாலை அதிகாரிகளை நியமிக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

“பாதுகாப்பு மட்டுமல்லாமல், கைதிகளுக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான சோதனைகளின் விளைவாகவே போதைப்பொருள் தொடர்பான கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர், பிணை பெற்ற அநேகமானவர்களில் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களும் உள்ளனர்” என தெரிவித்தார்.

அவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்கப்படுவதன் நோக்கம் இதுவாகும் என தெரிவித்த ஜெனரல் குணரத்ன, “நாட்டின் முழு சிறைச்சாலை முறைமையும் சீர்திருத்தப்படும்” எனவும் அவர் வலியுறுத்தினார். தொற்று நோய்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளித்த அவர், “சட்ட அமுலாக்க நிறுவனங்கள் தொடர்ந்தும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்கிறன என்பதற்கு இன்றைய தினம் (ஜனவரி, 04) 104 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 80 கிலோ ஹஷிஷ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் சான்றாக அமைகிறது” என தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக நாட்டிற்குள் பாரியளவில் போதைப் பொருட்கள் தற்பொழுது கொண்டுவரப் படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் ” – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மாவையிடம் தெரிவிப்பு !

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் தன்னிடம் தெரிவித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய் தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அவர்கள் அனைவரையும் உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களைப் பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று சபையில் தெரிவித்திருந்தார். தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பிணையாளர்களாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவைத் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்ட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நேரில் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தற்போது கொழும்பில் நிற்பதால் இன்று அல்லது நாளை இந்தப் பேச்சை ஒழுங்குசெய்யலாம் என்று தினேஷிடம் மாவை இதன்போது பதிலளித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளை அரசின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன பேச்சுக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உதயன்கமமன்பில உள்ளிட்ட ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் அரசியல்கைதிகள் என யாரும் சிறையில் இல்லை என பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது.

“இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது?சொல்லுங்கள். பார்ப்போம்…!” – சுரேன்ராகவனிடம் மனோ கேள்வி !

“இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது?”என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் கேள்வி  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.01.2021) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கனடாவின் ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஒரு சட்ட மசோதா, இலங்கையில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கின்றது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இந்தச் சபையில் சொன்னார்.

ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இங்கே நான் முதலில் சுரேன் ராகவனிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் இன்று எங்கே ஐயா தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில்  சட்டம் கொண்டு வந்து அழித்து  முடிக்க முதலில்  இங்கே எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? சொல்லுங்கள். பார்ப்போம்…!

கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என உங்கள் அரசு சொல்கின்றது. ஆனால், சிறைத்தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கின்றது.  எனினும்,20, 25 ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை.

இந்த நாட்டில் சிங்களவருடன் சேர்ந்து வாழவே தமிழரும், முஸ்லிம்களும் விரும்புகின்றோம். ஆனால், உங்கள் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு என்றல்லவா இருக்கின்றது?

இதுவா தேசிய நல்லிணக்கம், சுரேன் ராகவன்? இந்த நாட்டில் இன்று தேசிய நல்லிணக்கம் இல்லை. தேசிய ஒருமைப்பாடு அமைச்சே இல்லை. மக்களைப் பிழையாக வழிநடத்த வேண்டாம். சும்மா, இந்த அரசில் இல்லாத ஒன்றுக்காக மாரடிக்க வேண்டாம்” – என்றார்.

வீணாகிப்போனது திமுத் கருணரத்னவின் சதம் – தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல இலக்குகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித 60 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணியின் வீரரான அன்ரிச் நொக்கியா 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி சகல இலக்குகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் டீன் எல்கர் 127 ஓட்டங்களையும் வான் டெர் டஸ்ஸன் 67 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் விஷ்வ பெர்ணான்டோ 5 இலக்குகளையும், அசித பெர்ணான்டோ மற்றும் தசுன் சானக தலா 2 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல இலக்குகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் சார்ப்பில் அணித் தலைவர் திமுத் கருணரத்ன 103 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

அதனடிப்படையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 66 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை விளையாடிய தென்னாபிரிக்கா அணி இலக்குகள் இழப்பின்றி 67 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

அதனடிப்படையில் 2-0 என்ற ரீதியில் தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து வழக்கு தொடரும் நடைமுறை ஆரம்பம் !

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக அவர்களை பி.சி.ஆர் மற்றும் உடனடியாக என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிஸாரினால் 300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுளளது.

கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்குமாறு சுகாதார பிரிவு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

எனினும் சிலர் குறித்த ஆலோசனைகளை கடைப்பிடிக்காததால் அவ்வாறான நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, கொவிட் இரண்டாவது அலை ஆரம்பத்தில் இருந்து இதுவரை சமூக இடைவௌியை பேணாத மற்றும் முகக்கவசம் அணியாத 2,172 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பாராளுமன்றில் இரா.சாணக்கியனுக்கு கிடைத்த இன்னுமொரு முக்கிய பொறுப்பு !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் பாராளுமன்றத்தில் மற்றுமொரு ஆலோசனைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தனவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும். இவற்றில் UNDP, USAID, National Democratic Institute (NDI), The International Republic Institute (IRI) மற்றும் The Westminster Foundation for Democracy (WFD) அடங்குகின்றன.

இதன் முதல் கூட்டமானது எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்தது யாழ்பல்கலைகழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகப் பேரவையினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்று 04 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் தண்டணை வழங்கப்பட்ட மாணவர்கள் தம்மைத் தண்டணைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பிரதாய பூர்வ வாயிலில் நேற்று முதல் உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மாணவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு ஒறுப்பை முடித்து வைத்துள்ளார்.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, நேற்று மாலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, மனிதாபிமான அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக விலக்கிக் கொள்வதாக அறிவித்ததோடு, நேற்று பின்னிரவில் மாணவர்கள் உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று தனது நிலைப்பாட்டை விளங்கப்படுத்தியிருந்தார்.

எனினும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து தாம் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் இன்று மாலை வரை தமது உணவு ஒறுப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

சற்று முன்னர் மாணவர்கள் உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்குச் சென்ற துணைவேந்தர் உணவு ஒறுப்பைக் கைவிடுமாறு மாணவர்களிடம் விநயமாகக் கேட்டுக் கொண்டார்.

மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உள்நுழைவுத் தடையை நீக்கும் அதிகாரம் தனக்குண்டு என்பதையும், மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் வந்து தமது வழமையான செயற்பாடுகளின் மூலம், அந்தந்தத் துறைத் தலைவர்கள் மற்றும் பீடத்தின் விரிவுரையாளர்களின் நல்லெண்ணத்தை வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாணவர்கள் தொடர்ந்தும் உணவு ஒறுப்பில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், மாணவர்கள் உணவு ஒறுப்பைக் கைவிட்டு, தன்னால் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைத் திறவு கோலாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, போராட்டத்தைக் கைவிடுவதற்கு மாணவர்களும் முன் வந்தனர். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர், மாணவர் நலச் சேவை உதவிப் பதிவாளர்,  மாணவ ஒழுக்காற்று அதிகாரி மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில்  துணைவேந்தர் மாணவர்களுக்குப் பால் வழங்கி உணவு ஒறுப்பை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.